July 28, 2015

அக்னிச்சிறகுகள் விரித்த அப்துல் கலாம் அவர்கள்

திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மறைந்து விட்டார் என்று இரவு 11 மணி அளவில் செய்தியறிந்ததும் முதலில் நம்பவில்லை. நல்ல உடல்திறனோடு இருந்தவருக்கு என்னவாயிற்று என்று யோசித்துக்கொண்டே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி உறுதி செய்து கொண்டேன்.

அப்துல் கலாம் அவர்களைக் குறித்து நான் எழுதித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை எனினும் அவரது வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை பதிவு செய்யவில்லையென்றால் அது எனது கடமையிலிருந்து மாறுவதாகப்படும்.

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் எனினும் படிப்பில் அவரது கெட்டித்தனமும், கடின உழைப்பும், நேர்மையும், வைத்திருந்த உயர் பண்புகளும் தான் அவரை இந்த தேசத்தின் தலைவராகும் அளவிற்கு உயர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் மூத்த விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் என்ற அகங்காரத்தையோ, தலைக்கனத்தையோ அவரது இறுதி மூச்சிருக்கும் வரை காண்பிக்கவில்லை என்பதை விட வேறு என்ன வேண்டும் அவரது எளிமையைப் பற்றிக் குறிப்பிட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' கணியன் பூங்குன்றனார் பெருமையையும், தமிழின் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடைவர் என்பதையும் மறந்து விட முடியாது. புத்தகங்கள் அதிகமாக வாசித்திராதவன் எனினும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன் வாய்த்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட அந்த புத்தகம் சைனீஸ், ப்ரெஞ்ச் உட்பட பதிமூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அவரது சுயசரிதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பெரிது.இன்றும் அவர் மறைவிற்கு நாடு, மொழி, இன, மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கிறார்கள் என்றால் அது அவரது எளிமைக்கும், திறமைக்கும், நற்பெயருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதையே.

அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதை அவரது மறைவிற்குப் பின் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர் மறைந்தாலும் அவரது புகழும், இந்திய விஞ்ஞானத்திற்கு அவர் அளித்த அறிவுக் கொடைகளும் என்றும் மறையாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

-----

பி.கு: ஜூலை 28 ஒரு தினம் மட்டும், வழக்கமாக Facebook பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்வது உண்டு, காரணம், அதில் கடமைக்கென வலையேற்றப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி எழுதுவதில் இருந்து தப்பிப்பதற்காக. அது போன்று Deactivate செய்து விட்டு மற்றுமொரு தலையங்கத்தில் எழுதலாம் என மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன், அதன் முன் தற்செயலாக தொலைக்காட்சியைக் கவனிக்கவே கலாம் அவர்களின் மறைவுச் செய்தி. அதனாலேயே இந்த பதிவு.

1 comment:

rmn said...

கலாம் ஐயா,அவர்களின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திப்போம்

Post a Comment

Related Posts with Thumbnails