Showing posts with label டென்னிஸ். Show all posts
Showing posts with label டென்னிஸ். Show all posts

September 25, 2022

நன்றிகள் பெடரர் 🎾❤️

ஐந்து வயது முதலே கிரிக்கெட்டை மட்டுமே கண்டும், விளையாடியும்; கிரிக்கெட் குறித்த தகவல்களை மட்டுமே கேட்டும், விவாதித்தும் இருந்ததால் பிற விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு பதின்ம வயது வரை பெரிதாக இல்லை. 

பதின்ம வயதின் மத்தியில் தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆட்டங்கள் நண்பர்கள் வழியே அறிமுகம் ஆயின.

அன்று பார்க்க ஆரம்பித்த EPL இன்றளவும் Manchester United விசிறியாக வைத்திருக்கிறது. 

தொண்ணூறுகளில் பீட் சாம்ப்ராஸ், அகாசி, போரிஸ் பெக்கர் போன்றோர் டென்னிசில் கோலோச்சிய காலம் அது. 

அப்போது Hard Court ல் மரப்பலைகைகள் / பிளைவுட் பலகைகள் கொண்டு டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்றாகிய பின்னர் இன்று வரை விளையாட்டுகளை கண்டு ரசிக்கும் வாய்ப்புகள் தான் அமைந்திருக்கிறதே தவிர விளையாடும் வாய்ப்புகள் இல்லை. 

அத்தனைப் பெரிய டென்னிஸ் Court ல் வலை இல்லாமல் ஒரு செட் (6 Games) விளையாடவே தாவு தீர்ந்து போகும். 

அப்படியென்றால் ஒரு உலகளாவிய ஆட்டத்தில் ஐந்து செட் ஆட வேண்டுமெனில் எப்படியான உடற்திறனும், திறமையும், பொறுமையும் வேண்டியிருக்கும்!

ஐந்து செட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் அதிகமாக ஐந்து மணி நேரம் வரையிலும் ஆட வேண்டி வரும். 

இப்படியான உடற்திறன் தேவைப்படுகிற ஆட்டத்தில், தான் ஆடிய 23 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தர வரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் தொடர முடிந்திருக்கிறது என்கிற ஒன்று போதும் பெடரரின் திறமையைக் குறிப்பிட்டுச் சொல்ல. 

2019 பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆண்டி முர்ரே உடைந்து அழுததற்கும், இரு தினங்கள் முன்னர் பெடரர் அழுததற்குமான முதற் காரணம், தாங்கள் மிகவும் நேசிக்கும் டென்னிசை தங்கள் காயங்கள் காரணமாக இனி தொடர முடியாதே என்பது தான். 

தனக்கு எதிராக ஆடியவர்களுடன் மிகுந்த நட்புணர்வும், மரியாதையும் கொண்டிருந்தார் பெடரர். தனது கடைசி ஆட்டத்தில் தனது போட்டியாளரும், தான் வியந்து போற்றுகிற நடால் உடன் இணைந்து இரட்டையர் ஆட்டம் ஆடினார். 

அவர் நினைத்திருந்தால் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் அல்லது ஏதேனும் ATP போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்திருக்கலாம். " நான் தனிமையாக உணர விரும்பவில்லை, அதனாலேயே Laver Cup ல் தன் சக  ஆட்டக்காரர்கள் உடனிருக்கையில் கடைசி ஆட்டத்துடன் ஓய்வு பெற விரும்பினேன் " என்றார் அவர். 

சமகாலத்தின் ஒப்பற்ற டென்னிஸ் நட்சத்திரம் பெடரருக்கு நன்றிகள். #Federer 

January 28, 2012

ஆஸ்திரேலியா: கவிழ்த்த கிரிக்கெட்டும்; கவர்ந்த லியாண்டர் பயசும்


பதிவுலகம் பக்கம் வந்தே பல நாட்கள்/ மாதங்கள் ஆகி விட்டது. குடும்பப் பொறுப்புகள் சிந்தனைகளை சுருக்கியிருப்பதை மறுப்பதிற்கில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆறு மாத கால செயல்பாடும், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசும் இந்த பதிவை எழுத தூண்டியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்குள் வைக்கப்பட்ட அதே நாள் தான்... மற்றொரு இந்தியர் லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்று இந்தியர்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

சச்சின் சதம் அடித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது.  கடைசியாக அவர் களம் இறங்கிய பதினாறு முறையும் சதமடிக்க தவறியிருக்கிறார். லக்ஷ்மணும் அதே நிலைமையில் தான் இருக்கிறார்.

திராவிட், இங்கிலாந்திற்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டங்களில் மூன்று சதங்கள் எடுத்து தான் ஒரு தூண் என்று நிரூபித்தாலும் தற்போதைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 8 இன்னிங்க்ஸ்களிலும் ஒரே ஒரு அரை சதத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டார். 

தங்களது ஆட்டம் உச்சத்தில் இருக்கும் போதே யாரும் விடைபெற வேண்டுமென்று கருதுவதில்லை போலும். சச்சின் உலகக் கோப்பையை வென்றதுமே விடை பெற்றிருக்கலாம். திராவிட் இங்கிலாந்தில் மூன்று சதங்கள் எடுத்ததும் விடை பெற்றிருக்கலாம். இவர்கள் இருவரும் செய்யாத சாதனைகள் இல்லை. இனிமேலும் என்ன சாதிக்கவிருக்கிறார்கள் என தெரியவில்லை.

ஆஸ்திரேலியர்கள் ஹெய்டன்,கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலர் அவர்கள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கையில் தான் விடை பெற்றார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிர்ஸ்டன் உலகக்கோப்பையை வென்ற கையோடு பதவியை துறந்தார். இந்த மனநிலைமை ஏன் இவர்களுக்கு இல்லை என தான் தெரியவில்லை.

இரண்டு ஆட்டங்கள் தோற்றதுமே ரோகித் ஷர்மாவிற்கு வாய்ப்பளித்திருக்கலாம்; அல்லது ஆடுபவர்கள் வரிசையையாவது மாற்றியிருந்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எதையுமே பரிசோதனை செய்யாமல் தோல்வி! தோல்வி!! என்றால் என்னவென சொல்வதற்கு?!

கிரிக்கெட் அணி காலையில் கவிந்திருக்க; மாலையில் இந்தியாவின் பெயரை லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தின் மூலம் உயர்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

இதோடு பயஸ் டென்னிஸின் நான்கு பெரிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் (ஆஸ்திரேலிய ஓபன், ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன்) வென்று சாதனை படைத்திருக்கிறார். 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயஸ் பெற்ற ஒற்றையர் வெண்கலப் பதக்கத்தையும் மறந்து விட முடியாது.

கிரிக்கெட்டிற்கும் ஐ.பி.எல் ற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு ரசிகர்களும், இந்திய அரசாங்கமும் டென்னிஸ் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவமும், ஊக்கமும் அளித்தால் இந்தியா விளையாட்டு அரங்கில் புகழ் பெற்று விளங்கும்.


November 24, 2010

ஆசிய விளையாட்டும் இந்திய கிரிக்கெட்டும்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே இந்தியர்கள் பிரகாசிக்கிறார்கள். குறிப்பாக டென்னிஸ் ஆட்டங்களைப் பார்க்கையில் இந்தியாவின் வருங்கால டென்னிஸ், திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடம் இருப்பதை காணமுடிகிறது.

25 வயதே ஆன சோம்தேவ் தேவ வர்மனும், 22 வயதே ஆன சனம் சிங்கும் இரட்டையர் இறுதிப்போட்டியில் ஆடிய ஆட்டம் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணையின் ஆட்டத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல. விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்காக இருவரும் இணைந்து ஆடியதும் அவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆகிப் போனது.

இரட்டையர் போட்டியில் சனம் சிங்குடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்ற சோம்தேவ் ஒற்றையர் ஆட்டத்திலும் தங்கம் வென்றிருக்கிறார். கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அஸ்ஸாமில் பிறந்து சென்னையிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தவர் சோம்தேவ்.


இது வரை மொத்தம் 39 பதக்கங்களுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பில்லியர்ட்ஸில் தங்கம் வென்ற பங்கஜ் அத்வானி, 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கேரளத்தைச் சார்ந்த ப்ரீஜா, துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சோதி ரஞ்சன், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் டென்னிஸில் வெள்ளியும் வெண்கலமும் வென்ற சானியா மிர்சா ஆகியோர் பதக்கம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கிரிக்கெட்

இறுதியாக நியூசிலாந்தை தோற்கடித்து தொடரை வென்றிருக்கிறது இந்தியா. தர வரிசையில் முதலாவது இருக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு இன்னும் சிறப்பாக இருந்திருந்தால் முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களையும் கூட வென்றிருக்கலாம்
அடுத்த சுற்றுப்பயணமாக டிசம்பரில் தென்னாபிரிக்கா செல்லவிருக்கும் இந்திய அணியின் மூத்த ஆட்டக்காரர்கள் பலருக்கு நியூசிலாந்திற்கு எதிரான ஒருதினப் போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அத்தனை முக்கியத்துவம் இந்தியா தருகிறார்கள் என்றால் தென்னாப்பிரிக்கா "டென் கிரிக்கெட்" சானலுடன் இணைந்து We are waiting என்று பிரத்தியேகமாக குறும்படம் ஒன்றையும் படமாக்கியிருக்கிறார்கள். (யூடியூபின் காணொளியை  கீழே இணைத்துள்ளேன்)

கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்ற அளவிற்கு இருக்கிறது இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா அவர்களது சொந்த மண்ணில் விளையாடவிருக்கும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான முன்னோட்டம்.



நன்றி: விக்கி

September 14, 2010

யு.எஸ் ஓபனும் நடாலும்

ஞாயிற்றுக்கிழமையே முடிந்திருக்க வேண்டிய யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் மழையின் காரணமாக திங்களன்று முடிவுக்கு வரவிருக்கின்றன.

ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஒற்றையருக்கான போட்டிகளில் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு செட்டையும் இழக்காமல் நேர் செட்களில் வெற்றி பெற்று டென்னிஸ் தரவரிசையில் தான் முதலிடத்தில் இருப்பதற்கான நியாயம் கற்பித்து விட்டார். 

மறுபுறம் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக் 2004-2008 வரை ஐந்து முறை தொடர்ந்து யு.எஸ் ஓபன் பட்டம் வென்றவரான உலகின் முன்னாள் முதல் நிலை வீரர் ரோஜர் ஃபெடரரை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு புதிய உத்வேகத்துடன் வந்திருக்கிறார். 

இவர்கள் இருவருமே யு.எஸ் ஓபன் பட்டத்தை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நடால் மற்ற மூன்று கிராண்ட் ஸ்லாம்களில் இதுவரை 8 பட்டங்களைப் பெற்றிருந்தாலும் யு.எஸ் ஓபன் பட்டம் மற்றும் அவர் கரங்களுக்கு இன்னும் எட்டவில்லை.  

