June 24, 2020

சென்னை – சுயநலங்களுக்கு இரையாக்கப்பட்ட நகரம்!


‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!

இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!

1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப் பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும், திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக முற்றுப் பெற்றது அந்த பயணம்.

அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம் பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை; ஆசிரியர்களிடம் கூட சொல்ல  முற்பட்டதுமில்லை!

அவற்றில் சில…

‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில் வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’

அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும் சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர் கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம் ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!

கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும் விதைத்திருந்தது.

1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.

வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச் சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்) கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்

1.    மக்கள் நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2.    வறட்சியான பயனற்ற நீர்நிலைகள்

சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை  அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும் இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத மக்கள் கொண்ட  சென்னைப் போன்றதொரு நகரத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.

இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில் இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள் ஆங்காங்கே தெருக்களில்  சிதறிக் கிடக்கின்றன;

வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால் இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!

இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும்  சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!

  

June 16, 2020

வெளிநாடு வாழ் தமிழர்கள் - கொரோனா - துயரம்


அயல்நாடுகளில் பணிகளில் இருக்கும் தமிழர்கள் பலருக்கும் இருக்கின்ற ஆதங்கம் 'தமிழக அரசு பிற மாநில அரசுகளைப் போல், குறிப்பாக பக்கத்து மாநிலமான கேரளத்தைப் போல் தம் அயல்நாடு வாழ் மக்களை ஏன் கண்டுகொள்வதில்லை'? என்பது

அரசு மட்டுமல்ல, தமிழக ஊடகங்களும், அயல்நாடு வாழ் தமிழர்கள் நலன்களில் போதுமான அளவு அக்கறை காட்டுவதில்லை என்பது மிக மிக வருத்தம் தரும் விடயம். 

பல லட்சக்கணக்கான தமிழர்கள் வளைகுடா, ஐரோப்பா, ஆப்பிரிக்க, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் பணிபுரிந்து கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறார்கள், ஆனால் அவர்களது நலன் பெரும்பாலான நேரங்களில் கேள்விக்குறி மட்டுமே!

கேரள காட்சி ஊடகங்களில் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது அயல்நாடுகளில் இருக்கும் அம்மாநில மக்களைக் குறித்த செய்திகள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ் ஊடகங்கள் கிஞ்சித்தும் அதைச் செய்வதில்லை. 

கொரோனா பெருந்தொற்றின் காலத்தில் கூட, அயல்நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியிலிருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியிழந்தும், தங்குமிடத்திற்கும், உணவிற்கும், மருத்துவத் தேவைகளுக்கும் படுகின்ற அல்லல்களை அரசும், தமிழக ஊடகங்களும் கண்டுகொள்ளாதது பெருந்துயரம்.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தமிழரின் அவலங்கள் ஊடகங்களில் தலை காட்டுகிறதே ஒழிய, போதுமான அளவு பதிவு செய்யப்படுவதில்லை.

அரசும் ஊடகங்களும் மக்களைக் கண்டுகொள்ளாதது ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் தமிழர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் பல் இளிக்கிறது.

கேரளத்தினர் எங்கு சென்றாலும், அவர்கள் மண் சார்ந்த, மத நம்பிக்கைச் சார்ந்த, கலை சார்ந்த சிறு சிறு குழுக்களாக தொடர்ந்து இயங்குகின்றனர், புதிதாக வருகின்றோரையும் அரவணைத்து கொள்கிறார்கள். அப்படியான குழுக்கள் மூலம், இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்கிறார்கள். இந்தியத் தூதரகம் வரை செல்வாக்கு உடையோரிடம் தொடர்புகளையும் ஏற்படுத்தி ஆவனச் செய்கிறார்கள்.

கேரளத்தினரை மீட்க, கேரளத்தைச் சார்ந்த பெருமுதலாளிகள் தனி விமானங்களை அனுப்புகிறார்கள், மறுபுறம் கேரள அரசு மத்திய அரசிடம் பேசி போதுமான அரசு விமானங்களையும் ஏற்பாடு செய்கிறது.

