May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட் ஒரு பார்வை


"Cricket Overdose" ஆகி விட்டதாகத் தான் கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கருத்துரைத்து வருகிறார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றும் கூட ரவிசாஸ்திரி அவர்கள் அதைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாவே விளையாடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரர்களுக்கு சரியான ஓய்வும் கிடைப்பதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவிருக்கும் ஆட்டங்களில் மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் காயத்தின் காரணமாக சேர்க்கப்படவில்லை என்பது இந்த cricket overdose ஆல் தான்.

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாக ஐ.பி.எல் போட்டிகள் துவங்கியது; அன்பரும், பதிவருமான லோஷன் அவர்கள் முன்னொரு பதிவில் எழுதியிருந்தது போல இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு கூட நேரமில்லாமல் போனது ஒரு வகையில் துரதிருஷ்டம் தான்.

ஐ.பி.எல் இருபது ஓவர் ஆட்டங்கள் எந்த அளவுக்கு திறமையை வெளிக்கொணரும் என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பின் பால் வால்தட்டி, கொல்கத்தாவின் அப்துல்லா, கேரளாவின் பரமேஸ்வரன் ன புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சியே.

இந்த நான்காம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவிடுகிறேன்.

1. சச்சினின் பெருந்தன்மை

மும்பை இன்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சச்சின் பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றின் முடிவில் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினையும் ஒரு இலட்ச ரூபாயையும் அம்பத்தி ராயுடுவுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரது கையில் காசோலையையும் அளித்தது தான் என்னை அதிகம் நெகிழ வைத்த நிகழ்வு. (நியாயப்படி ராயுடுவிற்கு தான் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வெற்றியில் சச்சின் 55 ஓட்டங்களும் ராயுடு 63 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்)

2. கங்குலியின் பிரவேசம்

இந்த ஐ.பி.எல் தொடரின் நகைச்சுவைகளில் ஒன்றாக கங்குலியின் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். கொல்கத்தா அணியினர் வங்காளத்தின் புலி, தாதா கங்குலிக்காக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என கொக்கரிக்க அவரோ 'போங்கடா நொன்னைகளா' என்கின்ற மாதிரி புனே அணியிடம் சென்று சரணடைந்தார். அவரது காலில் விழுந்து நமஸ்கரித்த ரசிகர் ஒருவரைப் பார்த்தால் அ.தி.மு.க தலைமை பெருமைபட்டுக்கொள்ளலாம். 


3. இஷாந்த் ஷர்மா 3-0-12-5

கேரள அணிக்கு எதிராக ஐதராபாத்தின் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்று ஓவர்கள் தான் இந்த ஐ.பி.எல் லின் சிறந்த பந்து வீச்சாக நான் கருதுகிறேன். 3-0-12-5 என்பது அவரது பந்து வீச்சின் சுருக்கம். மூன்று ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார் இஷாந்த். கேரளா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆட்டத்தையும் இழந்தது.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - Super தான்

இறுதிப் போட்டியின் இடைவேளையின் போது சென்னையின் ஆட்டத்தைக் குறித்து ரவிசாஸ்திரி அவர்கள் கூறும் போது... முரளி விஜய் மற்றும் ஹசியின் ஆட்டம் கிரிக்கெட்டிற்கான அனைத்து அம்சங்களும் உடையதாயிருந்தது என புகழ்ந்திருந்தார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளை மட்டுமே நம்பியிராமல் அவர்கள் இருவரும் ஓடி சேர்த்த ஓட்டங்கள் தான் ரவியை இவ்வாறு புகழச் செய்தது. அது தான் சென்னையின் பலமும் கூட. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் குவித்தனர்.

பலரின் வாதத்திற்கு வாய்ப்பூட்டும் போட வைத்தார் Captain Cool தோனி. கெய்லின் விக்கெட்டிற்கு அத்தனை சந்தோஷப்பட்ட மனிதர் வெற்றி பெற்ற போது அத்தனை அமைதி காத்தார். அது தான் ஒரு தலைவனுக்கு அழகும் கூட.

மற்ற அணிகளைப் போலல்லாமல் திரைத்துறையினர் அதிகம் திரண்டு வராத ஒரே அணி சென்னை மட்டும் தான். அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த கோப்பை. வாழ்த்துக்கள் சென்னை சிங்கங்களே.

நன்றி: கிரிகின்போ 

1 comment:

ARV Loshan said...

சுவாரஸ்யமான தொகுப்பு..
நான் ரசித்த அத்தனை முக்கிய கட்டங்களையும் தொகுத்துள்ளீர்கள்.
ஆனால் இம்முறை முன்பிருந்த கிக் இல்லை என்று சொல்லத் தான் வேண்டும்.

Post a Comment

Related Posts with Thumbnails