August 23, 2014

நீயா நானா - கோபி - BP - ஜூஜூபி

ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒளிபரப்பான (மருத்துவர்கள் Vs நோயாளிகள்) நீயா நானா விவாதத்தில் கோபிநாத் அவர்களும், நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனருமான ஆண்டனி அவர்களும் வியாதிகளைப் பற்றிய சரியான தகவல்கள் பெறாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பேச்சுக்கு பேச்சு BP சுகர தான சார் சொல்லப் போறீங்கன்னு மருத்துவர்களை எதுவுமறியாத பச்சப் பிள்ளைங்கள ஏதாவது காரணம் சொல்லி வாயை அடைப்பது போல் அடைத்து விட்டிருக்கிறார் கோபிநாத்.
மருத்துவர்கள் கூறிய பல முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், உண்மைகளையும், மருத்துவம் சம்பந்தமான தகவல்களையும் கத்தரித்து விஜய் தொலைக்காட்சிக்கு சாதகமாக நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.
கல்வியும், மருத்துவமும் வியாபாரமாக்கப்பட்டு இருபதிற்கும் மேலான ஆண்டுகள் ஆன நிலையில் இன்று சாமானியன் சரியான கல்வியைப் பெறுவதும், தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவதும் குதிரைக்கொம்பாகி  விட்டதை  மறுப்பதிற்கில்லை.
பணம் இருந்தால் தான் இன்று மரியாதை என்ற நிலைமை இன்று கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமல்ல; சமுதாயத்திலும், சொந்த பந்தங்களிடையேயும் பரவலாக காணப்படுகிறது.
மருத்துவர்கள் வரம்பு மீறி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிலும், பணத்திற்காக தேவையற்ற பரிசோதனைகள் செய்கிறார்கள் என்பதிலும் உண்மைகள் இல்லாமலில்லை.
ஆனால் இன்றைக்கு போலிகளும், மனசாட்சி இல்லாதவர்களும், கள்ளத்தனம் செய்பவர்களும் இல்லாத துறைகள் இல்லை.  எல்லா துறைகளிலும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள், நேர்மையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
இந்த போலிகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டிய செயல் அரசினுடையது; அதே நேரத்தில் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும் இங்கு பொருந்தும்.
இவை ஒருபுறமிருக்க கோபிநாத் அவர்கள் விஷயமறியாமல் எந்த டாக்டர் கிட்ட போனாலும் சுகர், BP தான் பெரிய வியாதி என்கிறார்கள் எனவும் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்த அளவையும் அறிந்து கொள்ளவே தேவையில்லை; அவற்றை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது போன்ற தொனியில் விறைப்பாக வார்த்தைகளை விதைத்திருக்கிறார்.
மருத்துவத்துறையில் ஒரு நோயாளி அல்லது பரிசோதனை செய்ய வேண்டி வரும் எந்த ஒரு நபரிடமும் முதலாவதாக நோக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகள் @ Vital Signs ல் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் சுவாச எண்ணிக்கை, இரத்த அழுத்தம் போன்றவை அடங்கும்.
இவை வழக்கமாக செய்யப்படும் சோதனைகள். இது ஒரு பதினைந்து வருடம் முந்தைய நிலைமை. இன்று இவற்றினுடன்;  இரத்தத்தில் சர்க்கரை அளவு, Oxygen Saturation என்றறியப்படும் ஆக்சிஜன் அளவு போன்றவை அடிப்படையாக செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள். இவை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு வியாதியை அறுதியிட்டு கூற முடியாது; எந்த ஒரு நோயாளிக்கும் மேற்கொண்டு மருத்துவம் செய்யவும் முடியாது.
இப்படியாகப்பட்ட BP, சுகரை கோபிநாத் அவர்கள் இதெல்லாம் ஒரு வியாதியா!! BP, சுகர் நோக்குவதெல்லாம் வியாபார உக்தி என்று விஷயமறியாமல் கத்தியிருக்கிறார். 
இன்னும் சொல்லப்போனால் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அதிகமாக இருத்தலையும் மருத்துவத்துறை வியாதியாக பாவிப்பது ஒரு பக்கமிருப்பினும் எண்ணற்ற பிற வியாதிகளுக்கு அடிப்படை காரணமே இந்த BP ம் Sugar  ம் தான் என்பது மிக முக்கியமான விஷயம்; பலர் அறிந்திராத உண்மையும் கூட.
இந்த ஒரு அடிப்படை காரணம் கூட தெரியாமல் கோபிநாத் உளறியிருக்கிறார். அவரது உளறலை அவரே தவறென ஒத்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை.
மூளை, கண்கள், இரத்த நாளங்கள், இருதயம், சிறுநீரகம் போன்றவை பழுதாக அடிப்படையே BP ம் SUGAR ம் தான். மேலும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு அடிப்படையும் இவை தான்.
ஆனா இதெல்லாம் அண்ணன் கோபிநாத்திற்கு ஜூஜூப்பியாம். மேட்டரே இல்லாம சும்மா அடிச்சி விடுற கோட் கோபிநாத் அவர்கள் இனிமேலேனும் அவையடக்கம் கொண்டு அடக்கி வாசித்தால் நல்லது.

