Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

May 25, 2025

இன்று இப்படியே சற்று ஆசுவாசமாய் - Lag Jaa Gale

பெருந்துயர்களில் இருந்து மீள எழுத்தையும், கலையையும், இசையையும் விட சிறந்த துணை வேறு என்ன இருந்து விடப் போகிறது 

எதையும், எவரையும் எப்போது வேண்டுமானாலும் இழப்போம் என்பது நம் ஆழ்மனங்கள் அறிந்தவை தான். ஒருவேளை அப்படியான எண்ணங்கள் நம் ஆழ்மனங்களில் இருப்பதாலேயோ என்னமோ அதன் தாக்கம் இல்லாமல் நமது புறம் சார்ந்த விசயங்களிலும், கேளிக்கைகளிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் இயல்பாக நாம் தொடர்ந்து இயங்குகிறோம். 


வலி, துயரம், ஆற்றாமை என்றிவை நம் ஆழ்மனங்களில் தேங்கிக் கிடந்தாலும் இவற்றை மிஞ்சி நிற்கின்ற பசி, வளர்சிதை மாற்றங்கள், இயற்கை உபாதைகள், சார்ந்திருப்போரின் நலம் பேணல் என ஏதாவது ஒன்றினால் நாம் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறோம் அல்லது நம் முந்தைய அனுபவங்கள் நமை பக்குவப்படுத்தியிருப்பதால் மனச் சமநிலை பிறழாமல் தொடர்கிறோம். 


இப்படியாக மனச் சமநிலை பிறழாமல் தொடர்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. குறிப்பாக வலி, துயர், ஆற்றாமை என்றிவைகள் சூழ் வட்டத்தினின்று வெளிவர இயலாதோர் இன்னமும் சோர்வுற்று அவைகளிலேயே உழன்று தமை வருத்திக் கொள்வதும் நிகழும் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் இன்னொரு பக்கம்.


அதிலும் சிறு வயதில் ஏற்படுகின்ற மனச்சிதைவுகள் ஒரு வகையில் வருங்காலங்களின் துயர்களை எதிர்கொள்ள பெரும்பாடங்களாக அமையும் என்றாலும், மறுவகையில் இவ்வாழ்க்கையின் மீதும், உறவுகளின்  மீதுமான நம்பிக்கையின்மையையும், எவ்வித செயற்பாடுகள் மீதுமான பிடிமானமற்றத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பது தான் பெருஞ்சோகம். 


‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்கிற ஜெயகாந்தன் கூற்று ஒன்று உண்டு, அது தான் நிதர்சனமும் கூட. இங்கு நமை, நம் செயல்களைப் பிடிக்காத பலர் உண்டு, நமக்குப் பிடிக்காதவர்களும் ஏராளம் உண்டு. எவரும் எவரையும், எல்லோராலும் எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப் படுத்தி விடமுடியாது. அது  தான் இப்பிரபஞ்சத்தின் சூட்சுமம்.    


உலகம் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் நாம் நேர்மறையாகச் சிந்தித்தலையும், நன்மையானவைகளைப் பாராட்டாமல் விட்டுவிடுதலும் நன்றன்று. நன்றி மறத்தலும், நம் தோளோடு தோள் நின்று நமை உயர்த்துகிற எவரையும் மறத்தலும் அத்தனை எளிதல்ல, அப்படி இருந்து விடுதலும் முறையல்ல. 


நாளை இருப்போமா என்பதறியாத உலகில், நாளை சந்திப்போமோ என்பது உறுதியில்லாத நிலையில் இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்து விட்டுப் போதல் சிறந்தது. 

அப்படியான கருத்தாழத்தில் Raja Mehdi Ali Khan அவர்களால் எழுதப்பட்டு மதன் மோகன் அவர்கள் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய Lag Ja Gale பாடலை ஒர் தந்தையும் மகளும் நேற்று பாடக் கேட்டேன். இந்த நேரத்தின் ஆகச் சிறந்த ஆறுதல் அந்த இசையும் அப்படியான வரிகளும் தான். 


இதில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம், ராஜா மெஹ்தி அலி கான் Wazirabad (அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தான்) பகுதியில் பிறந்தவர்.


