December 31, 2012

2012 - திரும்பிப் பார்க்கிறேன்


இந்த வருடத்தின் ஆரம்பத்திலும் அலுவலில் இருந்தேன், இன்று முடிவிலும்  அலுவல் தான்... இரவுப்பணி. அலுவலில் ஆரம்பித்ததாலோ என்னமோ இந்த வருடம் முழுவதும் முழுமையான ஓய்வேயின்றி இருக்க வேண்டியதாகிப் போயிற்று. கிடைத்த ஒரு மாத விடுமுறையிலும்  சரியான ஓய்வில்லை. மனநிலையும், உடல்நிலையும் முன்பு போல் சரிவர இல்லை என்றே தோன்றுகிறது; அதற்கு காரணம், மன அழுத்தம் என்று கூட சொல்லலாம்.

மன அழுத்தம் பற்றி கீழே எழுதுகிறேன்... அதன் முன்னர் 2012 கொசுவத்தி சுத்திருவோம்... அதாங்க ஃப்ளாஷ் பேக்.

எமக்கு மூன்றாம் தேதி இரண்டாவது ஆண்மகன் பிறந்தான், புது வருடத்தின் மூன்றாம் தேதி பிறந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை, கருவறையிலிருந்து எளிதில் வந்த அவனுக்கு பிரசவ அறையிலிருந்து வெளிவர சற்றே சிரமப்பட வேண்டியதாயிற்று. குவைத்தில் பிறந்ததால் காகித கெடுபிடிகள் காரணம் சற்று தாமதமாயிற்று.

அப்பாடா முடிந்தது என்று நினைத்தால் அடுத்து அவனது கடவுச்சீட்டு @ Passport ல் விசாவை இணைக்க முடியாமல், காவல்துறை விசாரணை, நீதிமன்ற வாசல் என அலைய வேண்டியதாகிப் போயிற்று மூன்று மாதம். ஜனவரி முதல் மார்ச் வரை அடைந்த மனப் போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.

இப்படி வில்லங்கத்திலேயே ஆரம்பித்த வருடம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்திக்க வைத்தது. ஜூனில் மாரடைப்பால் காலமாகிப் போன இரு ஜீவன்கள் மனதை அதிகமாகவே காயப்படுத்தின. அத்தனை இளம் வயதில் அவர்கள் காலமாகிப் போனதை நினைத்து வருந்தவா அவர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை நினைத்து வருந்தவா என தெரியாமல் கலங்கிப் போனேன்.

அப்போதே முடிவு பண்ணிக்கொண்டேன்... நாமும் அதிக நாட்கள் நீடிக்கப் போவதில்லை என. ஆதலால் இருக்கின்ற நாட்கள் வரை நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்யலாமே எனவும் யோசித்தேன்... அதையே நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.

விடுமுறையிலும் அதன் பின்னரும் ஏற்பட்ட பண நெருக்கடி சொல்லி மாளாது. விடுமுறையில் கூட கடன் வாங்கி செலவு பண்ண வேண்டிய நிர்ப்பந்தமாகிப் போனது என் திட்டமிடல் இல்லாமை தான்.

என்றாலும் இன்றைய தேதியில் சாமானியன் ஒருவன் படும் அல்லல் கொஞ்ச நஞ்சமல்ல, குறிப்பாக மனிதம் படும் சிரமங்களும், மன அழுத்தங்களும் விவரிக்க இயலாதவை.

குடும்ப பாரம், பணத்தேவை, நண்பர்கள் இம்சை... இவற்றிற்கு எல்லாம் மேல் வேலைப்பளு. இவை அனைத்தும் தரும் மன அழுத்தத்தினாலேயே மனிதனுக்கு 75 சதவீததிற்கும் மேல் உடல்நிலையும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கை அதிலும் குடும்பத்தை விட்டு தனியாக பணிபுரிபவர்கள் பாடு பெரும்பாடு, அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தின் அளவைப் பொருத்து தொலைபேசியிலேயோ, இணைய தொலைபேசியிலேயோ, கணினி மூலமாகவோ மட்டுமே பேசி/ பார்த்துப் பேசி வாழும் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல.

தொலைபேசியிலேயே சிரிப்பு, அழுகை, மௌனம், வாழ்த்து என வாழ்ந்து விடுகிறார்கள்; மாதக்கடைசி ஆனால் பணமின்றி தவித்துக் கொண்டிருக்கையில் தான் ஊரில் இருந்து அழைப்பு வரும்... எய்யா பணம் இருந்தா கொஞ்சம் அனுப்புயா ராசா என்று.

இவன் இங்கு மூன்று வேளை சாப்பிடுகிறானோ இல்லையோ... வேறு வழியில்லாமல் இருக்கின்ற பணத்தையும், கடன் வாங்கி இல்லாத பணத்தையும் அனுப்ப வேண்டிய கட்டாயம்.

இந்த பணப்பற்றாக்குறை, தட்டுப்பாடு புலம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மனிதன் ஒவ்வொருவரையும் இன்று துரத்துகிறது. இது போன்று பல காரணங்கள் இன்றைய சராசரி மனிதனை மன அழுத்தத்திற்குள்ளாக அவனே அறியாமல் கொண்டு போய் விடுகிறது.

இவற்றின் முடிவு... இளமையில் மரணம்...

இன்னும் உண்டு.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails