January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


Related Posts with Thumbnails