April 29, 2011

கால்பந்து - கிரிக்கெட் - பயிற்சியாளர்கள் - சாம்பியன்ஸ் லீக் - மெஸி

கடந்த இரு தினங்களாக விளையாட்டு உலகில் பயிற்சியாளர்களைக் குறித்துத் தான் அதிக சர்ச்சைகளும், விவாதங்களும் நடந்து வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்களின் முதல் சுற்று (First Leg) 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களில் நடந்து முடிந்திருக்கின்றன.

முதல் ஆட்டத்தில் 2009 சாம்பியன் இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட், ஜெர்மனியின் ஷால்க் அணியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பயிற்சியாளரும், மேலாளருமான சர். அலெக்ஸ் ஃபெர்குசன் தலைமையில் இதுவரை ஜெர்மனி அணி ஒன்றினை மேன்செஸ்டர் யுனைட்டட் தோற்கடித்ததே இல்லை என்ற வரலாறுடன் தான் களமிறங்கியிருந்தது மேன்செஸ்டர் யுனைட்டட். ஷால்க் அணி தங்களுக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று சற்று நிதானத்துடனேயே போட்டியின் முன்னர் சர்.அலெக்ஸ் பேட்டியளித்திருந்தார்.

இதற்கு எதிர்மாறாக பார்சிலோனா-ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான இரண்டாவது அரையிறுதியின் முன்னரே ரியல் மேட்ரிடின் பயிற்சியாளர் ‘ஜோஸே மரினியோ’ பார்சிலோனாவைத் தோற்கடிப்போம் என்று வீராப்பாக பேசியிருந்தார். இது போதாதென்று தோல்விக்கு பின்னரும். குளறுபடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என சப்பை கட்டு கட்டுகிறார்.

பார்சிலோனாவின் லியோனல் மெஸி இரண்டு கோல்களை அடித்து ரியல் மேட்ரிடுக்கு சவால் கொடுத்தார். அதோடு 2008-2009, 2009-2010,வருடங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

இந்த season ல் மட்டும் 52 கோல்களை(50 போட்டிகளில் இருந்து) அடித்து அதிலும் மற்றவர்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் மெஸி. அரையிறுதியில் இரு கோல்களை அடித்ததும் மெஸி தான்.

விஷயம் இவ்வாறிருக்க ரியல் மேட்ரிட் பயிற்சியாள்ர் மரினியோவோ, குளறுபடி செய்தும்; நடுவருக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்று விட்டார்கள் என சிறுபிள்ளைத் தனமாக பேசுகிறார்.

ரியல் மேட்ரிடின் பெப்பே (pepe) விற்கு நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து போட்டியிலிருந்து வெளியேற்றவே அதனை எதிர்க்கும் வகையில் சீறிக்கொண்டிருந்த பயிற்சியாளர் மரினியோவிற்கும் நடுவர் சிவப்பு அட்டைக் காண்பித்து களத்திலிருந்து வெளியேற்றி பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்தார். 

இந்திய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்தின் முன்னாள் பயிற்சியாளரும், சிம்பாப்வேயைச் சார்ந்தவருமான, 62 வயது மட்டுமே!!! ஆன   டங்கன் ஃப்ளெட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இத்தனை வயதானவரை பயிற்சியாளராக நியமித்திருக்கத் தேவையில்லை என்பதே இந்திய கிரிக்கெட்டிற்கு ஆலோசகராக இருக்கும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரது கருத்தும். 2008 ல் கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக தேர்ந்தெடுத்த போது கவாஸ்கரிடம் ஆலோசனை கேட்டவர்கள் இந்த முறை கேட்கவில்லையாம்.

சென்னை சூப்பர் கிங்க்ஸின் பயிற்சியாளர் ஃப்ளெமிங் அல்லது இங்கிலாந்தின் தற்போதைய பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவர் போன்ற கிர்ஸ்டனின் வயதுக்கொத்தவர்களை பயிற்சியாளர்களாக நியமித்திருக்கலாம். இல்லையென்றால் கவாஸ்கர் சொல்வது (அமர்நாத்) போல் இந்தியர் ஒருவரை நியமித்திருக்கலாம்.

