December 13, 2014

உண்மைகளற்ற கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டமும் - புரிதலும்


கிறிஸ்துமஸ் என்றதும் கிறிஸ்து என்ற மனிதர் நினைவிற்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் கொண்டாட்டங்களும், அலங்காரங்களும், விடுமுறைக்காலமும் நினைவில் வந்து செல்வதை மறுக்கவியலாது.

பிறப்பினால் கிறிஸ்தவன் என்பதால் சிறுவயதில் அந்த வயதிற்கான குதூகலமும், சந்தோஷமும், விடுமுறைக்கால மகிழ்ச்சியும் என்னையும் ஆக்கிரமித்திருந்தன. பதின்ம வயதின் பின்னாட்களில் கிறிஸ்துமஸும் அதனைச் சார்ந்த கொண்டாட்டங்களும் ஏன் என்ற வினா எழும்பத் தொடங்கியிருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை கொண்டாட்டங்களில் அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை. பணமிருக்கிறவன் ஆடம்பரமாய் கொண்டாடுவதும், ஒன்றுமில்லாதவன் கையேந்துவதுமான காட்சிகள் என்னை யோசிக்க வைத்தன.

சிறுவயதில் டிசம்பர் மாத விடுமுறைக்காலமென்றால் புது ஆடை தைப்பதற்காக அவரவருக்கு விருப்பப்பட்ட துணி எடுக்க குடும்பமாக செல்வது வழக்கம். அந்த சமயங்களில் பல முறை நான் வருவதாயில்லை என தவிர்த்திருக்கிறேன். அம்மா எது எடுத்து வந்தாலும் அதனை தைத்துப் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

பதின்ம வயதில் பெற்றோர்களின் அறிவுரைப்படி விவிலியத்தை சற்று ஆழ்ந்து வாசிக்க நேரிட்டது. அது இன்றளவும் பல தெளிவுகளைப் பெற உதவுவதையும், பல விஷயங்களைக் கற்றுத் தந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை.

டிசம்பர் மாத முதல் வாரத்திலேயே பலகாரங்கள், இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்யும் பணிகளை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். அவற்றில் காண்பித்த ஆர்வத்தை கூட கிறிஸ்துமஸ் குடில், மரம், நட்சத்திர விளக்கு போன்றவற்றில் காண்பித்ததில்லை.

வண்ண காகித கொடி கட்டுவதிலும், வாழ்த்து அட்டைகள் சேகரிப்பதிலும் ஆர்வமிருந்ததை மறுப்பதிற்கில்லை.  வீட்டில் மற்றவர்களுக்கு இருந்த கொண்டாட்ட மனோநிலையில் கால்பகுதி கூட எனக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

டிசம்பர் 25 ல் தான் கிறிஸ்து பிறந்தாரா என்பது உள்ளிட்ட பல காரணங்கள் தான் கொண்டாட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் போக காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

சில வருடங்கள் முன்னர் வரை  அலங்காரத்திற்கென்று, கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் என வீண் செலவுகளை நானும் செய்து வந்திருக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை.

கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆடம்பர கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் எனக்கு இன்றுவரை நாட்டமில்லை. ஏழ்மையின் கோலமாய் பிறந்தார் என்று பிரசிங்கித்து விட்டு ஏழைகளைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவ சமூகம் இன்றளவும் இருப்பதை மறுக்கவியலாது.

இயேசு கிறிஸ்து டிசம்பரில் தான் பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் ஆதாரம் ஏதுமில்லை. அதோடு பனி பொழியும் குளிர் நிறைந்த இரவில் பிறந்தார் என்பதற்கும் விவிலியத்தில் ஆதாரம் இல்லை.

அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என லூக்கா 2:8 ல் எழுதியிருக்கிறபடி  வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்த்தால் அது குளிர் நிறைந்த இரவாக இருக்கும் வாய்ப்புகள் இல்லை; காரணம் யூதேயாவில் பனிப்பொழிவு அதிகமாக  இருக்கும் டிசம்பர் மாதத்தில்  ஆடு மேய்க்கிறவர்கள் வயல்வெளிகளில் மந்தைகளைக் காக்கும் வழக்கம் கொண்டிருப்பதில்லை.

அதோடு இயேசு பிறந்த அந்த காலகட்டத்தில் குடிமதிப்பு என்ற கணக்கெடுப்பு எழுதப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு கணக்கெடுப்பு கடுங்குளிர் காலத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் வேத வல்லுனர்கள்.

இயேசு பிறந்த  தினத்தை கணக்கிடுகையில் லூக்கா முதல் அதிகாரத்தில் எழுதியிருக்கிற படி மரியாள் கர்ப்பந்தரித்த போது யோவானின் தாயாரான  எலிசபெத் ஆறு மாதம் கர்ப்பவதியாக இருந்திருக்கிறார், அந்த காலகட்டத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகையில்  செப்டம்பர் இறுதி வாக்கில் இயேசு பிறந்திருக்கக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள்

இயேசுவின் பிறப்பு கடுங்குளிர் நேரத்திலோ, பனிப்பொழிவின்  போதோ இல்லை என்பது விவிலியத்தில் தெளிவாக இருக்க காலங்காலமாக கிறிஸ்து குளிரின் நடுவே பிறந்தார் எனவும், டிசம்பர் 25 தான் பனிப்பொழுவின் உச்சமாக இருப்பதால் அந்த தினத்தில் தான் அவர் பிறந்ந்திருக்கக்கூடும் எனவும் போதித்து வருபவர்களை என்னவென சொல்ல?

இது போன்ற வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் பாகன் வழிபாடு அல்லது பேய் வழிபாடு என்கிறார்கள். இது போன்ற கற்பனை வழிபாடுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்னரும் இருந்து வந்திருக்கிறது என விவிலியம் தெளிவாக கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவே இது போன்ற கற்பனைக் கதைகளை சாடியிருப்பதாகவும் வேதாகமத்தில் சான்றுகள் உண்டு. மத்தேயு 15:9 ல் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என இயேசு ஆலயத்தின் மூப்பர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டில் இவ்விதம் எழுதியிருக்கிறதென்றால், பழைய ஏற்பாட்டில் பாகன் வழிபாடுகளையும் கற்களையும், மண்ணையும், மரங்களையும் வழிபடுவதை எதிர்த்து பல இடங்களில் எழுதியிருப்பதைக் காணலாம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எரேமியா 10:2-4 வரையான வசனங்கள் மிகத் தெளிவாக பாகன் மார்க்கத்தை சாடுகிறது. மரத்தை வெட்டி அதை பொன்னினாலும், வெள்ளியினாலும் அலங்கரிக்கிறார்கள் என்றும், அது வீணென்றும், அத்தகைய ஜனங்களின் வழிபாடு வீணாயிருக்கிறது எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

பசுமையான மரத்தை வெட்டி அதை அலங்கரித்து அது கீழே விழாமலிருக்கும் படி அதை கட்டி வைப்பது பாகன் சமூகத்தில் வழக்கம். குளிர்காலங்களில் இப்படி வைப்பதனால் அந்த மரம் அதிக நாட்கள் வாடாமலும் இருக்கும். இதையே கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரில் இன்றளவும் கிறிஸ்தவர்கள் சம்பிரதாயமாக செய்து வருகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் தவறென்று கிறிஸ்தவர்களுக்கு இப்போதோ இனிமேலோ எவரும் சொல்லத் தேவையில்லை; இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே எரேமியா தீர்க்கத்தரிசி எப்போதோ சொல்லியிருப்பதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. (எரேமியா 10:2-4)

இவற்றினிடையில் பரிசுப்பொருள் பரிமாற்றம் என்பது வெறொருமாதிரியான வியாபாரமாக்கல். பணமிருக்கிறவர்கள் தங்களுக்கிடையே பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்வதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், கிறிஸ்துமஸ் மரங்கள் வாங்குவதும், பட்டாசு விற்பனையும், சான்டா கிளாஸ் ஆடை என்ற பெயரில் அதை வாங்குவதும் வியாபாரிகளுக்கு கொண்ட்டாட்டம்.

