August 23, 2011

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி!!



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் நான்கிலும் தோல்வியடைந்து முகம் குப்புற கவிழ்ந்து கிடக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சியின் ஆரம்பமாகத்தான் இதனை கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணங்களாக ஆட்டக்காரர்களின் ஏனோ தானோ போக்கினையும் சரியான திட்டமில்லாமையையும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகிறோம் என்ற பாங்கு பெரும்பாலான ஆட்டக்காரர்களிடம் இல்லை. குறிப்பாக மட்டை வீச்சாளர்கள் ஒரு தின போட்டிகள் அல்லது இருபது ஓவர் ஆட்டங்கள் ஆடுகின்ற பாணியிலேயே ஆடியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

சரியான பயிற்சிகள் இல்லாததும், பயிற்சி ஆட்டங்கள் இல்லாததும் இங்கிலாந்தின் காலநிலையோடு ஒன்றிப் போகாமலும் இருந்த ஆட்டக்காரர்களும், போராடும் குணம் இல்லாமையும், அனைத்து ஆட்டங்களிலும் மட்டை வீச்சாளர்களின் சரியான துவக்கமில்லாமையும் இந்தியாவின் , தோல்விகளுக்கான காரணங்கள் தான்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்கு பின்னர் சரியான ஓய்வில்லாமல் ஐ.பி.எல் ஆட்டங்களில் ஆடியதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஐ.பி.எல் ஆட்டங்களினால் ஏற்பட்ட காயங்கள் சேவாக், காம்பீர்,  ஷகீர் கான் ஆகியவர்களை சரிவர பங்களிக்க விடாமல் செய்து விட்டது.

அணியினை முன்னிறுத்தாமல் தனி ஒருவரின் சாதனைகளை மட்டுமே குறிப்பாக சச்சினின் 100 ஆவது சதத்தை முன்னிறுத்திய ஊடகங்களையும், விமர்சகர்களையும், ரசிகர்களையும் இங்கு கண்டிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இனியாவது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணிக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஐ.பி.எல் போன்ற பணம் கொழிக்கும் வியாபாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை கைவிட முன்வர வேண்டும்.

இங்கிலாந்து அணியினைப் போல சரியான திட்டம் வகுக்காமல் ஆடிய இந்திய அணி தோல்வியடைந்தது அதன் அகங்காரத்திற்கு கிடைத்த வெகுமதியாக கொள்ளலாம். சரியான அறிவுரைகளும் பயிற்சியாளர்களிடமிருந்து இந்திய அணிக்கு கிடைக்கப்பெறவில்லை; இல்லையென்றால் இத்தனை கேவலமான தோல்வி இந்தியா அடைந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவின் பெருமை காத்த ஒரே ஆட்டக்காரர் ராகுல் திராவிட் தான். மூன்று சதங்களை கண்ட திராவிட்டிற்கு தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.


பந்து வீச்சில் பிரவீன் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா நன்றாக வீசினாலும் பிறர் இவர்களுக்கு பக்கபலமாக சரியாக வீசுவதில்லை. சுழற்பந்து வீச்சிற்கு பெயர் போன இந்திய அணியில் தற்போது சொல்லிக் கொள்ளும்படி எவரும் இல்லாதது மேலும் வருத்தம் தான்.

இந்திய அணியில் லக்ஷ்மண், ரெய்னா, தோனி இவர்களின் மட்டை வீச்சில் குறிப்பாக Away Swinging மற்றும் Inswinging பந்து வீச்சுகளை எதிர்கொள்ளுகையில் அவர்கள் சரியான மாற்றம் கொண்டு வரவில்லையென்றால்... இந்திய அணி தரவரிசையில் மேலும் கீழிறங்கும் நாட்கள் வெகு தொலைவிலில்லை.

இந்திய அணி சமீப காலங்களில் மிக மிக மோசமாக ஆடிய தொடர் இதுவாகத்தானிருக்கும். தோனி தலைமையில் இந்திய அணி அடைந்த முதல் தொடர் தோல்வியும் இதுவே. இந்திய அணியின் குறைகளை விமர்சிக்கையில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தைக் கண்டிப்பாக பாரட்டியாக வேண்டும். 

August 17, 2011

உறங்கும் உணர்வுகள்




உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!

உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!

உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.  
உள்ளக்கிடக்கைகளை  எவர் அறிவாரோ! 


Related Posts with Thumbnails