Showing posts with label விவிலியம். Show all posts
Showing posts with label விவிலியம். Show all posts

December 13, 2014

உண்மைகளற்ற கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டமும் - புரிதலும்


கிறிஸ்துமஸ் என்றதும் கிறிஸ்து என்ற மனிதர் நினைவிற்கு வருகிறாரோ இல்லையோ ஆனால் கொண்டாட்டங்களும், அலங்காரங்களும், விடுமுறைக்காலமும் நினைவில் வந்து செல்வதை மறுக்கவியலாது.

பிறப்பினால் கிறிஸ்தவன் என்பதால் சிறுவயதில் அந்த வயதிற்கான குதூகலமும், சந்தோஷமும், விடுமுறைக்கால மகிழ்ச்சியும் என்னையும் ஆக்கிரமித்திருந்தன. பதின்ம வயதின் பின்னாட்களில் கிறிஸ்துமஸும் அதனைச் சார்ந்த கொண்டாட்டங்களும் ஏன் என்ற வினா எழும்பத் தொடங்கியிருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை கொண்டாட்டங்களில் அதிக நாட்டம் கொண்டிருக்கவில்லை. பணமிருக்கிறவன் ஆடம்பரமாய் கொண்டாடுவதும், ஒன்றுமில்லாதவன் கையேந்துவதுமான காட்சிகள் என்னை யோசிக்க வைத்தன.

சிறுவயதில் டிசம்பர் மாத விடுமுறைக்காலமென்றால் புது ஆடை தைப்பதற்காக அவரவருக்கு விருப்பப்பட்ட துணி எடுக்க குடும்பமாக செல்வது வழக்கம். அந்த சமயங்களில் பல முறை நான் வருவதாயில்லை என தவிர்த்திருக்கிறேன். அம்மா எது எடுத்து வந்தாலும் அதனை தைத்துப் போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

பதின்ம வயதில் பெற்றோர்களின் அறிவுரைப்படி விவிலியத்தை சற்று ஆழ்ந்து வாசிக்க நேரிட்டது. அது இன்றளவும் பல தெளிவுகளைப் பெற உதவுவதையும், பல விஷயங்களைக் கற்றுத் தந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை.

டிசம்பர் மாத முதல் வாரத்திலேயே பலகாரங்கள், இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்யும் பணிகளை வீட்டில் ஆரம்பித்து விடுவார்கள். அவற்றில் காண்பித்த ஆர்வத்தை கூட கிறிஸ்துமஸ் குடில், மரம், நட்சத்திர விளக்கு போன்றவற்றில் காண்பித்ததில்லை.

வண்ண காகித கொடி கட்டுவதிலும், வாழ்த்து அட்டைகள் சேகரிப்பதிலும் ஆர்வமிருந்ததை மறுப்பதிற்கில்லை.  வீட்டில் மற்றவர்களுக்கு இருந்த கொண்டாட்ட மனோநிலையில் கால்பகுதி கூட எனக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி தான்.

டிசம்பர் 25 ல் தான் கிறிஸ்து பிறந்தாரா என்பது உள்ளிட்ட பல காரணங்கள் தான் கொண்டாட்டங்களில் எனக்கு ஆர்வமில்லாமல் போக காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

சில வருடங்கள் முன்னர் வரை  அலங்காரத்திற்கென்று, கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம் என வீண் செலவுகளை நானும் செய்து வந்திருக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை.

கிறிஸ்துவில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், ஆடம்பர கிறிஸ்தவ கொண்டாட்டங்களில் எனக்கு இன்றுவரை நாட்டமில்லை. ஏழ்மையின் கோலமாய் பிறந்தார் என்று பிரசிங்கித்து விட்டு ஏழைகளைக் கண்டுகொள்ளாத கிறிஸ்தவ சமூகம் இன்றளவும் இருப்பதை மறுக்கவியலாது.

