November 20, 2022

கிரிக்கெட்டிலிருந்து கால்பந்து வரை

ன்று உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் துவங்கவிருக்கிறது.  அந்த களிப்பில் மனம் திளைத்திருக்கையில், கிரிக்கெட் பைத்தியமான எனை கால்பந்து ஆட்டங்கள் அதன் பக்கம் ஈர்த்தது குறித்து அசை போடாமல் இருக்கவியலவில்லை.


இன்றைய தேதியில், எனக்கு  பரிச்சயமானவர்களில் பெரும்பாலோனோர் கிரிக்கெட் பிரியர்கள் தான்.

என் நினைவில், ஆறு வயது முதல் கிரிக்கெட் என்கிற விளையாட்டு மட்டுமே பதிவாகியிருந்திருக்கிறது.

கிரிக்கெட் ஒரு கட்டத்தில் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது. கவாஸ்கரின் தடுப்பாட்டமும், ஶ்ரீகாந்தின் சில நிமிட அதிரடிகளும், கபில்தேவின் ஆக்ரோஷமான  பந்துவீச்சும் பால்யத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வழி நினைவலைகள்.

1987 - 1990 வரையிலான கால கட்டத்தில் கிரிக்கெட் பேட்டில் காம்பஸ் கொண்டு துளையிட்டு அதில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருக்கும் ' மனோ ' அண்ணன் இன்றும் பசுமரத்தாணி போன்று மனதில் பதிந்திருக்கிறார்.

நெல்லை ஹைகிரவுண்ட் (இன்றைய மேட்டுத்திடல்) ஜான்ஸ் பள்ளி / கல்லூரி மைதானங்களில் கால் கடுக்க லெதர் பால் ஆட்டங்களைக் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும் போது மார்த்தாண்டத்தில் பள்ளி முடிந்து நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால் ' ஸ்டார் லாட்ஜ் வெளிய நின்னு கிரிக்கெட் பாத்திட்டிருப்பான் ' என்கிற புரிதல் வீட்டிற்கு இருந்தது;  கூடவே, 'வந்ததும் இருக்கு அவனுக்கு '  என்கிற வசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தான் (1991) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிமுகாகியிருந்தது.

இப்படியான கிரிக்கெட் பிரியம், 2008-2015 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிரிக்கெட் குறித்ததான 80 பதிவுகளை எழுதவும் வகை செய்திருந்தது.

எனினும், கிரிக்கெட் மீதான ஆர்வம் 1999 ல் அசாருதீன் உள்ளிட்டோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியைக் கண்டதில் இருந்து குறையத் தொடங்கியிருந்தது.

அதற்கேற்றார் போல, 1996-1998 களில், வண்ண வண்ண உடைகளை அணிந்து பந்தை அங்கும் இங்கும் உதைக்கும் அணிகளை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் நண்பன் ஆனந்த் @ ஜோஷியைப் பார்த்து ' என்ன இவன் சனி ஞாயிறு ஆனா இதையே பாத்திட்டு இருக்கான் ' என்பதாக இருந்தது! கூடவே கால்பந்து மீதான ஆர்வமும் துளிர்த்தது

Live என்பதை லிவ் எனவும்; Chelsea என்பதை செல்சியா எனவும் உச்சரித்து அவனிடம் பல்ப் வாங்கியதும் உண்டு 😂

அப்படி எனக்கு அறிமுகமானது தான் EPL எனப்படும் English Premier League Club Football.

இதனைப் பின்பற்றித்தான் லலித் மோடி IPL Cricket துவங்கினார் என்பது வரலாறு.

2000 த்திற்கு பின்னர் பல நாடுகளின் கால்பந்து லீக் களையும், பிற கால்பந்து தொடர்களையும் பின் தொடர்வது வழக்கமாகிப் போனது.

மெஸ்ஸி இருந்தவரை பார்சிலோனா வையும். தற்போது மேன்செஸ்டர் யுனைட்டட் அணியையும் பிடித்த அணிகளாகக் கொள்ளலாம்.

கிரிக்கெட் சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படும் ஒரு ஆட்டம்.

கால்பந்து என்பது அப்படியல்ல!

" உலகக் கோப்பை " என்கிற பதம் " கால்பந்து உலகக் கோப்பை " ஆட்டங்களுக்கு மட்டுமே நியாயம் செய்யும்.

அடுத்த 29 நாட்களும் பெருவாரியான உலகின் பார்வை கத்தாரின் மீதே குவிந்திருக்கும்.

கூடவே, உலகக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், கத்தார் பேச விரும்பாத LGBTQ, ஐரோப்பா பேச விரும்பாத நிறவெறி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் குறித்து பேசி உலகின் பார்வையை கத்தார் நோக்கி திருப்பியிருக்கிறார்!

அடுத்த ஒரு மாதம் கால்பந்து ரசிகர்களின் உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது ⚽



September 25, 2022

நன்றிகள் பெடரர் 🎾❤️

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை மட்டுமே கண்டும், விளையாடியும்; கிரிக்கெட் குறித்த தகவல்களை மட்டுமே கேட்டும், விவாதித்தும் இருந்ததால் பிற விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு பதின்ம வயது வரை பெரிதாக இல்லை. 

பதின்ம வயதின் மத்தியில் தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆட்டங்கள் நண்பர்கள் வழியே அறிமுகம் ஆயின.

அன்று பார்க்க ஆரம்பித்த EPL இன்றளவும் Manchester United விசிறியாக வைத்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் பீட் சாம்ப்ராஸ், அகாசி, போரிஸ் பெக்கர் போன்றோர் டென்னிசில் கோலோச்சிய காலம் அது. 

அப்போது Hard Court ல் மரப்பலைகைகள் / பிளைவுட் பலகைகள் கொண்டு டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்றாகிய பின்னர் இன்று வரை விளையாட்டுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் தான் அமைந்திருக்கிறதே தவிர விளையாடும் வாய்ப்புகள் இல்லை. 

அத்தனைப் பெரிய டென்னிஸ் Court ல் வலை இல்லாமல் ஒரு செட் (6 Games) விளையாடவே தாவு தீர்ந்து போகும். 

அப்படியென்றால் ஒரு உலகளாவிய ஆட்டத்தில் ஐந்து செட் ஆட வேண்டுமெனில் எப்படியான உடற்திறனும், திறமையும், பொறுமையும் வேண்டியிருக்கும்!

ஐந்து செட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் அதிகமாக ஐந்து மணி நேரம் வரையிலும் ஆட வேண்டி வரும். 

இப்படியான உடற்திறன் தேவைப்படுகிற ஆட்டத்தில், தான் ஆடிய 23 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தர வரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் தொடர முடிந்திருக்கிறது என்கிற ஒன்று போதும் பெடரரின் திறமையைக் குறிப்பிட்டுச் சொல்ல. 

2019 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆண்டி முர்ரே உடைந்து அழுததற்கும், இரு தினங்கள் முன்னர் பெடரர் அழுததற்குமான முதற் காரணம், தாங்கள் மிகவும் நேசிக்கும் டென்னிசை தங்கள் காயங்கள் காரணமாக இனி தொடர முடியாதே என்பது தான். 

தனக்கு எதிராக ஆடியவர்களுடன் மிகுந்த நட்புணர்வும், மரியாதையும் கொண்டிருந்தார் பெடரர். தனது கடைசி ஆட்டத்தில் தனது போட்டியாளரும், தான் வியந்து போற்றுகிற நடால் உடன் இணைந்து இரட்டையர் ஆட்டம் ஆடினார். 

அவர் நினைத்திருந்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அல்லது ஏதேனும் ATP போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். " நான் தனிமையாக உணர விரும்பவில்லை, அதனாலேயே Laver Cup ல் தன் சக  ஆட்டக்காரர்கள் உடனிருக்கையில் கடைசி ஆட்டத்துடன் ஓய்வு பெற விரும்பினேன் " என்றார் அவர். 

சமகாலத்தின் ஒப்பற்ற டென்னிஸ் நட்சத்திரம் பெடரருக்கு நன்றிகள். #Federer 

June 05, 2022

எஸ்.ரா/ சினிமா/ கிறிஸ்தவம்

ஆறாவது வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் - மூன்றாவது பருவம் - இயல் இரண்டு - பக்கம் 28 ல் அறம்/தத்துவம்/சிந்தனை எனும் பொருளின் கீழ் பாதம் என்கிற தலைப்பில் சிறுகதை ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதனை எழுதியவர் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ரா என்று அறியப்படுகின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.

கடந்த மாதம் மூத்தவனின் ஆண்டு இறுதித் தேர்விற்காக அவனது புத்தகத்தைப் புரட்டுகையில் கண்ணில் விழுந்தது இது.

அதற்கு சில தினங்கள் முன்னர் தான் இயக்குனர்/நடிகர் ரா. பார்த்திபன் அவர்களின் "இரவின் நிழல்" பாடல் வெளியீட்டு விழாவை நேரலையில் பார்க்கவும் அதில் கரு. பழனியப்பன் அவர்கள் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை முதலாவதாக பேச அழைத்ததையும் கண்டிருந்தேன்.

புத்தகத்தில் #எஸ்ரா அவர்களின் பெயரை பார்த்த மட்டில் பையனிடம் முதலில் நான் வினவியது

' டேய்! இவர் பெயர் நினைவிருக்கா? அன்னைக்கு இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழால இருந்தாரே'!?

அதற்கு அவன் ' இல்லயே, முகத்த பாத்தா நினைவு வரும் ' னு சொல்லவும், அவரது புகைப்படத்தைக் காண்பித்ததும் அடையாளம் கண்டு கொண்டான்.

எனக்கு எஸ். ரா அவர்களை, புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் "Fyodor Dostoevsky" - தஸ்தயெவ்ஸ்கி யின் வாயிலாக, அவரது 'குற்றமும் தண்டனையும்' புத்தகத்தின் மூலம் அறிமுகம் செய்தது அண்ணன் ஜெய் அன்பு Jai Anbu அவர்கள்; அதுவும் எனது முப்பந்தைவாது வயதில் தான்.

இவற்றை ஏன் சொல்லி வைக்கிறேன் என்றால்...

திரைப்படங்கள் பார்ப்பதும், கதைப் புத்தகங்கள் வாசிப்பதும் தவறு, அது நமை அடிமைகளாக்கும்; அது கிறிஸ்தவத்திற்கும் நமது நம்பிக்கைக்கும் எதிரானது, என கங்கணம் கட்டிக் கொண்டு தத்துவங்களையும், இலக்கியங்களையும், கலைப் படைப்புகளையும் எங்களில் இருந்து ஒதுக்கி வைத்திருந்த சமூகம், இன்று சித்தி, ரோஜா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்களுக்கு தங்கள் செவிகளை திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது.

இலக்கியங்களையும், கலைப் படைப்புகளையும், ஆன்மீகக் கருத்துகளையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க இந்த சந்ததிக்கேனும் நாம் கற்றுத்தருதல் வேண்டும்.

அப்போது தான் அவர்களது சிந்தனை வானம் விரிவடையும், வெற்றி தோல்விகளை சகஜமாக ஏற்றுக்கொள்வதற்கான வழியும் பிறக்கும்.

(ராமகிருஷ்ணன் என்கிற பெயரைக் கேட்டதும், 'அய்யே! அவர் இந்துவா இருக்கும்' 'அவர் எழுதினது யாம் படிக்கணும்' னு சில குரூப் கிளம்பும், அந்த குரூப்ப மட்டும் எப்படி கையாளணும்னு தெரிஞ்சி வச்சுக்கோங்க மக்களே! 😂)









 

May 01, 2022

ராஜ் கெளதமன் - நீலம் - பா. ரஞ்சித் - தலித் இலக்கியம்

சில மாதங்கள் முன்னர் தான் எழுத்தாளர், தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியர் ராஜ் கெளதமன் அவர்கள் குறித்து எழுத்தாளர் அன்பு ஜெய் அண்ணன் சிலாகித்தார். 

அவர் ஒரு வகையில் நமக்கும் உறவு என்பதும், நம் வீட்டு விழாக்களுக்கு திருமதி பரிமளம் ராஜ் கெளதமன் அவர்கள் பங்கேற்க வந்திருந்தையும் கூட கடந்த வாரம் அண்ணன் ஜெய் அன்புவை சந்தித்த போது தான் அறிந்து கொள்ள முடிந்தது. 

நம் மண்; அதன் பண்பாட்டு விழுமியங்கள்; மண் சார்ந்த படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் குறித்த குறைந்தபட்ச அறிமுகம் கூட இல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பது மிகவும் வெட்கக் கேடான விடயம். 

நம் மண் சார்ந்த எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், கொண்டாடவும் இத்தனை ஆண்டு காலம் ஆகியிருக்கிறதே என்பதும் கூட வருத்தப்படக் கூடியது தான். 

இதனாலேயே தான் ' எங்கோ யூதேயாவிலும், எருசலேமிலும் நிகழ்ந்தவற்றை மட்டுமே திரும்பத் திரும்ப வாசிக்காமல் ', ' நம் மண் சார் படைப்புகளையும் வாசியுங்கள் ' என்பது. 

72 வயதில் அவரை அங்கீகரித்திருப்பது குறித்து ராஜ் கௌதமன் அவர்கள் பா.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி தெரிவித்தாலும், அவர் இப்படியான பல நூறு அங்கீகாரங்களுக்குத் தகுதியானவர் என்பது திண்ணம். 

"சாகித்திய அகாடமி விருது எனக்கு தந்திருந்தா கூட, 'போங்கடா காலிப் பயலுகளா'  அப்படின்னுட்டு வந்திருப்பேன்" ; ஆனா, 'இந்த வானம் இலக்கிய விருதும், ஒங்க எல்லாருடைய அன்பும் நிச்சயமாகவே எனக்கு ஒசத்தி தான்' என்கிறார் ராஜ் கௌதமன். 

எந்த தேவமாதாவும் வந்து நம்மள காப்பாத்தாது. உடனிருக்கும், சக மனிதர்கள் மட்டுமே நமக்கு படிப்பினைகளையும், வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் எக்காலத்தும் விதைப்பர் எனும் ராஜ் கௌதமன் அவர்களின் கூற்று அப்பட்டமான உண்மை. 

இத சொல்லிட்டு, ரொம்ப சேட்டையாத்தான் இருக்கு! ஆனா அப்படி இருந்தா தான் படைப்பிலக்கியம் வரும்னு சொல்லி உரையை முடிக்கிறார்! 

இன்னும் அதிகம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய, வாசிக்கப்பட வேண்டிய, ஆளுமைகளுள் ராஜ். கௌதமன் அவர்களும் ஒருவர்.

https://youtu.be/Xh5-1XqR3Os

April 03, 2022

கிறிஸ்தவ பாடல்கள் – வெறுப்பு Vs அன்பு

வழக்கமாக காலையில் பயலுவள எழுப்ப கிறிஸ்தவ @ விவிலியம் சார்ந்த பாட்டுகள ஓட்டி விடுகது வழக்கம் . அப்படியான ஒரு காலைலஎன் தேவன் என் வெளிச்சம்பாடல்ல ஒரு வரி சட்டுன்னு கவனத்த ஈர்த்து, திரும்ப கேக்க சொல்லிச்சிஅந்த வரி இது தான்… 

 என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

 அடடா! இத இவ்வளவு வன்மமாவா எழுதி வச்சிருக்காங்க!! இதத்தான் காலங்காலமா நாமளும் பாடிட்டு வரோமா!! அப்டின்னு சட்டுன்னு தோணிச்சி.

