December 31, 2012

2012 - திரும்பிப் பார்க்கிறேன்


இந்த வருடத்தின் ஆரம்பத்திலும் அலுவலில் இருந்தேன், இன்று முடிவிலும்  அலுவல் தான்... இரவுப்பணி. அலுவலில் ஆரம்பித்ததாலோ என்னமோ இந்த வருடம் முழுவதும் முழுமையான ஓய்வேயின்றி இருக்க வேண்டியதாகிப் போயிற்று. கிடைத்த ஒரு மாத விடுமுறையிலும்  சரியான ஓய்வில்லை. மனநிலையும், உடல்நிலையும் முன்பு போல் சரிவர இல்லை என்றே தோன்றுகிறது; அதற்கு காரணம், மன அழுத்தம் என்று கூட சொல்லலாம்.

மன அழுத்தம் பற்றி கீழே எழுதுகிறேன்... அதன் முன்னர் 2012 கொசுவத்தி சுத்திருவோம்... அதாங்க ஃப்ளாஷ் பேக்.

எமக்கு மூன்றாம் தேதி இரண்டாவது ஆண்மகன் பிறந்தான், புது வருடத்தின் மூன்றாம் தேதி பிறந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை, கருவறையிலிருந்து எளிதில் வந்த அவனுக்கு பிரசவ அறையிலிருந்து வெளிவர சற்றே சிரமப்பட வேண்டியதாயிற்று. குவைத்தில் பிறந்ததால் காகித கெடுபிடிகள் காரணம் சற்று தாமதமாயிற்று.

அப்பாடா முடிந்தது என்று நினைத்தால் அடுத்து அவனது கடவுச்சீட்டு @ Passport ல் விசாவை இணைக்க முடியாமல், காவல்துறை விசாரணை, நீதிமன்ற வாசல் என அலைய வேண்டியதாகிப் போயிற்று மூன்று மாதம். ஜனவரி முதல் மார்ச் வரை அடைந்த மனப் போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

இப்படி வில்லங்கத்திலேயே ஆரம்பித்த வருடம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க வைத்தது. ஜூனில் மாரடைப்பால் காலமாகிப் போன இரு ஜீவன்கள் மனதை அதிகமாகவே காயப்படுத்தின. அத்தனை இளம் வயதில் அவர்கள் காலமாகிப் போனதை நினைத்து வருந்தவா அவர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை நினைத்து வருந்தவா என தெரியாமல் கலங்கிப் போனேன்.

அப்போதே முடிவு பண்ணிக்கொண்டேன்... நாமும் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என. ஆதலால் இருக்கின்ற நாட்கள் வரை நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்யலாமே எனவும் யோசித்தேன்... அதையே நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

விடுமுறையிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட பண நெருக்கடி சொல்லி மாளாது. விடுமுறையில் கூட கடன் வாங்கி செலவு பண்ண வேண்டிய நிர்ப்பந்தமாகிப் போனது என் திட்டமிடல் இல்லாமை தான்.

என்றாலும் இன்றைய தேதியில் சாமானியன் ஒருவன் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல, குறிப்பாக மனிதம் படும் சிரமங்களும், மன அழுத்தங்களும் விவரிக்க இயலாதவை.

குடும்ப பாரம், பணத்தேவை, நண்பர்கள் இம்சை... இவற்றிற்கு எல்லாம் மேல் வேலைப்பளு. இவை அனைத்தும் தரும் மன அழுத்தத்தினாலேயே மனிதனுக்கு 75 சதவீததிற்கும் மேல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கை அதிலும் குடும்பத்தை விட்டு தனியாக பணிபுரிபவர்கள் பாடு பெரும்பாடு, அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவைப் பொருத்து தொலைபேசியிலேயோ, இணைய தொலைபேசியிலேயோ, கணினி மூலமாகவோ மட்டுமே பேசி/ பார்த்துப் பேசி வாழும் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல.

தொலைபேசியிலேயே சிரிப்பு, அழுகை, மௌனம், வாழ்த்து என வாழ்ந்து விடுகிறார்கள்; மாதக்கடைசி ஆனால் பணமின்றி தவித்துக் கொண்டிருக்கையில் தான் ஊரில் இருந்து அழைப்பு வரும்... எய்யா பணம் இருந்தா கொஞ்சம் அனுப்புயா ராசா என்று.

இவன் இங்கு மூன்று வேளை சாப்பிடுகிறானோ இல்லையோ... வேறு வழியில்லாமல் இருக்கின்ற பணத்தையும், கடன் வாங்கி இல்லாத பணத்தையும் அனுப்ப வேண்டிய கட்டாயம்.

இந்த பணப்பற்றாக்குறை, தட்டுப்பாடு புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மனிதன் ஒவ்வொருவரையும் இன்று துரத்துகிறது. இது போன்று பல காரணங்கள் இன்றைய சராசரி மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாக அவனே அறியாமல் கொண்டு போய் விடுகிறது.

இவற்றின் முடிவு... இளமையில் மரணம்...

இன்னும் உண்டு.

கடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு


2012 ல் நான் மிக அதிகம் கேட்டப் பாடல். கடல் திரைப்பட மூங்கில் தோட்டம் பாடல் தான். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனதை தொடும் வரிகளுக்கு அற்புதமான இசையை கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

பாடல் வரிகளுடன் காணொளி வடிவில் மூங்கில் தோட்டம் பாடல் இங்கே. மூங்கில் தோட்டம்
மூலிக வாசம்
நிறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தயடி பாதை
ஒன் கூட பொடி நட

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

கொளத்தாங்கரையில
குளிக்கும் பறவைக
சிறகு ஒலர்த்துமே
துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
இரத்தம் உறையும்
குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வயில
இருவரும் இருக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே


December 28, 2012

இதுவே வாழ்க்கை...


வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே என்றும் நிற்கும்
வாசங்களே என்றும் வீசும்

இதுவே தான் வாழ்க்கை
இதுவன்றோ வேட்கை
இவையன்றி வேறேது
இதயமே வேண்டும்

கார்மேகங்களே நிதம் சூழ
கண்ணீர்களே எனை ஆழ
கதறல்களே பரிசாக
காலங்களெல்லாம் காத்திருந்தேனே

வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே என்றும் நிற்கும்
வாசங்களே என்றும் வீசும் என்று - காத்திருந்தேனே

December 15, 2012

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்


மனித குலம் எத்தனையோ நாகரீகங்களைக் கடந்தும்; இத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்; இத்தனை இலட்சம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டும் - கடந்தும்; இத்தனை கோடி மாற்றங்களைக் கடந்து; இத்தனை மில்லியன் மரணங்களைக் கடந்தும் இன்னும் தனக்கென, தனக்குள்ளாக, தன் குடும்பத்திற்குள்ளாக, தன் மாவட்டத்திற்குள்ளாக, தன் மாநிலத்திற்குள்ளாக, தன் தேசத்திற்குள்ளாக ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது வியப்பிற்குரியது.

தன் அல்லது தனது என்ற எண்ணம் நம் அல்லது நமது என்ற அளவில் அதிகம் வளராதது வருத்தத்திற்குரியது.

ஒரு மனிதனின் அடிப்படை வேரான அவனது குடும்பத்திலிருந்து துவங்கலாம். குடும்பத்திற்குள் ஒருவர் உயர்ந்த கருத்தை அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைத்து விட்டால் போதும்; அது எத்தனை நல்ல கருத்தாக இருந்தாலும்... உடனே அவன்/ள் என்ன சொல்வது... அதெல்லாம் சரி வராது என தட்டிக்கழிப்பது தான் நடந்தேறும்.

குடும்பத்திற்குள் இப்படியென்றால் குடும்பங்களுக்குள் வேற்றுமைகளுக்கு சொல்லவே வேண்டாம்... அந்த குடும்பம் என்ன சொல்வது; அவர்கள் அப்படி என்றால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமா; அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத்தான் வேண்டுமா என வீம்பு செய்வது கண்கூடு.

தனிமனித உறவுகளை எடுத்துக் கொண்டால்... அங்கேயும் இது தான். கருத்துக்களை செவிமடுக்கவும், அமர்ந்து பேசவும் எவர்க்கும் சமயமில்லை. மாறாக மனத்தாங்கல்கள் வரும் போது... ‘உன்னிடம் பணம் இருக்கிறது’ என்பதால் அல்லது “நான் அழகில்லை என்பதால் தானே” என்பதான வீண் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.

