April 12, 2011

பயமுறுத்துகின்றன தமிழக தேர்தல் நிகழ்வுகள்

தேர்தலுக்கு சில மணி நேரங்கள் கூட இல்லாத இந்த நேரத்தில் எத்தனை எத்தனை நூறுகள், ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகள் கை மாறிக்கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. எத்தனை பெட்டிகள் கை மாறினால் என்ன; வெற்றியும், நாற்காலியும் மட்டுமே நமது நோக்கம் என வரிந்து கட்டிக்கொண்டு திரிகின்றன ஒவ்வொரு கட்சிகளும்.

கட்சிகள் நடத்தும் காட்சிகளே அதற்கு சாட்சி. கட்சிகள் தனியாக இல்லாமல் குழு சேர்ந்து கொண்டு கூட்டணி என்ற பெயரில் கும்பலாக கொள்ளை அடிக்கிறார்கள் தற்பொழுது. தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளும் கொள்ளையடிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்லர். தமிழக மக்களும் இலவசங்களைப் பெற்றுக் கொண்டு இவர்கள் அடிக்கிற கொள்ளைகளை மறந்து விடுகிறார்கள் போலும்.

வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ போன்ற அமைப்புகள் எல்லாம் ஏன் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எவருக்குமே புரியாத ஒன்று. எத்தகைய தவறு செய்தாலும் சட்டமும், காவல்துறையும் அரசியல்வாதிகள் என்றறியப்படும் அரசியல் வியாதிகள் என்றால் வேடிக்கை மட்டுமே பார்க்கும் போல.

திராவிட கட்சிகளின் தலைவர்களான அம்மா ஆகட்டும் அய்யா ஆகட்டும், இருவர் மேலும் நிலுவையில் இருக்கிற வழக்குகள் தான் எத்தனை. அவற்றில் ஒன்றிலாவது இதுவரை தண்டனை அனுபவித்திருப்பார்களா?! இலவசங்களை வாங்கிக்கொண்டு இன்பமாக இருப்பதை விட மக்களுக்கு இவை பற்றி பேசுவதற்கா நேரம்.

சன், கலைஞர் இவ்விரு தொலைக்காட்சிகளும் ஜெயா தொலைக்காட்சிக்கு எதிராகவும் அம்மா கட்சிக்கு எதிராகவும் கட்டம் கட்டினால் ஜெயா தொலைக்காட்சி அய்யா கட்சிக்கு எதிராக கட்டம் கட்டுகிறார்கள். இவற்றையன்றி வேறு என்ன செய்திருக்கின்றன இந்த இரு ஊடகங்களும். மிஞ்சிப்போனால் சினிமா செய்திகளையும், ஆட்டம் பாட்டங்களையும், காண்பிப்பார்கள். வெளிநாடு வாழ் தமிழர் குறித்தோ, பிற மாநில முக்கிய நிகழ்வுகளையோ, பிற நாட்டு நிகழ்வுகளையோ குறித்து முனங்கவும் மாட்டார்கள்.

தமிழகம் இன்னமும் திரைத்துறையில் இருப்பவர்களை நம்பியே காலம் கடத்துவது தான் மேலும் வேதனை தரும் விஷயம். இவற்றிற்கிடையில் பிரச்சாரம் என்ற பெயரில் நடத்தப்படும் தனி மனித தாக்குதல்கள் மறுபுறம். தனிப்பட்ட முறையில் விரோதங்களை வளர்த்து கொண்ட மதுரை மைந்தர்களான வைகைப்புயலும், கேப்டனும் இன்று ஊர் சிரிக்கும் படி ஒருவர் மாறி ஒருவர் திட்டிக்கொள்வதும், அவதூறு பேசுவதுமாக அவர்களை அவர்களே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள்.

கொள்கை என்றால் என்ன? என கேள்வி எழுப்பும் விதம் தான் இவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. எவருடனுமே கூட்டணி சேர மாட்டோம் என கூறி வந்த கேப்டன் இப்போது அம்மாவுடன் தொற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் குறை மட்டுமே சொல்லும் ராமதாஸ் அய்யா தேர்தல் சமயத்தில் மட்டும் எவருடனாவது ஒட்டிக்கொள்வார். நடிகர்களுக்கெல்லாம் என்னத்திற்கு கட்சி என்று தான் புரியவில்லை. அண்டை மாநிலங்களில் கூட இந்த நிலைமை இல்லை. அரசியலில் நடிகர்களுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை.

எதுவாயினும் தமிழகம் மீண்டும் இலவசங்களில் மயங்கிக் கிடக்கப் போவதும்; கொள்ளையடிக்கப்படப் போவதும் உறுதியாகி விட்டது.

3 comments:

Chitra said...

......முந்தைய தேர்தல்களை விட இந்த தேர்தல் சமயத்தில், அரசியல் கட்சிகளை பற்றியும் அரசியல் தலைவர்களின் மறுபக்கங்களை பற்றியும் , மக்களில் பலருக்கு தெரிய ஆரம்பித்து இருக்கின்றன. இதுவே மாறுதலுக்கு முதல் படி.... இந்த விழிப்புணர்வு மெல்ல மெல்ல எல்லோருக்கும் வரும்.

செம்மலர் செல்வன் said...

நியாயமான கவலை.

Unknown said...

http://thamizhanedwin.blogspot.in/2015/02/blog-post_19.html

Post a Comment

Related Posts with Thumbnails