இயேசு கிறிஸ்து டிசம்பரில் தான் பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் ஆதாரம் ஏதுமில்லை. அதோடு பனி பொழியும் குளிர் நிறைந்த இரவில் பிறந்தார் என்பதற்கும் விவிலியத்தில் ஆதாரம் இல்லை.

அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் என லூக்கா 2:8 ல் எழுதியிருக்கிறபடி  வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் பார்த்தால் அது குளிர் நிறைந்த இரவாக இருக்கும் வாய்ப்புகள் இல்லை; காரணம் யூதேயாவில் பனிப்பொழிவு அதிகமாக  இருக்கும் டிசம்பர் மாதத்தில்  ஆடு மேய்க்கிறவர்கள் வயல்வெளிகளில் மந்தைகளைக் காக்கும் வழக்கம் கொண்டிருப்பதில்லை.

அதோடு இயேசு பிறந்த அந்த காலகட்டத்தில் குடிமதிப்பு என்ற கணக்கெடுப்பு எழுதப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு கணக்கெடுப்பு கடுங்குளிர் காலத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் வேத வல்லுனர்கள்.

இயேசு பிறந்த  தினத்தை கணக்கிடுகையில் லூக்கா முதல் அதிகாரத்தில் எழுதியிருக்கிற படி மரியாள் கர்ப்பந்தரித்த போது யோவானின் தாயாரான  எலிசபெத் ஆறு மாதம் கர்ப்பவதியாக இருந்திருக்கிறார், அந்த காலகட்டத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகையில்  செப்டம்பர் இறுதி வாக்கில் இயேசு பிறந்திருக்கக்கக்கூடும் என்று கணிக்கிறார்கள்

இயேசுவின் பிறப்பு கடுங்குளிர் நேரத்திலோ, பனிப்பொழிவின்  போதோ இல்லை என்பது விவிலியத்தில் தெளிவாக இருக்க காலங்காலமாக கிறிஸ்து குளிரின் நடுவே பிறந்தார் எனவும், டிசம்பர் 25 தான் பனிப்பொழுவின் உச்சமாக இருப்பதால் அந்த தினத்தில் தான் அவர் பிறந்ந்திருக்கக்கூடும் எனவும் போதித்து வருபவர்களை என்னவென சொல்ல?

இது போன்ற வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் பாகன் வழிபாடு அல்லது பேய் வழிபாடு என்கிறார்கள். இது போன்ற கற்பனை வழிபாடுகள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்னரும் இருந்து வந்திருக்கிறது என விவிலியம் தெளிவாக கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவே இது போன்ற கற்பனைக் கதைகளை சாடியிருப்பதாகவும் வேதாகமத்தில் சான்றுகள் உண்டு. மத்தேயு 15:9 ல் மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என இயேசு ஆலயத்தின் மூப்பர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டில் இவ்விதம் எழுதியிருக்கிறதென்றால், பழைய ஏற்பாட்டில் பாகன் வழிபாடுகளையும் கற்களையும், மண்ணையும், மரங்களையும் வழிபடுவதை எதிர்த்து பல இடங்களில் எழுதியிருப்பதைக் காணலாம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எரேமியா 10:2-4 வரையான வசனங்கள் மிகத் தெளிவாக பாகன் மார்க்கத்தை சாடுகிறது. மரத்தை வெட்டி அதை பொன்னினாலும், வெள்ளியினாலும் அலங்கரிக்கிறார்கள் என்றும், அது வீணென்றும், அத்தகைய ஜனங்களின் வழிபாடு வீணாயிருக்கிறது எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

பசுமையான மரத்தை வெட்டி அதை அலங்கரித்து அது கீழே விழாமலிருக்கும் படி அதை கட்டி வைப்பது பாகன் சமூகத்தில் வழக்கம். குளிர்காலங்களில் இப்படி வைப்பதனால் அந்த மரம் அதிக நாட்கள் வாடாமலும் இருக்கும். இதையே கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரில் இன்றளவும் கிறிஸ்தவர்கள் சம்பிரதாயமாக செய்து வருகிறார்கள்.