இதனை எழுதிக்கொண்டிருக்கையில் நடால் முதல் செட்டில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆடி வருகிறார். தனது முதல் யு.எஸ் ஓபன் பட்டத்தைப் பெறுவார் என்று நம்பலாம். 

மகளிர் ஆட்டங்களைப் பொறுத்த வரை அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகளில் முதல் நிலை வீராங்கனை செரீனா இந்த முறை களமிறங்கவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதி வரை தாக்குப்பிடித்தார். அரையிறுதியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் தோற்றுப் போனார்.கிம் இறுதிப் போட்டியில் எளிதாக வெற்றியும் பெற்று விட்டார். 

கிம் கிளைஸ்டர் பெறும் மூன்றாவது யு.எஸ் ஓபன் பட்டம் இது. கடந்த வருடத்திலும் கிம் தான் சாம்பியன். 2007 ல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் அந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு குழந்தையையும் பெற்று விட்டு மீண்டும் 2009 ல் களமிறங்கினார் அந்த வருடமே யு.எஸ் ஓபனில் வெற்றியும் பெற்ற பெருமைக்குரியவர். 

இந்திய வீரர்களைப் பொறுத்த வரையில், மகளிர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாம் சுற்றோடு சானியா மிர்சா வெளியேறினார். ரோஹன் போபன்னா பாகிஸ்தான் வீரர் குரேஷியுடன் இணை சேர்ந்து இரட்டையர் இறுதிப் போட்டி வரை தகுதி பெற்று உலகின் முதல் நிலை இணையான பிரையன் சகோதரர்களிடம் தோற்றுப் போயினர். அதுவே மிகப்பெரிய சாதனை தான். 

எனினும் இந்தியா-பாகிஸ்தான் சமாதானத்திற்கு இவர்கள் இணைந்து குரல் கொடுத்திருப்பது பாராட்டவும் வரவேற்கவும் பட வேண்டிய விஷயம்.   

லியாண்டர் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும், கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் காலிறுதியிலும் தோற்றுப் போனார். மகேஷ் பூபதி இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலும் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறினார். 

கோப்பையைப் போன்று காட்சியளிக்கும் யு.எஸ் ஓபன் இறுதிப் போட்டிகள் நடக்கும் ஆர்தர் ஆஷ் மைதானம் தான் உலகிலேயே மிகப்பெரிய டென்னிஸ் மைதானம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

(மழையினால் ஆட்டம் இன்றும் தடைபடுமா என்பது தெரியவில்லை. இயற்கையை எவர் தான் கட்டுப்படுத்த முடியும்)

நன்றி: விக்கி & யு.எஸ் ஓபன் 

June 06, 2010

ஃப்ரெஞ்ச் ஓபன் 2010 ஒரு பார்வை


டென்னிஸ் உலகில் ரஃபா, களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என செல்லமாக அழைக்கப்படும் ரஃபேல் நடால் ஐந்தாவது முறையாக களிமண் தரையில் ப்ரெஞ் ஓபன் பட்டத்தை வென்றிருக்கிறார்.இந்த வெற்றியோடு ஃபெடரரை பின்னுக்குத் தள்ளி ஏ.டி.பி தரவரிசையில் முதலிடத்தையும் பெற்று விட்டார்.

இந்த முறை முன்னணி வீரர்களான ஃபெடரர், ஜோக்கோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர் அரையிறுதிக்கு முன்னரே வெளியேறியது நடாலுக்கு மேலும் வாய்ப்பாகிப் போனது.

நடால் ஃப்ரெஞ்ச் ஓபனின் தனது அறிமுக சீசனாகிய 2005 முதல் 2008 வரை தொடர்ச்சியாக நான்கு முறை பட்டத்தை வென்றவர்.

சென்ற வருடம் (2009) ஃபெடரரிடம் முதல் முறையாக ப்ரெஞ்ச் ஓபன் பட்டத்தை நடால் பறிகொடுத்ததை பலரும் மறந்திருக்க முடியாது. 2009 ல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்வீடனின் ராபின் சோடர்லிங்கிடம் தோற்றுப்போனார்.

இந்த வருடத்தைப் போன்று கடந்த வருடமும் இறுதிப்போட்டி வரை ராபின் முன்னேறினார். இந்த வருடமும் இறுதிப்போட்டியில் ராபின் தோற்றுப்போனது நிச்சயம் அவரை ஏமாற்றமடையச் செய்திருக்கும்.

நடால் ஜூன் 3ஆம் தியதி பிறந்தவர் என்பது கூடுதல் தகவல். மஞ்சத்துண்டுக்காரர் பிறந்தநாளும் அன்று தான் என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன!!

பெண்கள் ஆட்டத்தை பொறுத்தவரையில் ஹெனின்,ஷரப்போவா,வில்லியம்ஸ் சகோதரிகள் ஆரம்பத்திலேயே வெளியேறியது Francesca Schiavone க்கு வசதியாகிப்போனது. இத்தாலியர் ஒருவர் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லுவதும் இது தான் முதன்முறையாம்.


சானியா மிர்சா கல்யாணம் பண்ணிகிட்டதோடு ஆள காணோம். அம்மணி பாகிஸ்தானுக்காக பெண்கள் கிரிக்கெட் எதும் ஆட பயிற்சி எடுக்கிறாகளோ என்னமோ!!

2009 ல் பட்டம் வென்ற இந்தியாவின் லியாண்டர் பயஸ் - லூக்கஸ்(செக் குடியரசு) இணை இந்த வருடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தோடு சமாதானப்பட்டுக் கொண்டது.

இதுவரை ரஃபேல் நடால் ஃப்ரெஞ்ச் ஓபன் போட்டிகளில் 38-1 என்ற கணக்கில் வெற்றி ஈட்டியிருக்கிறார். ஒரே ஒரு போட்டி மட்டுமே தோற்றிருக்கிறார்.

புகைப்படங்கள் நன்றி: rolland garros; விக்கி

February 07, 2010

விரோதங்களை விரட்டும் இந்திய-பாக் இணை

பாகிஸ்தான் சென்று ஆட இந்தியருக்கும்,இந்தியா வந்து ஆட பாகிஸ்தானியருக்கும் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் ஒருபுறம்.ஐ.பி.எல் ல் பாகிஸ்தானியரை ஏற்க மறுக்கும் அணிகளின் பெரும்தலைகள் மறுபுறம்.

இவை போதாதென்று பாக் மற்றும் ஆஸி கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு மும்பை சேனாவினரின் பயமுறுத்தல் என விளையாட்டிற்கு வினைகள் பலபுறமிருந்து சீறிப்பாய்கின்றன.

இவற்றிற்கு மத்தியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும் பாகிஸ்தானின் குரேஷியிம் இன்று தென்னாப்பிரிக்காவில் சர்வதேச ஏ.டி.பி டென்னிஸ் இரட்டையர் பட்டத்தை வென்றிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் 2007முதல் இணைந்து ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர் இரு முறை சர்வதேச இறுதிப்போட்டிகளில் ஆடியிருந்தாலும் இதுதான் இவர்களுக்கு முதல் வெற்றி.

நட்பினை முன்னிறுத்தி விளையாட்டுகள் நடந்த காலங்கள் மாறி இன்று நட்பினை பின்னுக்குத் தள்ளி வெற்றியை மட்டுமே வெறியாகக் கொண்டு விளையாட்டுகளை அணுகுகிறார்கள் விளையாடுபவர்கள்.

நட்பிற்கு இலக்கணமான ஒலிம்பிக் போட்டிகளில் கூட வெற்றியடைய தங்கள் வீரத்தைக் காட்டாமல் வெறி பிடித்தவர்களாய் போதை மருந்துகள் உபயோகிப்பது சகஜமாகியிருக்கிறது இன்று.

சமீபத்தில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் அஃப்ரிடி அவசியமின்றி பந்தைக் கடித்து அவமானத்தைத் தேடிக் கொண்டார்.

விளையாட்டிற்கு வேட்டு வைக்கும் விரோதங்கள் இன்று பெருகி வருவதும் விளையாட்டினை விளையாட்டாக எடுக்காமல் வினையாக பாவிப்பதும் நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல.

இந்தியன்-பாகிஸ்தானியன் என்ற வேறுபாடோ,பாகுபாடோ நோக்காமல் தொடர்ந்து இணைந்து ஆடி வரும் போபண்ணாவிற்கும் குரேஷிக்கும் பாராட்டுக்கள்.

சேனாவினரிடமிருந்து இன்னமும் இதற்கு பதில் ஒன்றுமில்லை !!!

January 31, 2010

லியாண்டரும் ஆஸ்திரேலிய ஓபனும்

1996-அட்லாண்டா ஒலிம்பிக்

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் பெற்றுத் தந்தவர் லியாண்டர் பயஸ் மட்டுமே.1996-அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்று 44 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் தனி மனித விளையாட்டு ஒன்றில் பதக்கம் பெற்றுத் தந்தார்.

விம்பிள்டனிலும், அமெரிக்க ஓபனிலும் பயஸ் பெற்ற ஜூனியர் பட்டங்கள் 1991 ல் ஜூனியர் தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பெற வழிவகை செய்தன.

கிரிக்கெட் மேனியா இந்தியாவில் லியாண்டர் பயஸைப் போன்ற திறமை மிக்கவர்களை அரசு இன்னமும் கண்டும் காணாமல் இருப்பது தான் கவலைக்குரிய விஷயம்.

  2010 - Cara Black(Zibabwe) உடன் பயஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன்,பிரெஞ்சு ஓபன்,விம்பிள்டன்,அமெரிக்க ஓபன் ஆகிய அனைத்திலும் சாம்பியன் (இரட்டையர் ஆட்டங்களில் மட்டுமே) ஆகியிருக்கிறார் லியாண்டர்.

1994 முதல் ஆஸ்திரேலிய ஓபனில் ஆடி வரும் அவர் இன்று பெற்றது இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டமும் 11ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமுமாகும் (இரட்டையர், கலப்பு இரட்டையர் உட்பட).இந்தியாவின் மற்றுமொரு ஆட்டக்காரரும், பயஸின் பழைய ஜோடியுமான மகேஷ் பூபதியும் இது வரை 11கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.
இத மறக்க முடியுமா!!

1991 முதல் டென்னிஸ் ஆடிவரும் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தால் இந்தியர் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

செரீனா வில்லியம்ஸ் ஆஸி ஓபனை வெல்வது இது ஐந்தாவது முறை.அதோடு சகோதரி வீனஸுடன் சேர்ந்து இரட்டையர் பட்டத்தையும் வென்று இரட்டை மகிழ்ச்சி கண்டிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது முதல் கிராண்ட்ஸ்லாமில் ஆடிய பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின் இறுதிப்போட்டி வரை எட்டியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

74 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டனுக்காக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்டி முர்ரே ஆண்கள் இறுதிப்போட்டியில் உலகின் முதல் தர ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரிடம் தோற்றுப் போனார்.

