December 31, 2013

எந்திர வாழ்க்கை - ஏன் இந்த வாழ்க்கை

விமானத்தில் எத்தனை முறை பயணம் செய்திருந்தாலும் வெகு அருகே கம்பீரமாக அது பறக்கையில். ஆச்சர்யமாக, முதல் முறை விமானத்தை பார்ப்பது போன்று வேடிக்கை பார்ப்பதும், ரசிப்பதும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது; விமானம் வான் நோக்கி எழுவதிலும் (Take Off) தரை இறங்குவதிலும் (Landing) இருக்கிற அழகு அது  பறக்கும் பொழுது அதிகம் இருப்பதில்லை.

அப்படித்தான் சென்ற வாரம் வாகனத்தில் பயணப்படுகையில், இறக்கைகளால் ஒரு பருந்து எத்தனை ஒய்யாரமாக இடவலமாக சரிந்து பின்னர் ஒரு வட்டமிட்டு மீண்டும் வலஇடமாக சரிந்து பறக்குமோ அதற்கொப்பான ஒரு காட்சியை ஒரு விமானி கண்காண வழி வைத்தார். நகர்கின்ற வாகனத்திலிருந்து தரையிறங்கும் ஒரு விமானத்தின் அழகைக் காண பல ஆயிரம் கண்கள் வேண்டும்.

விமானம் தீண்டிய அத்தருணத்தில் பலவித எண்ணங்கள் என்னை சீண்டிச் சென்றன. விமானம் நிச்சயமாகவே அற்புதமான கண்டுபிடிப்பு தான். ஒரு மாதம், ஒன்றரை மாதம் கடல் மார்க்கமாக பயணித்து வேறொரு நாட்டினை சென்றடைந்த காலம் மாறி சில மணி நேரங்களுக்குள்ளாக சென்றடைவது சாத்தியப்பட்டிருக்கிறது.

விமானம் மட்டுமல்ல...

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் நமது நேரத்தை மிச்சப்படுத்துகின்றன, விரைவாக பணிகளை செய்து முடிக்க வழிகோலுகின்றன. உடல் அசைவும், களைப்பும் அதிகமின்றி எளிமையாக செய்து முடிக்க உதவுகின்றன. மாடும்-கலப்பையும் போய் இன்று டிராக்டர் எந்திரம் உழவுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. உரலும்-உலக்கையும் போய் இன்று கிரைண்டர் ஆதிக்கம் காட்டுகிறது. அம்மியும்-குழவியும் போய் இன்று மிக்சி ஓடுகிறது. ஈக்கலும்-வாரியலும் போய் இன்று வேக்கும் க்ளீனர் சுத்தம் செய்கிறது. கருங்கல் இன்று வாஷிங்மெஷினாகி நிற்கிறது, இப்படி இன்னும் பல.

விதவிதமாக வாகனங்கள், பேருந்துகள், விமானத்தில் பயணிப்பது போன்றே ஆடாமல் அலுங்காமல் பயணிக்க Air Buses, அதி வேகமாக செல்லும் ரயில் வண்டிகள் என போக்குவரத்து வசதிகளும் பலவிதம் தான்! எல்லாம் சிறப்பான கண்டுபிடிப்புகளே! அதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் முப்பது, நாற்பது ஆண்டுகள்; முன்னர் இருந்த மன அமைதி, மன நிம்மதி, அகமகிழ்ச்சி, ஆரோக்கியம் இன்று இருக்கிறதா என்று சிந்தித்தால் இல்லை எனவே படும்.

வாகனங்கள் ஏற்படுத்தும் இரைச்சலும்; அவசர அவசரமான வாழ்க்கை முறைகளும்; அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பான ஓட்டமும்; பண சம்பாதிப்பதில் இருக்கும் அளவற்ற நாட்டமும்; போக்குவரத்து நெரிசலும்; வாகன விபத்துகளும்; பொதுநலமற்ற சுயநலமான வாழ்க்கையும் மனிதனை மனிதத்துவம் இல்லாமல் செய்துவிட்டது என்பதே உண்மை.

சென்ற தலைமுறையில் 70-80 வயது என இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்று 40-50 என குறைந்து போனதற்கு எவர் காரணமோ, எந்திரம் தான் காரணமோ?! இல்லை எந்திரம் போன்று வாழ்க்கையை பிடிக்க ஓடும் மனிதன் தான் காரணமோ!? இவையிரண்டையுமே காரணம் சொல்லலாம்.

மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனது ஆயுளை அவனறியாமலே குறைத்திருப்பது தான் நிஜம். உடல் அசையாமல் எந்திரங்களின் உதவி கொண்டு பணிகளை இலகுவாக முடிக்கின்ற ஒருவருக்கு வயிறு முன்னே தள்ளாமல் என்ன செய்யும்? Shower ன் புண்ணியத்தால் குளிப்பதற்கு கூட குனிந்து தண்ணீரை முகரத் தேவையில்லை இன்று. இப்படியே போனால் உடல் பருமனடையாமலா இருக்கும். இதனாலேயே வாயில் நுழையாத வியாதிகள் எல்லாம் மனிதனுள் நுழைந்து இறுதியில் மாரடைப்பும் வந்து ஆளே அம்பேல் ஆகிவிடுகிறார் நாற்பதுகளுக்குள்ளேயே.

இது ஒருபுறமென்றால் அவசர குடுக்கைகளால், அலப்பறை 'குடி'மகன்களால், அதிவேக வாகன ஓட்டிகளால், அஜாக்கிரதையால் ஏற்படும் வாகன விபத்துகள் எக்கச்சக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் எண்ணற்றவே. மருத்துவத்தால் ஆயுள் நீட்டிக்கப்பட்டாலும் அது வேதிப் பொருட்களுக்கு நம்மை அடிமையாகவே வைத்து முன்னடத்தும்.

இன்று நாகரீகம் வளர்ந்திருக்கிறது ஆனால் மனிதனின் வாழ்நாள் குறைந்திருக்கிறது, நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன ஆனால் உடல் இயக்க நுட்பங்கள் தேய்ந்திருக்கின்றன. விஞ்ஞானத்தால் உலகம் ஒளிர்கிறது ஆனால் உள்மனதில் உபாதைகள் தான் ஒளிர்கின்றன. உலகம் ஒரு சிறிய கிராமமாகிப்போனது ஆனால் கிராமத்தான் தன் முகவரியை இழந்து நிற்கிறான். புல்வெளிகள் புல்டோசரால் புதுசாலைகளாக்கப்படுகின்றன, வயல்வெளிகள் வானுயர மாடமாளிகைகளாகி நிற்கின்றன.


எல்லாவிதத்திலும் உலகம் உயர்ந்திருக்கிறது - சரி தான்; கூடவே மனிதனும், மனிதத்தைப் போற்றி, சுயநலமற்று - பொதுநலம் கருதி, அவசரப்படாமல் - நிதானம் காத்து, எந்திரங்களை அளவாக பயன்படுத்தி வாழ்க்கையை வாழுவானெனின் வாழ்வில் உயர்வான், வாழ்நாளில் உயர்வான். 

3 comments:

ப.கந்தசாமி said...

//சென்ற தலைமுறையில் 70-80 வயது என இருந்த மனிதனின் சராசரி ஆயுள் இன்று 40-50 என குறைந்து போனதற்கு எவர் காரணமோ, எந்திரம் தான் காரணமோ?!//

மாற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.

எட்வின் said...

@ பழனி. கந்தசாமி நான் மாற்றி எழுதியிருப்பதாக தோன்றலாம். சராசரி ஆயுள் ஆராய்ச்சி ஒப்பீடு காகிதத்தில் வேறுபடலாம்! எனினும் எனது அனுபவத்தின் படி விபத்துக்களாலும், வியாதிகளாலும் இன்று மாள்பவர்களின் எண்ணிக்கை அதிகமே. நான் கட்டுரையில் எழுதாமல் விட்ட சில விஷயங்களும் உண்டு. மருத்துவம் வளராத அன்றைய காலகட்டத்தில் பிறப்பிலே மரணம், காலரா போன்ற கொடிய வியாதிகளால் ஏற்படும் மரணங்கள் இன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது உண்மை தான். இவை தவிர்க்கப்பட்டிருந்தாலும் இன்று இளவயது சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், மன அழுத்தம், மாரடைப்பு என்பவை சஜமாகிப் போனதை மறுக்க முடியுமா?

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அழகிய பதிவு ஆண்டின் துவக்கத்தில்..

Post a Comment

Related Posts with Thumbnails