மாறாகத் தமிழர்கள், அங்கங்கே குழுக்களாக இணைந்திருந்தாலும், ஒற்றுமையும், பொதுவான விடயங்களில் பரஸ்பர புரிந்து கொள்ளுதலும் இல்லாதிருப்பதாலும், எவர் உயர்ந்தவர் என்கிற போட்டியையும், பொறாமையையும் ஒருங்கே தமக்குள் கொண்டிருப்பதாலும் தொடர்ந்து தம்மைத்தாமே அழித்துக் கொண்டுள்ளனர்.

அண்மையில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் நெஞ்சை உலுக்கிப் போடுகின்றன!

வேலையின்மை, ஊதியமின்மை, கொரோனா அச்சம், வயிற்றிற்கேற்ற உணவின்மை, குடும்பத்தைக் குறித்த கவலை, சொந்த ஊர் போய்ச் சேருவோமா என்கிற பதட்டம் என பல விதங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு பெருந்துயரத்திலும் கூட தமிழக அரசு கண்டும் காணாமலும் இருப்பது விநோதம் தான். 

அமைப்பாய் திரள்வோம்னு குரல்கள் ஒலித்தாலும், பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் இல்லையேல் நாம் எதையும் சாதித்தல் என்பது நமக்கு சாத்தியமில்லை!

June 11, 2020

செவ்வணக்கம் தோழர் சஜித்! போய் வாருங்கள்!


இரு தினங்கள் முன்னர் சென்னையில் வசித்து வந்த மருத்துவரும், சமூக ஆர்வலருமான சஜித் என்பவர் திடீரென சுய நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தியை இடதுசாரிகள் பலர் பகிர்ந்திருந்ததோடு அவரை வெகுவாக சிலாகித்தும் எழுதவே அவரைக் குறித்து அறிந்து கொள்வதில் முனைப்பானேன்.

அவரைக் குறித்து பரிச்சயமில்லாதவர்கள் கூட அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்கிறார்கள். ஆங்கிலப் புலமையும், தேர்ந்த அரசியல் அறிவும், அதனை சாமானிய மக்களும் கூட புரிந்து கொள்ளும் வகையில் முன்னெடுத்து வைக்கின்ற சிறந்த பேச்சாளருமாக திகழ்ந்திருக்கிறார் சஜித்.

தோழர் சஜித் Watford Socialist Party (UK) மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமாய் இருந்திருக்கிறார். அதுவும் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், லண்டனில் மேற்படிப்பு படித்தவர் இள வயதில் தனது மருத்துவப் பணியையும் துறந்து மக்களோடு மக்களாக நின்று களப்பணி ஆற்றுவதெல்லாம் எளிதானதல்ல. 

இன்னும் சொல்லப் போனால், தோழர் சஜித், பரவலாக அறியப்படாமலே ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக, அதிகாரச் சுரண்டல்களுக்கு எதிராக களமாடியிருக்கிறார். கால்கள் கடுக்க துண்டுப் பிரசுரங்கள் வரை விநியோகித்திருக்கிறார். 

தன்னலம் மறந்து சக மக்களுக்காக களமாடியோர் மறைந்தாலும், காலமெல்லாம் மக்கள் மனதில் உயர்ந்து நிற்பர் என்பதற்கு தோழர் குறித்து வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மேன்மையான கருத்துகளே சாட்சி!

சமூகம் சார் பிரச்சனைகள் தொடர்ந்து விவாதிக்கப் பட வேண்டும்; மாற்றுக் கருத்துகளுக்கும் செவிகள் திறக்கப்படல் வேண்டும்; இளைய சமுதாயம் வாசிப்பில் ஈடுபாடு காட்ட வேண்டும்; அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல்கள் எழுப்புதல் வேண்டும்!

அதுவே தோழர் சஜித் போன்றோர் விதைத்துச் சென்றிருக்கும் விதைகள் துளிர்த்தெழ வழிவகை செய்யும்.

போய் வா தோழா! வீரன் மரணிப்பதில்லை
Related Posts with Thumbnails