December 24, 2015

சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் @ இயேசுவின் பிறப்பு


வியாபாரமயமாக்கப்பட்ட இன்றைய உலகம், இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் காலங்களையும் விட்டுவைக்கவில்லை. 

யகூதா என்றறியப்படுகின்ற யூதேயாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவரான  יֵשׁוּעַ (Yeshu'a in Aramaic ) இயேசுவை, இந்த குளிர்காலங்களிலே ( டிசம்பர் 25 முதல் ஜனவரி 19 வரையிலான இடைப்பட்ட நாட்களில்) யூலே, கிறிஸ்துமஸ், எக்ஸ்மஸ், நோயல் என பல பெயர்களில் நினைவுகூர்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் அதாவது ஏறத்தாழ 6-12 நூற்றாண்டுகளில் இவ்விதம் நினைவு கூர்வதில் எவ்வித சந்தைப்படுத்தலோ, வியாபார நோக்கமோ இல்லையெனினும் அண்மைக் காலங்களில் இயேசுபிறப்பின் நினைவு கூறலை கிறிஸ்துமஸ் என்ற அடைமொழியோடு சந்தைப்படுத்தி, வியாபார களமாக்கி விட்டது தான் இம்மானுடத்தின் சூட்சுமம். 

வாழ்த்து அட்டையில் இருந்து ஆரம்பிக்கும் இந்த சந்தைப்படுத்தல், புத்தாடை, அலங்காரம், பட்டாசு, சான்டா கிளாஸ், சிவப்பு வர்ண தொப்பி, நட்சத்திர விளக்கு, அலங்காரத்தோரணை கொண்ட மரம், மதுபானம், கேக் என இன்னும் நீள்கிறது. 

மேற்கத்திய கலாச்சாரத்தை ஒரு போதையாகப் பார்ப்பவர்களுக்கு இந்த கிறிஸ்துமஸ் இரட்டிப்புப் போதை. 

அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 30-35 மில்லியன் அலங்கார மரங்கள் விற்கப்படுவதாக history இணையதளம் குறிப்பிடுகிறது. 

அமெரிக்காவில் மட்டுமே இப்படியான மூடத்தனத்திற்கு இவ்வளவு பணம் விரயமாகிறது என்றால் உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்துமஸிற்கு எவ்வளவு பணம் விரயம் செய்யப்படுமென்பது ஊகிக்க முடியாதது. 

பணம் செழுத்தவன் விரயமாக்குவதில் இங்கு எவர்க்கும் நட்டமில்லை, மாறாக இவர்களைப் பார்த்து நாமும் அலங்காரப்படுத்த வேண்டும் என்று கடன் வாங்கி பிச்சைக்காரனாகும் பாமரன் தான் இந்த சந்தைப்படுத்தலில் விழுந்து போகிறான்.

விவேகானந்தரின் கூற்றான "சிக்கனம் என்பது எவ்வளவு குறைவாக செலவு செய்கிறோம் என்பதில் அல்ல; என்ன தேவைகளுக்காக செலவு செய்கிறோம் என்பதில் அடங்கியுள்ளது" என்பது தான் இந்த சந்தைப்படுத்தப்பட்ட கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் நம்மைக் கேட்க வேண்டிய கேள்வி. 

அதோடு இயேசுவின் பிறப்பையே, மேசியா(கிறிஸ்து)வின் பிறப்பு என்று அடையாளப்படுத்தி இந்த சந்தைப்படுத்தலை உலகமயமாக்கியது தான் அரசியல் வியாபாரிகளின் தந்திரம் என்பதையும் நாம் புரிந்துகொள்ளல் அவசியம். 

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

October 27, 2015

கிரிக்கெட் எனும் பெரும் கனவு

கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு சராசரி இந்திய இளைஞனைப் போலவே நானும் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன். வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்திய ஆட்டங்கள் என்றால் ஆட்டம் துவங்கும் முன்னரே தொலைக்காட்சிப்  பெட்டிக்கு முன்னதாக  அமர்ந்து விடுதல் வழக்கம். 

ஐந்து  வயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் அத்தனைப் பிரியம். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைக்கும் அளவிற்கு வசதி இல்லை. 

அந்த சமயம் மார்த்தாண்டம் எல்.எம். துவக்கப்பள்ளியில்  ஐந்தாவது வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1992 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ஆட்டங்களின் ஒளிபரப்பு உரிமையை  அன்றைய ஸ்டார் டிவி  (ஆரம்பத்தில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ்) நிறுவனம்  வாங்கியிருந்தது. 


நான்கு மணிக்கு எப்போது மணி அடிப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பேன், மணி அடித்ததும் பையை தலையில் போட்டுக் கொண்டு எந்த கடையில் கிரிக்கெட் காண்பிக்கப்படுகிறது என்பதை அறிய ஒவ்வொரு கடையாக ஏறிட்டுப் பாத்துச் செல்வேன். 

நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், அன்றைய திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப்  பணிமனையிலிருந்து சற்று கீழ்ப்புறம் அமைந்திருக்கும் ஸ்டார் லாட்ஜ் ல் தான் வழக்கமாக கிரிக்கெட் பார்ப்பதுண்டு. 