கலையும் இசையும் மதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை விட நிம்மதி என்ன வேண்டும் நமக்கு. வாழ்வோம், வாழ விடுவோம். 


பாடலின் இணைப்புகள்


Lata Mangeshkar Version with English Translation https://www.youtube.com/watch?v=YJHs3Sa73NQ


Sanam Acoustic Version

https://www.youtube.com/watch?v=HnLtNrvfZTU 


Papon Version 

https://www.youtube.com/watch?v=R1A8AbYPCaM


July 23, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 3



சமகாலத்தில் இப்படியானதொரு உலகளவிலான பெருந்தொற்று நமை ஆட்கொண்டிருப்பது பெருந்துயரம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமை தகவமைத்துக் கொள்வதற்கும், நமது அதீத சுயநலம் பிடித்த லட்சியங்கள் தவறென்பதை உணர்ந்து கொள்வதற்கும், நமை ஆளும் தலைமைகள் எப்படியானவை என்பதை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் பின்னிருக்கும் கயமைகளை அறிந்து கொள்வதற்கும் கூடவே அவர்களது இயலாமைகளை உலகறிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சார் நலன்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; எனினும், குறிப்பிட்ட சில சுய தேவைகளைத் தாண்டி பொதுநலன் சார் விடயங்களிலும், சமூகம் சார் விடயங்களிலும் கண்களைக் கட்டிக் கொண்டிருப்போமானால் நமது பிறப்பிற்கு நியாயம் செய்து விட முடியும் எனத் தோன்றவில்லை.

தொற்றின் ஆரம்ப நிலையில் அறிவியல் பூர்வமாக அதனை அணுகாமல், தமிழகத்திற்குள் தொற்று வரும் வாய்ப்பில்லை; ஏப்ரல், மே மாதங்களின் வெயிலுக்கு எந்த கிருமியானாலும் பரவாது; வயது மூத்தோருக்கு மட்டும் தொற்றும்/ பாதிப்பை ஏற்படுத்தும் என அவையிலேயே கேலி பேசிக்கொண்டும், மெத்தனமாகவும் இருந்து விட்டு இப்போது முட்டிக்கொண்டிருக்கிறது அரசு.

அரசு மருத்துவமனைகளுக்கான முக்ககவசங்கள், தற்காப்பு உடைகள் கொள்முதலில் கூட பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 ன் பெயரில் பெருங்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் 500 மதிப்பிலான தற்காப்பு உடைகளுக்கு ரூ. 2500 வரை கணக்கு காட்டப்படுகின்றன. நுகம் சுமக்கும் மக்களின் மீது தனியார் மருத்துவமனைகள் தமது வணிகத்தை வலிந்து திணிக்கின்றன என்பது கண்கூடு.

PPE எனப்படும் தற்காப்பு உடைகளின் தேவையிலும், அவற்றை அணிவதிலும் சில நகைமுரண்களும், பெருமுரண்களும் இருப்பதாகப் படுகிறது. இன்றைய தேதியில் எந்த மருத்துவமனை வளாகத்தை நெருங்கினாலும் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கும் மருத்துவப் பணியாளர்களை நாம் காண முடியும். அவர்கள் அணிந்திருக்கும் தற்காப்பு உடையை அவர்களின் பணி நேரம் முடியும் மட்டும் அணிந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

முரண் என்னவென பார்ப்போம்… தொற்று இருக்கும் ஒரு நபரை, மருத்துவப் பணியாளர் ஒருவர் சோதனை செய்திருக்கிறார் அல்லது குறிப்பிட்ட அறையில் சென்று அனுமதித்து விட்டு வருகிறார் அல்லது கொரோனாப் பிரிவில் உடனிருந்து கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பின்னர் அம்மருத்துவப் பணியாளர் அதே தற்காப்பு உடையுடன் தொற்று இல்லாத வேறொருவரை அணுகுதல் புதிய தொற்றிற்கு வழிவகுக்கத்தானே செய்யும்!! அதைத்தானே நம் சமூகம் தொடர்ந்து செய்கிறது.

மருத்துவப்பணியாளர்கள் அவ்விதம் செய்வதிலும் தவறில்லை… PPE என்பதற்கு Personal Protective Equipment – ‘தற்’காப்பு உடைகள் என்பது தானே பொருள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன!!  

எட்வின்
சென்னை
23/7/2020

July 19, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 2


சென்னையில் மெதுவாகத் தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் 'குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின்' டெல்லி மாநாட்டைக் காரணம் சொல்லிக் கொண்டும், பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றானக் கோயம்பேடு சந்தையை காரணம் சொல்லிக்கொண்டும் இருந்தார்களே தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ/ சுகாதார நடவடிக்கைகளையோ போதுமான அளவு திட்டமிடவில்லை.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூடுகின்ற சந்தைகளிலேனும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளை செய்திருத்தல் அவசியம். அதை விடுத்து டாஸ்மாக் கடைளைக் கண்காணிப்புச் செய்த பெருமையெல்லாம், காலத்திற்கும் பல்லிளிக்குமாறு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

இதற்கடுத்து கையைக் காண்பித்தது வடசென்னையின் சேரிப் பகுதகளைத் தான். சாலையோரங்களிலும், தெரு ஓரங்களிலும், குடிசைகளிலும், வாழ்க்கை நடத்தும் மக்கள் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்!?

ராயபுரம், மண்ணடி, தண்டையார்பேட்டை முதலான இடங்களில், சுகாதாரமில்லாத பகுதிகளில் வாழும் மக்களைப் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ ஆரம்பத்திலேயே தனிமைப் படுத்தியிருந்தால் வடசென்னையின் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

உள் ஊரடங்கு அறிவித்த அன்று ராயபுரம் சந்தையில் கூடிய பெருந்திரளான மக்களையும் கூடக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் களுக்கு டோக்கன் விநியோகம் சிறப்பான கண்காணிப்புகளோடு நடைபெற்றது.

இன்றளவும், மண்ணடி, தண்டையார்பேட்டைப் பகுதிகளைக் கடந்து போகின்ற போது, சாலையோரங்களில் குடியிருக்கும் மக்களைக் காண முடியும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொற்றிற்கு அவர் காரணம், இவர் காரணம் என்கிற பழி போடல்கள் இன்றளவும் தொடர்கிறது… இன்னும் உண்டு

July 18, 2020

கோவிட் – 19 சில புரிதல்கள்


முடக்கல் ஆரம்பித்த மார்ச் ஏப்ரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்களும், அனுபவங்களும் பல உண்டு.

பொதுவாக தொற்று வியாதிகள் மக்கள் நெருக்கடி மிகு இடங்களிலும், சுகாதாரமில்லாத இடங்களிலும் இன்னும் அதிகமாக தொற்றவே செய்யும் என்பது பிறர் விளக்கித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் உயர் மருத்துவக்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் நமது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் நினைவூட்ட வேண்டிய அவசியமேயில்லை.

கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என அறிவித்து விட்டு

மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு நடப்பதும்
அருகருகே நின்று கொண்டு விழாக்களில் பங்கு பெறுவதும்
முடக்குதலின் உள்ளேயே உள் முடக்குதல் அறிவிப்பதும்
கூடி நின்று கைதட்டுவதும், விளக்கேற்றுவதும்
மதுக் கடைகளை திறந்து விடுவதும்

என இருந்தால் தொற்று பரவாமல் என்ன செய்யும்!

சில நூறுகளாகத் தொற்று இருந்த போதும் சரி, கட்டுப்படுத்தவியலாத அளவிற்கு பரவிய  பின்னரும் சரி, பொது சுகாதாரத்தைக் குறித்து அரசும் மக்களும் எவ்வித கவலையும் பட்டதாகவோ! படுவதாகவோ! தெரியவில்லை.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன, அவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை, அவைகளில் எவ்விதமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பதும் எவருமறியார்; அதின் துர்நாற்றம் அதன் வழியாக கடந்து போகின்றவர்களின் முகக்கவசத்தையும் மீறி மூக்கிலடிக்கிறது.

மறுபுறம் மக்கள், தனி மனித இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதில்லை, கறிக்கடைகளிலும். மீன் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் இடைவெளி விட்டு நில்லுங்கள் என Flex விளம்பரங்கள் கண் சிமிட்டினாலும், ‘அத ஏன் நாங்க செய்யப்போறோம்‘ என்கிற தொனியிலேயே கூடுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு அடைப்பு என அறிவித்ததில் இருந்து மேற்குறிப்பிட்ட கடைகளில் சனிக்கிழமை அந்தி வேளைகளில் தள்ளுமுள்ளு என்பது வாடிக்கையாகிப் போனது. ‘சண்டேன்னா கறி’ அப்படிங்கிற எண்ணத்தில இருந்து கூட இன்னும் மீள முடியாத சமூகம் கொரோனா தொற்றிலிருந்து மீள இன்னும் காலம் இருக்கிறது!

முகக்கசவசங்கள் நாடிக் கவசங்களாகவே அணியப்படுகின்றன. அறிகுறிகள் தமக்கு இருந்தாலும், அதனை மறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; அதற்கு,  சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என்பதும், அரசினால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவோம் என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன… இன்னும் உண்டு

June 24, 2020

சென்னை – சுயநலங்களுக்கு இரையாக்கப்பட்ட நகரம்!


‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!

இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!

1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப் பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும், திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக முற்றுப் பெற்றது அந்த பயணம்.

அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம் பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை; ஆசிரியர்களிடம் கூட சொல்ல  முற்பட்டதுமில்லை!

அவற்றில் சில…

‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில் வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’

அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும் சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர் கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம் ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!

கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும் விதைத்திருந்தது.

1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.

வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச் சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்) கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்

1.    மக்கள் நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2.    வறட்சியான பயனற்ற நீர்நிலைகள்

சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை  அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும் இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத மக்கள் கொண்ட  சென்னைப் போன்றதொரு நகரத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.

இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில் இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள் ஆங்காங்கே தெருக்களில்  சிதறிக் கிடக்கின்றன;

வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால் இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!

இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும்  சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!

  

August 21, 2018

கிரியைகள் இல்லாத விசுவாசமும் பகட்டான கிறிஸ்தவமும்


கிறிஸ்தவம்கிறிஸ்தவர்கள் என்கிற பெயர்களில் இன்றைய தேதியில்இந்த மணிப்பொழுதில் நடந்து வருகின்றவையும்அதன் ஆளுமைகளும்அதிகாரங்களும்மனித நேயத்தின் மீதும்மக்களின் மீதும்நீதி நியாயங்களின் மீதும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம் உணர்தல் அவசியம்.

ஆராதனை என்கிற பெயர்களில் போடுகிற சத்தமும்கூச்சலும் எம்மனிதரையும் முகம் சுளிக்க வைக்கிற ஒன்று. 2015 டிசம்பர் காலங்களில் இதே போன்றதொரு சந்தர்ப்பத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வரும் நண்பர் ஒருவர் பகிர்ந்த சில கருத்துகளை குறிப்பிட்டாக வேண்டும்.

பஜனை என்கிற பெயர்களிலும்கேரல் என்கிற பெயர்களிலும்பிரார்த்தனை என்கிற பெயர்களிலும் ஒலிபெருக்கிகளை வைத்துக் கொண்டு ஆன்மீக வாதிகள் என்றழைக்கப்படும் சில கோமாளிகளால் பாதிக்கப்படுவது முதியவர்களும்குழந்தைகளும்படிப்பில் ஆழ்ந்திருக்கும் மாணவ மாணவிகளும்வியாதியில்மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும்கர்ப்பிணிப் பெண்களும் தான்” என்று கருத்துப் பரிமாறியிருந்தார் அவர்.

மத் 6:5 அன்றியும் நீ ஜெபம் பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும்வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்.

ஒபாமா அவர்களின் ஓய்விற்கு முந்தைய உரையை சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் முன்னிறுத்திப் பேசியதும்அதைத்தான்மனித மனங்கள் மாறாமல்மனிதருடைய இருதயங்கல் மாறாமல்சட்டங்கள் மாறுவதினாலோஅமைப்புகள் மாறுவதினாலோ சமுதாயத்தில் அமைதியையும்ஒழுக்கத்தையும் கொண்டு வருதல் இயலாது என்றார்.

மத் 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

Salvation Army தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஆன்ட்ரே காக்ஸ்  The Whole World Mobilising என்கிற நோக்கத்தில் அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

By being clean in our heart and to reach out people and to stand for what is right.

மத் 6:7 அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்அவர்கள் அதிக வசனிப்பினாலே தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள் 

வேதாகம வசனங்களை படிக்கும் போது அது எதற்கு சொல்லப்பட்டதுயாருக்கு சொல்லப்பட்டதுஏன் சொல்லப்பட்டது என்பது குறித்த தெளிவு மிக அவசியம். The 7 Ws are very important Why? When? What? Where? Who? Which? HoW?

இதுவறியாமல் வேதாகமத்தை வாசிப்பது குழப்பத்தையே உருவாக்கும். ஒருமுறை ஷார்ஜா AG சபையில் ஆராதனைக்காய் சென்றிருந்த போதுசங்கீதங்களில் இருந்து ஒரு பகுதியை வாசித்த பல பட்டங்களைப் பெற்ற ஒருவர் “சேலா” என்பதையும் சேர்த்தே வாசித்தார்.

சேலா என்பது என்னவென்ற புரிதல் இல்லாமல் வாசித்தவர் போலத்தான் இன்று நம் நிலைமையும். `சேலாஎன்பது இசையில் வரும் Interlude.

சங் 3: 2, 4, 8

யாத் 20:8 ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

ஓய்வு நாளை ஓய்ந்திருந்து ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்இல்லையென்றால் தேவ கோபாக்கினை வரும் என்று அதன் சாராம்சம் புரியாமல்வெறுமனே குற்றம் சாட்டுவதில் இங்கு எதும் மாறி விடப் போவதில்லை.

அப்படியென்றால் ஓய்வு நாட்களில், Emergency Room களிலும், Critical Care களிலும்மருத்துவமனைகளிலும்முதியோர் இல்லங்களிலும் பணிவிடை செய்பவர்கள் எல்லாரும் சாபத்தையே பெறுவார்களா?!!

மத் 12:5 அன்றியும் ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாயலத்தில் ஓய்ந்திராமல்ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும்குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மத் 12:11 உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து அது ஓய்வு நாளில் குழியிலே விழுந்தால்அதைப் பிடித்து தூக்கிவிடமாட்டானோ?

மத் 12:12 ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயந்தான் எனறு சொன்னார்.

இவ்விதம் நியாயத்தைப் பேசினவருக்கும்பேசுபவர்களுக்கும் பொதுவாக என்ன சம்பவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...

மத் 12:14 அவரைக் கொலைசெய்யும் படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைப் பண்ணினார்கள்.

இன்று வேதாகமம் வாசிக்கப்படுகிறதுகாலை 5 மணிக்கு ஜெபம்மீண்டும் 7 மணிக்கும் 8 மணிக்குமாக பணியிடங்களிலும்ஆலயத்திலும் ஜெபம்ஆலயத்தை கடந்து போகையிலெல்லாம் உள்ளே சென்று ஜெபித்து கடந்து செல்வது... என ஜெபமும்வேதாகம வாசிப்பும் முற்றிப் போனதின் விளைவு என்ன?

கீழ்ப்படியாமையும்,நேரந்தவறுதலும்உண்மைக்குப் புறம்பானவைகளைப் பேசுவதும்தொடர்கிறதென்றால்நாம் ஆலயத்திற்கு செல்வதும்ஒரு நாளைக்கு 5 முறை ஜெபம் பண்ணுவதாலும் என்ன ஆகி விடப் போகிறது.

நீதி 19:1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப் பார்க்கிலும்உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.

எனவே இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரியாமல் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை மனதில் கொண்டுஎண்ணங்களில் ஆகாயத்தில் பறக்க ஆசைப்படாமல்நம் சுய கால்களில் நிற்க பழகுதல் அவசியம்.

கொரி 7:31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே.

யோவான் 3:18 என் பிள்ளைகளேவசனத்தினாலும் நாவினாலுமல்லகிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்

யாக் 2:24-26 ‘ஆதலால்மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்லகிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே’ ‘அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக் கொண்டு வேறு வழியாய் அனுப்பி விட்ட போதுகிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?’

அப்படியேஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போலகிரியைகளிலில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.  

தேவையிலிருப்போருக்கு உதவுவோம், நம் செயல்களினால் மனிதம் போற்றுவோம். 

Related Posts with Thumbnails