December 31, 2013

2013 - முகநூல் - சுயநலம் - 2014

2012 ன் இறுதி நாளிலும் பணியிலிருந்ததாலோ என்னமோ இந்த வருட இறுதியில் சற்றே இளைப்பாற முடிந்தது மகிழ்ச்சியே. அதற்கு வழிவகை செய்த மேலிடத்திற்கு முதல் நன்றி. 2013 ல் கடந்து வந்த பாதைகள் ஏமாற்றத்தையும், சில நேரங்களில் வாழ்க்கையின் மீதான ஒரு வெறுப்பையும், பல நேரங்களில் வருத்தத்தையும் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

எனினும் வெகு நாளைய கனவான ஒரு இசைத்தொகுப்பை நண்பன் மோகனுடன் இணைந்து உன்னிகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், ஜாலி ஆபிரகாம், ஹேமாஜான் போன்றோரின் குரலில் வெளியிடும் வாய்ப்பு இந்த வருடம் தான் அமைந்தது.

இது ஒருபுறமிருந்தாலும் முகநூல் நிமித்தம் பட்ட அவஸ்தைகள் ஏராளம். நாம் பொதுவாக ஒன்று எழுதினால் தனக்கே எழுதியதைப் போன்ற ஃபீலிங்க்ஸ் கொட்டிவிட்டு பீலா விட்டவர்கள் பலர். இது போதாதென்று நண்பர்களுக்குள் பகிர வேண்டிய விஷயங்களை சந்தியில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்களை ஏனென்று கேட்டுவிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களும் பல.

ஆர்குட், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் வந்த ஆரம்ப நாட்களில் அமைதியாக எந்த அபத்தமும் இல்லாமல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த காலங்கள் மாறிப்போனது இன்று. சம்பந்தமேயில்லாமல் சம்பந்தமற்ற தகவல்களை முகநூலில் பகிர்வதும் (Share), கண்மூடித்தனமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்வதும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கின்றன.

சம்பவங்களை அதன் உண்மைநிலையை ஆராய்ந்து அறியாமல், அறியவும் முற்படாமல் அப்படியே பகிரும் செயல் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் தொற்றியிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

சிலர் தூக்கம் வரவில்லை, தலைவலிக்கிறது என்பதைக் கூட முகநூல் வழியாக Status என்ற பெயரில் உலகம் அறியவேண்டுமென்று ஆசைப்படுவதை என்னவென சொல்வது. எதையாவது கிறுக்கி மற்றவரையும் கிறுக்கு பிடிக்கச் செய்யும் உக்திகள் எங்கிருந்து தான் உதிக்கின்றனவோ தெரியவில்லை.

"ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்தவுடனேயே ஷுட்டிங்கையும் ஆரம்பித்து விடுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது" இது சமீபத்தில் twitter ல் அதிகம் ரசித்த ட்வீட். இந்த புகழ் முகநூல் பயன்படுத்துபவர்கள் பலரையும் சாரும். நின்றால், நடந்தால், குனிந்தால் என என்ன செய்தாலும் படம் பிடித்து போடுபவர்களை பார்த்து சிரிப்பதா! அழுவதா!!

பலர் தாங்கள் உணவருந்தினாலும் படமெடுத்து வலையேற்றுகிறார்கள். குறிப்பாக விலையுயர்ந்த உணவகங்களில் சென்று படமெடுத்து ஏற்றுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதோடு விடுகிறார்களா இல்லை... கார் வாங்கினால், பைக் வாங்கினால், வீடு கட்டினால் என தங்களை, தாங்கள் அடைந்திருக்கும் நிலையை உலகம் பார்க்க வேண்டுமென்று புகைப்படங்கள் எடுத்து முகநூலில் ஏற்றுகிறார்கள். இதே வேலையாக இருப்பவர்களை உளவியலில் ASB - Attention Seeking Behaviour குணம் உடையவர்கள் என்று கூறுகிறார்கள். தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் என்றும் பொருள்படலாம்.

எவரெவர் என்னென்ன செய்கிறார்கள், எங்கிருக்கிறார்கள் என எளிதாக முகநூலின் Status Update களின் மூலம் அறிந்து கொள்ளமுடிவது நண்பர்களுக்குள் சரியெனப் பட்டாலும். பலரும் காணுமாறு பகிரும் போது அதற்கேதுவான பின்விளைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. சமீபத்தில் வெளிநாடு ஒன்றில் பணிபுரியும் வேலூரை சார்ந்த ஒருவர் முகநூலில் ஊருக்கு செல்கிறேன் என எழுதிவிட்டு போனார். மறுநாள் சென்னை விமானநிலையத்திலிருந்து வேலூருக்கு போகிற வழியில் அவரது நண்பனின் நண்பன் அனைத்துப்பொருட்களையும், அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துவிட்டு தப்பியோடி விட்டார். இதையெல்லாம் சொல்லி உஷாரா இருங்கப்பான்னு சொன்னா போடா உன் வேலயப்பார் என்கின்றனர் பெரும்பாலானோர்.

இன்றைக்கு இணையமும், முகநூலும், பிற சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்புக்கு முக்கியமான ஊடகங்களாகி விட்டன. அப்படியே மொத்தமாக வேண்டாமென்று ஒதுக்கி விடமுடியாது. அவற்றை எப்படி முறையாக, கவனமாக, உபயோகிக்கிறோம் என்பதே கேள்வி!

பெரும்பாலானோரின் கைபேசிகளில் முகநூல் பார்க்கும் படியான வசதியும் இன்று இருக்கிறது. ஏழை, நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் இன்று முகநூல் உபயோகிக்கின்றனர்.  இதனால் பிறரிடம் இல்லாத ஒரு விஷயத்தை நாம் பகிரும் போது மற்றவரின் மனம் புண்படாதவாறு பகிர்தல் மிக அவசியம். என்னிடம் இது இருக்கிறது, நாங்கள் இத்தனை பெரிய வீடு கட்டி விட்டோம், நான் அங்கு செல்கிறேன், நான் அமெரிக்காவில் இருக்கிறேன், நான் KFC, McDonald போன்ற உணவகங்களில் சாப்பிடுகிறேன் என தம்பட்டம் அடித்து Status Update செய்வதால் இவை இல்லாதவன் மனது சங்கடப்படாதா!? வருத்தப்பட மாட்டானா!?


ஆனால் இன்று முகநூலில் இப்படியான சுயம் போற்றுவோரின் ராஜ்யமே கொடிகட்டி பறக்கிறது. பிறரைக் குறித்த கவலையும், பொதுநலன் கருதுவோரும் வெகு சிலரே. இணையத்தால் உலகம் சுருங்கியிருப்பது உண்மைதான்... கூடவே மனிதனின் மனமும் சுயநலம் என்ற வட்டத்திற்குள் சுருங்கிப் போனது தான் ஆச்சர்யம். 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails