May 19, 2016

தேர்தல் முடிவுகளும், புரிதலும்

இந்த முறை மக்களை மொத்தமாக குறை சொல்லி விடவும் முடியாது. சற்று தெளிவாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கு சதவீதம் குறைந்தாலும் சென்ற ஆட்சிக்கெதிரான அதிருப்தியை சென்னையிலும், குமரியிலும் காண்பித்திருக்கிறார்கள். வளர்மதி, கோகுல இந்திரா, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் போன்றோரை தோற்கடித்திருக்கின்றனர். சரத்குமார் எனும் கருவேப்பிலையை தாளித்திருக்கிறார்கள். தெளிவற்ற விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக வினர் தோற்கடிப்பட்டு அவர்களின் வாக்கு சதவீதம் சரிக்கப்பட்டு இருக்கிறது. 

இனவாத அரசியல் செய்த சீமான் விரட்டப்பட்டிருக்கிறார். சாதி அரசியல் செய்கின்ற அன்புமணி அவரது சொந்த மண்ணிலேயே வீழ்ந்திருக்கிறார். 

திருமாவளவனை வெற்றி பெற வைக்கவே போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்,சூழ்ச்சியால் வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 
கம்யூனிஸ்ட் தோழர்கள் கூடாநட்பில் சேர்ந்து வாங்கிக் கொண்டார்கள். 

கோவை. தெற்கில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வானதி தோற்றது போன்ற ஒரு சில தொகுதி வேட்பாளர்களே ஏமாற்றம் தந்தாலும் திமுக, அதிமுக வின் பிற வேட்பாளர்களை மக்கள் ஆதரித்திருப்பதில் அதிகம் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. 

காரணம் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வேட்பாளர்களும் அந்த அளவிலேயே இருந்தனர். 

சிலர் பணத்திற்கு வாக்கு செலுத்தியிருந்தாலும், பணம் மட்டுமே இந்த முடிவுகளை தீர்மானித்திருக்கின்ற்ன என்று எளிதில் சொல்லி விடவும் முடியாது. 

தேர்தல் நேரங்களில் மக்கள் பணத்தை இயல்பாகவே எதிர்பார்க்கிறார்கள். வாங்கக்கூடாது என்று பலமுனை தாக்குதல் தொடுத்தாலும்... அவர்களாக தருகிறார்கள் உங்களுக்கு ஏன் வலிக்கிறது என தேர்தல் அலுவலர்களிடமே மல்லுக்கு நிற்கிறார்கள். 'அரசு அலுவலகத்திற்கு சென்றால் எங்களிடம் பிடுங்குகிறார்கள் தானே' 'இப்போது நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரம்' என்று தெளிவாக இருக்கிறார்கள். 

பணம் எவரிடமிருந்து கிடைக்கப்பெற்றாலும் அவர்கள் எவருக்கு வாக்களிக்க வேண்டுமென்றிருக்கிறார்களோ அதையே செய்வார்கள். 

ஆக இங்கு முன்மாதிரியான தலைவர்கள் இல்லாதவரை மக்களில் ஒரு சாரார் தொடர்ந்து வாக்குகளை வியாபாரப் பொருளாக பாவிப்பதையே தொடர்ந்து செய்வர். 

எப்படியாயினும் தமிழகத்தில் இதுவரையில்லாத அளவிற்கு ஒரு வலுவான எதிர்கட்சி பலம் சட்டமன்றத்திற்குள் நுழைவதே இந்த தேர்தலின் வெற்றி தான். ஒரே குறை கம்யூனிஸ்ட்கள் அந்த பட்டியலில் இல்லையென்பதே!


May 17, 2016

வாக்குப்பதிவு சதவீத குறைவும் - மக்களின் அலட்சியமும் - தேர்தல் ஆணையமும்

அதென்னவோ தெரியல, சென்னையும், கன்னியாகுமரியும் திரும்பத் திரும்ப வாக்குப்பதிவு சதவீதத்தில் சுணக்கம் காண்பித்து வருகின்றன. இத்தனைக்கும் கற்றவர்களை அதிகம் கொண்டிருக்கின்றன இவ்விரு மாவட்டங்களும். 

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே மிகக்குறைவாக சென்னையிலும், குமரியிலும் 68 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த முறையும் சென்னையில் 60% குமரியில் 66% அளவிற்கே வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
தமிழகம் நூறு சதவீதம் என்ற நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் சென்னை மிகக் குறைவான வாக்குப்பதிவைக் கண்டிருப்பது சில விடயங்களை நமக்கு உணர்த்துகிறது.
முதல் முறை வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்கவில்லையா என்ற கேள்வி ஒரு புறமிருந்தாலும், 2011 ஐ விட 2016 ல் பத்து சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் சென்னையில் பதிவாகியிருப்பதற்கு அது ஒரு பெரிய காரணியாக இருந்து விடும் என்று சொல்வதிற்கில்லை.

டிசம்பரில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு பலரும் சென்னையை விட்டு வேறு மாவட்டங்களுக்கும், வேறு மாநிலங்களுக்கும் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து விட்டதால் கூட குறைவான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது.
அப்படியே இடம் பெயர்ந்திருந்தாலும், தேர்தலுக்கும் டிசம்பருக்கும் இடைப்பட்டதான நான்கு மாத கால இடைவெளியில் முகவரி மாற்றம் செய்து அவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்க முடியும்.
தேர்தல் ஆணையம் பழைய முகவரியில் இருக்கும் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவது மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சதவீதத்தைக் குறைத்திருக்ககூடும். ஆனால் ஓட்டுப் போடுவதால் என்ன ஆகி விடப் போகிறது என்கிற மனநிலையில் இருப்பவர்களால் இதெல்லாம் சாத்தியமில்லை.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களால் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதும் சாத்தியமான ஒன்றே. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் பிழைப்பிற்காக குடியேறிய பலர் அவர்கள் சொந்த மாவட்டங்களில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக இரட்டைப் பதிவு செய்திருப்பார்கள். இதுவும் வாக்குப்பதிவு சதவீதத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்த சாத்தியமான ஒன்று.
இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் ஒருபுறம் தவறு செய்கிறார்களென்றால் மறுபுறம் தேர்தல் ஆணையம் இது போன்ற இரட்டைப் பதிவுகளை சரிவர கணக்கில் கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறது. உதாரணத்திற்கு, இரு வருடத்திற்கும் மேலான எனது முகவரி மாற்றத்திற்குப் பின்னரும் எனது பெயர் நெல்லை வாக்காளர் பட்டியலில் இன்னும் தொடர்கிறது. அதனை நீக்குமாறு இருமுறை வேண்டுகோள் விடுத்தும் இன்னும் நமது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
இவையெல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய விடயம் நமது மக்களின் அலட்சியம். படித்தவர்களை விட படிக்காதக் கிராமப்புற மக்கள் அதிகம் வாக்குப்பதிவு செய்வது கண்கூடு. வாக்களிப்பதால் என்னவாகி விடப் போகிறது, எவர் வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகிறார்கள் என்ற பரவலான பேச்சு பலருக்குள் இல்லாமலில்லை.
வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கருதாமல், நமது உரிமையாக கருதும் நிலைமை இருந்தால் வாக்குப் பதிவு சதவீதத்தில் படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாக்குப் பதிவு சதவீதம் வரும் தேர்தல்களில் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
அதோடு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் மூலம் அல்லது கணினி மூலமாக Online வாக்கு அளிக்கும் வாய்ப்புகள் குறைத்து தேர்தல் ஆணையம் வரும் காலங்களில் ஆலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

நாகர்கோவில்
17.05.2016

May 01, 2016

தற்'போதை'ய தமிழகம்!

என்ன கொடுமைடா இது! என்று சலித்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கின்றது தமிழகத்தில் தற்போதைய நிலைமை. பத்திரிக்கையைத் திருப்பினால் விபத்து, கொலை, கொள்ளை, மோசடி, வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கற்பழிப்பு என பட்டியலிடப்படும் தனி மனித அல்லல்கள் ஒரு புறமென்றால், மறுபுறம், அந்த கட்சி சரியில்லை, இந்த கட்சி இவ்வளவு கொள்ளை என பட்டியல் போடப்படும் அரசியல் கட்சிகளின் வெறித்தனங்கள் பக்கங்களை நிரப்புகின்றன.
தொலைக்காட்சியைத் திருப்பினால் எந்நேரமும் எவரேனும் நாங்கள் இதைச் செய்வோம்! அதைச் செய்வோம்!! என கூவிக் கொண்டிருக்கின்றனர். போதா குறைக்கு அரசியல் நாகரீகமின்றி தனிமனிதத் தாக்குதல் பரவலாக அனைத்து கட்சியினராலும் தொடுக்கப்படுகின்றது; அந்த அளவில் தான் ஒவ்வொரு கட்சியினரும் நடந்தும் கொள்கிறார்கள்.
நிதித்துறையில் இருந்து நீதித்துறை வரை எங்கு செல்லினும் பாமரனுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கனியை எட்டும் முயற்சியெடுக்கவே இங்கு பலருக்கு கணி காண்பிக்க வேண்டியிருக்கிறது.
சாதிய அடக்கு முறைகளும், மதச்சண்டைகளும், பெண்ணடிமைத்தனங்களும், கல்வி வியாபாரமாக்கப்படுதலும், விவசாயிகளின் அவலங்களும், தற்கொலைகளும், இன்னும் தொடரத்தான் செய்கின்றன.
பொதுவெளியில் மக்களின் செயல்பாடு இன்னும் ஏமாற்றமளிப்பதாய் இருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து, முன் பதிவு மையங்கள் வரை வரிசையில் நிற்க வேண்டும் என்ற சாதாரண மனநிலை கூட பெரும்பாலான மக்களிடம் இல்லை. இரு சக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஏன் இத்தனை வேகமாக இயக்கப்படுகின்றன என்பதன் விடை தெரியவில்லை. சக வாகன ஓட்டுனர்களை, பாதசாரிகளை இன்னும் சொல்லப் போனால் போக்குவரத்து விதிமுறைகளைக் கூட பலரும் மதிப்பதில்லை.
மக்கள் மிக வேகமாக பயணிக்கின்றனர், ஒருவரை மற்றவர் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவருக்கும் இருக்கிறது; ஆனால் தானும் வாழ வேண்டும், கூடவே மற்றவரும் வாழ வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. சக மனிதர்கள் இன்றி சுயமாக வாழ்ந்து விட முடியாது என்ற புரிதலும் இல்லை.
குப்பைகளைக் களைவதிலும், சுகாதாரமாய் வாழ்வதிலும் பொது மனிதராய் நமக்கு இருக்கும் அக்கறை இன்னும் சராசரிக்குக் கீழே தான். பிரயாணங்களின் நடுவே, சன்னல்களின் வழியே வீசியெறியப்படும் காகித, பிளாஸ்டிக் குப்பைகளும்; வயல்வெளிகளில் கொட்டப்படும் வேதிக் கழிவுகளும், மக்காத குப்பைகளுமே போதும் நம் அக்கறையைச் சுட்டிக்காட்ட!!
பணம் செழுத்தவன் வரி ஏய்ப்பு செய்து பகட்டாக வாழ்வதும், பணம் இல்லாதவன் கடனாலும், பசியினாலும் தொடர்ந்து மடிவதும் ஒரே மண்ணில் தான் என்பது வேதனைக்குரிய விடயம்.
இவையெல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடும் சங்கதி ‘டாஸ்மாக்’மதுபானக் கடைகள். கல்லூரி விழாக்களில் துவங்கி, திருவிழா, திருமணவிழா, கட்சி விழாக்கள் வரை மதுபானமில்லாத விழாக்கள் இல்லையெனலாம். போதை ஏற்படுத்தும் வில்லங்கங்களும், கைகலப்புகளும், விபத்துக்களும், குடும்பத் தகராறுகளும், வியாதிகளும், மரணங்களும் இன்னும் தொடர்வது தான் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை.
இத்தனைக் கொடுமைகளின் ஊடே நமது ஊரில் வாழ்வதை ஒரு சாகசம் என்று கூட சொல்லலாம்!
மதுவிலக்கு, கல்விக்கடன்களில் இருந்து விலக்கு, முதியோர் உதவித் திட்டம், விவசாயிகளின் நலன் காப்பு என கட்சிகள் அளித்திருக்கிற வாக்குறுதிகள் தமிழகத்தை நேர்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், சில நூறுகளுக்காக விலை போகிறவர்களும், இலவசங்களை எதிர்பார்ப்பவர்களும், அரசு நிதிகளை தம் வசமாக்கும் அதிகார வர்க்கமும், லஞ்சம் பெறும் கயவர்களும், கல்விக் கொள்ளையர்களும் தமிழகத்தில் தொடரும் வரை தமிழகத்தின் அல்லல்கள் தொடரவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

01/05/2016
நாகர்கோவில்.

Related Posts with Thumbnails