எனினும் தரவரிசையில் ஐந்தாம் இடம் வகிக்கும் ஆன்டி முர்ரே இந்த வருடம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.(ஃபெடரரும் கணித்திருக்கிறார்... பார்க்கலாம்)

சென்ற வருடம் ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் பட்டத்தை பறிகொடுத்து விட்டு துக்கம் தாளாமல் அழவும் செய்த ஃபெடரர் இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். இது அவருக்கு 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். வேறு எவரும் செய்யாத சாதனை இது.

ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் எடுக்கப்பட்ட சில அருமையான புகைப்படங்கள் கீழே.

Courtesy: Getty images


Photo: Lucas Dawson
Photo: Quinn Rooney


Photo: Clive Brunskill

Bryan Brothers won the Doubles Title

Photo: Clive Brunskill
Photo: Clive Brunskill

Photo: William West

September 14, 2009

ராகுல்,ரஜினி,செரீனா,சச்சின்

ராகுல் முதல் ரஜினி வரை செரீனா முதல் சச்சின் வரை கடந்த வார நிகழ்வுகள் பெரும்பாலானவை அதிரடியாகத்தான் இருந்ததாக கருதுகிறேன்.

ராகுல்

ராகுல் காந்தி அவர்களின் தமிழக சுற்றுப்பயணம் காங்கிரஸில் பரபரப்பையோ மாற்றத்தையோ ஏற்படுத்தியதோ இல்லையோ ஆனால் ஊடகங்களிலும் "அரசியல்-சினிமா" வட்டாரத்திலும் பரபரப்பிற்கு குறைவொன்றுமில்லை.
ராகுலின் அரசியல் பிரவேச அழைப்பிற்கு... 'இப்போதைக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை' என இரு மூன்றெழுத்து நடிகர்களும் பேட்டி அளிக்க வேண்டிய நிலைமையையும் ஏற்படுத்தி விட்டன ஊடகங்கள்.பெரிய கட்-அவுட்களோ அளவுக்கு மிஞ்சிய விளம்பரங்களோ இல்லாமலிருந்தது சற்றே ஆறுதலான விஷயம்.

தேசிய நதிகளை இணைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டு விட்டு சென்று விட்டார் ராகுல். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தரப்போ 'அது அவரது சொந்த கருத்து' என சப்பை கட்டு கட்டுகிறது. காங்கிரஸ் அரசு என்ன செய்யும் என பார்க்கலாம்.

தேசிய நதிகள் இணைப்பு திட்டம் குறித்து வல்லுனர்களுடன் நன்கு ஆலோசித்து அதற்கு ஒரு தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என தெரிகிறது.

ஏற்கெனவே தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறது. மறுபக்கம் வயல்வெளிகள் (Bye-Pass Road) புற-வழிச் சாலைகளாகவும், வீட்டு நிலங்களாகவும் (Plot) மாற்றப்பட்டு வருகின்றன; வீட்டிற்கு மூன்று நான்கு என இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் பெருகி வருகின்றன... இவை மறைமுகமாக குறைவான மழை பொழிவிற்கு காரணமாகின்றன.

இவற்றால் வரண்டு வரும் தமிழகம் வருங்காலங்களில் என்ன பாடு பட போகிறதோ தெரியவில்லை.

---------------


கிரிக்கெட்-சச்சின்

50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை 25 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களாக பிரித்து ஆடலாம் என்ற சச்சினின் கருத்து சற்றே வில்லங்கமாக தெரிகிறது. அதற்கு பதில் ஒரு நாள் போட்டிகளை ஒரு அணிக்கு 25 ஓவர்கள் மட்டுமே கொண்ட அரை நாள் போட்டிகளாக மாற்றி விடலாமோ என்னமோ :(

சச்சினின் கிரிக்கெட் மட்டையில் MRF விளம்பரம் Adidas ஆக மாறியிருப்பது அவரை இப்படி மாற்றி யோசிக்க செய்திருக்குமோ!!

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் பிடித்த முதல் இடம் ஒரு நாள் கூட தங்காமல் போனது ஏமாற்றமே. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஆட்டமே தொடருமானால் வெகு விரைவிலேயே ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

செரீனா-கிம் கிளைஸ்டர்ஸ்

இரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டென்னிஸ் களம் இறங்கிய பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், அமெரிக்க ஓபனில் வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ்-செரீனா இருவரையும் தோற்கடித்து அதிரடியாக ஆடி வருவது அருமை.

தானே அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி கொண்ட செரீனா அமெரிக்க ஓபன் அரை இறுதிப் போட்டியில் கிம் கிளைஸ்டர்சை எதிர்த்து ஆடினார்.
ஆரம்பத்திலேயே நினைத்தேன் இன்று எப்படியும் கிம் தான் வெற்றி பெறப் போகிறார் அதற்கு செரீனாவின் பதில் என்னவாக இருக்கும் என... அதனை மெய்ப்பிக்கும் வகையில் முதல் செட்டை இழந்த செரீனா விரக்தியில் அவரது டென்னிஸ் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்தார்; முதல் முறை மட்டைக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படாமலிருக்கவே மீண்டும் அடித்து மட்டையை நொறுக்கினார்.(ஒரு பெண்ணுக்கு இத்தனை கோபம் கூடாது தான்)

இது தான் இப்படியென்றால் இரண்டாவது செட்டில் மேலும் விரக்தியடைந்தார் ... இரண்டாவது செட்டின் இறுதி நிலையில் கிம் வெற்றி பெறும் தருவாயிலிருக்கையில் எல்லைக் கோட்டு நடுவர் செரீனாவின் சர்வீசை foul என்ற முறையில் நிராகரித்தார். இதனால் ஏற்கெனவே கடுப்பாகிப் போயிருந்த செரீனா மேலும் கோபத்துடன் நடுவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார், அவரை கொலை செய்து விடுவேன் என அச்சுறுத்தியதாகவும் நடுவர் புகார் கூறவே செரீனா மேலும் தொடர்ந்து ஆட அனுமதி மறுக்கப்பட்டார்.

முன்பொரு முறை செரீனா, இந்தியா வந்திருந்த போது ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையில்... எனது சகோதரி வீனஸ் உடன் ஆடுகையில் அவர் வெற்றி பெற்று விட்டால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது;அவருடன் சில நாட்கள் சரியாக பேச கூட மாட்டேன் என கூறினார். இதிலிருந்தே அவரின் டென்னிஸ் மீதான வெறியை (மடத்தனத்தை) புரிந்து கொள்ளலாம்.

நடுவருடனான செரீனாவின் வாக்குவாதம் கீழை காணொளியாய்

June 29, 2009

நாடோடிகள்,ஸ்ருதி ஹாசன்,ஷரப்போவா,கிரிக்கெட்



நண்பர்கள் சேர்ந்து நட்பின் வலிமையை உணர்த்தியிருக்கும் திரைப்படம் நாடோடிகள் எனலாம்.இரு தோல்விப்படங்களைக் கொடுத்த பின்னரும் தளராமல் இந்த படத்தை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதே காரணத்தை(தோல்வி) வலியுறுத்தி பலரால் நடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்ட பின்னரும் நண்பனுக்காக துணிந்து நடித்து தனது சாமர்த்தியமான நடிப்பால் கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் சசி குமார்.

காதல் என்றும் உயர்ந்தது, சில காதலர்களாலேயே காதலுக்கு களங்கம் ஏற்படுகிறது என்ற மையக் கதைக்கருவோடு அந்த காதலுக்காக எதுவும் செய்யும் நண்பர் கூட்டங்களையும் அதனால் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் இழப்புகளையும் இணைத்து திரைப்படத்திற்கு முழு வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

நம்மை கதாபாத்திரங்களுடன் தொடர்ந்து பயணம் செய்யும் விதம் தீட்டப்பட்டிருக்கும் தொய்வில்லாத திரைக்கதையும், அடுத்து என்ன நிகழும் என யூகிக்கவியலாத அளவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் காட்சி அமைப்புகளும் நம்மை இருக்கைகளில் கட்டிப் போடுகின்றன.

ஒருபுறம் தன் மகன் எது செய்தாலும் சரியாகத் தான் செய்வான் என கருதும் சசியின் தகப்பனார் , மறுபுறம் தன் மகன் என்ன செய்தாலும் அதில் சந்தேகம் கொள்ளும் பாண்டியின் தகப்பனார் என்ற இரு வேறான தகப்பன் கதாபாத்திரங்கள்... இப்படியொரு தகப்பன் நமக்கு வாய்க்க வேண்டும்/வாய்க்கக் கூடாது என நிச்சயம் யோசிக்கச் செய்யும்.

காமெடிக்கென்று தனிக்களம் இல்லையென்றாலும் வசனங்களிடையே வரும் டைமிங்க் காமெடிகளால் தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது.

"நண்பர்கள் இருக்கிறாங்க அப்படின்ற ஒரே தைரியத்தால தான் இன்னைக்கும் துணிஞ்சு காதலிக்கிறாங்க" என்கிற வசனத்தில் இளைஞர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறார் சமுத்திரக்கனி அவர்கள்.

அறிமுக கதாநாயகியிடமிருந்து அளவாக ஆனால் அற்புதமாக நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.முதல் பாதியில் நாயகி காட்டும் குறும்புகளை ரசிக்கலாம். பாடல்கள் சொல்லும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் அதிக சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்.

மொத்தத்தில் காதலின் உயர்வையும், அதற்கு துணை நிற்கும் வலிமையான நட்பின் தூய்மையையும் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயம் இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாடோடிகளுக்கு விகடன் நிச்சயம் 50 ற்கும் அதிகம் மார்க்குகள் வழங்கலாம் என எதிர்பார்க்கிறேன் :)
---------------------------------------

ஸ்ருதி ஹாசன்


சத்தமே இல்லாமல் கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் luck என்ற ஹிந்திப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது பாலிவுட்டில் அவருக்கு அறிமுக படமாக இருக்கும். அடுத்த மாதம் இந்த திரைப்படம் வெளியாகலாம் என தெரிகிறது.
---------------------------------------

ஷரப்போவா



டென்னிஸ் உலகத் தரவரிசையில் சில ஆண்டுகள் முன் முதலிடம் பெற்றிருந்த ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவாவிற்கு இது போதாத காலம் போலும். காயத்திலிருந்து விடுபட தான் பெற்ற பத்து மாத சிகிச்சைக்குப் பின்னர் ஃப்ரெஞ் ஓபன், விம்பிள்டன் என ஆடிய இரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் காலிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

சரியான ஓய்வு இல்லாமையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே அவரது தோல்விகளுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதே கருத்து இந்திய கிரிக்கெட் அணிக்கும் அதன் தலைவரான தோனிக்கும் மிகப் பொருந்தும். சரியான ஓய்வு இன்மையும், தகுந்த பயிற்சி ஆட்டங்கள் இல்லாமையுமே இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணம் என கருதுகிறேன்.

May 09, 2009

இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை

தங்களது கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சிலரைக் குறித்த பதிவு.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கால்பந்து ரசிகர்களுக்கு இவரைக் குறித்த அறிமுகமே தேவையில்லை.அர்ஜென்டினாவை சேர்ந்த 22 வயதே நிரம்பிய கால்பந்து வீரர் இவர்,16ஆவது வயதிலேயே சர்வதேச கால்பந்து களத்தில் இறங்கியவர்.தற்சமயம் ஸ்பெயினின் பார்சிலோனா 'கிளப்'பிற்காக ஆடி வருகிறார்.கால்பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்துவதும்,வேகமாக பந்தை முன் நகர்த்துவதும் இவரது பிரத்தியேக திறமை.

இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

ரஃபேல் நடால்(Rafael Nadal) ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.

களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.

புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.

இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டைக் குறித்து அறியாதவர் கூட சச்சினை அறிவர் எனலாம்.தனது 16 ஆவது வயதிலேயே சர்வதேச ஆட்டங்களில் காலடி எடுத்து வைத்த சச்சின் 25 வயதிற்குள்ளாக 16 சதங்களை அடித்து முடித்திருந்தார்.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.

லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.

தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வயதில் தந்தையை இழந்த திலீப் குமார் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம்,என்றாலும் இசை மீதான தனது வேட்கையையை அவர் விட்டுவிடவில்லை.இந்தியாவில் வேறு எந்த கலைஞரும் காணாத மேல்நாட்டு இசைக்கருவிகளையும்,தொழில்நுட்ப கருவிகளையும் அறுபதுகளிலேயே இறக்குமதி செய்து இசை மீட்டிய தந்தை சேகரின் வழி இளமையிலேயே பயணித்தவர்.

26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.

இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.

March 19, 2009

(டிராவிட்)ராகுல்,ரஃபேல்,ரேஸ்(F1)

ராகுல் டிராவிட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ராகுல் டிராவிட், ஹாமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஆட்டத்தின் முதல் விக்கெட்டின் கேட்ச் எடுத்த போது டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக கேட்ச் (181) எடுத்தவர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் மார்க் வாவ் இந்த சாதனையை செய்திருக்கிறார்.

--------------------------------

ரஃபேல் நடால்

உலகின் முதல் தர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் கலிஃபோர்னியா, இண்டியன் வெல்சில் நடைபெற்று வரும் ஏ.டி.பி மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆட்டங்களின் காலிறுதிக்கு முந்தைய போட்டி ஒன்றில் அர்ஜென்டினாவின் டேவிட் நல்பான்டியனை எதிர்த்து இன்று ஆடினார். தோல்வியின் விளிம்பில் இருந்த நடால் எவருமே எதிர்பாராத விதம் வெற்றி பெற்றார்.

6-3,5-3, 40-15 என்ற புள்ளியுடன் மேலும் ஒரு புள்ளி எடுத்தால் டேவிட்டிற்கு வெற்றி என்ற நிலை இருந்தது. இரண்டு Match points இருந்தது அவருக்கு. அவற்றில் ஒன்று எடுத்தாலே வெற்றி.

ஆனால்....அடிபட்ட புலியாக நடால் மீண்டு வந்து இரண்டு Match point யையும் முறியடித்து 5-4 என்று ஒன்பதாவது கேமை தனதாக்கினார்.

என்றாலும் டேவிட் 6-6 என்ற கேம் கணக்கில் இரண்டாவது செட்டை டை-பிரேக்கருக்கு கொண்டு சென்றார்.டை-பிரேக்கரில் வெற்றி பெற்றால் ஆட்டம் டேவிட்டுக்கு.

விட்டரா நடால்... இல்லை, வீறு கொண்டு டை பிரேக்கரில் 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டாவது செட்டை தனக்கு சொந்தமாக்கி ஆட்டத்தை மூன்றாவது செட்டிற்கு இட்டுச் சென்றார்.


மூன்றாவது செட்டில் டேவிட் நல்பான்டியனை ஓட ஓட விரட்டினார் ரஃபேல் நடால். இறுதியில் 6-0 என்ற கேம்களில் மூன்றாவது செட்டை எடுத்து 2-1 என்ற செட் கணக்கில் டேவிட்டை வீழ்த்தி காலிறுதிக்கும் தகுதி பெற்று,தான் உலகின் முதல் தர வீரன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இது தான் "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்பதோ


-----------------------



ஃபார்முலா ஒன் ரேஸ்

மார்ச் 29 அன்று துவங்கவிருக்கும் 2009 ன் ஃபார்முலா ஒன் சீசனில் அதிக ரேஸ்களில் வெற்றி பெறுபவர் சாம்பியனாக அறிவிக்கப்படுவார் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அதிக புள்ளிகள் எடுத்தவரே சாம்பியனாக அறிவிக்கப்பட்டு வந்தார்.2008 ல் அதிக ரேஸ்களில் வெற்றி பெற்றிருந்த போதும், புள்ளிகளின் குறைவால் பிரிட்டனின் லூயிஸ் ஹாமில்டனிடம்,பிரேசிலைச் சார்ந்த ஃபெராரியின் பிலிப்பே மாசா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

February 03, 2009

சாம்பியனைத் தேற்றிய சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவை நேரடியாக காண நேர்ந்தவர்களுக்கு வாழ்வில் மறக்கவியலாத ஒரு உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வாக இருந்திருக்க வேண்டுமென்பதில் எந்த சந்தேகமுமில்லை. 3 முறை ஆஸ்திரேலியாவிலும், 5முறை விம்பிள்டனிலும், மீண்டுமொரு 5 முறை அமெரிக்காவிலுமாக 13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற ஒரு சாம்பியன் தேம்பி தேம்பி அழுவார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்கள் பெறுகையில் அழுதிருக்கிறார்; என்றாலும் அவை சந்தோஷக்கண்ணீர் என கணக்கில் கொள்ளலாம்.

இம்முறை ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் கடுமையாக போராடியும் வெற்றியீட்ட இயலவில்லையே என தேம்பி தேம்பி மைதானத்தின் ரசிகர்களுக்கு முன்பாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சி வழியாக நேரலையில் நோக்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு முன்பாகவும் அழுதே விட்டார்.

அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸிற்கு பிறகு இதுவரை அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமை ஃபெடரருக்கு உண்டு. சாம்ப்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம்களை வென்றிருக்கிறார். அதனை நினைத்தும் கூட அழுதிருக்கலாம்.

இரு அமெரிக்க டென்னிஸ் நட்சத்திர வீரர்களான பீட் சாம்ப்ராஸ் மற்றும் ஆந்த்ரே அகாசிக்கு பின்னர் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுக்கும் இடையே தான் முதலிடத்தைப் பெற கடினமான போட்டிகள் நடந்து வருகின்றன. களிமண் ஆடுகளத்தின் ராஜா என வர்ணிக்கப்படும் நடாலும்; புல்தரை ஆடுகளத்தின் ராஜா என வர்ணிக்கப்படும் ஃபெடரரும் தங்களுக்கே உரித்தான பாணியில் ஆடி டென்னிஸ் தரவரிசையில் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றனர்.

என்றாலும் இதுவரை இருவருக்கும் ஒரு குறை இருந்து வந்தது. நடாலிற்கு கிராண்ட்ஸ்லாமில் கடினதரையுடைய ஆடுகள(ஆஸ்திரேலிய/அமெரிக்க ஓபன்) வெற்றியும் ஃபெடரருக்கு கிராண்ட்ஸ்லாமில் களிமண் தரையுடைய ஆடுகள (ஃப்ரெஞ்ச் ஓபன்) வெற்றியும் நிறைவேறாத குறையாகவே இருந்து வந்திருக்கிறது. இம்முறை நடால் ஆஸ்திரேலிய ஓபன் வெற்றி மூலம் அதற்கு முடிவு கட்டிவிட்டார்(என்றாலும் அமெரிக்க ஓபனில் இதுவரை வெற்றி ஈட்டவில்லை). ஃபெடரர் 2006,2007,2008 என தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் ஓபனில் நடாலிடம் தோல்வியடைந்து களிமண் தரையில் ஒருமுறை கூட வெற்றி பெற இயலாமல் இருக்கிறார்.

14 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பீட் சாம்ப்ராஸிற்கும் ஃப்ரெஞ்ச் ஓபன் வெற்றி கொடுத்து வைக்கவில்லை என்பது மற்றொரு சுவாரஸ்ய தகவல்.

இதுவரை இவர்களிருவருக்குமிடையே நடைபெற்றுள்ள 19 போட்டிகளில் 13-6 என நடால் முன்னிலை வகிக்கிறார். பிப்ரவரி 2004 முதல் ஜூலை 2008 வரை தொடர்ந்து முதலிடத்திலிருந்தார் ஃபெடரர். ஆகஸ்ட் 2008 ல் முதலிடத்தை ஃபெடரரிடமிருந்து கைப்பற்றினார் நடால்.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் 4 மணிநேரம் 48 நிமிடங்கள் இவர்கள் ஆடிய 2008 ன் விம்பிள்டன் இறுதிப் போட்டி வரலாற்றில் இடம் பிடித்தது. இதுவே விம்பிள்டன் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துக்கொண்ட ஆட்டம்.

ரோஜரும்,ரஃபேலும் இரு வேறு தேசத்தைச் சார்ந்த போதிலும் கடும் சவாலுடன் ஆட்டக்களத்தில் ஆடினாலும் ஒருவருக்கொருவர் கனிவான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வதில் எந்த தயக்கமும் காட்டாதவர்கள். அப்படித்தான் இருதினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பறிகொடுத்துத் தேம்பி அழுது கொண்டிருந்த ரோஜர் ஃபெடரரை ரஃபேல் நடால் அவர் தோள் மேல் கையிட்டு தேற்றினார். அதோடு நீ தான் உலகின் சிறந்த டென்னிஸ் ஆட்டக்காரன் எனவும் கூறினார் நடால். நடாலின் அச்செயல் அதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரைத் தழும்பச் செய்தது. இன்னும் அதிகமாக ஃபெடரரின் கண்ணிலுமிருந்து. அதினிமித்தம் நடால், விளையாட்டுலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறினார் என்றால் அது மிகையல்ல.

அவர்கள் இன்னும் பல போட்டிகளை ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரியும், கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ்-சானியா இணையும் வெற்றி பெற்றிருப்பது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமே. அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Related Posts with Thumbnails