நேரலையானாலும், பழைய ஆட்டங்களானாலும் கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இன்னும் ஒரு ஓவர் பார்த்து விட்டு வீட்டிற்குக் கிளம்பி விட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் அடுத்த ஓவரின் இறுதியிலும் இன்னும் ஒரே ஓவர் பார்த்து விட்டு சென்று விடலாம் என்கிற அதே எண்ணம் தான் வந்து செல்லும். 

அப்படிப் பார்த்துப் பார்த்து ஒரு நாள் இரவு 7 மணி ஆகி விட்டது. வீட்டில் அனைவரும் அன்று ஒரு நாள் பதட்டப்பட்டதோடு சரி. அதன் பின்னர் நான் தாமதமாக போனால் கூட 'அவன் எங்கயாவது கிரிக்கெட் பாத்திட்டிருப்பான்' என்று சமாதானப்பட்டுக் கொள்வார்கள். எனினும் ஆறரை மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். 

அத்தனை மோகம் கொண்டிருந்தும்  முழுநேரமாக  கிரிக்கெட் ஆடுவதற்கு மட்டும் வீட்டில் சம்மதம் இல்லை. நண்பர்களுடன்,  பக்கத்து ஊர்களிடையே நடைபெறும் போட்டிகள் வரை மட்டுமே எட்டியிருந்தேன். பிற்காலங்களில், அவ்வப்போது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், ஜான்ஸ் பள்ளி மைதானத்திலும் நடைபெறும் லெதர் பால் ஆட்டங்களை வேடிக்கை பார்ப்பது வழக்கம். 

இப்படியாக தொடர்ந்த பயணத்தில், சர்வதேச ஆட்டம் ஒன்றை நேரடியாக மைதானத்தில் சென்று பார்த்து விட வேண்டும் என்று வெகுநாள் கனவு கொண்டிருந்தேன், அது சமீபத்தில் தான் நிறைவேறியிருக்கிறது, இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது நாள் ஆட்டத்தை காணும் வாய்ப்பை துபாயில் பெற்றேன். 

டெஸ்ட் ஆட்டம் என்பதால் டிக்கெட் எளிதில் கிடைத்தது, தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேச ஆட்டம் என்றாலும் அது சாதாரணமாக மாவட்ட அளவில் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பது போன்ற உணர்வே தோன்றியது. 

தொலைக்காட்சியில் Replay, மற்றும் பிற Statistics களின் தரவு சேர்க்கப்படுவதால் அதன் சுவாரஸ்யம் கூட்டப்படுகிறது, நேரடியாக மைதானத்தில் ஆட்டத்தைப்  பார்ப்பதன் அனுபவம் சிறப்பானது என்றாலும் மைதானத்தின் எந்த பகுதியில் உட்கார்ந்திருக்கிறோம்  என்பது தான் நமக்கான காட்சியைத் தீர்மானிக்கிறது. 

எப்படியாயினும் வெகுநாளைய கனவு நனவானதில் ஒரு திருப்தி. 









August 27, 2015

நல்ல நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள்

சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கிறிஸ்தவம் சார்ந்தும், சமயங்கள் சார்ந்துமே இருப்பதை மறுப்பதற்கில்லை. பெற்று வருகின்ற பெரும்பாலான அனுபவங்கள் சமயம் சார்ந்து இருக்கின்ற படியால் இப்படியாக பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அறியப்படுபவர்களையும்!! கொண்டிருப்பதை பலரும் அறிந்ததே.

பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்களை உடைய குடும்பங்கள் தான் குமரி மாவட்டத்தில் அதிகம். அதில் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளையும் கொண்டிருக்கின்றன.

நாள், நேரம், நட்சத்திரம், ஜாதகம் மற்றும் இன்னபிற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் தான் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்கும் 'இயேசுகிறிஸ்து'. ஆனால் இன்று, மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் அதிலும் பட்டதாரிகள் கூட மூட நம்பிக்கைகளில் ஒரு பிடியை வைத்திருப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்று (27/08/2015) தற்செயலாக அரசன்குழியில், திருமணம் நடைபெறும் ஆலயம் வரை செல்ல வேண்டியதாயிற்று. அரசன்குழியில் திருமணம் நடத்தும் போதகரை அந்த திருமணம் முடிந்து இறச்சகுளம் அருகில் இருக்கும் டென்னிஸ்புரம் ஆலயம் வரை கொண்டு சென்று விட வேண்டியிருந்தது. டென்னிஸ்புரத்தில் மற்றுமொரு திருமணத்தை அதே போதகர் நடத்த வேண்டிய கட்டாயம். (பெண் வீட்டார் அழைப்பின் படி)

10:20 ற்கு முடிய வேண்டிய திருமணம், மாப்பிள்ளை வீட்டாரின் தாமதத்தால் மணி 10:50 கடந்தும் முடிந்தபாடில்லை. மற்ற வீட்டிலிருந்து போதகருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவே,  போதகரை அரசன்குழியில் இருந்து டென்னிஸ்புரத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றேன்.

இவ்விரு திருமணங்கள் மட்டுமல்லாது துவரங்காடு, திட்டுவிளை மற்றும் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலும் திருமணங்கள் நடைபெற்றன. இத்தனை திருமணங்கள் ஒரே நாளில் வைப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சார்ந்த விஷயமாகத்தான் இருக்கும்.

இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல, நாட்காட்டியின் பஞ்சாங்கத்தில் இன்று முகூர்த்த நாள் எனவும், 10:45 முதல் 11:45 வரை நல்ல நேரம் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நல்லதைச் செய்வார், நல்லதையே செய்வார் என விசுவாசிக்கிறவர்கள் நல்ல நாளும், நல்ல நேரமும் பார்த்து திருமணம் செய்வதும், செய்துவைப்பதும் முரண்.


பாமர ஜனங்கள் தான் மூடநம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் போதகர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆச்சர்யம் தருகிறது. நிச்சயமாகவே, நாசரேத் ஊரைச் சார்ந்த இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், கிறிஸ்தவன் என்று பெயரளவில் சொல்லிக்கொள்வதற்குமிடையே அதிக வித்தியாசமிருப்பதை மறுப்பதற்கில்லை.

August 16, 2015

மதுவிலக்கு - களியக்காவிளை - மலையடி குமார் பேச்சு



சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம் செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.

இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து,  அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது. சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன். கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.

உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய 60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.

August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com

July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

July 28, 2015

அக்னிச்சிறகுகள் விரித்த அப்துல் கலாம் அவர்கள்

திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மறைந்து விட்டார் என்று இரவு 11 மணி அளவில் செய்தியறிந்ததும் முதலில் நம்பவில்லை. நல்ல உடல்திறனோடு இருந்தவருக்கு என்னவாயிற்று என்று யோசித்துக்கொண்டே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி உறுதி செய்து கொண்டேன்.

அப்துல் கலாம் அவர்களைக் குறித்து நான் எழுதித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை எனினும் அவரது வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை பதிவு செய்யவில்லையென்றால் அது எனது கடமையிலிருந்து மாறுவதாகப்படும்.

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் எனினும் படிப்பில் அவரது கெட்டித்தனமும், கடின உழைப்பும், நேர்மையும், வைத்திருந்த உயர் பண்புகளும் தான் அவரை இந்த தேசத்தின் தலைவராகும் அளவிற்கு உயர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் மூத்த விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் என்ற அகங்காரத்தையோ, தலைக்கனத்தையோ அவரது இறுதி மூச்சிருக்கும் வரை காண்பிக்கவில்லை என்பதை விட வேறு என்ன வேண்டும் அவரது எளிமையைப் பற்றிக் குறிப்பிட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' கணியன் பூங்குன்றனார் பெருமையையும், தமிழின் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடைவர் என்பதையும் மறந்து விட முடியாது. 



புத்தகங்கள் அதிகமாக வாசித்திராதவன் எனினும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன் வாய்த்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட அந்த புத்தகம் சைனீஸ், ப்ரெஞ்ச் உட்பட பதிமூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அவரது சுயசரிதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பெரிது.



இன்றும் அவர் மறைவிற்கு நாடு, மொழி, இன, மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கிறார்கள் என்றால் அது அவரது எளிமைக்கும், திறமைக்கும், நற்பெயருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதையே.

அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதை அவரது மறைவிற்குப் பின் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர் மறைந்தாலும் அவரது புகழும், இந்திய விஞ்ஞானத்திற்கு அவர் அளித்த அறிவுக் கொடைகளும் என்றும் மறையாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

-----

பி.கு: ஜூலை 28 ஒரு தினம் மட்டும், வழக்கமாக Facebook பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்வது உண்டு, காரணம், அதில் கடமைக்கென வலையேற்றப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி எழுதுவதில் இருந்து தப்பிப்பதற்காக. அது போன்று Deactivate செய்து விட்டு மற்றுமொரு தலையங்கத்தில் எழுதலாம் என மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன், அதன் முன் தற்செயலாக தொலைக்காட்சியைக் கவனிக்கவே கலாம் அவர்களின் மறைவுச் செய்தி. அதனாலேயே இந்த பதிவு.

July 22, 2015

ஆன்மீகப் போலிகள்

மதம் கொண்டு, மதியின்றி. பிறரின் அமைதியான வாழ்க்கை முறைக்கு சில போலி ஆன்மீகவாதிகள் பங்கம் விளைவிப்பது சமீப காலமாக தொடர்வது வருத்தத்திற்குரியது. அப்படிப்பட்டவர்களை ஆன்மீகவாதிகள் என்று குறிப்பிடுவதை விட தீவிர(மத)வாதிகள் என்று குறிப்பிடுவது தான் பொருத்தமாக இருக்கும்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமதான் மாதம் கடந்த சில தினங்கள் முன்னர் தான் ஈத் நன்னாளுடன் முடிவிற்கு வந்தது. இஸ்லாமிய சகோதரர்களின் முதல் நோக்கமே சமாதானம் என்பது தான். எவரையும் சந்திக்கும் பொழுதும் முதலில் அவர்கள் சொல்வது உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும் - 'அஸ் சலாம் அலைக்கும்' என்பதே.

ஆனால் அந்த சமாதானத்திற்கே உலை வைக்கும் படியான செயலை, அவர்களின் பிரார்த்தனை நேரத்தில், மசூதிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த சம்பவம் குவைத் நாட்டில் சில வாரங்கள் முன்னர் நடந்தது; இது போன்றே பாகிஸ்தான், சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் என்று அறியப்படுபவர்களே!!! மதம் கொண்டு சமாதானத்திற்கு உலை வைக்கின்றனர்.

தமிழகத்திலும் ரமதான் மாதத்தில் இஸ்லாம் சகோதரர்களுக்குள்ளேயே அரிவாள் வெட்டுகளும், கொலைகளும் அரங்கேறியதை பத்திரிக்கைக்கள் வாயிலாக அறிய நேரிட்டது.

இந்த அனுபவங்களையும், சில பெயர் கிறிஸ்தவ, பெயர் இந்து நண்பர்களின் உபவாச, விரத காலங்களிலும் இருந்து பெற்ற அனுபவங்களையும் வைத்துப் பார்க்கையில் இம்மூன்று மதத்தினருமே நோன்பு, உபவாசம், விரதம் இருப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நன்றாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
  
பல கிறிஸ்தவர்கள் உபவாசம் என்பதன் பெயரில் ஒரு மாதம் முதல் நாற்பது நாட்கள் வரை புலால் உண்பதை நிறுத்துவார்கள், பிரார்த்தனையும் தவறாது செய்வார்கள், ஆனால் அவரகள் செயல்களில் எந்த வேறுபாடும் இருக்காது; தொடர்ந்து பொய் சொல்வதையும், பிறர்மேல் வீண் பழிகளை சுமத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். தேவையிலிருப்போருக்கு உதவி செய்யவும் மறுப்பார்கள். இவர்கள் போலிகளன்று வேறென்ன?

சில இந்து சகோதரர்கள், சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறேன், அதனால் மது அருந்துவதில்லை, புகை பிடிப்பதில்லை, பொய் சொல்லுவதில்லை என்று பக்தி மயமாக இருப்பார்கள். ஆனால் மாலையைக் கழற்றினால் மது அருந்தலாம், எந்த தீய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடலாம் தவறில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பலரது நோன்பும், உபவாசமும், விரதமும் இன்று இப்படித்தான் பெயரளவில் இருந்து வருகிறது. ஆன்மீகத்தை சரிவர புரிந்தவர்கள், வேதங்களை முறையாக பயின்றவர்கள் சமுதாயத்துடன் அமைதியை கடைபிடிக்கவே விரும்புவார்களன்றி சமுதாயத்திற்கெதிரான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

அனைத்து ஆன்மீக மார்க்கங்களும் சமாதானத்தையே பறைசாற்றி வருகின்றன, வேதங்களை சரியாக புரிந்து கொள்ளாத சில அரைவேக்காட்டு ஆன்மீக வாதிகள் தான் சமாதான குலைச்சலுக்கு காரணிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும், குறிப்பாக எளிதாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று ஓங்கியிருப்பதால் முன்னெப்போதும் இல்லாத அளவு திருட்டும், கொலைகளும், ஏமாற்றுதலும் நடந்து வருகிறது. கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் சாமியார்களும், போதகர்களும் இந்த வகையினரே.

மதவேறுபாடின்றி சக மனிதர்களை மனிதர்களாய் பாவிக்கும் நாள் வரும் வரை இங்கு மதத்தின் சாயலால் நடந்தேறும் வன்முறைகளுக்கு முடிவிருக்காது என்று தான் தோன்றுகிறது.


July 02, 2015

150 ஆவது ஆண்டில் - The Salvation Army - தொண்டு நிறுவனம்


1865 ல் கிழக்கு லண்டன் கிறிஸ்தவ பணி என்று ஆரம்பிக்கப்பட்டு இந்நாட்களில் இரட்சணிய சேனை (The Salvation Army) என்றறியப்படும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் 2/7/2015 ல் தனது 150 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

அந்த கொண்டாட்டங்களின் ஒருபாகமாக கிழக்கு லண்டனின் மிகப்பெரிய அரங்கான O2 Arena வில் 126 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடு இந்த மாதம் முதல் தேதி துவங்கி ஐந்தாம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

இரட்சணிய சேனை அமைப்பு இப்போது 126 நாடுகளில் தனது தன்னார்வ தொண்டுப் பணிகளையும், நலிந்தவர்களுக்கு கல்விச்சேவையையும், மருத்துவச் சேவைகளையும், பேரிடர் உதவிப்பணிகளையும்,  வழங்கிவருவதைக் குறித்து, இந்த அமைப்பைச் சார்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமைப்படுகிறேன்.

இந்தியாவைப் பொருத்த வரையில் 1882 ல் பம்பாயில்  ஃப்ரெடரிக் பூத் டக்கர் என்ற ஆங்கிலேயரால் துவங்கப்பட்ட இதன் பணிகள் ஆரம்ப காலங்களில் பல நெருக்கடிகளையும், சவால்களையும் கடந்து வந்ததை மறுப்பதிற்கில்லை.

