August 23, 2014

நீயா நானா - கோபி - BP - ஜூஜூபி

ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒளிபரப்பான (மருத்துவர்கள் Vs நோயாளிகள்) நீயா நானா விவாதத்தில் கோபிநாத் அவர்களும், நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனருமான ஆண்டனி அவர்களும் வியாதிகளைப் பற்றிய சரியான தகவல்கள் பெறாமல் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பேச்சுக்கு பேச்சு BP சுகர தான சார் சொல்லப் போறீங்கன்னு மருத்துவர்களை எதுவுமறியாத பச்சப் பிள்ளைங்கள ஏதாவது காரணம் சொல்லி வாயை அடைப்பது போல் அடைத்து விட்டிருக்கிறார் கோபிநாத்.
மருத்துவர்கள் கூறிய பல முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களையும், உண்மைகளையும், மருத்துவம் சம்பந்தமான தகவல்களையும் கத்தரித்து விஜய் தொலைக்காட்சிக்கு சாதகமாக நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை.
கல்வியும், மருத்துவமும் வியாபாரமாக்கப்பட்டு இருபதிற்கும் மேலான ஆண்டுகள் ஆன நிலையில் இன்று சாமானியன் சரியான கல்வியைப் பெறுவதும், தரமான மருத்துவ வசதிகளைப் பெறுவதும் குதிரைக்கொம்பாகி  விட்டதை  மறுப்பதிற்கில்லை.
பணம் இருந்தால் தான் இன்று மரியாதை என்ற நிலைமை இன்று கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மட்டுமல்ல; சமுதாயத்திலும், சொந்த பந்தங்களிடையேயும் பரவலாக காணப்படுகிறது.
மருத்துவர்கள் வரம்பு மீறி கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிலும், பணத்திற்காக தேவையற்ற பரிசோதனைகள் செய்கிறார்கள் என்பதிலும் உண்மைகள் இல்லாமலில்லை.
ஆனால் இன்றைக்கு போலிகளும், மனசாட்சி இல்லாதவர்களும், கள்ளத்தனம் செய்பவர்களும் இல்லாத துறைகள் இல்லை.  எல்லா துறைகளிலும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள், நேர்மையற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
இந்த போலிகளை கண்டறிந்து களையெடுக்க வேண்டிய செயல் அரசினுடையது; அதே நேரத்தில் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதும் இங்கு பொருந்தும்.
இவை ஒருபுறமிருக்க கோபிநாத் அவர்கள் விஷயமறியாமல் எந்த டாக்டர் கிட்ட போனாலும் சுகர், BP தான் பெரிய வியாதி என்கிறார்கள் எனவும் சர்க்கரை அளவையும், இரத்த அழுத்த அளவையும் அறிந்து கொள்ளவே தேவையில்லை; அவற்றை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்பது போன்ற தொனியில் விறைப்பாக வார்த்தைகளை விதைத்திருக்கிறார்.
மருத்துவத்துறையில் ஒரு நோயாளி அல்லது பரிசோதனை செய்ய வேண்டி வரும் எந்த ஒரு நபரிடமும் முதலாவதாக நோக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகள் @ Vital Signs ல் உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு, ஒரு நிமிடத்தில் நாம் எடுக்கும் சுவாச எண்ணிக்கை, இரத்த அழுத்தம் போன்றவை அடங்கும்.
இவை வழக்கமாக செய்யப்படும் சோதனைகள். இது ஒரு பதினைந்து வருடம் முந்தைய நிலைமை. இன்று இவற்றினுடன்;  இரத்தத்தில் சர்க்கரை அளவு, Oxygen Saturation என்றறியப்படும் ஆக்சிஜன் அளவு போன்றவை அடிப்படையாக செய்யப்பட வேண்டிய பரிசோதனைகள். இவை இல்லாமல் எந்த மருத்துவரும் ஒரு வியாதியை அறுதியிட்டு கூற முடியாது; எந்த ஒரு நோயாளிக்கும் மேற்கொண்டு மருத்துவம் செய்யவும் முடியாது.
இப்படியாகப்பட்ட BP, சுகரை கோபிநாத் அவர்கள் இதெல்லாம் ஒரு வியாதியா!! BP, சுகர் நோக்குவதெல்லாம் வியாபார உக்தி என்று விஷயமறியாமல் கத்தியிருக்கிறார். 
இன்னும் சொல்லப்போனால் இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அதிகமாக இருத்தலையும் மருத்துவத்துறை வியாதியாக பாவிப்பது ஒரு பக்கமிருப்பினும் எண்ணற்ற பிற வியாதிகளுக்கு அடிப்படை காரணமே இந்த BP ம் Sugar  ம் தான் என்பது மிக முக்கியமான விஷயம்; பலர் அறிந்திராத உண்மையும் கூட.
இந்த ஒரு அடிப்படை காரணம் கூட தெரியாமல் கோபிநாத் உளறியிருக்கிறார். அவரது உளறலை அவரே தவறென ஒத்துக்கொள்ளும் காலம் வெகு தொலைவிலில்லை.
மூளை, கண்கள், இரத்த நாளங்கள், இருதயம், சிறுநீரகம் போன்றவை பழுதாக அடிப்படையே BP ம் SUGAR ம் தான். மேலும் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு அடிப்படையும் இவை தான்.
ஆனா இதெல்லாம் அண்ணன் கோபிநாத்திற்கு ஜூஜூப்பியாம். மேட்டரே இல்லாம சும்மா அடிச்சி விடுற கோட் கோபிநாத் அவர்கள் இனிமேலேனும் அவையடக்கம் கொண்டு அடக்கி வாசித்தால் நல்லது.

2 comments:

Mathi Sudhanan said...

https://www.youtube.com/watch?v=jj8v6BNUXKk

can you look into this link to know what is Sugar, further you can check in youtube for BP.

எட்வின் said...

விஜய் தொலைக்காட்சி அந்த விவாத காணொளியை யூடியூப் இணையதளத்தில் யாரும் பார்க்க முடியாத நிலையில் Block செய்துள்ளது. இப்பத்தான் தவறென்று தெரிகிறது போலும். எடிட் பண்ணப்போ எல்லாம் தெரியலயோ என்னமோ!!

Post a Comment

Related Posts with Thumbnails