August 15, 2014

மதம் - மனிதம் - மனிதன்


நான் நீ, அவன் இவன், அது இது என்பதில் துவங்கி உண்பது, உடுப்பது, கும்பிடுவது, உறங்குவது, அணிவது என அனைத்திலும் பாகுபாடுகள் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது சிந்திக்கவியாலாத ஓன்று. இத்தகைய பாகுபாடுகள் காலங்காலமாக தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இந்த ஏற்றத்தாழ்வுகள் சக மனிதனுடைய வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்குமெனில் அங்கு மனிதன், மனிதம் எனும் தனது சாதாரண நிலையிலிருந்து முரண்பட்டு வாழ முற்படுவதாகத்தான் பார்க்கத்தோன்றுகிறது.

குடிசை-மாளிகை; ஏழை-பணக்காரன்; மேல்சாதி-கீழ்சாதி; கிறிஸ்தவன்-இந்து; இந்து-முஸ்லிம் போன்ற இந்த பிரிவினைகளும், வகுப்புவாத பாகுபாடுகளும் தான் இத்தனை காலமும் அமைதியான ஒரு சமுதாயத்தை தொடர்ந்து சீர்குலைத்து வந்திருக்கின்றன.

இவற்றில் மதச்சாயம் பூசப்பட்ட பிரிவினைகளை தாண்டி மற்றவை ஓரளவு மறக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் மதங்கள் இன்றும் மனித சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது தான் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கு கூட வெட்கக்கேடு.

மதங்களையும் பாகுபாடுகளையும் உருவாக்கியது மனிதர்கள் என்பது தான் இதில் விசித்திரம். சக மனிதர்களை மனிதம் போற்றி மனிதர்களாக மதிக்க தெரியாத மதங்கள் இருந்து என்னத்திற்கு?!

என் மதம் தான் உயர்ந்தது, என் மதத்தை பின்பற்றுவோர் உயிரோடிருக்கட்டும், மற்றவர் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைமை கொண்டு கொல்லவும் தயங்காத மதம் பிடித்த மனித மிருகங்கள் தான் இன்றைய மனித சமுதாயத்தின் எதிரி.

மனித சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எந்த மதமும், அம்மதத்தின் பெயரால் அச்சுறுத்தும் மதவெறியர்களும் தான் தற்கால அமைதிக்கு எதிரிகள். இவர்களையும் இவர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் எப்படி சமாளிக்க போகிறோம் என்பது தான் கேள்விக்குறி!

பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும், கிறிஸ்தவன் என்றழைக்கப்படுவதைக் காட்டிலும் நல்ல மனிதன் என்றழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன்.
 
கிறிஸ்தவத்தில் வேடிக்கை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் தெய்வ நூலாக கருதுகிற விவிலியத்தில் எழுதியிருப்பதற்கு எதிரான கொள்கைகளை கடைபிடிப்பதும், அதில் இல்லாத கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு பாகுபாடு காண்பிப்பதும் தான்.
சொரூபங்கள் அல்லது விக்கிரகங்களை கும்பிடவோ, நமஸ்கரிக்கவோ கூடாது என விவிலியத்தில் தெளிவாக எழுதி இருக்கையில் இவர்கள் சிலுவையையும், இயேசு, மேரி மாதா என படங்களையும், சிலைகளையும் உருவாக்கிக்கொண்டு வழிபடுவது வேடிக்கை.
கிறிஸ்தவத்தில் பல்வேறு உட்பிரிவுகள் வேறு!! இதே போன்ற உட்பிரிவுகள் பிற மதங்களிலும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மனிதனே மனிதனுக்கு எதிரி என்பதும்; மனிதன் உருவாக்கிய மதமே மனிதத்திற்கு எதிரி என்பதும் தான் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒரு மதம் ஒரு மனிதனை நற்பண்புடையவானாக்கி சக மனிதர்களையும் மதித்து நடக்க கற்றுக் கொடுக்கவில்லையெனில் அதை விட சாபம் வேறொன்றுமில்லை.
எவரையும் கீழ்த்தரமாக நடத்தவோ, கொலை செய்யவோ எந்த மத நூலும் சொல்லுவதாக கேள்விப்பட்டதில்லை.
விவிலியத்தையும். குரானையும், பிற மதம் சம்பந்தப்பட்ட நூல்களையும் சரிவர படித்தறியாத அரைவேக்காடுகளே இன்று மத போதையேறி மனித குல அமைதிக்கு எதிரான குரல் கொடுத்தும்; சக மனிதர்களை கொன்றும் வருகின்றன.
மதங்கள் அழிக்கப்பட வேண்டும்! ஆனால் அது சாத்தியமா என்றால், இல்லை என்பது தான் பதில். மதங்கள் அழிப்படவில்லை எனினும் மனிதம் போற்றப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. 

