November 26, 2013

அபாயகரமான மன அழுத்தமும் - ஜோனத்தான் ட்ரோட்டும்

‘மன அழுத்தம்’ என்கிற ‘STRESS’ என்பது இன்று மன நல மருத்துவத்துறையில் பரவலாக பேசப்படுகிற, விவாதிக்கப்படுகிற ஒரு விஷயம் அல்லது வியாதியாக இருந்தாலும் சாமானிய மக்களிடையே மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன்.

மனஅழுத்தம் ஒருவரை வெகு மெளனமாக கரையான் சிதைப்பது போல் சிறிது சிறிதாக சிதைத்து விடும் கொடுமை நிறைந்ததுஎன்பது தான் பலரும் அறியாத உண்மை. வாழ்க்கையின் மீது வெறுப்பை விதைத்து உயிரையும் மாய்த்து விட ஏவும் விஷமேறியது மன அழுத்தம்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் ஒருவருக்கு மிக முக்கியமான தேவை அவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுக்கும் ஒரு மனமும், ஓய்வும், தகுந்த ஆலோசனைகளுமே.

ஒருவரது உள்ளக்கிடக்கைகளை செவிமடுத்து கேட்கவும் நேரமில்லாத இன்றைய அவசர உலகத்தில் மன அழுத்தம் மிகக்கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் அறியப்படாத நிலையிலேயே உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure), நீரிழிவு, மனத்தளர்வு (Depression), மாரடைப்பு (Cardiac Arrest) போன்ற இன்ன பிற வியாதிகளும் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு வந்து சேரக்கூடிய அபாயமும் உண்டு.

பணம் சம்பாதிக்கின்ற அவசரத்தில் இன்று பெற்றோர்களுக்கு குழந்தைகளிடம் அளவளாவுகிற நேரமும், அவர்களது மன விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தருணமும் கிடைப்பதில்லை. குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்க இயலவில்லை என்றாலும் அவர்களோடு அமர்ந்து உரையாடவும் நேரமற்று இருக்கும் பெற்றோரைத்தான் இன்று அதிகம் பார்க்க முடிகிறது.

வீடுகளில் துவங்குகின்ற இத்தகைய சூழ்நிலை பள்ளிக்கூடம், கல்லூரி, பணியிடங்கள் என அநேகமாக அனைத்து வட்டாரங்களிலும் வியாபித்திருப்பது தான் வியப்பிற்குரியது.

பெற்றோர்களின் கவனிப்பின்மை, திக்குமுக்காட வைக்கும் பாடத்திட்டங்கள், ஆசிரியர்களால் ஒதுக்கப்படுதல், நட்பு மற்றும் உறவுகளில் ஏற்படும் சிறு விரிசல்கள்,வேலைப்பளு, வேலைவாய்ப்பின்மை, ஏமாற்றங்கள், தோல்விகள் என மன அழுத்தம் பல ரூபங்களில் வரும் தன்மை வாய்ந்தது.

படிப்பு மற்றும் பணிகளில் கவனம் செலுத்தமுடியாமை, தேவையில்லாமல் எரிச்சல்/கோபப்படுதல், தனிமையை விரும்புதல், அதிக தூக்கம், தூய்மையின்மை என பல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தது மனழுத்தம்.

மன அழுத்தத்திற்கு பலிகடா ஆன சமீபத்திய பிரபலம் ‘ஜோனத்தான் ட்ரோட்’ என்கிற இங்கிலாந்து கிரிக்கெட் ஆட்டக்காரர். ட்ரோட் ஆஸ்திரேலியாவில் அவரது ஆட்டத்தை தொடர முடியாமல் தற்போது தாய்நாட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறார்.

குடும்பத்தினரின் அரவணைப்பும், பாசமும், கவனிப்பும், ஓய்வுமே இப்போது அவருக்கு தேவையாயிருக்கிறது. ஓரிரு மாதங்களாகவே ட்ரோட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள்.

மன அழுத்தத்தினால் அவதியுறும் எவர் ஒருவருக்கு அன்பும். அரவணைப்பும், ஓய்வும் மறுக்கப்படுகின்றதோ அவர் தற்கொலையும் செய்து விட துணிந்து விடுவது தான் மன அழுத்தத்தின் உச்சகட்ட விளைவு.

மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிதல் உயிர்பலியை தவிர்க்கும் என்பதால் பணம் சம்பாதிக்கும் அவசரத்திலும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மனம் விட்டு பேசுதல் நம் மனதை இலகுவாக்கும். படிப்பு-வீடு; வேலை-வீடு என்றிருக்காமல், விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு அருகிலிருக்கும் பூங்காக்களுக்கேனும் போய்வருவது மன அழுத்தத்தை குறைக்கும். அதோடு பேராசைக் கொள்ளாமல், இருப்பதை வைத்து நிறைவாக வாழ்வதும் மன நிறைவைத் தரும்; மன அழுத்தம் நீக்கும்.

என்றும் அன்புடன்,

எட்வின்

November 21, 2013

பதிவுலகம் - விக்கிபீடியா - தினகரன் - நான் - Plagiarism

பலரும் கருதுவது போன்று எழுதுவது அத்தனை எளிதல்ல. எழுதுவதற்கேற்ற சூழ்நிலையும், மனோநிலையும் எளிதாக அமைந்து விடுவதில்லை. எனினும் ஒருவர் எழுதுவதை அதற்குரிய அங்கீகாரமில்லாமல் மற்றொருவர் அப்படியே நகலெடுத்து அவர்களே எழுதியதைப் போன்ற ஒரு ,மாயபிம்பத்தை ஏற்படுத்துவதில் என்ன தான் சிறப்பிருக்கிறதோ தெரியவில்லை. இதனை ஆங்கிலத்தில் Plagiarism என்கிறார்கள்.

சில தினங்கள் முன்பு எதேச்சையாக தினகரன் இணையதளத்தில் சச்சினைக் குறித்த கட்டுரை ஒன்றை "சச்சின் பற்றி சில சுவாரசிய தகவல்" என்ற தலைப்பில் வாசிக்க நேரிட்டது, ஆரம்பத்திலேயே அந்த எழுத்தின் நடை, ஐந்து வருடங்கள் முன்னர் இந்த வலைப்பூவில் நான்  எழுதியது தான் எனப் புரிந்தது. கடைசி முற்றுப்புள்ளி வரை படித்து விட்டு உறுதியும் செய்து கொண்டேன்.

இத்தனைக்கும் அது நான் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஒரு கட்டுரை. இதே கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவும் வெளியிட்டிருக்கிறார்கள் எனது மொழிபெயர்ப்புக்கு அளிக்க வேண்டிய தக்க மரியாதையை அளித்து. ஆனால் தினகரனோ எனது வலைப்பூவின் சுட்டியையோ அல்லது தமிழ் விக்கிப்பீடியாவின் சுட்டியையோ குறிப்பிடாமல் அவர்கள் எழுதியது போன்றொரு கானல்நீரை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எழுத்திற்குரிய ஊக்குவிப்பும், அங்கீகாரமும் இருந்தால் அது எழுதுபவரை இன்னும் மெருகேறச் செய்யும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அது இல்லாமல் போகும் போது எழுதுபவர் மனமுடைந்து போவது சகஜமே.

சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எழுதுவதில் சிக்கல்கள் இருந்ததை மறுப்பதிற்கில்லை. எழுத்தாளன் என்று சொல்வதற்கில்லை. இத்தனை காலமும் முடிந்ததை எழுதி வந்திருக்கிறேன், மனதில் பட்ட விஷயங்களை எழுதியிருக்கிறேன், சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறேன், பிற இணையதள தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்..

இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது தான் ஆவல். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எழுத்துக்களுக்கும் எழுத்துகளுக்கும் என்றும் மதிப்பிருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகளினூடே உணரமுடிகிறது.

எழுத்துக்கள் மும்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எழுத்துகளை முகர்வோர் மத்தியில். ஒரே எழுத்தை சிலர் சாதகமாகப் பார்க்கின்றனர், சிலர் பாதகமாக பார்க்கின்றனர் சிலர் நடுநிலையாகப் பார்க்கின்றனர்.