1853 ல் தமது தந்தை பீகாரில் துணை ஆணையாளராக இருந்த போது பிறந்த ஃப்ரெடரிக் பூத் டக்கர். 1881 ல் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தொண்டுப்பணிக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார். அதுவரை அமிர்தசரஸ், சிம்லா ஆகிய பகுதிகளில் உதவி ஆணையாளராகவும், உதவி நீதிபதியாகவும் பதவிகள் வகித்திருக்கிறார்.

உயர்பதவிகள் பல வகித்திருந்தும் தொண்டுப் பணிகளை செய்யும் படியாக தன்னை அர்ப்பணித்து தனது ஆங்கிலப் பெயரை ஃபக்கீர் சிங் எனவும் மாற்றி, பல தொலைவுகள் கடந்து, பசியிலிருப்போர், கைவிடப்பட்டோர், பிச்சைக்காரர்கள், மதுபான அடிமைகள் போன்றோர் மத்தியில் தொண்டு ஆற்றியிருக்கிறார்.

இவரைப் போன்றோரினாலும், தங்கள் வாழ்க்கையை நலிந்தவர்களுக்கென அர்ப்பணித்த ஆங்கிலேயர்களாலும், இந்தியர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட இரட்சணிய சேனை தொண்டு நிறுவனம் இன்று இந்தியாவில் நலிவடைந்து வருவதை கனத்த மனதுடன் பதிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.

குறிப்பாக தாயில்லா குழந்தைகள் பாதுகாப்பு மையம், ஊனமுற்றோருக்கான பட்டயப் படிப்பு பயிற்சி மையம், ஏழை எளியோருக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்தியாவில் 133 ஆண்டு கால சரித்திரம் உடைய தொண்டு நிறுவனத்தை அதன் அழிவிற்கு நேராக வழிநடத்தி செல்லுகிறார்களோ என்ற அச்சம் எழாமலில்லை.

பூத் டக்கர் அவர்கள் 1891 ல் 'இருண்ட இந்தியா' என்ற புத்தகத்தில்  இந்தியா, பட்டினியினாலும், பஞ்சத்தினாலும், விபச்சாரத்தினாலும், குடி வெறியர்களாலும், சாதிப் பிரிவுகளினாலும் பெரும்பாடு படுகிறது என்று குறிப்பிட்டிருக்கும் நிலை 124 ஆண்டுகள் கழித்து இன்றும் தொடர்கிறது என்பது மிகவும் வருத்தப்படவும், கேவலப்படவும் வேண்டிய விஷயம்.

இத்தனை களேபரங்கள் மத்தியிலும் இந்த அமைப்பின் நற்பணிகளுக்கென்று தொடர்ந்து தங்களை ஈடுபடுத்தி வரும் ஒவ்வொருவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

150 ஆவது ஆண்டு  கொண்டாட்டங்களில் பங்கு பெற இந்தியாவில் இருந்து பிரயாணப்பட்டுச் சென்றிருப்பவர்கள், நாமும் லண்டன் சென்றோம், சில நினைவுகளைத் தேக்கினோம் என்ற மட்டில் நின்று விடாமல், புதிய உத்வேகத்தோடு தொண்டுப் பணிகளைத் தொடர்வார்களானால், 150 வருடங்கள் முன்னர் இந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய வில்லியம் பூத்தின் கனவு நனவாகும்.

May 04, 2015

பாமரனுக்கு பாதகமாகும் பந்த்/ முழு அடைப்பு போராட்டங்கள்

கடந்த மாதம் ஏப்ரலில் மட்டும் குறைந்தது மூன்று முறை (முழு அடைப்பு) போராட்டங்களை சந்திக்க நேரிட்டது; மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று. துறைக்கு ஒரு சங்கங்களை வைத்துக் கொண்டு போராட்டம் என கொடிகளை பிடித்து விடுகின்றனர். அல்லல் படுவதோ சாமானியன் தான்.

பாமரனின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்பதறிந்தும் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதலானவர்களும் இதர துறை ஊழியர்களும் போராட்டம் என எளிதாக அறிவித்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கி விடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி போக்குவரத்து சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதோடு கடந்த காலங்களில் இது போன்ற போராட்டங்களின் பாதிப்புகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 30 அன்று தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்பு இருந்தாலும், ஆளுங்கட்சியினர் சார்ந்த தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடாததால் அத்தியாவசிய பேருந்துகள் இயக்கத்திலிருந்தது சற்று ஆறுதல் தான். இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழக எல்லைக்கு சற்று அப்பால் கேரள எல்லைக்குள் பணிக்காகவும், வியாபரத்திற்காகவும், மருத்துவ வசதிக்காகவும், விமான பயணங்களுக்காகவும் பயணித்தவர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


காரணம், தமிழக எல்லையான களியக்காவிளைக்கு அப்பால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, நான்கு சக்கர வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய தயங்கிய நிலை தான் ஏப்ரல் 30 அன்று முழுவதும் இருந்து வந்தது. கேரள தமிழக எல்லைப் பகுதிகளைச் சார்ந்த சில வாகனங்கள் குறிப்பாக KL ல் துவங்கும் கேரள பதிவு எண்கள் கொண்டவையே அதிகம் இயக்கத்திலிருந்தன. அவையனைத்தும் மருத்துவமனை அவசரம்/திருமணம்/ஏர்போர்ட் அவசரம் என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கண்ணாடிகளில் தாங்கிக்கொண்டே இயக்கப்பட்டன.