மாவட்டங்களைப் பார்க்கப் போனால்... அங்கும் இது தான். நீ பாண்டி நான் நாஞ்சில், நீ மேற்கு நான் கிழக்கு என பிரித்துப் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

மாநிலங்களுக்குள் நீ தமிழன் - நான் மலையாளி; நீ கன்னடன் - நான் தெலுங்கன்; நீ பிகாரி - நான் மராத்தி என்பதான வேற்றுமைகள் இன்னும் தொடர்வது  மிகுந்த வருத்தத்திற்குரியது. வேற்றுமைகள் - வைராக்கியத்தையும், வீம்பையும், அகங்காரத்தையும் அதற்குள்ளாக அடக்கி வைத்திருப்பது தான் அதன் கோர முகம்.

அதனால் தான் தமிழகத்திற்குள் முழுமையாக காலடி வைக்க காவிரியும், கிருஷ்ணாவும் இன்னும் காத்திருக்கின்றன; முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது; மகாராஷ்டிராவில் பீகார், ஒரிசாவைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகின்றனர்.

தேசங்கள் இவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி... இந்தியா என்ன சொல்வது என பாகிஸ்தானும்; அமெரிக்கா என்ன சொல்வது என ஈரானும்; இஸ்ரேல் என்ன சொல்வது என பாலஸ்தீனும்; ரஷ்யா என்ன சொல்வது என சீனாவும்  முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது தொடரும் வரை பிரச்சினைகளும் முடிவிற்கு வராது.

இவற்றிற்கு எல்லாம் சமய சாயம் பூசுவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயம். சாதி சமய வேற்றுமைகள் தான் பிற வேற்றுமைகள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இதை மறுப்பவர்கள் தான் அதிகம் என்பது விசித்திரமான உண்மை.

இத்தனை வேற்றுமைகளின் நடுவே தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உயிர்கள் எண்ணிக்கையிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உறவுகள் சொல்லிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உண்டாக்கிய விரிசல்கள் இன்னும் தொடர்கிறது...

எவ்வித சாதி, சமய, மொழி, தேசிய, கலாச்சார வேற்றுமைகள் இல்லாமால் மனிதனை  மனிதனாகப் பார்த்தலும்; சக மனிதனின், சக மாநிலத்தவனின், சக தேசத்தை சார்ந்தவனின் பிரச்சினைகளை நமது பிரச்சினையாக பார்த்தலும் தான் இத்தகைய வேற்றுமைகள் ஏற்படுத்திய விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.

July 05, 2012

காலம் - காற்று - கல்லறை


நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றேனும்
இயல்பாய் இருப்பவரேது

கண் விழித்தால்
கண் அடைக்குமுன்
கண்ணுக்குள் நின்றவரில்லை
காலமாகி போவதும்
காலம் ஆகிப் போவதும்
காற்றோடு போகிறது

காற்றைப் பிடிக்கக் கூடுமோ - உயிர்
காற்றைப் பிடிக்கக் கூடுமோ
சுவாசம் நின்று போனால்
சுகவாசம் மாறிப் போகுமே

கல்லறையின் வாசல்
கண் முன்னில் இருக்க
கடின வார்த்தைகள் ஏன்
கனத்த இருதயம் ஏன்

மாற்றம் மட்டுமே மாறாதது
எனும் போது - நம்மை
மாற்றா விட்டால்
மனிதராய் இருப்பதெதற்கு

எவருக்காகவோ
ஏதுமில்லா விஷயத்தில்
வீண் தர்க்கமேன்
விட்டுக்கொடுத்தலும்
ஏற்றுக்கொள்ளலும்
ஏற்றம் பெறச் செய்யுமே
எவ்வாழ்க்கையையும்

நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றேனும்
இயல்பாய் இருப்பவரேது

நேற்று போனது
நாளை அறிவாரேது
இருக்கின்ற இன்றோ
இயல்பாய் இருப்பவரது

May 04, 2012

விடை தெரியா விசித்திர உலகம்

வரம் வேண்டும் என்றவனுக்கு
வனம் கிடைக்க
வனம் வேண்டும் என்றவனுக்கு
வரம் கிடைக்க

செவியற்றவன்
செவியுடைவனை நோக்கி ஏங்க
செவியுடையவனோ - (சிரமங்களால்) ஏனடா
செவி என அங்கலாய்க்க

