December 31, 2012

2012 - திரும்பிப் பார்க்கிறேன்


இந்த வருடத்தின் ஆரம்பத்திலும் அலுவலில் இருந்தேன், இன்று முடிவிலும்  அலுவல் தான்... இரவுப்பணி. அலுவலில் ஆரம்பித்ததாலோ என்னமோ இந்த வருடம் முழுவதும் முழுமையான ஓய்வேயின்றி இருக்க வேண்டியதாகிப் போயிற்று. கிடைத்த ஒரு மாத விடுமுறையிலும்  சரியான ஓய்வில்லை. மனநிலையும், உடல்நிலையும் முன்பு போல் சரிவர இல்லை என்றே தோன்றுகிறது; அதற்கு காரணம், மன அழுத்தம் என்று கூட சொல்லலாம்.

மன அழுத்தம் பற்றி கீழே எழுதுகிறேன்... அதன் முன்னர் 2012 கொசுவத்தி சுத்திருவோம்... அதாங்க ஃப்ளாஷ் பேக்.

எமக்கு மூன்றாம் தேதி இரண்டாவது ஆண்மகன் பிறந்தான், புது வருடத்தின் மூன்றாம் தேதி பிறந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை, கருவறையிலிருந்து எளிதில் வந்த அவனுக்கு பிரசவ அறையிலிருந்து வெளிவர சற்றே சிரமப்பட வேண்டியதாயிற்று. குவைத்தில் பிறந்ததால் காகித கெடுபிடிகள் காரணம் சற்று தாமதமாயிற்று.

அப்பாடா முடிந்தது என்று நினைத்தால் அடுத்து அவனது கடவுச்சீட்டு @ Passport ல் விசாவை இணைக்க முடியாமல், காவல்துறை விசாரணை, நீதிமன்ற வாசல் என அலைய வேண்டியதாகிப் போயிற்று மூன்று மாதம். ஜனவரி முதல் மார்ச் வரை அடைந்த மனப் போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

இப்படி வில்லங்கத்திலேயே ஆரம்பித்த வருடம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க வைத்தது. ஜூனில் மாரடைப்பால் காலமாகிப் போன இரு ஜீவன்கள் மனதை அதிகமாகவே காயப்படுத்தின. அத்தனை இளம் வயதில் அவர்கள் காலமாகிப் போனதை நினைத்து வருந்தவா அவர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை நினைத்து வருந்தவா என தெரியாமல் கலங்கிப் போனேன்.

அப்போதே முடிவு பண்ணிக்கொண்டேன்... நாமும் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என. ஆதலால் இருக்கின்ற நாட்கள் வரை நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்யலாமே எனவும் யோசித்தேன்... அதையே நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

விடுமுறையிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட பண நெருக்கடி சொல்லி மாளாது. விடுமுறையில் கூட கடன் வாங்கி செலவு பண்ண வேண்டிய நிர்ப்பந்தமாகிப் போனது என் திட்டமிடல் இல்லாமை தான்.

என்றாலும் இன்றைய தேதியில் சாமானியன் ஒருவன் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல, குறிப்பாக மனிதம் படும் சிரமங்களும், மன அழுத்தங்களும் விவரிக்க இயலாதவை.

குடும்ப பாரம், பணத்தேவை, நண்பர்கள் இம்சை... இவற்றிற்கு எல்லாம் மேல் வேலைப்பளு. இவை அனைத்தும் தரும் மன அழுத்தத்தினாலேயே மனிதனுக்கு 75 சதவீததிற்கும் மேல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கை அதிலும் குடும்பத்தை விட்டு தனியாக பணிபுரிபவர்கள் பாடு பெரும்பாடு, அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவைப் பொருத்து தொலைபேசியிலேயோ, இணைய தொலைபேசியிலேயோ, கணினி மூலமாகவோ மட்டுமே பேசி/ பார்த்துப் பேசி வாழும் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல.

தொலைபேசியிலேயே சிரிப்பு, அழுகை, மௌனம், வாழ்த்து என வாழ்ந்து விடுகிறார்கள்; மாதக்கடைசி ஆனால் பணமின்றி தவித்துக் கொண்டிருக்கையில் தான் ஊரில் இருந்து அழைப்பு வரும்... எய்யா பணம் இருந்தா கொஞ்சம் அனுப்புயா ராசா என்று.

இவன் இங்கு மூன்று வேளை சாப்பிடுகிறானோ இல்லையோ... வேறு வழியில்லாமல் இருக்கின்ற பணத்தையும், கடன் வாங்கி இல்லாத பணத்தையும் அனுப்ப வேண்டிய கட்டாயம்.

இந்த பணப்பற்றாக்குறை, தட்டுப்பாடு புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மனிதன் ஒவ்வொருவரையும் இன்று துரத்துகிறது. இது போன்று பல காரணங்கள் இன்றைய சராசரி மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாக அவனே அறியாமல் கொண்டு போய் விடுகிறது.

இவற்றின் முடிவு... இளமையில் மரணம்...

இன்னும் உண்டு.

கடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு


2012 ல் நான் மிக அதிகம் கேட்டப் பாடல். கடல் திரைப்பட மூங்கில் தோட்டம் பாடல் தான். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனதை தொடும் வரிகளுக்கு அற்புதமான இசையை கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

பாடல் வரிகளுடன் காணொளி வடிவில் மூங்கில் தோட்டம் பாடல் இங்கே. 



மூங்கில் தோட்டம்
மூலிக வாசம்
நிறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தயடி பாதை
ஒன் கூட பொடி நட

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

கொளத்தாங்கரையில
குளிக்கும் பறவைக
சிறகு ஒலர்த்துமே
துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
இரத்தம் உறையும்
குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வயில
இருவரும் இருக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே


December 28, 2012

இதுவே வாழ்க்கை...


வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே என்றும் நிற்கும்
வாசங்களே என்றும் வீசும்

இதுவே தான் வாழ்க்கை
இதுவன்றோ வேட்கை
இவையன்றி வேறேது
இதயமே வேண்டும்

கார்மேகங்களே நிதம் சூழ
கண்ணீர்களே எனை ஆழ
கதறல்களே பரிசாக
காலங்களெல்லாம் காத்திருந்தேனே

வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே என்றும் நிற்கும்
வாசங்களே என்றும் வீசும் என்று - காத்திருந்தேனே

December 15, 2012

வேற்றுமையில் ஒற்றுமை - ஏட்டளவில்


மனித குலம் எத்தனையோ நாகரீகங்களைக் கடந்தும்; இத்தனை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்; இத்தனை இலட்சம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் கண்டும் - கடந்தும்; இத்தனை கோடி மாற்றங்களைக் கடந்து; இத்தனை மில்லியன் மரணங்களைக் கடந்தும் இன்னும் தனக்கென, தனக்குள்ளாக, தன் குடும்பத்திற்குள்ளாக, தன் மாவட்டத்திற்குள்ளாக, தன் மாநிலத்திற்குள்ளாக, தன் தேசத்திற்குள்ளாக ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதற்குள்ளாகவே வாழ்ந்து வருவது வியப்பிற்குரியது.

தன் அல்லது தனது என்ற எண்ணம் நம் அல்லது நமது என்ற அளவில் அதிகம் வளராதது வருத்தத்திற்குரியது.

ஒரு மனிதனின் அடிப்படை வேரான அவனது குடும்பத்திலிருந்து துவங்கலாம். குடும்பத்திற்குள் ஒருவர் உயர்ந்த கருத்தை அல்லது வழக்கத்திற்கு மாறான கருத்தை முன் வைத்து விட்டால் போதும்; அது எத்தனை நல்ல கருத்தாக இருந்தாலும்... உடனே அவன்/ள் என்ன சொல்வது... அதெல்லாம் சரி வராது என தட்டிக்கழிப்பது தான் நடந்தேறும்.