இம்மூன்று விதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது மனோபாவம் தான் ஒரு எழுத்தாளனுக்கு அழகு. எழுதுகிற அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

November 16, 2013

சச்சின் எனும் ஒரு எளிமையான மனிதருக்கு நன்றி

24 வருடங்கள் முன்பு கராச்சியில் நவம்பர் 15 அன்று தனது 16 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பித்த சச்சின் ரமேஷ் டெண்டுல்கரின் பயணம் அதே நவம்பர் 16 அன்று முடிவுக்கு வந்தது அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் முடிவிற்கு கனக்கச்சிதமாக எழுதப்பட்ட வரலாறு எனலாம். சச்சினின் சகாப்தம் அவரது சொந்த மண்ணிலேயே முடிவுக்கு வருவது அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கின்ற மரியாதை என கூற முடியும். இது போலொரு மரியாதை சவுரவ், டிராவிட், லக்ஷ்மண் இவர்களுக்குக் கூட அளிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 


ஏப்ரல் 24 ல் பிறந்த சச்சின், 24 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் 200 டெஸ்ட் ஆட்டங்கள், 463 ஒரு நாள் ஆட்டங்கள், 34347 சர்வதேச ஓட்டங்கள், 100 சதங்கள், 164 அரை சதங்கள், 200 விக்கெட்கள் என அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு அளித்த பங்கினை இந்த தலைமுறையை சார்ந்த எவராலும் மறக்கவியலாது. அவரது சாதனைகளை பட்டியலிட இந்த ஒரு பக்கம் போதாது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்ட தர வரிசையில் முதலிடம், உலகக் கோப்பை வெற்றி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களில் அதிக ஓட்டங்களை எடுத்தவர், அதிக சதங்களை குவித்தவர், உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ஓட்டங்களை அடித்தவர், எந்த அணியினரும் பின்வாங்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிக அதிக சதங்களை எடுத்தவர், ரஞ்சி, துலீப், இரானி ஆட்டங்களில் முதல் ஆட்டங்களிலேயே சதங்களை அடித்தவர். பதினைந்தாவது வயதில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை செய்தவர்.

டிராவிட் உடன் சேர்ந்து 1999 ல் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 331 ஓட்டங்கள் குவித்தவர், சவுரவ் கங்குலியுடன் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 22 சதங்களை எடுத்தவர். தொடர்ந்து 185 ஒரு தின ஆட்டங்களில் ஆடியவர் என எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின்.

இன்னும் எழுதி செல்லலாம் சச்சினின் பெருமைகளை. இத்தனை சாதனைகளை செய்திருந்தாலும் சச்சின் இன்னும் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்பது அவரது சாதனைகளால் அல்ல அவரது எளிமையாலும், தன்னடக்கத்தாலுமே.


எத்தனையோ சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரகள் இந்தியாவிலும் பிற அணிகளிலும் இருந்திருக்கிறார்கள், எனினும் அனைவராலும் மதிக்கப்பட்ட, மரியாதை அளிக்கப்பட்ட, கவுரவப்படுத்தப்பட்ட ஒரே வீரர் சச்சினாகத்தான் இருக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டு பிராட்மேன், லாரா, ஷேன்வார்ன், வாசிம் அக்ரம் போன்றோர் சச்சினுக்கு செய்த மரியாதையும் அவருடன் ஆடிய சவுரவ் கங்குலி, டிராவிட் போன்றோர் நேரிலேயே வந்து மரியாதை செய்வதும். பிற விளையாட்டு நட்சத்திரங்களான லூயிஸ் ஹாமில்டன், ரோஜர் ஃபெடரர், மைக்கேல் ஷுமாக்கர் போன்றோர் இணையதளங்கள் மூலமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதுமே.

கிரிக்கெட் இல்லாத ஒரு வாழ்வை சச்சினால் நினைத்துப் பார்ப்பது கடினம் தான் எனினும் இந்திய கிரிக்கெட்டிற்கு தொடர்ந்து சச்சின் பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சச்சின் இல்லாத கிரிக்கெட்டை பார்ப்பது எளிது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினைப் பார்ப்பது கடினமே என கூறிய சச்சினின் மனைவி அஞ்சலியின் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சச்சினின் வெற்றிகரமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விருப்பத்தோடு எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் நாம் வெற்றி பெற முடியும் என்பது தான்.

சச்சினை கிரிக்கெட்டிற்கு அர்ப்பணித்த, ஊக்குவித்த அவரது பெற்றோர்கள், சகோதரர் அஜித் டெண்டுல்கர், பயிற்சியாளர் அச்ரேக்கர், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியை ராகினி தேசாய் இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சிறுவர்களை அவர்களுக்கு விருப்பமான கலைகளில் அல்லது விளையாட்டுகளில் அவர்களுக்கான முழு சுதந்திரத்தை அளித்து அவர்களை ஊக்குவித்தால் அவர்களும் நாளைய சச்சின்களே.

Related Posts with Thumbnails