இப்படி செய்வதெல்லாம் தவறென்று கிறிஸ்தவர்களுக்கு இப்போதோ இனிமேலோ எவரும் சொல்லத் தேவையில்லை; இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே எரேமியா தீர்க்கத்தரிசி எப்போதோ சொல்லியிருப்பதாக வேதாகமம் குறிப்பிடுகிறது. (எரேமியா 10:2-4)

இவற்றினிடையில் பரிசுப்பொருள் பரிமாற்றம் என்பது வெறொருமாதிரியான வியாபாரமாக்கல். பணமிருக்கிறவர்கள் தங்களுக்கிடையே பரிசுப்பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்வதும், வாழ்த்து அட்டைகள் பரிமாறுவதும், கிறிஸ்துமஸ் மரங்கள் வாங்குவதும், பட்டாசு விற்பனையும், சான்டா கிளாஸ் ஆடை என்ற பெயரில் அதை வாங்குவதும் வியாபாரிகளுக்கு கொண்ட்டாட்டம்.

இவற்றினிடையில் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகி வருவதும் தொடர்கிறது. 

கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென விவிலியம் உரைக்கவில்லை; அலங்காரம் செய்து ஆடம்பரமாக புசித்தும் குடித்தும் மகிழ்ந்திருங்கள் எனவும் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துமஸ் மரம் வைத்து, சான்டா கிளாசை வரவேற்று போஜனம் வழங்குங்கள் எனவும் வசனங்கள் இல்லை.

இப்படியாக வேதாகமம் உரைக்காதவற்றை பாகன் வழிபாடுகளின் வழியில் தொடர்ந்து பின்பற்றி வரும் கிறிஸ்தவர்களிடம் இவற்றையெல்லாம் சொன்னால் ‘போடா போக்கிரிப்பயலே’ உனக்கு  வேறு வேலையில்லை, என கேலியும் கிண்டலும் தான் செய்யப்போகிறார்களெனினும் இவற்றை/உண்மையை/ சத்தியத்தை பதிவு செய்ய வேண்டியது எனது கடமையாயிருக்கிறது.

கிறிஸ்து பிறந்ததில் உண்மையாகவே மகிழ்ச்சி கொண்டிருப்பவர்கள் பணமிருக்கிறவனுக்கு பரிசுப்பொருட்கள் வாங்கித்தருவதை விட்டு விட்டு, அன்றாடம் ஒருவேளை ஆகாரத்திற்கு பிரயாசப்படுகிறவனின்  தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

புத்தாடை வாங்குபவர்கள், பல்லாண்டுகளாக பழையவற்றையே அணிந்து வரும் பரம ஏழைக்கு புதிய ஆடை வாங்கித்தந்து மகிழுவார்கள்.இதைத்தான் விவிலியமும் உரைக்கிறது, ஆனால் கிறிஸ்தவர்கள் இன்றும் செவிடன் காதில் சங்கு ஊதின கதையாகத்தானிருக்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம்.

கிறிஸ்துமஸ் குறித்த தவறான புரிதல்களையும், கொண்டாட்டங்களையும் பார்க்கையில் “What is popular is not always right and what is right is not always popular“ என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது.

July 23, 2010

உலகம்-வாழ்க்கை-விவிலியம் எதுவுமே புரியல போங்க

இதுவரைக்கும் ஒண்ணுமே புரியல உலகத்தில;இப்பவும் ஒண்ணும் புரியல; இனிமேலும் எதுவும் புரிய வாய்ப்பிருக்கான்னும் தெரியல.

உலகம் உண்டாகியது என்பவர்கள் ஒருபுறம்;இறைவனால் உண்டாக்கப்பட்டது என்பவர்கள் மறுபுறம்.அதே போன்று இறைவன் மனிதனை தோற்றுவித்தான் என்பவர்கள் இருக்கையில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் இப்படி!

இறைவன் படைத்தாலும் இன்றைக்கு இத்தனை மனித இனங்கள், மனித மொழிகள், மனித நிறங்கள், பாகுபாடுகள், வேற்றுமைகள் எப்படி உருவாகின என்பதும் புரியவில்லை!

வானம், பூமி உள்ளிட்ட உலகின் அனைத்தையும் இறைவன் படைத்தார் என்று விவிலியத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரே நேரத்தில் உலகின் ஒரு பகுதியில் இரவும் மற்றொரு பகுதியில் பகலும் ஏன் நிலவுகிறது என இன்று வரை புரியவில்லை.அதற்கு ஆதாரமான குறிப்பு ஏதும் விவிலியத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை!

எப்படியோ உலகத்தில் வந்தோம் எப்படியோ போகிறோம். இதனிடையில் குழந்தைப்பருவம்,வாலிபம்,முதுமை என பல பருவங்களை கடந்து வர வேண்டியிருக்கிறது.

அவற்றோடு வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம், ஏமாற்றம், இழப்பு, ஏற்பு, நன்மை, தீமை என பல அனுபவங்களையும் காண வேண்டியுள்ளது.

இதுல பரலோகம் போகணும்னா கிறிஸ்தவத்தில திருமுழுக்கு @ ஞானஸ்நானம் எடுக்கணுமாமே! இல்லன்னா போக முடியாதாம். ஆனா சிலபேர் பரலோகத்துக்கு திருமுழுக்கு எடுத்திட்டு இந்த பூலோகத்தில பண்ற அசிங்கமும் அநியாயமுமிருக்குதே அது கொஞ்சநஞ்சமா!அப்போ இறந்தே பிறக்கின்ற குழந்தைகள் பரலோக வாய்ப்பை இழக்கின்றதா! இது குறித்த தெளிவான விளக்கங்கள் ஏன் இல்லை!

சாமியார்கள் சொல்றத கேட்டா நல்லது நடக்கும்,மேலோகத்திற்கு போகலாமுன்னு வேற கொஞ்சம் பேர் நம்புறாங்க.ஆனா நம்புற எல்லாருக்கும் நல்லது நடக்கிறது இல்லையே ஏன்!

கேளுங்கள் தரப்படும்ணு விவிலியத்தில சொல்லிருக்கு அதோட... நீ கேக்கிறதுக்கு முன்னமே உனக்கு என்ன தேவை என்ன என்பதை அறிவேன் அப்படின்னும் சொல்லியிருக்கு. கேக்கிறதா வேண்டாமா!

ஒவ்வொருவரின் செயல்களும், உலக நிகழ்வுகளும் இறைவனின் சித்தப்படி அதாவது இறைவன் எது நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அப்படித்தான் நடக்கும் என்கிறது விவிலியம். அப்படியென்றால் ஒருவர் நன்மை செய்ய நினைப்பதும் இன்னொருவர் தீமை செய்ய நினைப்பதும் எல்லாம் இறைவன் செயல் தானா? அப்போ தப்பு செய்றவங்க மேல தப்பில்லையா! (இப்போ நீங்க தலய பிச்சிக்கிறீங்களா? இருங்க இருங்க, கடைசி வர படிச்சிட்டு பிச்சுக்குங்க)

ஒருவரின் (ஆதாமின்) பாவத்தினால் மனித குலமே வெறுக்கப்பட வேண்டுமா? ஆதாமின் பாவமும் இறைவன் அறியாமல் நடந்திருக்காது அல்லவா! இன்று சிசுக்கொலை துவங்கி இனப்படுகொலை வரை, வறுமை துவங்கி பட்டினி வரை மனித குலம் படும் அல்லல்களை காணத்தான் ஆதாமை பாவம் செய்ய அனுமதித்தாரா!

இந்த கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் தவறாமல் காலையில் உதயமாகும் சூரியனும், இரவு பகல் மாறுதலும், மழையும், இயற்கையும் ஏதோ ஒன்றின் அல்லது எவரோ ஒருவரின் (இறைவன்)கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாகத் தான் மனதிற்கு படுகிறது.

இந்த கேள்விகளும், அனுபவமும் அடுத்த நிமிடம் நன்மையோ தீமையோ என்ன நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை எனக்கு தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நாளை என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலைப்படாமல் "கடவுளை நம்பு கடமையை செய்" என்ற மார்த்தாண்டம் எல்.எம்.எஸ் பள்ளியின் கருப்பொருளின் படி தான் இன்றும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை... எதுவும் புரியாமல்.

June 11, 2010

வெள்ளுடையில் சில கருப்பு ஆடுகள்

கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள்ளேயே இன்று பலர் குளிர்காய்ந்து வருவது ஒருபுறமிருந்தாலும். வெள்ளுடை அணிந்த அதன் தலைவர்கள் பலர் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களால் மன்னிக்க முடியாத(ஒருவேளை தெய்வம் மன்னிக்கக்கூடும்!!!) செயல்களைச் செய்வது இன்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக கத்தோலிக்கர்கள் என்றும், கிறிஸ்தவத்தின் தலைமையே நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோமிலும், கனடா மற்றும் அயர்லாந்திலும் கத்தோலிக்க பாதிரியார்கள் நசித்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கைகள் ஏராளம். Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதலை சில வருடங்களாகவே எவரும் அறியமாட்டார்கள் என்ற தெனாவட்டில் செய்திருக்கிறார்கள் இந்த காமுகன்கள்.

மேற்கே மட்டுமல்லாமல் நம்மூர்களிலும் கூட இவர்களின் பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக கேரளத்தில் பாதிரியார் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரீ ஜெஸ்மி என்பவர் ஆமென் என்ற புத்தகத்தில் பாதிரியார்களையும் அவர்களின் அட்டூழியங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் தனது புத்தகத்தில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரீகளும் உறவு வைத்திருந்தார்கள் எனவும், கன்னியாஸ்திரீகள் அவர்களுக்குள்ளாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் எழுதிப்போகிறார்.

பொதுவாக கத்தோலிக்க பாதிரியராக ஆக விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை வைத்திருக்கிறார்கள். தமக்கென்று எவரும் இருக்கக்கூடாது எனவும் அப்படி இருந்தால் அது திருச்சபைக்கும் அவர்கள் செய்யும் ஊழியப்பணிகளுக்கும் தடையாக இருக்குமென்பதால் இத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருச்?சபை

இயற்கையாகவே பாலியல் ரீதியான மாற்றங்களுக்குள்ளாகும் இருபாலரின் உடலை என்ன தான் கட்டுப்படுத்தினாலும் பலநேரங்களில் பாலியல் இச்சை என்பது தவிர்க்கவியலாதது. அது இயற்கையானதும் கூட. அதற்காகவே திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!

இவர்கள் செய்தவை அனைத்திற்கும் சேர்த்து இன்று கத்தோலிக்க சபைகளின் தலைவர் போப் பெனடிக்ட் கடவுளிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறாராம். என்னமோ போங்க :(

சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்.

April 04, 2010

“கிறிஸ்தவர்கள்” நாங்கதான் ரைட் மத்தவங்க ராங்

கிறிஸ்தவர்கள் என ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று கொண்டு நடப்பவர்கள் செயல்படும் விதமும், அவர்கள் வாழ்க்கை முறையும் இன்று பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாகவும், பொதுநலமற்றதாகவும், சிந்தனை அற்றவதாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.

நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள் தான் உத்தமர்கள்; நாங்கள் மட்டுமே மேலோகிற்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பாக்கியமற்றவர்கள் என்ற நினைப்பும் ஏளனமும் இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பலரிடமும் அதிகமாகவே நிலவி வருகிறது.

இவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு அவர்கள் மட்டுமே காரணமும் அல்லர். அவர்களுக்கு போதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ கோட்பாடுகளும், போதிக்கின்றவர்களும், அவர்கள் வாழும் சூழ்நிலையும் கூட காரணம் என சொல்லலாம்.

பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.

முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்; அதுவும் இவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கண்கூடாக நான் கண்டவையே.

விவிலியத்தில் மத்தேயு 25:40 ல் கூறியிருக்கிறபடி என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பதையும் அதே மத்தேயு 25:46 ல் கூறியிருக்கிறபடி இப்படி செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள் என்பதையும் இந்த கிறிஸ்தவர்கள் அறியாதவர்களா என்ன?

இன்னும் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டாலும் அவர்களின் சான்றிதழ்களில் முன்னர் பின்பற்றி வந்த அதே பழைய சமயத்தை வைத்திருப்பதன் மர்மம்... கிறிஸ்தவர்கள் (BC) என சான்றிதழில் இருந்தால் தங்களின் பணிக்கும், பணி நிமித்தம் கிடைக்கும் வசதிகளுக்கும் பங்கம் வந்து விடும் என்பது தான் அது. ஏனென்றால் அது SC இது BC. இவர்களை பெயர் கிறிஸ்தவர்கள் என கூட கூறலாம்.

வேறு சிலர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வண்ணம் 40 நாள் அசைவம் சாப்பிட மாட்டார்களாம்; அது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. 40 நாளும் சாப்பிடாமல் இருப்பதை ஏன் கடைபிடிக்கவில்லையோ தெரியவில்லை!

அதை மற்றவர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். விவிலியத்தில் மத்தேயு 6:17ல் "நீயோ உபவாசிக்கும் போது, மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக..."என எழுதியிருப்பதற்கு என்ன சொல்வார்களோ?

கிறிஸ்தவன் பெரியவன்; கிறிஸ்தவம் பெரியது; மற்றவர்கள் எல்லாம் யாரோ! என்ற மனப்பாங்கு உடையவர்கள் அனைவரையும் குறித்து பரிதாபப்படுகிறேன். கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.

இயேசுவின் மரணத்திற்கு பின்னர் அவரது சீஷர்களுக்கு தான் முதலாவது கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26) என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உடையவர்கள் தான் மேலோகிற்கு செல்வார்கள் என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.

கிறிஸ்தவன் என்ற பெயர் உடையவனோ இல்லையோ உண்மையாயிருக்கிற எவரும், உத்தமமான வாழ்க்கை நடத்தும் எவரும் இறைவனடி சேர்வர் என்ற கோட்பாட்டையே விவிலியம் உரைக்கிறதேயன்றி சக மனிதனிடம் பகைமை பாராட்டவோ, எந்த சமயத்தாரையும் வெறுக்கவோ விவிலியம் வியாக்கியானம் செய்யவில்லை.

இதற்கு மாறாக பிற சமயத்தினரை எதிரியாக பார்ப்பதும், தாங்கள் தான் பரிசுத்தர்கள், மேலோகிற்கு போகும் பாக்கியம் பெற்றவர்கள் என சில பெயர் கிறிஸ்தவர்கள் சொல்லித் திரிவது அவர்களுக்கும், அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அழகல்ல.

அப்படிப்பார்த்தால் இன்று கிறிஸ்தவர்கள் பாடவும், கேட்கவும் செய்கின்ற பல பாடல்கள் பிற சமய நம்பிக்கையுடைய பாடகர்கள் பாடினவை தான். இதற்கு என்ன சொல்லுவார்களோ!!

மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.

சிலுவையில் இயேசு மொழிந்ததாக 7 வசனங்களை நினைவு கூறுபவர்கள் மலைப்பிரசங்கத்தின் போது அவர் மொழிந்த எட்டாவது வசனத்தை மறந்து போவது ஏனோ!  நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:11)
Related Posts with Thumbnails