(கேரளம், 'ஹர்த்தால்' என்ற பெயரில் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பெயர் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்)

ஏப்ரல் 30 ம் அன்று தேர்வு ஒன்றிற்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தேன், குறிப்பிட்ட தியதியில் தான் வந்தாக வேண்டும் என முன்னரே அறிவுருத்தப்பட்டிருந்ததால் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து நிலையம் சென்றால் களியக்காவிளை கடந்து கேரள எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள். நான்கு சக்கரவாகன ஓட்டுனரும் கைவிரிக்கவே வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலேயே சென்று வர வேண்டியதாகிப் போனது.


இவை போன்ற போக்குவரத்து முடக்கங்கள் பாமரனை பாதிப்பது ஒருபுறமென்றால் மருத்துவர்கள் போராட்டம் என்ற பெயரில் பாமரனின் உடல்நிலையை மேலும் கவலைக்கிடம் ஆக்குவதும், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்பதன் பெயரில் பண பரிவர்த்தனைகளை முடக்குவதும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பணியிலிருக்கும் போது தான் அரசுக்கோ, அவர்கள் துறை சார்ந்த மேலிடங்களுக்கோ புரிய வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் புரியவில்லை.


தங்களின் பணி நேரத்தில் தான் போராட்டங்கள் செய்ய வேண்டுமா? பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் ஏன் அரசாங்க பொது ஊழியர்கள் போராட்டம் செய்ய மறுக்கின்றனர்? இவர்களது கோரிக்கைகளை முறையாக அரசிடமும், பெருகியிருக்கும் ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாமே? 

April 21, 2015

குவைத் - நர்சிங்/ செவிலியர் பணியமர்த்தலில் கொள்ளை

இரு ஆண்டுகளாகவே குவைத்திற்கான செவிலியர் பணியமர்வில் நடைபெற்று வரும் பெருங்கொள்ளையை குறித்து எழுத வேண்டுமென மனதில் கருதி வந்திருந்தேன். செவிலியன் என்ற முறையிலும், குவைத்தில் ஐந்தரை ஆண்டு காலம் பணி செய்து வருகின்றதாலும் இந்த கொள்ளையைக் குறித்து நானறிந்தவற்றையும், பிற ஊடகங்கள் பிரசுரித்தவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக வலையேற்றுகிறேன்.

செவிலியப் பணி என்பது நமது மக்களால் இழிவான பணியாக கருதப்பட்ட காலம் போய் ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட பணியாக மாறி தற்போது பணம் கொழிக்கும் பணியாக மாறியிருக்கிறது (குறிப்பாக அயல்நாடுகளில்). எனினும், இன்றும் நம் குக்கிராமங்களில் செவிலியப்பணியை உயர்வாகப் பார்ப்பதும், குறிப்பாக பிரசவம் பார்க்கின்ற தாதிகளை பெரிதும் மதிப்பதும் தொடரத்தான் செய்கிறது.

தாதியர் பணிக்கு அயல்நாடுகளில் மிக அதிக வேலைவாய்ப்புகள் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) தொடர்ந்து இருந்து வருகின்றன; இதற்கு முதல் காரணம் வளைகுடா நாடுகளில் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாதியர் பணியை செய்ய தயங்குவதே! இந்த நிலைமை மெதுவாக மாறி வருகிறது என்றாலும், ஒரு மருத்துவமனையில் 2 சதவீதத்திற்கும் குறைவான அரேபியர்களே தாதியராக இருந்து வருகின்றனர்.

இதனால் அரபு நாட்டினர், தாதியர் பணிக்காக பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத்தான் சார்ந்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் இந்திய முகவர்களை (ஏஜென்ட்) நாட வேண்டிய கட்டாயம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முகவர்கள் பலர் பெரும் பணக் கொள்ளையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்ரி வர்கீஸ் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த முகவர்கள் ஒருபுறமிருந்தாலும், மற்ற பல முகவர்கள், அவர்களின் துணை முகவர்கள், அவர்களின் கீழ் முகவர்கள், விசா மற்றும் பயணக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளைகள் அடிக்கின்றனர்.

மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் பணமதிப்பு உயர்வாக இருப்பதாலும், வருமானமும் அதிகம் ஈட்டமுடியும் என்பதாலும் செவிலியர்கள் பலர் குவைத்திற்கு வருவதை முன்னுரிமையாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக குவைத் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிவதே அவர்களின் குறிக்கோள்; ஏனென்றால் அப்போது தான் 60 வயது வரை பணிக்கு பங்கம் வராது; வேலையும் நிரந்தரம்.