பொருள் தேடி அலைபவனுக்கு
இருள் கிடைக்க
பொருள் பெற்றவன்
இன்னல்களால் தவிக்க

எப்போது விடியும்
என சிலர் தவிக்க
எப்போது அடையும்
என பலர் இருக்க

பிள்ளைகள் பிறக்க
ஏங்குபவர்கள் இருக்க
பிள்ளைகள் தொல்லைகள்
என்பவர்களும் இருக்க

படைத்தவனை ஒருபுறம்
பகைப்பவர்கள் இருக்க
படைத்தவனை மறுபுறம்
புகழ்பவர்களும் இருக்க

இப்படியாக
இன்னும் தொடர்கிறது
இவ்வுலகமும்
இந்நிமிடமும்

April 29, 2012

வருவாய் என்று


கண் இமைக்குள்
உன் நினைவே
கண் மூடினால்
உன் கனவே

என் கண்ணில் வழிந்தோடும்
உன் பிரிவின் பாரம் தான்
என் நெஞ்சில் கரைந்தோடும்
உன் பிரிவின் பாரம் தான்
உன் கண்ணை
நான் மீண்டும் காணும் வரை

என் கண்கள் தேடுதே
தினம் வருவாய் என்று தான்
என் நெஞ்சம் ஏங்குதே
உன் வரவை பார்க்கத்தான்
மனம் ஏனோ
ஏதேதோ செய்கிறதே

April 26, 2012

அன்பர் 'அலெக்ஸ்' கடத்தலும் உணர்த்தும் விஷயங்களும்

வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு ஏதும் நிகழ்கையில் மட்டும் தான் மனமும், எண்ண ஓட்டங்களும் சற்றே விசாலமடையும் அல்லது வேறு விதமாக யோசிக்க துவங்கும்; அதிலும் குறிப்பாக நமக்கு நெருக்கமான ஒருவரை கணக்கில் கொள்கையில் அவர் சார்ந்த விஷயமென்றால் இன்னும் ஆர்வமாக அந்த விஷயத்தை அணுகுவோம். 

அப்படித்தான் நண்பர் 'அலெக்ஸ்' கடத்தப்பட்ட பின்னர் அவரை சார்ந்தவர்களாகட்டும்  நான் உட்பட்ட அவரை முன்பே அறிந்தவர்களாகட்டும்,   இன்னும் விசாலமாக யோசிக்க/ விவாதிக்க துவங்கியிருக்கிறார்கள்/ துவங்கியிருக்கிறோம். 


'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று சொல்லிப் போனதெல்லாம் இறந்த காலமாகிப் போய் கொண்டிருக்க இன்னமும் நிகழ்காலமாகக் கருதிக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வடக்கில் செழிப்பாக இருக்கிறார்கள் இங்கு நாம் தான் ரேஷன் அரிசிக்கும்,மண்ணெண்ணைக்கும் தவியாய் தவிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புபவர்களும்  இல்லாமலில்லை.

இவ்வித மனநிலைமை கொண்டவர்களில் பலர் நக்சலைட்டுகள் குறித்தோ, வடகிழக்கு மாநிலங்கள் குறித்தோ, அங்கு வாழும் பழங்குடி - ஆதிவாசிகள் குறித்தோ, அவர்கள் படும் அல்லல்களை குறித்தோ அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்விதம் ஆதிவாசிகள் படுகிற சிரமங்களை அறியாதவர்களுக்காகட்டும், 'அலெக்ஸ்' மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிகிறார் என்று (மட்டுமே) அறிந்தும் அவர் எவ்விதமான சூழ்நிலையில் பணிபுரிகிறார் என்று அறியாதவர்களுக்காகட்டும், அன்பர் 'அலெக்ஸ்' அவர்களின் தற்போதைய நிலைமை, நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருக்கும் நக்சல் பிரச்சினையையும்; சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் இன்னமும் மின்சாரமில்லாத, சரியான மருத்துவ வசதிகள் இல்லாத குக்கிராமங்களையும்; அவர்கள் மத்தியில் பணிபுரியும் 'அலெக்ஸ்' அவர்களின் அயராத உழைப்பையும்; அர்ப்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

சாதாரணமாக கலெக்டர் என்றாலே உயர்ந்த பதவி என்பதும், எவ்வித பிரச்சினையும் இல்லாத வேலை என்பதும், சுகபோக வாழ்க்கை என்ற எண்ணமும் தான் பலரிடம் மேலோங்கியிருக்கிறது. பேச்சு வழக்கில் கூட ஒருவரை உயர்த்திக் கூற வேண்டுமென்றால் "அவனுக்கென்ன, கலெக்டர் மாதிரி வாழுறான்" என்பது மாதிரியான சொற்றொடர்களைத் தான் சமூகம் பிரயோகித்து வருகிறது.

அப்படித்தான் நானும் கருதி வந்திருந்தேன்... ஆனால் ஒரு மாவட்டத்தை ஆளுகிறவருக்கு எத்தனை விதமான நெருக்கடிகள் என சற்று சிந்தித்தால் தான் புரிய வருகிறது.

சமூக பணிகள் என்ற பெயரிலும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரிலும் இன்று பணத்தை மட்டும் அனுப்பி விட்டு கைகட்டி நிற்கின்ற நாம் எங்கே...!! களத்தில் நேரடியாக, மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு அர்ப்பணிப்போடு பணிபுரிகின்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்கே!!!

சமூக நலனுக்காக, மக்கள் உரிமைகளுக்காக உழைக்கும் அலெக்ஸ் போன்றவர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவர்கள். இவர்கள் முன் நாம் ஒன்றுமில்லை.

பள்ளிப்பருவத்தில் நெல்லையில் அவருடனும்,பிற நண்பர்களுடனும் பரிமாறிய சம்பாஷனைகளும், கிரிக்கெட் ஆட்டங்களும் தான் நினைவிற்கு வருகின்றன.

'அலெக்ஸ்' மீண்டும் வருவார்; மீண்டு வருவார்; என்ற நம்பிக்கையிருக்கிறது :)

March 26, 2012

உலகம் எத்தனை விந்தையானது!!!


உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

உலகம் நாடக மேடையாம்
நாடகமே உலகமாயிருப்பதாக படுகிறது இன்று

உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உரைப்பவர் அரிதே இன்று

உன்னதமான அன்பை
உதறித் தள்ளும் உலகம் இன்று

உயிரின் விலை அறியாதார்
உடலின் விலை பேசி திரிகிறார் இன்று

உறவுகளை மதியாதார்
உரிமைகளை குறித்து வினவுகிறார் இன்று

உலகம், சுற்றுவதாலோ என்னமோ - மனிதர்
உள்ளொன்று வைத்து புறமொன்று உரைக்கின்றனர் இன்று

உள்ளதைச் சொன்னால் - இல்லை
உன் வாதம் பொய் என்கின்றனர் இன்று

உணர்ச்சிகளுக்கு விலையில்லை
விலைக்கு தான் உணர்ச்சிகள் இன்று

உருவம் பெரிதாகிப் போக
உண்மை சிறிதாகிப் போனது இன்று

உள்ளார்ந்த நேசம் வலிதல்ல
உலகார்ந்த வேஷம் வலிது இன்று

உலகம் தான் எத்தனை விந்தையானது - ஒருபுறம்
உயிர்கள் ஜெனிக்க - மறுபுறம்
உயிர்கள் மரிக்க - உயிரிருந்தும்
உடலளவில்  மனிதர்  மரிக்க

உலகம் தான் எத்தனை விந்தையானது!!!

March 10, 2012

ஏதோ ஒரு வெற்றிடம்


என் வேதனையும் சஞ்சலமும்
என்னோடு மரிக்கட்டும்

என் பெலன் என்னை விட்டுப் போனது
என் ஜீவன் அங்கலாய்க்கிறது

என் எலும்புகள் 
என்னை உருக்குகிறது

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

என் நீதி நியாயங்கள் 
என்னையே பரிகசிக்கின்றன.

என் மனசாட்சி
என்னை ஏளனமாய் பார்க்கிறது

ஏதோ ஒரு வெற்றிடம்
என்னுள்ளில் 

என்று மாறுமோ இந்த
எளியவனின் பாடுகள் 

என்று கேட்கப்படுமோ
என் கதறல்கள் 

என் சரீரம் மரிக்காமலே
சவமாய் போனது

February 29, 2012

உன் நினைவில் வாழ்கின்றேன்

என் உள்ளத்தின் ஏக்கங்கள்
உன்னைச் சேருமா
என் உள்ளத்தின் உணர்வுகள்
உன்னை மாற்றுமா

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

ஏனோ என் உள்ளம் உனைத் தேடுதே
ஏனோ என் உள்ளம் நீயின்றி வாடுதே

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே

உயிர் இருக்கும் வரையில்
உன் நினைவுகள் என்னுள்
உடல் இருக்கும் வரையில்
உன் முகம் என்னுள்

உன் நினைவில் வாழ்கின்றேனே
உன் நினைவில் வீழ்கின்றேனே 

January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


Related Posts with Thumbnails