இவற்றினிடையில் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகி வருவதும் தொடர்கிறது. 

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென விவிலியம் உரைக்கவில்லை; அலங்காரம் செய்து ஆடம்பரமாக புசித்தும் குடித்தும் மகிழ்ந்திருங்கள் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வைத்து, சான்டா கிளாசை வரவேற்று போஜனம் வழங்குங்கள் எனவும் வசனங்கள் இல்லை.

இப்படியாக வேதாகமம் உரைக்காதவற்றை பாகன் வழிபாடுகளின் வழியில் தொடர்ந்து பின்பற்றி வரும் கிறிஸ்தவர்களிடம் இவற்றையெல்லாம் சொன்னால் ‘போடா போக்கிரிப்பயலே’ உனக்கு  வேறு வேலையில்லை, என கேலியும் கிண்டலும் தான் செய்யப்போகிறார்களெனினும் இவற்றை/உண்மையை/ சத்தியத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமையாயிருக்கிறது.

கிறிஸ்து பிறந்ததில் உண்மையாகவே மகிழ்ச்சி கொண்டிருப்பவர்கள் பணமிருக்கிறவனுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதை விட்டு விட்டு, அன்றாடம் ஒருவேளை ஆகாரத்திற்கு பிரயாசப்படுகிறவனின்  தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

புத்தாடை வாங்குபவர்கள், பல்லாண்டுகளாக பழையவற்றையே அணிந்து வரும் பரம ஏழைக்கு புதிய ஆடை வாங்கித்தந்து மகிழுவார்கள்.இதைத்தான் விவிலியமும் உரைக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் இன்றும் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகத்தானிருக்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம்.

கிறிஸ்துமஸ் குறித்த தவறான புரிதல்களையும், கொண்டாட்டங்களையும் பார்க்கையில் “What is popular is not always right and what is right is not always popular“ என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.

5 comments:

Nathimoolam said...

நண்பரே,
தங்களின் மனசாட்சியின் படி எழுதியுள்ளீர்களென்றால்மிகவும் பாராட்டுக்குறிய பதிவு இது.
ஆதி

எட்வின் said...

ஆதி அவர்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் முதலில் நன்றி.

மனசாட்சி இல்லாமல் ஒரு உண்மையை பதிவு செய்து விட முடியுமா என்பது தெரியவில்லை. இந்த பதிவு பல ஆண்டுகளாக எனக்குள் நான் எழுப்பி வரும் கேள்விகளின் பிரதிபலிப்ப்பு தான். அதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம் தோழரே.

மனிதம் மறுக்கும் எந்த மதமும் எனக்கு சம்மதமில்லை.

காரிகன் said...

டிசம்பர் 25 கிறிஸ்துவுக்கு முன் பேகன் வழிபாட்டு முறையாக கொண்டாடப்பட்டுவந்த சூரிய வணக்கத் திருவிழா. அது அப்படியே கிருஸ்துவத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டது. சில குறிப்புகள் ஏசு ஏப்ரல் மாதம் பிறந்திருக்கலாம் என்று சொல்கின்றன. படித்திருக்கிறேன்.

நேர்மையான பதிவு.பாராட்டுக்கள்.

எட்வின் said...

ஆமாங்க காரிகன் சரியா சொன்னீங்க. சூரிய வணக்கத் திருவிழாவ இவங்க, சூரியன் மாதிரி ஒருத்தர் பிறந்திருக்கார்னு சொல்லி கிறிஸ்துமஸ டிசம்பர் 25 ல கொண்டாட ஆரம்பிச்சிருக்காங்க. இத எப்படியெல்லாமோ திரித்து, வேறு அர்த்தம் கற்பித்தது தான் ஏனென்று எனக்கு புரியவில்லை.

நன்றி.

செங்கதிரோன் said...

What is popular is not always right and what is right is not always popular“-good one

Post a Comment

Related Posts with Thumbnails