December 25, 2011

Facebook - Fastfood உலகால் மறக்கப்பட்டு வரும் விழாக்கால மகிழ்ச்சிகள்


சிறுவயதில் விடுமுறைக்காலம் என்றாலே அது டிசம்பர் தான். என்ன தான் ஏப்ரல் மே மாதத்தில் பள்ளி விடுமுறையாய் இருந்தாலும்/அது ஒன்றரை மாத கால நீண்ட விடுமுறையாய் இருந்தாலும் டிசம்பர் மாத விடுமுறையின் சந்தோசம் ஒரு பிரத்தியேக சந்தோசம் தான்.


அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. கிடைக்கவிருக்கும் புத்தாடைகளும், பரிசுப் பொருட்களும்அம்மாவின் கரங்களால் தயாரிக்கப்படும் பலகாரங்களும், இனிப்பு வகைகளும்; நண்பர்கள் கூடி ஆரவாரிக்கும் பொழுதுகளும்தெருவெங்கும் களைகட்டும் மின் அலங்காரங்களும்அப்பாவால் வண்ண விளக்குகளால் அமைக்கப்படும் வீட்டு அலங்காரங்களும்;உறவினர்கள் கரங்களிலிருந்து குறிப்பாக தாத்தாபாட்டியிடமிருந்து   கிடைக்க விருக்கும் பணப் பரிசுகளும் தான் காரணங்கள். இன்னும் சொல்லிப்போகலாம்.

இளைஞர் பருவத்தில் டிசம்பர் என்றால் தெருவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும், உறவினர்களிடமிருந்து வரும் வாழ்த்து அட்டைகளும் இன்னும் பரவசமாக்கும். குறிப்பாக வெளிநாடுகளில் இறுதி கிடைக்கப்பெறும் வாழ்த்து அட்டைகளில் ஒட்டப்பட்டிருக்கும் தபால் தலையை பார்த்தாலே மேலும் பரவசம் தான். உறவுகளின் கூடுகை இன்னும் உற்சாகம் தரும்


இவை போதாதென்று நண்பர்கள் கூட்டத்துடன் அடிக்கும் அரட்டைகளும், பட்டாசு வெடித்தலும் விடுமுறைக்காலத்தை இன்னும் அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யங்கள்.

ஆனால் இன்று இத்தகைய சுவாரஸ்யங்கள் குறைந்து கொண்டே வருவது வருத்தப்பட வேண்டிய விஷயம். உறவுகளை பார்ப்பதே கடினமாகி வருகிறது. உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் கூடி வருவதே அரிதாகி விட்டது இப்போது.

வெளி ஊர்களிலும், வெளி நாட்டிலும் புலம் பெயர்ந்து வாழுகின்றவர்கள் உறவுகளை சந்திப்பது அபூர்வமாகிப் போனது இன்று. இது போதாதென்று ஒரே ஊரில் வசிப்பவர்கள் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதும் குறைந்து வருகிறது. தான்தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்பது தான் மேலோங்கி நிற்கிறது.

வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பேனா பிடித்து எழுதி அனுப்பப்படும் கடிதங்களும்இன்றைய டிஜிட்டல்  உலகில்  பெருவாரியாக குறைந்து வருவது வேதனைப்பட வேண்டிய விஷயம்.பேனாவால் எழுதப்படும் ஒரு கடிதம் தரும் மகிழ்ச்சியை மின்னஞ்சலோ அல்லது டிஜிட்டல் வாழ்த்து அட்டையோ தந்து விடாது.  இன்று இயல்பாக இருக்க விரும்பும் மனிதர்கள் வெகு சிலரே.

கடந்த வாரம் கூட நான் அனுபவப்பட்ட ஒரு நிகழ்வு இந்த கால சந்ததியினரின் மனநிலைமையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ஊருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப போகிறேன் என்று நண்பரிடம் நான் கூற அதற்கு பதிலாக நண்பர்... "என்னங்க இந்த காலத்தில யாருங்க இதெல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க" ஒரு தொலைபேசி அழைப்பே  அதிகம் என்றார்.  அவருக்கு கடிதம் எழுதுவதில் அவ்வளவு தான் ஆர்வம் என்று எண்ணிக்கொண்டேன்.  

பகட்டிற்கும், Fastfood - எந்திர வாழ்க்கைக்கும், Facebook - ஆர்குட் உலகிற்கும் அடிமையாகி போன இந்த கால சந்ததி இழந்திருக்கும் சிறு சிறு சந்தோசங்கள்மகிழ்ச்சிகள் ஏராளம்.  

பணம் சம்பாதிக்கும் அவசரத்தில் பாசங்களையும்பந்தங்களையும், பகிர்வுகளையும் இழந்து நிற்கிறார்கள். என்ன தான் இருந்தாலும் தொண்ணூறுகளில் இருந்த வாழ்க்கை முறை இனி மீண்டும் வருவது கடினம் தான்.

December 05, 2011

திரைப்படம் அரசியல் ஆக்கப்படுவது அழகல்லவே

குத்தாட்டங்களும், அரைகுறை ஆடைகளும் பெரும்பாலான திரைப்படங்களில் முன்னிறுத்தப்பட்டாலும் சில திரைப்படங்கள் கடந்த காலங்களிலும் சரி இன்றைய காலகட்டத்திலும் சரி சமூக நலன் கருதிய கருத்துக்களை பறைசாற்றி வந்திருக்கின்றன என்று சொல்லலாம்.

எனினும் திரைப்படங்கள் சமூக நலனை பாதிக்கும் வண்ணம் எடுக்கப்படுவதாக ஒரு சாரார் குறை கூறாமலும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் DAM 999.

திரைப்பட இயக்குனர் சோகன் ராய், தமிழகத்தை சார்ந்தவர் அல்ல என்பதும், தமிழகத்தில் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்க மற்றொரு காரணமாக அமைந்து விட்டது.

DAM 999 திரைப்படம் வெளியானால், தமிழக கேரள மக்களிடையே நிலவும் இணக்கமான நிலைமை மாறி கோபமும், மனக்கசப்பும், கைகலப்பும் ஏற்பட்டு விடும் என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


ஆனால் இன்றைக்கு, தமிழக - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது என்றால் அதற்கு முழு காரணம் இரு மாநில அரசியல்வாதிகளும்,அவர்களின் தவறான பிரச்சாரமும் தானேயன்றி வேறொன்றுமில்லை.


சிகரெட் பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகள் அமைக்கடுவதால் ஏற்படாத பாதிப்பு ஒரு அணை உடைவது போன்ற காட்சி அமைப்பதால் ஏற்பட்டு விடப் போகிறதா என்ன!?

மற்றொரு கேள்வியும் இங்கு முன் வைக்க வேண்டியது கட்டாயமாகிறது. DAM 999 திரைப்படம் வெளியாவதற்கு இத்தனை எதிர்ப்பு காட்டுபவர்கள். முல்லைபெரியார் அணையைக் குறித்த Dams - The Lethal Water Bombs என்ற குறும்படம் வெளியான போது எங்கிருந்தார்களோ?

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கு விஷயத்தில் இத்தனை அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும் கேரள அரசியல்வாதிகளுக்கு அழகோ என்னவோ?

திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்த்தல் சிறந்தது, அரசியலையும் திரைப்படத்தையும் ஒப்பிடுவது அழகல்லவே.

Related Posts with Thumbnails