அரசியல்வியாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் வாரியத்திடம் கிரிக்கெட் குறித்து கற்றுத் தேர்ந்தவர்களுக்கு என்ன மரியாதை இருக்கப் போகிறது. கபில்தேவை புறக்கணித்தவர்கள் இப்போது கவாஸ்கரைப் புறக்கணிக்கிறார்கள் அவ்வளவே. சச்சினையும் புறக்கணிக்கிற நாட்கள் வெகு தொலைவில் இல்லை. 

April 12, 2011

பயமுறுத்துகின்றன தமிழக தேர்தல் நிகழ்வுகள்

தேர்தலுக்கு சில மணி நேரங்கள் கூட இல்லாத இந்த நேரத்தில் எத்தனை எத்தனை நூறுகள், ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகள் கை மாறிக்கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. எத்தனை பெட்டிகள் கை மாறினால் என்ன; வெற்றியும், நாற்காலியும் மட்டுமே நமது நோக்கம் என வரிந்து கட்டிக்கொண்டு திரிகின்றன ஒவ்வொரு கட்சிகளும்.

கட்சிகள் நடத்தும் காட்சிகளே அதற்கு சாட்சி. கட்சிகள் தனியாக இல்லாமல் குழு சேர்ந்து கொண்டு கூட்டணி என்ற பெயரில் கும்பலாக கொள்ளை அடிக்கிறார்கள் தற்பொழுது. தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளும் கொள்ளையடிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர். தமிழக மக்களும் இலவசங்களைப் பெற்றுக் கொண்டு இவர்கள் அடிக்கிற கொள்ளைகளை மறந்து விடுகிறார்கள் போலும்.

வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ போன்ற அமைப்புகள் எல்லாம் ஏன் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எவருக்குமே புரியாத ஒன்று. எத்தகைய தவறு செய்தாலும் சட்டமும், காவல்துறையும் அரசியல்வாதிகள் என்றறியப்படும் அரசியல் வியாதிகள் என்றால் வேடிக்கை மட்டுமே பார்க்கும் போல.

திராவிட கட்சிகளின் தலைவர்களான அம்மா ஆகட்டும் அய்யா ஆகட்டும், இருவர் மேலும் நிலுவையில் இருக்கிற வழக்குகள் தான் எத்தனை. அவற்றில் ஒன்றிலாவது இதுவரை தண்டனை அனுபவித்திருப்பார்களா?! இலவசங்களை வாங்கிக்கொண்டு இன்பமாக இருப்பதை விட மக்களுக்கு இவை பற்றி பேசுவதற்கா நேரம்.

சன், கலைஞர் இவ்விரு தொலைக்காட்சிகளும் ஜெயா தொலைக்காட்சிக்கு எதிராகவும் அம்மா கட்சிக்கு எதிராகவும் கட்டம் கட்டினால் ஜெயா தொலைக்காட்சி அய்யா கட்சிக்கு எதிராக கட்டம் கட்டுகிறார்கள். இவற்றையன்றி வேறு என்ன செய்திருக்கின்றன இந்த இரு ஊடகங்களும். மிஞ்சிப்போனால் சினிமா செய்திகளையும், ஆட்டம் பாட்டங்களையும், காண்பிப்பார்கள். வெளிநாடு வாழ் தமிழர் குறித்தோ, பிற மாநில முக்கிய நிகழ்வுகளையோ, பிற நாட்டு நிகழ்வுகளையோ குறித்து முனங்கவும் மாட்டார்கள்.

தமிழகம் இன்னமும் திரைத்துறையில் இருப்பவர்களை நம்பியே காலம் கடத்துவது தான் மேலும் வேதனை தரும் விஷயம். இவற்றிற்கிடையில் பிரச்சாரம் என்ற பெயரில் நடத்தப்படும் தனி மனித தாக்குதல்கள் மறுபுறம். தனிப்பட்ட முறையில் விரோதங்களை வளர்த்து கொண்ட மதுரை மைந்தர்களான வைகைப்புயலும், கேப்டனும் இன்று ஊர் சிரிக்கும் படி ஒருவர் மாறி ஒருவர் திட்டிக்கொள்வதும், அவதூறு பேசுவதுமாக அவர்களை அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

கொள்கை என்றால் என்ன? என கேள்வி எழுப்பும் விதம் தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. எவருடனுமே கூட்டணி சேர மாட்டோம் என கூறி வந்த கேப்டன் இப்போது அம்மாவுடன் தொற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் குறை மட்டுமே சொல்லும் ராமதாஸ் அய்யா தேர்தல் சமயத்தில் மட்டும் எவருடனாவது ஒட்டிக்கொள்வார். நடிகர்களுக்கெல்லாம் என்னத்திற்கு கட்சி என்று தான் புரியவில்லை. அண்டை மாநிலங்களில் கூட இந்த நிலைமை இல்லை. அரசியலில் நடிகர்களுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை.

