December 31, 2013

இசையால் நனைய செய்த இளமை - Music Mojo - Keba Jeremiah

2013 அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை. எந்த வருடத்தையும் விட மிக அதிகமான (ஏ)மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த வருடமாகவே பார்க்கிறேன் 2013 ஆம் வருடத்தை. ஆனால் அத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் என்னை இன்னும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வைத்திருப்பதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. நீரின்றி அமையாதுலகு என்பது போன்று இசையின்றி அமையாதுலகு என கூறினாலும் தகும்.

அந்த வகையில் இந்த வருடம் அசர வைத்து, ஆச்சரியப்பட வைத்த இரு தருணங்கள் Music Mojo மற்றும் Keba Jeremiah வின் இசைத் தீண்டல்கள் தான். இளைஞர் பட்டாளமே வரிந்து கட்டிக்கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள் இன்றைய இசையுலகை. அதனை எந்த மொழி பாரபட்சமுமில்லாமல் ஊக்குவித்து வருகிறது கேரளத்தைச் சார்ந்த மாத்ருபூமி பத்திரிக்கை நிறுவனம் ஆரம்பித்த கப்பா தொலைக்காட்சி செய்து வரும் Music Mojo நிகழ்ச்சி.

Music Mojo வில், மொழி வேறுபாடின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் திரைப்படப்பாடல்களும், சுயமாக மெட்டமைக்கப்பட்ட பாடல்களும் இளம் இசைக்குழுக்களால் அற்புதமாக அரங்கேற்றப்படுவது தான் சிறப்பு. இளம் இசைக்கலைஞர்களின் திறமைகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதோடு அவர்களின் இசை புல்லரிக்க வைக்கிறது. இதில் குறிப்பிடும்படியாக ASIMA, Acoustika, Bennet & The Band, Agam, Thaikkudam Bridge, Staccato போன்ற இசைக்குழுக்களைக் கூறலாம் இவர்களுடன் இளம் பாடகர்களான ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், காயத்ரி, நிகில் மேத்யு, ஜ்யோத்சனா, ஜாப் குரியன், நேகா நாயர், மஞ்சரி, பென்னி தயாள், "மூங்கில் தோட்டம்" புகழ் - அபய் ஜோத்புர்கர் என திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இதில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் பலவற்றில்  சில இங்கே. 
ஸ்வேதா மோகன் பாடிய "இன்னும் கொஞ்சம் நேரம்"
 

நிகிதா, நிகில் பாடிய "ஏதோ" 



மஞ்சரி பாடிய "வான் மேகம்"



ஹரிச்சரண் பாடிய "நிலாவே வா"


கேபா ஜெரேமியாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பல ஆண்டுகள் முன்னர் சன் தொலைக்காட்சியில் Route10 இசைக்குழு என்ற பெயரில் ஊ ல ல லா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் Harmonize Project ற்காக பங்களித்து இப்போது பல இசையமைப்பாளர்களுக்கு Guitar இசை மீட்டுபவர் தான் கேபா. இத்தனை இளம் வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான Guitarist ஆகி இருக்கிறார்.


மூங்கில் தோட்டம் - கேபா ஜெரேமியா


செய்யக்கூடிய விஷயத்தில கவனமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இவர்கள் அடைந்த சிறப்பைப் போல் எவரும் அடையலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. இசையின்றி அமையாது உலகு. இவர்களின் இசைக்கு என் வணக்கங்கள். 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails