February 01, 2014

நாகர்கோவில்-அறிந்ததும்-புரிந்ததும்

பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் சொந்த மண்ணான நாகர்கோவிலில் இரு வாரங்கள் செலவிடும்படியான வாய்ப்பு இந்த வருடம் தான் வாய்த்தது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா என்ற கங்கைஅமரன் அவர்கள் எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது இதை எழுதத் துவங்குகையில்.

நாகர்கோவிலின் வனப்பைக் குறிந்து அறிந்தவர்களுக்கு தெரியும் அதன் சிறப்பு. பச்சைப்பசேல் என எங்கும் நிறைந்திருக்கும் வயல்வெளிகளும் அதன் எழிலும், ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னைகளின் நளினமும், பசுமை நிறைந்து அரணாக நிற்கும் மலை முகடுகளும், வெள்ளக் குளிர்மையால் பரந்து விரிந்திருக்கும் குளமும் குளத்தாங்கரைகளும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கே உரித்தான அழகு. நாகர்கோவிலில் எடுத்த சில புகைப்படங்கள் அடுத்த பதிவில்.

இத்தனை அழகை ரசிக்கும் வாய்ப்பு பதினைந்தாண்டு காலத்திற்கு பின்னர் இந்த வருடம் ஜனவரியில் வாய்த்தது. அதோடு நாகர்கோவிலையும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் சிலவற்றையும் அவற்றின் நிகழ்வுகளையும் அவதானிக்கும் வாய்ப்பும் அமைந்தது.

உயிரை வாங்கும் சாலைகள்/ கிலியை ஏற்படுத்தும் வாகனங்கள்

முன்னெப்போதுமில்லாத போக்குவரத்து நெரிசலும், வாகனங்களின் ஆக்கிரமிப்பும் சலிப்பைத் தந்ததை மறுப்பதற்கில்லை. வழக்கமாகவே நாகர்கோவிலின் சாலைகள் குறுகலானவை, எதிரெதிரே பேருந்துகள் செல்வது கூட சிரமப்பட்டு தான் செல்ல வேண்டும். சாலைகளுக்கும், கடைகளுக்குமிடையேயான இடைவெளி வெகுகுறைவு. நடைபாதைகள் பெயருக்கு தான் இருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் தான் நடைபாதைகளையும் ஆக்கிரமித்துள்ளன.

வாகனங்கள் இவ்வளவாக பெருகியிருப்பினும் சாலை விரிவாக்கமோ, சாலை சீரமைப்போ நடப்பதாகத் தெரியவில்லை. அத்தனை குண்டு குழிகள் சாலைகளில். இதில் சாலை பாதுகாப்பு வாரம் வேறு அனுசரிக்கிறார்கள். இது ஒருபுறமென்றால் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் இதற்கு மேலிருக்கிறார்கள். பெரும்பாலானோரிடம் பொறுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்தனை வேகமாக செல்வதில் என்ன அலாதி இன்பமோ! சிவப்பு விளக்கு இருந்தால் அதையும் மதிக்காமல் வாகனத்தைச் செலுத்துபவர்களை என்னவென சொல்வது. அப்படித்தான் ஒருமுறை வேப்பமூடு சந்திப்பில் மினிபஸ் ஒன்றினால் விபத்துள்ளாவதில் இருந்து மயிரிழையில் தப்பினேன்.

உயிரை எடுக்கும் டாஸ்மாக் கடைகள்

எந்த கடைகளில் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகளில் கூட்டத்திற்கு குறைவேயில்லை. சரக்கை அடித்து விட்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் உயிர்சேதத்தைக் குறித்து எவருக்கும் கவலையில்லை. சற்று நேர அற்ப போதைக்காக உயிரையும் பணயம் வைப்பவர்களை என்னவென சொல்வது.

புத்தேரி குளத்தை ஒட்டியவாறு டாஸ்மாக் கடை ஒன்றிருக்கிறது. அதனருகே ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி (சிலவருடங்களாகவே) மேம்பாலப்பணியும் நடைபெற்று வருகிறது. மேம்பாலப்பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. டாஸ்மாக்கில் குடித்து விட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த பலரையும் காண நேர்ந்தது.