எதுவாயினும் தமிழகம் மீண்டும் இலவசங்களில் மயங்கிக் கிடக்கப் போவதும்; கொள்ளையடிக்கப்படப் போவதும் உறுதியாகி விட்டது.

April 04, 2011

கிரிக்கெட்டும் வெற்றியும் சச்சினும் பதிவுலகமும்


பதிவுலகில் கால் வைத்த இந்த நான்கு வருடத்தினிடையில் கிரிக்கெட் குறித்து எழுதாமல் இருந்ததில்லை; எனினும் இந்த வருடம் இதுவரை ஒரு கிரிக்கெட் பதிவும் எழுதாமல் இருந்து விட்டேன். இந்தியா வெற்றி பெற்ற பின்னரும் சில வார்த்தைகள் எழுதவில்லையென்றால் அது சரியில்லை என்பதால் தான் இந்த பதிவு.

ஏப்ரல் 2 அன்று இரவு இந்தியர்கள் பலரும் அடைந்த மகிழ்ச்சி சொல்லவொண்ணாதது. அறுபதை கடந்த பலரும் ஆறு வயது சிறாராய் மாறியிருந்தனர். தெருக்கோடியில் வசிப்பவரிலிருந்து பல கோடியில் மிதப்பவர் வரை ஒரே மைதானத்தில் இருந்து இந்திய அணி விளையாடியதை பார்த்து ரசித்தனர். அங்கு வேற்றுமை ஏதுமில்லை. அனைவரின் ஆசையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.

பதினொரு வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். 2000 ல் சூதாட்டம், ஊழல் என இந்திய கிரிக்கெட் நலிவுற்றிருந்த நேரம் அது. அசாருதீன், ஜடேஜா, மோங்கியா என பலருக்கு அதில் பங்கிருந்ததாகவும் செய்திகள் வெளிவரவே கிரிக்கெட்டை வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.

அதன் பின்னர் கிரிக்கெட்டில் மீண்டும் ஈடுபாடு காண்பிக்க தூண்டியது சச்சின் தான். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய பெருமை சச்சினைச் சாரும். அந்த உலகக்கோப்பை தொடரின் நாயகனும் சச்சின் தான்.

அப்படியாக 11 ஆண்டு கசப்புகளைப் பின்னுக்குத் தள்ளி 11 ஆம் எண் அணிந்திருந்த சங்கக்காராவின் பதினொன்று பேரையும் பின் தள்ளி இந்திய நேரப்படி 11 மணியளவில் 2011 ல் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 

21 வருடங்கள்; ஐந்து உலகக்கோப்பை தொடர்கள் ஆடிய பின்னரும் கிடைக்காத பெருமை ஆறாவது முறை தான் கிடைத்திருக்கிறது சச்சினுக்கு.

21 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி சுமந்தவரை இன்று நாங்கள் சுமப்பதில் பெருமை அடைகிறோம் என விராட் கோலி கூறியிருப்பதும்; பெயர் சொல்ல விரும்பாத ஒரு முக்கியமானவருக்கு தான் இந்த வெற்றி என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு பின்னர் புதிர் போட்ட யுவ்ராஜ், சச்சின் தான் அந்த முக்கியமான நபர் என இப்போது கூறியிருப்பதும்; சச்சினுக்கு இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என தோனி, சகீர், ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் கூறியிருப்பதும்; சச்சின் பெருமைப்பட வேண்டியவை.

எளிமை, பொறுமை, இவற்றை சச்சினடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என அணியின் பயிற்சியாளர் கிர்ஸ்டனே கூறியிருப்பது சச்சினுக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்றுவிடும் என சமீபகாலமாக நிலவும் கருத்து ஏற்புடையதல்ல. ஒருதின போட்டிகளில் சச்சின் அடித்திருக்கும் 48 சதங்களில்  33 சதங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தவை. அவர் சதமடித்தாலும் அணியிலிருக்கும் பிறர் ஒத்துழையாமல் வெற்றி எப்படி வரும்?

சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்றிருந்த நிலைமை தற்போது இல்லை என்பது தான் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய பலமே. சச்சின் ஆடவில்லையென்றால் சேவாக், அவருமில்லையென்றால் கோலி, யுவி, ரைனா என இளம்பட்டாளமே இருக்கிறது. என்றாலும் சச்சின் அணியில் இருப்பதே மற்ற வீரர்களுக்கு ஒரு பலமும், தன்னம்பிக்கையும் கூட.

அணித்தலைவர் தோனியையும், பயிற்சியாளர் கிர்ஸ்டனையும் இங்கு குறிப்பிடாவிட்டால் இந்த பதிவு முழுமையடையாது. சச்சினை தூக்கி சுமந்த இந்திய அணியினர் அதன் பின்னர் கிர்ஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானத்தில் வலம் வந்தனர் என்றால் எந்த அளவிற்கு கிர்ஸ்டன் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பது புரியும்.

கிர்ஸ்டனை வெகுநேரம் யுவ்ராஜ் கட்டியணைத்துக் கொண்டிருந்தார். யுவ்ராஜை உடல்திறன் சரியில்லை என்பதற்காகவும், தொப்பை அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும் அணியை விட்டு விலக்கி வைத்ததும் கிர்ஸ்டன் தான் என்பது பலருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். யுவ்ராஜை மீண்டும் அணியில் சேர்த்த பெருமையும் தொடர் நாயகன் விருதிற்கான அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையும் கிர்ஸ்டனையே சாரும். 

எந்த சூழ்நிலையிலும் பதட்டமே அடையாத இரு அணித்தலைவர்களை இறுதிப் போட்டியில் கண்டது மகிழ்ச்சியே. பதட்டம் அடைந்தாலும் அதனை வெளிக்காண்பிக்காமல் வீரர்களின் திறமையை மட்டும் வெளிக்கொணரும் யுக்தி தெரிந்தவர்கள் தோனியும், சங்கக்காராவும்.

தோனியை சுற்றி இருக்கும் திறமையுள்ள இந்திய அணியினரும் இந்த வெற்றியை இலகுவாக்கினர் என்றால் அது மிகையல்ல. இறுதிப்போட்டி வரை உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஓட்டம் 34 தான். எனினும் இறுதிப்போட்டியில் அமர்க்களப்படுத்தி விட்டார்.

எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவதும் தோனிக்கு அழகு தான். உதாரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் அஷ்வினை வெளியே வைத்துவிட்டு நெஹ்ராவை எடுத்தது தவறு தான் என ஒப்புக்கொண்டது அவரது பாணி(இத்தனைக்கும் நெஹ்ரா 10-0-33-2 என்ற முறையில் பந்து வீசி வெற்றிக்கு வழி வகுத்திருந்தார்) அவரை எடுத்தது சரி தான் என்று தோனி அப்போது கூட நியாயம் கற்பிக்கவில்லை.

உலகக்கோப்பையை வென்ற பின்னர் அளித்த பேட்டி ஒன்றில் கங்குலி, திராவிட் மற்றும் கும்ப்ளே ஆகிய மூவரையும் (சச்சின் உட்பட) நினைவு கூர்ந்ததன் மூலம் தோனிக்கு மேலும் நற்பெயரே. இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய மற்றொரு காரணம், வீரர்களின் உடற்திறனும், மனவலிமையும் தான். இல்லையென்றால் கால், அரை, மற்றும் இறுதிப் போட்டிகளில் விழுந்து விழுந்து தடுத்திருப்பார்களா? இறுதிப்போட்டியில் 99 ஓட்டங்களை singles என்ற முறையில் ஓடி தான் எடுத்திருப்பார்களா? இதற்காக ஒரு வருடத்திற்கு முன்னரே திட்டங்களை தீட்டிய பயிற்சியாளருக்கும், பிற பயிற்சியாளர்கள் @ Supporting Staff ற்கும் இந்திய அணி கடமைப் பட்டிருக்கிறது.  

ஆட்ட முடிவில் பேசிய சங்கக்காராவின் நேர்த்தியான பேச்சு பலரை கவர்ந்திருக்கக்கூடும். இந்த இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமானால் 350 ற்கும் குறைவான ஓட்டங்கள் போதாது என வெளிப்படையாக பேசியது பாராட்டிற்குரியது.

இந்த சந்தோஷங்களுக்கிடையில் கிரிக்கெட் ஏன்? இலங்கையில் தமிழனை காவு வாங்கிய ராஜபக்ஷேவின் வருகை ஏன்? தமிழினம் இலங்கையில் அழியும் போது தமிழன் ஏன் உலகக்கோப்பை வெற்றிக்கு சந்தோஷப்பட வேண்டும் என கேள்வி எழுப்புவர்களுக்கு... விளையாட்டை விளையாட்டாய் பார்த்தாலே போதுமானது என்பது தான் எனது பதில்.

 ---------------
MEMORIES THAT WILL LAST LONG FOR A LIFETIME
ரஜினி, கஜினி, தோனி மைதானத்தில் ஒருசேர இருக்கையில் இந்தியாவிற்கு ஏது தோல்வி என தத்துவமும் பேசுகிறார்கள் சில கிரிக்கெட் ரசிகர்கள். 

INDIAN TEAM SALUTES MURALI

SANGAKKARA THE COOL CAPTAIN STILL SMILES EVEN AFTER THE DEFEAT

SACHIN SHARES HIS HAPPINESS WITH HIS LONG TIME FAN SUDHIR GAUTAM

PLAYER OF THE TOURNAMENT YUVRAJ SINGHநன்றி: cricinfo

April 01, 2011

முட்டாள்கள் தினம்; தலையணை மோதல் தினம் இனி என்னென்ன!!

எதற்கெல்லாம் கொண்டாட்டம் வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு வரையறையே இல்லை போலும். அன்னையர் தினம், தந்தையர் தினம் என எடுத்ததெற்கெல்லாம் கொண்டாடியவர்கள், அதையெல்லாம் தாண்டி தலையணை மோதல் தினம் என்று கிளம்பியிருக்கிறார்கள் இப்போது. 2008 முதல் கொண்டாடியும் வருகிறார்கள் அமெரிக்கர்கள். நாளை ஏப்ரல் 2 அன்று தலையணை மோதல் தினமாம்; உலகம் முழுவதும் இருந்து நூறுக்கும் மேற்பட்ட நகரங்கள் இதில் பங்கெடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் இதன் இணைய தளத்தில். ( http://www.pillowfightday.com/ )

அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இவைகளை விட்டால் வேறு வேலை இல்லை போலும். வேலன்டைன் தினம் @ காதலர் தினத்திற்கே எதிர்ப்பு கிளப்பி வரும் நம்ம ஊர்வாசிகள் தலையணை மோதல் தினத்திற்கு என்ன சொல்வார்கள் என்று கேட்கவே தேவையில்லை.

நகர வாழ்க்கையில் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்கும் பொதுமக்களை வீதிக்கு வர வைத்து மக்களோடு மக்களாக பழக வைக்கவும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் தான் இந்த தலையணை மோதல் தினம் என்று கூறுகிறார்கள். அதற்கு Urban Playground Movement என பெயரும் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இன்றைய இளைய தலைமுறைகள் இவை போன்ற தினங்களில் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள். கடந்த மார்ச் 8 அன்று மகளிர் தினம் என்றார்கள். மேற்கத்தியர்கள் உருவாக்கிய இந்த மாதிரியான தினங்கள் வர்த்தகத்தை தான் வளர்க்கிறதே ஒழிய வேறு எதற்கும் உபயோகமாக இருப்பதாக படவில்லை. மகளிர் தினம் அனுசரித்தாலும் மறுபுறம் பெண்ணடிமை, ஆணாதிக்கம் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இந்தியாவும், தமிழகமும் இன்னும் மாற வேண்டும்!

ஏப்ரல் ஒன்றாகிய இன்று முட்டாள்கள் தினமாம்; இன்னும் என்னத்திற்கெல்லாம் தினங்கள் வரவிருக்கின்றனவோ? தலையணை மோதல் தினம் இந்தியாவில் வைத்தால் எப்படி இருக்கும் என யோசித்து பார்த்தேன், சிரிப்பு தான் வருகிறது.

எந்த எந்த நகரங்கள் தலையணை மோதல் தினத்தில் பங்கெடுக்கின்றன என்பதை http://www.pillowfightday.com/ தளத்தில் பார்க்கலாம், வேண்டுமானால் நீங்கள் உங்கள் நகரத்தையும் இணைத்துக் கொள்ளலாம்.


Related Posts with Thumbnails