குடும்பத்திற்குள் இப்படியென்றால் குடும்பங்களுக்குள் வேற்றுமைகளுக்கு சொல்லவே வேண்டாம்... அந்த குடும்பம் என்ன சொல்வது; அவர்கள் அப்படி என்றால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமா; அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத்தான் வேண்டுமா என வீம்பு செய்வது கண்கூடு.

தனிமனித உறவுகளை எடுத்துக் கொண்டால்... அங்கேயும் இது தான். கருத்துக்களை செவிமடுக்கவும், அமர்ந்து பேசவும் எவர்க்கும் சமயமில்லை. மாறாக மனத்தாங்கல்கள் வரும் போது... ‘உன்னிடம் பணம் இருக்கிறது’ என்பதால் அல்லது “நான் அழகில்லை என்பதால் தானே” என்பதான வீண் வாதங்கள் எடுத்து வைக்கப்படுகிறது.

மாவட்டங்களைப் பார்க்கப் போனால்... அங்கும் இது தான். நீ பாண்டி நான் நாஞ்சில், நீ மேற்கு நான் கிழக்கு என பிரித்துப் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

மாநிலங்களுக்குள் நீ தமிழன் - நான் மலையாளி; நீ கன்னடன் - நான் தெலுங்கன்; நீ பிகாரி - நான் மராத்தி என்பதான வேற்றுமைகள் இன்னும் தொடர்வது  மிகுந்த வருத்தத்திற்குரியது. வேற்றுமைகள் - வைராக்கியத்தையும், வீம்பையும், அகங்காரத்தையும் அதற்குள்ளாக அடக்கி வைத்திருப்பது தான் அதன் கோர முகம்.

அதனால் தான் தமிழகத்திற்குள் முழுமையாக காலடி வைக்க காவிரியும், கிருஷ்ணாவும் இன்னும் காத்திருக்கின்றன; முல்லைப் பெரியாறு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது; மகாராஷ்டிராவில் பீகார், ஒரிசாவைச் சார்ந்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகின்றனர்.

தேசங்கள் இவற்றிற்கெல்லாம் மேலே ஒரு படி... இந்தியா என்ன சொல்வது என பாகிஸ்தானும்; அமெரிக்கா என்ன சொல்வது என ஈரானும்; இஸ்ரேல் என்ன சொல்வது என பாலஸ்தீனும்; ரஷ்யா என்ன சொல்வது என சீனாவும்  முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது தொடரும் வரை பிரச்சினைகளும் முடிவிற்கு வராது.

இவற்றிற்கு எல்லாம் சமய சாயம் பூசுவது இன்னும் வருத்தமளிக்கும் விஷயம். சாதி சமய வேற்றுமைகள் தான் பிற வேற்றுமைகள் அனைத்திற்கும் அடிப்படையான காரணம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இதை மறுப்பவர்கள் தான் அதிகம் என்பது விசித்திரமான உண்மை.

இத்தனை வேற்றுமைகளின் நடுவே தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உயிர்கள் எண்ணிக்கையிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உட்கொண்ட உறவுகள் சொல்லிலடங்காதவை; இந்த வேற்றுமைகள் உண்டாக்கிய விரிசல்கள் இன்னும் தொடர்கிறது...

எவ்வித சாதி, சமய, மொழி, தேசிய, கலாச்சார வேற்றுமைகள் இல்லாமால் மனிதனை  மனிதனாகப் பார்த்தலும்; சக மனிதனின், சக மாநிலத்தவனின், சக தேசத்தை சார்ந்தவனின் பிரச்சினைகளை நமது பிரச்சினையாக பார்த்தலும் தான் இத்தகைய வேற்றுமைகள் ஏற்படுத்திய விரிசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றே தோன்றுகிறது.

Related Posts with Thumbnails