August 27, 2015

நல்ல நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள்

சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கிறிஸ்தவம் சார்ந்தும், சமயங்கள் சார்ந்துமே இருப்பதை மறுப்பதற்கில்லை. பெற்று வருகின்ற பெரும்பாலான அனுபவங்கள் சமயம் சார்ந்து இருக்கின்ற படியால் இப்படியாக பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தின் பிற மாவட்டங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், கிறிஸ்தவர்கள் என்று அறியப்படுபவர்களையும்!! கொண்டிருப்பதை பலரும் அறிந்ததே.

பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்களை உடைய குடும்பங்கள் தான் குமரி மாவட்டத்தில் அதிகம். அதில் பெரும்பாலான குடும்பங்கள் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளையும் கொண்டிருக்கின்றன.

நாள், நேரம், நட்சத்திரம், ஜாதகம் மற்றும் இன்னபிற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர் தான் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்கும் 'இயேசுகிறிஸ்து'. ஆனால் இன்று, மூன்றாம் தலைமுறை கிறிஸ்தவர்கள் அதிலும் பட்டதாரிகள் கூட மூட நம்பிக்கைகளில் ஒரு பிடியை வைத்திருப்பதைத்தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்று (27/08/2015) தற்செயலாக அரசன்குழியில், திருமணம் நடைபெறும் ஆலயம் வரை செல்ல வேண்டியதாயிற்று. அரசன்குழியில் திருமணம் நடத்தும் போதகரை அந்த திருமணம் முடிந்து இறச்சகுளம் அருகில் இருக்கும் டென்னிஸ்புரம் ஆலயம் வரை கொண்டு சென்று விட வேண்டியிருந்தது. டென்னிஸ்புரத்தில் மற்றுமொரு திருமணத்தை அதே போதகர் நடத்த வேண்டிய கட்டாயம். (பெண் வீட்டார் அழைப்பின் படி)

10:20 ற்கு முடிய வேண்டிய திருமணம், மாப்பிள்ளை வீட்டாரின் தாமதத்தால் மணி 10:50 கடந்தும் முடிந்தபாடில்லை. மற்ற வீட்டிலிருந்து போதகருக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கவே,  போதகரை அரசன்குழியில் இருந்து டென்னிஸ்புரத்திற்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றேன்.

இவ்விரு திருமணங்கள் மட்டுமல்லாது துவரங்காடு, திட்டுவிளை மற்றும் இறச்சகுளம் போன்ற பகுதிகளிலும் திருமணங்கள் நடைபெற்றன. இத்தனை திருமணங்கள் ஒரே நாளில் வைப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் சார்ந்த விஷயமாகத்தான் இருக்கும்.

இன்றும் அதற்கு விதிவிலக்கல்ல, நாட்காட்டியின் பஞ்சாங்கத்தில் இன்று முகூர்த்த நாள் எனவும், 10:45 முதல் 11:45 வரை நல்ல நேரம் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து நல்லதைச் செய்வார், நல்லதையே செய்வார் என விசுவாசிக்கிறவர்கள் நல்ல நாளும், நல்ல நேரமும் பார்த்து திருமணம் செய்வதும், செய்துவைப்பதும் முரண்.


பாமர ஜனங்கள் தான் மூடநம்பிக்கைகளில் இன்னும் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்றால் போதகர்களும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அவர்களது வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைப்பது ஆச்சர்யம் தருகிறது. நிச்சயமாகவே, நாசரேத் ஊரைச் சார்ந்த இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், கிறிஸ்தவன் என்று பெயரளவில் சொல்லிக்கொள்வதற்குமிடையே அதிக வித்தியாசமிருப்பதை மறுப்பதற்கில்லை.

August 16, 2015

மதுவிலக்கு - களியக்காவிளை - மலையடி குமார் பேச்சு



சசி பெருமாள் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து ஆளுங்கட்சியைத் தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் டாஸ்மாக் ஒழிப்பிறகு ஆதரவு குரல்கள் எழுப்பி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சில தினங்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சொந்த அலுவல் நிமித்தம் தமிழக-கேரள எல்லையில் இருக்கும் காரக்கோணம் மருத்துவக்கல்லூரிக்கு 13 ஆம் தியதி செல்ல வேண்டியிருந்தது. காரக்கோணம் செல்வதற்கு களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து பிறிதொரு பேருந்தில் பயணம் செய்தாக வேண்டுமென்பதால களியக்காவிளையில் இறங்கினேன்.

இறங்கியதுமே காதில் விழுந்த மலையாள குரலிலிருந்து,  அங்கு அரசியல் கூட்டம் நடைபெறுவதாக அறிய முடிந்தது. சற்றே உன்னித்து கவனித்ததும் அது மது ஒழிப்புக்கு ஆதரவான உரை என புரிந்தது.

அந்த உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் தமிழில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தாலும் நிகழ்த்தப்பட்ட உரை மலையாளத்தில் இருந்தது என்பதாலும், உரையாற்றியவர் தெளிவான நடையோடு பேசியதாலும் அதனை பதிவு செய்ய ஆரம்பித்தேன். கேரளத்தின் மதுவிலக்கு, தமிழகத்தின் டாஸ்மாக், தோழர் சசி பெருமாளின் மதுவிலக்குக்கு எதிரான போராட்டங்கள் போன்றவைக் குறித்து விரிவாக கருத்துக்களைப் பதிவு செய்தார் உரையாற்றியவர்.

உரையின் இறுதியில் அவரை சந்தித்து அவரது பெயரை அறிந்து கொண்டதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. மலையடி பகுதியைச் சார்ந்த குமார் என்பதாக தெரிவித்தார் அந்த பெரியவர். ஏறக்குறைய 60 வயது இருக்கும் அவருக்கு. இத்தனை வயதிலும் மிகத்தெளிவாக, புள்ளிவிவரங்களோடு, உரை நிகழ்த்துகிறார் என்பது குறித்து பெரிதும் ஆச்சர்யப்பட்டேன். பேச்சை முடித்த கையோடு அவர் மற்றுமொரு இடத்தில் உரையாற்றுவதற்காக புறப்பட்டு சென்றார்.

இப்படியாக மதுவிலக்குக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் பிடிவாதம் கொண்டு மது குறைப்பு குறித்து கூட எந்த அறிவிப்பும் வெளியிடாத ஒரு அரசைப் பெற்றிருப்பதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.

August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com
Related Posts with Thumbnails