May 17, 2014

2014 தேர்தல் ஒரு பார்வை - மோடி-லேடி-டாடி

பத்து வருட கால காங்கிரசின் ஆட்சிக்கு முடிவு கட்டியிருக்கிறது 2014 மக்களவை தேர்தல். காங்கிரசின் முதல் ஐந்து ஆண்டு கால ஆட்சி சொல்லும்படி இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி கண்ட  விலைவாசி ஏற்றம், எரிவாயுக்களின் விலையேற்றம், பணவீக்கம், பெரும் ஊழல் போன்றவை மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்து தந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை.

இத்தனை வெறுப்புகளும் அதோடு வருங்கால இந்தியாவை வழிநடத்தி செல்ல, சொல்லும் படியான ஒரு தலைமை இல்லாமையும் காங்கிரசுக்கு பெருத்த அடியை இந்த தேர்தல் வழங்கியிருக்கிறது.

சில மாதங்கள் முன்னர் டெல்லியில் எவருமே எதிர்பாராமல் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சியினர் தங்களுக்கு கிடைத்த நற்பெயரை தாங்களே கெடுத்துக்கொண்டாற் போல் இந்த தேர்தலில் அதிகம் பேசப்படாமல் போய்விட்டனர்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் மேலும் மேலும் பிற கட்சியினரை குறை சொல்லியே டெபாசிட் இழந்து நிற்கிறார்கள் இன்று. ஒருவேளை டெல்லியில் ஆட்சியை தொடர்ந்து நடத்தியிருந்தார்களானால் அங்கிருந்து அவர்கள் கட்சியை விஸ்தாரப்படுத்தியிருக்கலாம். இதனாலேயே, சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றியை கொடுத்த டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒரு இடம் கூட அளிக்காமல் மண்ணை கவ்வ வைத்திருக்கின்றனர்.

பாரதிய ஜனதாவை பொறுத்த வரை, அவர்களின்  மிகத்தெளிவான திட்டமிடலும், ஊடக வழி பிரச்சாரமும், மோடியை முன்னிறுத்தியதும் அவர்களே எதிரபாராத வெற்றியை தந்தது என்றால் காங்கிரசின் ஊறிப்போன ஊழலும், மக்கள் மத்தியில் இருந்த வெறுப்பும் பாரதிய ஜனதாவிற்கு மேலும் சாதகமாகிப் போனது.

மோடி அலை என்று ஊடகங்கள் பறைசாற்றினாலும் தமிழகம், கேரளா, ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க இன்னும் தங்கள் காலை ஊன்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக 37 இடங்களை கைப்பற்றியிருப்பது எவருமே கணிக்காத ஒரு முடிவு என்பதாகத்தான் படுகிறது. காங்கிரசும் திமுகவும் வரலாறு காணாத தோல்வியை சந்தித்திருக்கின்றன. ஈழத்தமிழர் விஷயத்தில் இரட்டை வேடம் அணிந்த இவ்விரு கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டதில் அதிக ஆச்சரியமில்லை. எனினும் ஒரு இடம் கூட கிடைக்காமல் போகும் என எவரும் எதிர்பார்க்கவில்லை தான். திமுகவிற்கு பாரம்பரிய ஓட்டுகள் விழுந்தாலும் அவர்களின் ஊழலும், சந்தர்ப்பவாத அரசியலும், அழகிரியின் வெளியேற்றமும், NOTA வும் திமுகவினர் முகத்தில் கரியை அள்ளிப் பூசியிருக்கின்றன.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சம எண்ணிக்கையுடைய கன்னியாகுமரியில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும் பா.ஜ.க. வின்  பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வெற்றிமுகம் கண்டிருக்கிறார். ஆம் ஆத்மியின் சுப.உதயகுமார் அவர்கள் எதிர்பார்த்த அளவு ஓட்டுகள் பெறாமல் போனது எப்படி என்பதும் புரியவில்லை.

வைகோ அவர்கள் அவரது சந்தர்ப்பவாத அரசியல் காரணங்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவே பார்க்கிறேன். எந்தவொரு கொள்கையுமில்லா விஜயகாந்த் உடன் கூட்டணி என்பது அவருக்கே அழகாயிருக்கிறதா என தெரியவில்லை. பிரச்சாரத்தின் போது மக்கள் முன்னர் விஜயகாந்த் இவரை அறிமுகப்படுத்தி பேசுகிறார் என்றால் இதை விட கொடுமை என்ன வேண்டும்!!

தருமபுரி ஜனங்கள் தங்கள் சாதி சனத்தை அத்தனை எளிதில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள்  என்பதற்கு அன்புமணி அவர்களின் வெற்றி சாட்சி. இன்னும் எத்தனை இளவரசன்களை இழக்க வேண்டுமென தெரியவில்லை.


பாஜக முதன்முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வது நல்ல விஷயம் தான். புதிய அரசாங்கம் அனைத்து பிரிவினரையும் அரவணைத்து புதிய கொள்கைகளுடன் இந்தியாவை முன்னேற்ற எத்தனிக்குமானால் ஏவருக்கும் மகிழ்ச்சியே. 
Related Posts with Thumbnails