 இன்னும் சற்று ஆழ்ந்து சிந்தித்ததில் இது போன்ற வன்மங்களைத் தான் தொடர்ந்து பாடல்கள் வழியாகவும், பிரசங்கங்கள் வழியாகவும் கேட்டு வந்திருக்கிறோம் என்பதும் விளங்கிற்று.

 ஆனால் அவை வன்மம் எனவோ, பிறரை தாக்கும் உள்நோக்கம் கொண்டவை எனவோ. மற்றவர்களைக் காயப்படுத்தும் வரிகள் எனவோ இதுகாறும் புரிந்ததில்லை. 

 இரட்சணிய சேனையின் பாடல்களில் ஒன்றுஎல்லாருக்கும் மா உன்னதஅப்பாடலின் மூன்றாவது சரணம் 

பிசாசு, பாவம், உலகம்

           இச் சத்துருக்களை

           அழிந்து போக மிதியும்

           நீர் வாழ்க இயேசுவே!

விவரம் அறியா சிறுவயதில் இந்த பாடல ஆலயத்தில் பாடும் போதெல்லாம் இருக்கிற மொத்த எனர்ஜியயும்சத்துருக்களை அழிந்து போக மிதியும் ல இறக்கி வச்சிருக்கேன் :( ! (அக்காலத்து சத்துருக்கள் என்பவை என் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் தான்)

இது போன்ற மேலும் சில பாடல்கள்… 

பெர்க்மன்ஸ் அவர்களின்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்

சாத்தானை மிதிப்போம்

மருந்து கண்டேனேபாடலின் இறுதி சரணத்தின் முதல் வரி 

            பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!

மிகப் பிரபலமான கிறிஸ்து பிறப்புப் பாடல்  ‘ பாலன் ஜெனனமானார் ன் இறுதி சரணத்தின் முதல் வரி

இயேசுநாதர் பிறப்பினால் பிசாசின் சிரசு நசுங்கவே

பட்டியல் இன்னும் நீளும்; அதோடு, பதிவும் நீண்டு சொல்ல வந்தது நீர்த்துப் போகும் என்பதால் இம்மட்டில் முடிக்கிறேன் 

இதன் தொடர்ச்சி தான்கிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாதபாடல். அதன் சரணத்தில்கிறிஸ்தவன் பொறுமையானவன்என்கிற வரி வருகிறது; ஆனால் அதனை நிறுவுவதற்குகிறிஸ்தவன டிஸ்டர்ப் பண்ணாதஎன துவங்குகிறார்கள். 

கிறிஸ்தவம் அன்பைப் போதிக்கின்ற; மன்னிப்பை முன்னிறுத்துகின்ற ஒரு மதம்/ அமைப்பு/ மார்க்கம் என ஒரு பக்கம் உரைத்து விட்டு மறுபக்கம் பிசாசு, சாத்தான், தொல்லை குடுக்கிறவன், நம்மள விரும்பாதவன், நமக்கு எதிரா பேசுறவன் எல்லாவனும் அழியணும் அப்படிங்கிற தொனில வெளிப்படையாவே அறைகூவல் விடுறதெல்லாம் ஒரு செயலா என்கிற கேள்வி ஒருபுறமிருந்தாலும், விவிலியத்தை புரிந்து கொண்டவர்கள் பெரிய ஏமாற்றம் அடைவது இல்லை.

ஏனெனில் விசுவாசத்துடன் கேட்டால் கிடைக்கும் என்பதோடு \ கடவுளுடைய நேரத்தில் அதுவும் அவர் மனசு வச்சா (சித்தம் இருந்தா) மட்டும் தான் கிடைக்கும் என்பதும் அறிந்தவர்கள் அவர்கள்.

ஆதாம் காலத்து சாத்தானும், இரண்டாம் ஆதாம் (இயேசு) காலத்து சாத்தானும் என்னவென்றால் பாம்பு தான் (ஆதி 3:15). அந்த சாத்தானத்தான் நசுக்குவோம், மிதிப்போம்னு நெனச்சி பாட்டு எழுதுவதாக இருந்தாலும், இன்றைய தேதியில் அது மிகை தான்.

 சாத்தான், பிசாசு, அசுத்த ஆவி என போகிற பெரிய லிஸ்ட் லாம் யார்னு பாத்தா தெருச்சண்ட., வாய்க்கா தகராறு, தண்ணி தராதவன், உட்கார இடம் தராதவன், நம்ம கிட்ட வம்புக்கு வர்ர நம் வீட்டு, எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு ஆட்கள் தான்.

இந்த தாக்கத்தில தான் நாமளும் பாடல் எழுதியிருக்கோமா அப்டின்னு ‘என் புகலிடம்’ பாடல்களை அவசர கதியில் எட்டிப்பார்த்தேன்! அப்படி எந்த வரிகளுமில்லை என உறுதிப்படுத்தின பின்னர் தான் சற்று தணிந்தேன். கூடவே, வெறுப்பு சூழ் இவ்வுலகு என்னில் பெரிதாக தாக்கத்த்தை ஏற்படுத்தவில்லை என்கிற மட்டில் சிறு நிம்மதி.

ஜெபம்/ விண்ணப்பங்களின் போது சிலர், ‘நினைக்கிற காரியம் நடந்தேற தடையா இருக்கிற சாத்தானின் செயல்கள் எல்லாத்தயும் தவிடு பொடியாக்கும் ஆண்டவரே’ அப்டிம்பாங்க. 

குறிப்பிட்ட அந்த சாத்தான நான் இது வர பாத்ததில்ல. நமக்கு சாதகமில்லாத சூழ்நிலைகளும்; நம் விருப்பங்களுக்கு தடையா இருக்கிற; நமக்கு பிடிச்சத தராத எல்லோரையும், எல்லாவற்றையும் சாத்தான்களா உருவகப்படுத்திக்கிறோம் அவ்வளவு தான்!

அப்படியான சூழ்நிலைகளை/ அப்படியான மனிதர்களை திறந்த மனதோடு எதிர்கொள்வதோடு, ஏற்றுக்கொள்ளவும் பழகுதல் காலத்தின் தேவை; அவ்வாறாக சொற்களினால்/ அன்பினால் மாற்ற இயலாதவற்றை கடந்து வரவும் க்குவப்பட வேண்டும். 

இல்லையென்றால் ‘ கிறிஸ்தவம் அன்பை போதிக்கிறது’ ‘ கிறிஸ்தவம் மன்னிப்பை முன்னிறுத்துகிறது ’ என்பதெல்லாம் வெறும் சொற்களோடு நின்று போகும்.

மாறாக, பாடல்கள் வழியே, சொற்கள் வழியே வன்மங்களை விதைத்தல் எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது. 

January 15, 2022

1983



இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட் மீது எனக்கு இருந்த அதீத பற்று இன்று இல்லை என்பது தான் நிதர்சனம். 


அசாருதீன், அஜய் ஜடேஜா காலகட்டங்களில் நிகழ்ந்ததாகக் கருதப்படும் Match Fixing க்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்த ஈடுபாடு குறைந்து போனது. எனினும், கால்பந்து, டென்னிஸ் போன்று கிரிக்கெட்டையும் ஒரு விளையாட்டாக  பின்தொடர்வது இன்றளவும் தொடர்கிறது. 


