December 26, 2009

விழாக்காலம் விற்பனைக்கு !

இன்றைய கணினி யுக விழாக்களும் பண்டிகைகளும் நேசத்தையும், நட்பையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டுகின்றனவோ இல்லையோ பல வடிவில் பகட்டையும், பண்பற்ற செலவுகளையும் செய்ய வெகுவாகவே தூண்டுகின்றன.

நிறைவான பணமிருந்தால் மட்டுமே அது முழுமையான பண்டிகை என்ற எண்ணம் நம்மிடையே நிலவி வருவது வருத்தம் கலந்த உண்மை.

நம்மில் இருப்பதை கொண்டே மனநிறைவாக விழாக்காலத்தை செலவிடுவதை பலர் மனம் ஏற்பதில்லை. விழாக்காலங்கள் இன்று மெகா மகா விற்பனைக் காலங்களாகிப் போனது காலத்தின் கட்டாயமோ!!!

பண்டிகைத் தினங்களில் கடன் வாங்கியாவது, தங்கள் வரம்பிற்கும் மீறிய கொண்டாட்டங்களை செய்யத் துணிவது மற்றுமொரு அபத்தம்.

அந்த வீட்டார் அதிகம் செலவிடுகிறார்களே! அவர்களுக்கு ஈடாக நாமும் செலவிட வேண்டுமே! அண்டை வீட்டார் புதிய நகை அணிந்திருக்கிறார்களே! அதே போன்று நாமும் வாங்கினால் என்ன! என்பவை போன்ற வார்த்தைகள் ஒலிக்காத வீடுகள் இன்று வெகு சிலவே.

நம்மை விட செல்வ செழிப்பாக இருப்பவர்களை பாராமல், நம்மை விடவும் மிக ஏழ்மையான நிலையில் இருப்பவர்களைக் குறித்து சிந்திப்போமானால் அவர்களிடம் இருப்பவைகளை விட நம்மிடம் இருப்பவை எத்தனையோ மடங்கு அதிகம் என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.


அர்த்தமுள்ள கொண்டாட்டம் என்பது நம்மிடம் இருப்பவற்றிற்காக மனநிறைவடைந்து அவற்றைக் கூட மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தானேயல்லாமல் வீண் விரய செலவுகள் அல்ல.

"பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது"

நண்பர் ஒருவரின் ஆர்குட் பக்கத்தில் இருந்த இந்த பொன் வாக்குகள் என்னை வெகுவாக கவர்ந்தது; யோசிக்கவும் வைத்தது... உங்களையும் யோசிக்க வைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

மனிதம் வாழ்க.

1 comment:

கிறிச்சான் said...

பிரார்த்தனைக்காக முன்வரும் இரண்டு கைகளை விடவும், உதவுவதற்காக முன்வரும் ஒரு கை மிகவும் மதிப்பு வாய்ந்தது/////நல்லா இருக்கு...புது துணி வாங்குறதும்,பிரியாணி சாப்பிடுறதும் தானே பண்டிகை!

Post a Comment

Related Posts with Thumbnails