இத்தகைய (MOH-Ministry Of Health) அரசாங்க மருத்துவமனைகளுக்கு தாதியர்களை பணியிலமர்த்த 2004 ஆம் ஆண்டு, 2 லட்சம் ரூபாயில் ஆரம்பித்த இவர்களின் லஞ்சம் இன்று 22 லட்சமாக ஓங்கி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 10 லட்சம் என இருந்த (மு)க(ய)வர்களின் லஞ்சம் கடந்த ஏழு மாதங்களுக்குள் இரண்டு மடங்கு கூடி 20 லட்சம் என உயர்ந்திருப்பது பலரை அதிரச்செய்தது என்றாலும், அத்தனை லகரங்களை வாரியிறைத்து வேலையெடுக்கவும் தயங்காதவர்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தானிருக்கிறது.

கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.

இதனை பலரும் பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது, எனினும் முகவர்களுக்கிடையேயான போட்டி பொறாமையினால் தற்போது கேரளா, கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல் ஷராஃபா' நிறுவனம் சி.பி.ஐ யின் பிடியில் மாட்டியிருக்கிறது. இவர்கள் 300 கோடிக்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
  
19,500 ரூபாய் மட்டுமே செவிலியர்களிடமிருந்து கட்டணமாக வாங்க வேண்டிய இம்முகவர்கள் 19.500 ஐ தொடர்ந்து மேலும் இரு பூஜ்யங்கள் சேர்த்து 19,50,000 ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த தொகைக்கு சான்று ஏதும் அளிப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட 1600 செவிலியர்களை இவ்விதம் குவைத்தில் பணியில் அமர்த்தியுமிருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் எத்தனையோ கோடிகள் இவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். இந்த 'அல் ஷராஃபா' நிறுவனத்தின் நிர்வாகி வர்கீஸ் என்பவர், கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு மிக நெருக்கமானவர் என கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் இந்த ஊழல் சி.பி.ஐ ன் விசாரணையில் இருக்கவே, அடுத்த மாதம் முதல் குவைத்தில் தாதியர்கள் பணியமர்வு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ODPEC/NORKA/OMC மூலம் மட்டுமே நடைபெற வேண்டுமேன அரசு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இந்த ஊழலின் பின்புலத்தில் கேரளத்தைச் சார்ந்த முகர்வர்கள் மட்டுமல்லாது, கேரளத்தின் பிரபல அரசியல்வாதிகளுக்கும், குவைத் அரசு மருத்துவத்துறையைச் சார்ந்த சில பணியாளர்களுக்கும் பங்கு உண்டென்று சி,பி.ஐ ன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

குவைத் அரசும் இந்த ஊழல் சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என கடந்த நவம்பர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தது. நேற்றைய தகவலின் படி இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கீஸ் குவைத்தில் தங்கியிருந்து விசாக்களை வழங்கி வருவதாக ஏசியாநெட் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அவர் சரணடைய வேண்டி கேரள காவல்துறை விதித்த கெடு ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிந்த பின்னரும் அவர் சரணடையாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ன் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளது.

இத்தனைக்கும் நேற்று 20 ஆம் தேதி அவர் குவைத்தில் கைது செய்யப்பட்டு, ஷுவைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குவைத்தில் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாகவும் ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

குவைத் தாதியர் பணியமர்வில் வளைகுடா நாடுகளில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இத்தனை கோடி அளவு ஊழல் நடைபெற முதல் காரணம் முகவர்களென்றாலும், எத்தனை லகரங்களானாலும் கொடுத்து பணியிலமரும் செவிலியர்களையும் குற்றம் சொல்ல வேண்டியது தான் இங்கு துரதிருஷ்டம்.

இதே 'அல் ஷராஃபா' நிறுவனத்தில் 2009 ஆம் ஆண்டில், குவைத்தில் தனியார் மருத்துவமனை பணி ஒன்றிற்காக கட்டணம் என நம்பி நான்கு லட்சம் ரூபாயை கொடுத்தவன் என்ற நிலையில் எனக்கும் வருத்தமுண்டு.

தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews

February 19, 2015

விஜய் டிவி சூப்பர் சிங்கர் - சர்ச்சைகளும் புரிந்ததும்



பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட சூப்பர் சிங்கர் ஜூனியரின் நான்காவது சீசன் இறுதி சுற்று நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தியதி சென்னையில் அரங்கேறுவதாக இருக்கிறது.

இசையில் நாட்டம் இருப்பதாலும், தொடர்ந்து இந்த பாடல் நிகிழ்ச்சியை பார்த்து வருவதாலும் எனக்கு புரிந்த சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதால் தான் இந்த பதிவு.

சூப்பர் சிங்கர் 2006 ஆம் ஆண்டு துவங்கி கடந்த 8 ஆண்டுகளில் நான்கு சீனியர் போட்டிகள், நான்கு ஜூனியர் போட்டிகள் என எட்டு சீசனை நிறைவு செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் விளம்பரப்படுத்தலாலும், தொகுத்து வழங்கும் பாணியினாலும், நட்சத்திரங்களை அரங்கத்திற்குள் அழைத்து வருகிற திறமையினாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

பங்கு பெறும் போட்டியாளர்களை ஊக்குவிப்பதும், அனந்த் வைத்யநாதன் அவர்களைக் கொண்டு போட்டியாளர்கள் குரலை மென்மேலும் மெருகேற்றுவதும், சரிவர பாடமுடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தருவாயிலிருக்கும் போட்டியாளர்களையும் அரவணைத்து செல்வதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளைப் போன்றே சூப்பர் சிங்கராலும் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. நடுவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் எனவும், திறமைகளை இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கே அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதும், பிற மாநிலத்தவர்களுக்கே (நடுவர்கள் உட்பட) அதிக வாய்ப்புகள் தருகிறார்கள் எனவும், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சூப்பர் சிங்கரின் அனைத்து சீசனிலும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இந்த ஜூனியர் சீசன் 4 ல் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என சொல்லிவிட்டு வேற்று மாநிலத்தவர்களின் குரலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இந்த சூப்பர் சிங்கரின் தாரக மந்திரமான 'தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்/ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என்பது விஜய் தொலைக்காட்சியின் சாதாரண விளம்பரப்படுத்தல் தான்; கடந்த எட்டு வருடங்களாக தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியாளார்களை ஏற்றுக்கொள்வோம் என எங்கும் விளம்பரப்படுத்தி இருந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் போட்டியாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது விஜய் தொலைக்காட்சியின் வியாபார உக்தியாகத்தான் தெரிகிறது.

அதற்கான முதல் அச்சாரம் தான் முதல் சீசனில் வெற்றிபெற்றவரும், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்தவருமான 'நிகில் மேத்யூ'. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பிற மாநிலங்களில் இருந்தும் பலர் படையெடுக்கத் துவங்கினர்.

இந்த சீசனின் மற்றுமொரு சர்ச்சை நன்றாக பாடிக்கொண்டிருந்த அனுஷுயாவை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்பது தான். இதற்கு வருத்தப்பட்டவர்கள், வசைபாடியவர்கள், தரம்தாழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அனுஷுயா தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் அவற்றை செய்திருக்க வேண்டும்!! ஒரு கட்டத்தில் நடுவர்களான சித்ரா, மனோ இருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல், கருத்து சுதந்திரம் என்பதன் பெயரில் எல்லை மீறிப் போகவே 'யூடியூப்' தளத்தில் இருந்து அந்த காணொளியையே நீக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது விஜய் தொலைக்காட்சி. 

தமிழக போட்டியாளர்களையே இந்த நிகழ்ச்சியில் வைக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் எதற்கு விஜய் தொலைக்காட்சி தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்று ஆதங்கப்பட்டவர்களே, அனுஷுயா பாண்டிச்சேரியைச் சார்ந்தவர் என்பதறியாமல் அவர் வெளியேற்றப்பட்ட போது அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை பிற மாநிலம் சார்ந்தவர்களை பங்குபெற செய்வது முழுக்க முழுக்க விஜய் தொலைக்காட்சியின் தாரக உரிமை மட்டுமல்லாது அது அவர்களின் வியாபார உக்தியும் கூ. அதோடு மொபைல் மற்றும் ஆன்லைன் ஓட்டு முறையும் அவர்களின் வியாபாரமே! (இல்லையென்றால் குறைவான வாக்குகளே வாங்கியிருந்த ஸ்ரீஷாவை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்களா!!) (ஸ்ரீஷா மிகச்சிறந்த குரல்வளமும், திறமையும் கொண்டவர் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும்) யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசிப்பதை விட்டுவிட்டு வசைபாடுவதும், வீண் தர்க்கங்களிலும் ஈடுபடுவதும் நேர விரயமே.

இறுதிப்போட்டியில் அனுஷுயா, ஹரிப்பிரியா அல்லது பரத் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது, நாளை இரவு தெரிந்து விடும்.


February 14, 2015

தில்லியின் காதல் நாயகன் - அரவிந்த் கெஜ்ரிவால்

பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன் தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 

வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம்.

கூடவே, அனைத்து தருணங்களிலும் உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 

பதவியேற்பு விழாவின் போது அவர் பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.

அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன் இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார். ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 

அதே போன்றதொரு எளிமையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 

தில்லியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால் அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும், ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 

பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால் தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து, சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின் அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பிரபல கருத்துச்சித்திர கலைஞர் ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


January 31, 2015

இறை நம்பிக்கை எனும் இம்சை

எவரொருவர் தமது இறை நம்பிக்கையை
பிறரொருவர் மீது திணிக்க விழைகிறாரோ
பிறர் கேட்க வேண்டுமென
பட்டி தொட்டியெல்லாம் ஒலிபெருக்கி
வைத்து சாமானியர்களை சிரமத்திற்குள்ளாக்குகிறாரோ
அப்போதே அவரின் இறை நம்பிக்கை
கேள்விக்குறியதாகி விடுகிறது;

அவரது இறை கோட்பாடுகள் மேல்
அவருக்கு இருக்கிற நம்பிக்கையும்
குறைவுள்ளதாய் தோன்றச் செய்கிறது.

மெய்யான இறைநம்பிக்கை கொண்டவர்கள்
நல்லெண்ணம் கொண்டு பிறருக்கு
நல்லது செய்பவகளே ஒழிய
கூப்பாடும் கூத்தும் காண்பிப்பவர்கள் அல்லர்!
Related Posts with Thumbnails