அணித் தேர்வுகளில் நடக்கும் பாரபட்சமும், அதீத காவிச்சாய பூசலும், கிரிக்கெட் குறித்து எவ்வித புரிதலும் இல்லாத அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் வாரியங்களின் பதவிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்திருப்பதும் கிரிக்கெட் மீதான வெறுப்பை இன்னும் இறுகச் செய்கின்றன. 


எனினும் அண்மையில் பார்த்த '1983' திரைப்படம், பால்ய காலத்து நினைவுகளைத் திரும்பிப் பார்க்கும் விதம்  அமைந்திருந்தது. அந்த உந்துதலில் தான் இதனைப் பதிவு செய்கிறேன். 


கடின உழைப்பும், தொடர் முயற்சிகளும், தன்னம்பிக்கையும் என்றேனும் வெற்றியை  ஈட்டித்தரும்  என்பது தான் 83 தரும் பாடம். 


அதைத்தான் கபில்தேவ் சாதித்துக் காட்டினார். அன்றைய நாட்களின் அசைக்க முடியாத அணியாக இருந்த மேற்கு இந்தியத் தீவை அவர்கள் மண்ணிலேயே 1983 மார்ச் ல் வீழ்த்திய கபில்தேவ், தொடர்ந்து ஜூன் மாதத்தில் அவர்களுடன் ஆடிய மூன்று ஆட்டங்களில் (இறுதிப் போட்டி உட்பட) இரண்டில் வெற்றி பெற்று உலகக் கோப்பையையும் நமதாக்கினார். 


ஒருவேளை, இந்தியா - பாக் பிரிவினைக்குப் பின்னர். 'சஹிவால்' என தற்போது அறியப்படும் ' மோண்ட்கோமெரி ' மாவட்டத்தில் கபிலின் பெற்றோர் தொடர்ந்திருந்தால், கபிலின் சாதனைகள், பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியின் பக்கங்களில் இன்று எழுதப்பட்டிருக்கக் கூடும். 


வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்களை கடந்து வர நாம் எடுக்கும் பெருமுயற்சிகள் கண்டுகொள்ளப்படாமலும், பதிவு செய்யப்படாமலும் போவது தான் எக்காலத்தும் டிசைன் போல!! 


அப்படியாகத் தான் ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் சதமும், உலகச் சாதனையும், 17/5 என்கிற நிலைமையில் அணி இருந்த போது தனியொருவராக செய்த அதகளமுமான 175 ஓட்டங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படவில்லை; வீடியோ பதிவும் செய்யப்படவில்லை. (அதற்குக் காரணமாக BBC ன் பணி நிறுத்தம் கூறப்பட்டாலும், இந்தியா பெரிதாக என்ன சாதித்து விடப் போகிறது என கருதிய BBC ன் மேட்டிமைத்தனம் தான் உண்மையாக இருக்க முடியும்) 


1983, ஜூன் 18 அன்று சிம்பாப்வே அணிக்கெதிரான அந்த ஆட்டத்தில்  அச்சாதனை நிகழாமல் இருந்திருந்தால், இந்தியா அரை இறுதிக்குக் கூட தகுதி பெற்றிருக்காது. 


உயர்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டுமே கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்கிற கட்டுக்கதைகளை உடைத்தெறிந்த கபில்கள், தோனிகளின் சாதனைகள் காலத்துக்கும் பேசு பொருளாக வேண்டும். 


கபிலைக் குறித்து Cricinfo இப்படியாக பதிவு செய்கிறது //The inspirational captain of the World Cup-winning team, Kapil Dev, was neither college-educated nor Brahmin.// 


//Post Independence International players emerged from Najafgarh, Rae Bareilly, Bharuch, Palarivattom, Aligarh, Jalandhar and Ranchi.// 


1983 கிரிக்கெட்டிற்கு மட்டுமல்ல, இந்திய விளையாட்டு உலகிற்கும் புத்தொளி பாய்ச்சியது என்பது தான் வரலாற்று உண்மை. 

Related Posts with Thumbnails