October 02, 2014

தலைகுனிய வைக்கும் அரசியல், கிரிக்கெட், சினிமாத் துறையினர்

பணத்திற்காகவும், புகழிற்காகவும் மானத்தையும்  கூட பொருட்படுத்தாத ஒரு சமுதாயத்துடன் வாழ்ந்துவருகிறோம் என்பதற்கு கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்களே சாட்சி. 

முன்னாள் முதல்வரின் கைதும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் இதுவா நம் தமிழகம் என்ற கேள்வியை என்னில் ஏற்படுத்தியிருந்தன. பேருந்துகளில் கல் வீசியும், தீயிட்டும்; அப்பாவிகளின் சாலையோர கடைகளை சேதமாக்கியும்; பேருந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தும் தங்களின் விசுவாசத்தை தலைமைக்கும், ஊடகங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருந்தனர்  (இவை அனைத்தையும் நிகழ்ந்த சம்பவங்கள் என்பதை விட நிகழ்த்தப்பட்ட சம்பவங்கள் என குறிப்பிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்) 

இத்தகைய செயல்கள் கோபத்தில் நிகழ்த்தப்பட்டவை என்பது ஒருபுறமிருந்தாலும் பிறர் கவன ஈர்ப்புக்காக குறிப்பாக ஊடக கேமராக்களின் கவனத்தை ஈர்க்க நிகழ்த்தப்பட்ட நாடகங்களாகவே பார்க்க முடிகிறது. இதனை உளவியலில் ASB – Attention Seeking Behaviour என்கிறார்கள்.  

இதைத்தான் பன்னீர் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்பின் போது வேறுவடிவத்தில் (அழுகை மூலம்) அரங்கேற்றினார்கள்.  

பதவிகளை தொடர்ந்து காப்பாற்றவும், பணங்களில் திளைக்கவும், சுயமரியாதையையும், மானத்தையும் இழக்க சற்றும் யோசிக்காத இவர்களிடமிருந்து நீதி, நியாயம், நேர்மையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.  

இவர்கள் தான் இப்படியென்றால் திரைத்துறையை சார்ந்தவர்கள் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஊழலையும், கொள்ளையடித்தலையும், மக்களை ஏய்த்துப் பிழைத்தலையும் நியாயப்படுத்துகிறார்கள். திரைப்படங்களில் ஊழலுக்கெதிராக குரல் கொடுத்தவர்களை, கேவலம், நாம் தான் நம்பி ஏமார்ந்திருக்கிறோம்.  

தங்களின் உண்மையான முகம் இது தான் என தமிழக மக்களுக்கு தாங்களாகவே காட்டியிருப்பதற்கு திரைத்துறையினரைக் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்!! 

இத்தனை காலமும் பிழைப்பிற்காகத்தான் ஊழலை ஒழிப்பது போன்றும், தீயவை  ஒழிப்பது போன்றும் திரைப்படங்கள் எடுத்து கூவி கூவி விற்றிருக்கிறார்கள். நாங்கள் பிழைப்பதற்காக எத்தகைய ஈனச்செயலும் செய்ய தயாராக இருக்கிறோம் என சொல்லாமல் சொல்லி விட்டார்கள். 

பாமரனோ இன்னும் சில வாரங்களில் இதையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் இவர்கள் எடுக்கப்போகும் திரைப்படங்களை வாய்பிளந்து பார்க்கத்தான் போகிறான்.  

அரசியலும், திரைப்படத்துறையும் இப்படியென்றால், கிரிக்கெட் இவைகளுக்கெள்ளாம் ஒரு படி மேலே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவிற்கு தான் இந்தியா என்பதை கொண்டிருக்கிறது, மற்றபடி இந்தியாவாவது, தேசப்பற்றாவது என்பது தான் இவர்களின் செயல்பாடு. 

பண ஆசை யாரைத்தான் விட்டது, கிரிக்கெட் வாரியங்களையும், அதன் தலைவர்களையும், ஆட்டக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரியாவில் தற்போது நடந்து கொண்டிருக்க, அதில் பங்கேற்க கிரிக்கெட் அணியை அனுப்பாமல், சாம்பியன்ஸ் லீக்கில் ஆட விட்டு ஆணி பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டிற்காக விளையாடுவதை தவிர்த்து பணத்துக்காக விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சான்று என்ன வேண்டும். இதைக் குறித்து இதுவரை எந்த மூத்த கிரிக்கெட் ஆட்டகாரர்களும் கருத்து தெரிவித்ததாக இல்லை. மத்தியில் ஆட்சியிலிருக்கும் மோடியும் வாயை திறந்ததாக இல்லை. இத்தனைக்கும் அரசியல் தலைவர்கள் தான் பல கிரிக்கெட் வாரியங்களுக்கு தலைவர்களாக இருக்கின்றனர். குஜாராத் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது பா.ஜ.க வின் தலைவர் அமித் ஷா அந்த பொறுப்பை கவனித்துக் கொள்கிறார். 

இப்படியாக இந்தியா ஊழலில் திளைக்க அரசியலும், திரைப்படத்துறையும், கிரிக்கெட் வாரியமும் மிகப்பெரிய காரணிகளாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினோடு கார்ப்பரேட் ஆசாமிகள் சிலரையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த நான்கும் நாற்புறமும் இருந்து கொண்டு இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றன. 

இந்தியா வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த காலம் மாறி இன்று கருப்பனுக்கு அதாவது கருப்புப்பணத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறது. 

இந்தியாவில் பாமரன் மடிகின்றான்; விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்; மீனவன் பிடிக்கப்படுகின்றான்; தரமான கல்வியைப் பெற ஏழை பாடுபடுகிறான்;  சாமானியன் சரியான மருத்துவ வசதியின்றி மரிக்கின்றான்.  

இவர்களை கவனிப்பாரில்லை, ஊழல் செய்தாருக்கு சொம்பு தூக்கவும், கொள்ளையடித்தவர்களை ஆதரிக்கவுமே இங்கு நேரமில்லாத நிலையில் சாமானியனை ஏறெடுத்துப் பார்ப்பவன் யார்!
Related Posts with Thumbnails