August 07, 2014

ஆன்டர்ர்ர்ர்சனும், ஜடேஜாவும், ஐசீசீயும்!!!

கிரிக்கெட் ஜென்டில்மேன்களுடைய விளையாட்டு என்பதெல்லாம் இன்றைக்கு பெயரளவில் தான் என்பதற்கு அண்மை காலங்களில் மைதானங்களில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி.

இதில் சமீபத்திய நிகழ்வு இங்கிலாந்தில் ஜேம்ஸ் என்ற ஜிம்மி ஆன்டர்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே ஏற்பட்ட தகராறு. 

இந்த தொடரின் ஆரம்ப டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்காம், ட்ரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. ஆரம்ப ஆட்டத்திலேயே ஆன்டர்சன் தான் வலிய வம்புக்கு போனார் ஜடேஜாவிடம். 

ஆன்டர்சன் வீசிய பந்து ஒன்று ஜடேஜாவின் மட்டையை கடந்து செல்லவே அதனை அவுட் என கருதிய ஆன்டர்சன் நடுவரிடம் முறையீடு செய்தார்; நடுவர் அவுட் கொடுக்காமல் போகவே ஜடேஜாவிடம்  Sledging என்ற பெயரில் திட்டினார். இதை அப்போதே நடுவர்கள் கண்டித்திருந்தால் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்க வாய்ப்பில்லை.

மைதானத்தில் திட்டியது போதாதென்று மதிய உணவு இடைவேளைக்கென்று மைதானத்தில் இருந்து பெவிலியன் நோக்கி அணித்தலைவர் தோனியும் ஜடேஜாவும் சென்று கொண்டிருக்கையில் அவர்களுடன் நடந்து சென்ற ஆன்டர்சன் தொடர்ந்து பிதற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.


ஒரு சமயத்தில் சகிக்க முடியாத ஜடேஜா ஆன்டர்சனை நோக்கி கோபமாக திரும்பிருக்கிறார் (கையில் மட்டையும் இருந்திருக்கிறது) உடனே ஆன்டர்சன் ஜடேஜாவை கையால் தள்ளியிருக்கிறார்.  

எல்லாம் பதிவாகியிருக்கையில் தள்ளல் சம்பவம் மட்டும் கேமராவில் பதிவாகவில்லை என்கிறது ஐசிசி. அன்று பெவிலியன் அருகில் இருந்த CCTV பழுதாகி விட்டது. அதனால் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற பெயரில் ஆன்டர்சனுக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை இந்த ஐசிசி. இத்தனைக்கும் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தான் ஐசிசிக்கும் தலைவர்.

முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆலன் வில்கின்ஸ் ஆன்டர்சனின் நடவடிக்கைகளைக் குறித்து விஸ்டன் பத்திரிக்கைக்கு எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

If Jimmy Anderson had been a tennis player, he would never have finished a match”

கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவாற்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்ட ஆன்டர்சன் இப்போது அதை இந்திய அணியின் மீது காண்பிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை தான்.2008 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சிட்னி டெஸ்ட் வாக்குவாதத்தில் சைமண்ட்ஸ் க்கு எதிராரக ஹர்பஜன் தண்டனை பெற்றார். 2013 நவம்பரில் க்ளார்க் ஆன்டர்சனுக்கெதிராக தண்டனை பெற்றார். சமீபத்தில் ஐபில் 7 ல் ஸ்டார்க்-பொல்லார்ட் இடையேயான ஆக்ரோஷம் எந்த தண்டனையையும்  எவருக்கும் பெற்றுத்தரவில்லை.

 இப்படியாக Gentlemen’s Game என அறியப்பட்டிருந்த கிரிக்கெட்டில் இன்று வரம்பு மீறுதல் என்பதும்,ஒருவர் மற்றொருவரை மிகவும் கீழ்த்தரமாக திட்டுவது என்பதும் சகஜமாகிப் போனது.

கால்பந்து ஆட்டங்களில் இருக்கும் மஞ்சள், சிவப்பு அட்டைகளைப் போன்ற  நடைமுறைகள் கிரிக்கெட்டிற்கு தேவையில்லை எனினும், இருக்கின்ற சட்டங்களை சரிவர பின்பற்றுவதும்; மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் ஆட்டக்காரர்களை சரிவர கண்டித்தலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இவை சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் ஐசிசி என்பது ஐசீசீ ஆகிப்போகும் என்பதில் ஆச்சரியமில்லை.

Related Posts with Thumbnails