இன்னும் தொடர்ந்து ஏமா(ற்)றும் கிறிஸ்தவ கூட்டங்கள்

முன்னெப்போதுமில்லாத அளவு பிரார்த்தனை திருவிழாக்களும், சுகமளிக்கும் பெருவிழாக்களும், தெய்வீக சமாதானமளிக்கும் கூட்டங்களும் நடந்தேறுவதையும் கவனிக்க நேரிட்டது. மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் சில கும்பல்களுக்கு மக்களே பொருளாதார உதவிகள் அளித்து வருவது தான் இன்னும் ஆச்சரியம் தருகிறது. ஊழியம்  என்பது மக்களை சென்று சேர்ந்த காலம் மாறி இன்று மக்களை கவர்கிற; இங்கு வாருங்கள் சமாதானம் கிடைக்கும், இங்க வாங்க சுகம் கிடைக்கும் என்று கிறிஸ்துவின் பெயரில் கொள்ளையடித்து; உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதித்து ஊரை ஏமாற்றுபவர்கள் பெருகியிருப்பது சமூக அவலம்.

ஊழியர்கள் என சொல்லப்படுபவர்கள் வறுமையிலிருப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு உதவிகள் செய்த காலம் மாறி இன்று அவர்களிடமிருந்தும் பணத்தை உறிஞ்சும் வக்கிரத்தை என்னவென சொல்வது. ஏமாறுகிற மக்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்களும் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

வரதட்சணை-பகட்டு-திருமணங்கள்

தமிழ்நாட்டிலேயே கல்விகற்றவர்கள் அதிகம் இருப்பவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் என்பது பலரும் அறிந்ததே; ஆனால் இதே கற்றவர்களால் நடந்தேறும் குற்றங்களும் அதே அளவு வியாபித்திருப்பது தான் மகா கேவலமான விஷயம். தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவு வரதட்சணைக் கொடுமை இங்கு தான் காணப்படுகிறது. பண்பை மறந்து பகட்டையும்; அன்பை மறந்து அணிகலன்களையும் நாடி செல்லுகின்ற எம்மினத்தை  என்னவென சொல்வது.

திருமணங்களில் மங்கையரைப் பார்க்க வேண்டுமே... அப்பப்பா! அவர்கள் கழுத்தே இறங்குகிற அளவு நகைகளை அணிந்து தங்களை அலங்கோலப்படுத்திக் கொள்கிறார்கள். இதை ஒரு விதமான சமூக அந்தஸ்தாகக் கருதுகிறார்கள். அவர்கள் வீட்டில் அப்படி செய்திருக்கிறார்கள்; அவர்கள் பெண்ணிற்கு அத்தனை நகைகள் போட்டிருந்தார்கள்; நம் பெண்ணிற்கும் போட வேண்டும் என்ற ஒரு நினைப்பே பெரும்பாலானோரிடம் மேலோங்கியிருக்கிறது. இத்தனை நகைகள் வைத்திருப்பவர்களிடம் பணத் தேவையிருக்கும் ஒருவர் போய் நின்றால் கைவிரிப்பது தான் நடந்தேறும்.

இது
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

இங்கு
மதச்சாயத்திற்கு விலையுண்டு
ஆனால்
மனிதத்திற்கு விலையில்லை
மனிதாபிமானத்திற்கும் விலையில்லை

டாஸ்மாக் வாங்கித்தருபவன் நண்பேண்டா
பாசமாக இருப்பவன் எவர்க்கும் வேண்டா

மானம் போனால் என்ன
பானமே பெரிது எமக்கு

இங்கு
வரதட்சணை வாங்கியவர்
வாழவைக்கும் மாப்பிள்ளை
வரதட்சணை வாங்காதவர்
குறையுள்ள மாப்பிள்ளை

இது தான்
நான் வாழும்
நாஞ்சில் நகரம்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails