Showing posts with label ஐ.பி.எல். Show all posts
Showing posts with label ஐ.பி.எல். Show all posts

May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கெட் ஒரு பார்வை


"Cricket Overdose" ஆகி விட்டதாகத் தான் கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த ஒரு மாத காலமாக கருத்துரைத்து வருகிறார்கள். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடைபெற்ற நேற்றும் கூட ரவிசாஸ்திரி அவர்கள் அதைத் தான் குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாவே விளையாடப்பட்டு வருகின்றன. ஆட்டக்காரர்களுக்கு சரியான ஓய்வும் கிடைப்பதில்லை. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஆடவிருக்கும் ஆட்டங்களில் மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் காயத்தின் காரணமாக சேர்க்கப்படவில்லை என்பது இந்த cricket overdose ஆல் தான்.

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்து ஒரு வாரத்திற்குள்ளாக ஐ.பி.எல் போட்டிகள் துவங்கியது; அன்பரும், பதிவருமான லோஷன் அவர்கள் முன்னொரு பதிவில் எழுதியிருந்தது போல இந்திய அணி உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு கூட நேரமில்லாமல் போனது ஒரு வகையில் துரதிருஷ்டம் தான்.

ஐ.பி.எல் இருபது ஓவர் ஆட்டங்கள் எந்த அளவுக்கு திறமையை வெளிக்கொணரும் என்ற கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பஞ்சாப்பின் பால் வால்தட்டி, கொல்கத்தாவின் அப்துல்லா, கேரளாவின் பரமேஸ்வரன் ன புதிய திறமைகளை வெளிக்கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சியே.

இந்த நான்காம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு சுவாரஸ்யமாக தோன்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவிடுகிறேன்.

1. சச்சினின் பெருந்தன்மை

மும்பை இன்டியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சச்சின் பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றின் முடிவில் தனக்கு அளிக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதினையும் ஒரு இலட்ச ரூபாயையும் அம்பத்தி ராயுடுவுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியதோடு மட்டுமல்லாமல் அவரது கையில் காசோலையையும் அளித்தது தான் என்னை அதிகம் நெகிழ வைத்த நிகழ்வு. (நியாயப்படி ராயுடுவிற்கு தான் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த வெற்றியில் சச்சின் 55 ஓட்டங்களும் ராயுடு 63 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்)

2. கங்குலியின் பிரவேசம்

இந்த ஐ.பி.எல் தொடரின் நகைச்சுவைகளில் ஒன்றாக கங்குலியின் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். கொல்கத்தா அணியினர் வங்காளத்தின் புலி, தாதா கங்குலிக்காக இந்த முறை கோப்பையைக் கைப்பற்றுவோம் என கொக்கரிக்க அவரோ 'போங்கடா நொன்னைகளா' என்கின்ற மாதிரி புனே அணியிடம் சென்று சரணடைந்தார். அவரது காலில் விழுந்து நமஸ்கரித்த ரசிகர் ஒருவரைப் பார்த்தால் அ.தி.மு.க தலைமை பெருமைபட்டுக்கொள்ளலாம். 


3. இஷாந்த் ஷர்மா 3-0-12-5

கேரள அணிக்கு எதிராக ஐதராபாத்தின் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்று ஓவர்கள் தான் இந்த ஐ.பி.எல் லின் சிறந்த பந்து வீச்சாக நான் கருதுகிறேன். 3-0-12-5 என்பது அவரது பந்து வீச்சின் சுருக்கம். மூன்று ஓவர்கள் வீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார் இஷாந்த். கேரளா 74 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆட்டத்தையும் இழந்தது.

4. சென்னை சூப்பர் கிங்க்ஸ் - Super தான்

இறுதிப் போட்டியின் இடைவேளையின் போது சென்னையின் ஆட்டத்தைக் குறித்து ரவிசாஸ்திரி அவர்கள் கூறும் போது... முரளி விஜய் மற்றும் ஹசியின் ஆட்டம் கிரிக்கெட்டிற்கான அனைத்து அம்சங்களும் உடையதாயிருந்தது என புகழ்ந்திருந்தார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளை மட்டுமே நம்பியிராமல் அவர்கள் இருவரும் ஓடி சேர்த்த ஓட்டங்கள் தான் ரவியை இவ்வாறு புகழச் செய்தது. அது தான் சென்னையின் பலமும் கூட. இருவரும் முதல் விக்கெட்டிற்கு 158 ஓட்டங்கள் குவித்தனர்.

பலரின் வாதத்திற்கு வாய்ப்பூட்டும் போட வைத்தார் Captain Cool தோனி. கெய்லின் விக்கெட்டிற்கு அத்தனை சந்தோஷப்பட்ட மனிதர் வெற்றி பெற்ற போது அத்தனை அமைதி காத்தார். அது தான் ஒரு தலைவனுக்கு அழகும் கூட.

மற்ற அணிகளைப் போலல்லாமல் திரைத்துறையினர் அதிகம் திரண்டு வராத ஒரே அணி சென்னை மட்டும் தான். அவர்களின் ஆர்ப்பாட்டமில்லாத ஆட்டத்திற்கு கிடைத்த பரிசு தான் இந்த கோப்பை. வாழ்த்துக்கள் சென்னை சிங்கங்களே.

நன்றி: கிரிகின்போ 

September 15, 2010

இது தான் NDTV ன் நடுநிலை

தொடர்ந்து பாரபட்சமாக தான் செயல்படுவோம் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் என்.டி.டி.வி செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர். இலங்கைத்தமிழர் விஷயத்திலும் சரி, தமிழகத்தைக் குறித்த எந்த விஷயமானாலும் சரி இருட்டடிப்பு செய்வதே வடக்கில் இருக்கும் ஊடகங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது.

அதே நேரத்தில் அரசியல் தலைவர்களின் நிகழ்வுகளாகட்டும்; பெரிய இடங்களின் திருமணமாகட்டும்; அதில் அவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே அப்பப்பா. சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த சூப்பர் ஸ்டாரின் மகள் திருமணத்தைக் கூட ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்கள். (அவர் மராத்திய இரத்தமாக இருப்பதாலோ என்னமோ?!!)

வழக்கமாக ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தேவையின்றி பிரேக்கிங் நியூஸ் என்று போடுபவர்கள் ஐ.பி.எல்-3 இறுதிப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்கடித்த போது அதனைச் செய்யவில்லை. பிற்பாடு ஆற அமர சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது என்று சொன்னார்களே தவிர மும்பை தோல்வியடைந்தது என்று செய்தியளிக்க முடியவில்லை அவர்களால்.

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடக்கும் தற்சமயமும் இதே நிலை தான். நேற்று தெற்கு ஆஸ்திரேலியா அணியிடம் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்து சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறிய பின்னரும் மும்பையை வெட்கமின்றி மெச்சியிருக்கிறார்கள். BATTLING REDBACKS STUN MIGHTY MUMBAI INDIANS என்று பீத்தியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாற்றுவார்களோ? என்.டி.டி.வி யின் அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.

September 11, 2010

சாம்பியன்ஸ் லீக் T-20 ம் சச்சினும்


ஐ.பி.எல்-3 ற்கு பிறகு சர்வதேச அளவில் நடைபெறும் முதல் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஸ் லீக் T-20 என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. 

அதோடு ஐ.பி.எல் T-20 போட்டிகளின் ஆணி வேராக இருந்த லலித் மோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் புறந்தள்ளப்பட்ட பின்னர் (ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்களுடன் இணைந்து) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் முதல் போட்டி என்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பாகிஸ்தான் வீரர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஆடினார்கள் என்ற சர்ச்சைக்கு இடையில் இந்த போட்டிகள் துவங்குவதால் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ஐ.பி.எல் T-20 போட்டிகள் பலவற்றின் முடிவு முன்னமே தீர்மானிக்கப்பட்டன என்ற கருத்து ஒருபுறமும் பாகிஸ்தான் வீரர்கள் மீதான புகார் மற்றொருபுறமும் இருக்கையில் இந்த போட்டிகள் பிரச்சினை ஏதுமின்றி நடந்தேறினால் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலருக்கும் மகிழ்ச்சியே. 

அரசியலையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது போன்று கிரிக்கெட்டையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிடுமோ என்னமோ!

சச்சினைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவிற்காக ஒருதின போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், மும்பை இன்டியன்ஸ் அணிக்கு தலைமை ஏற்று சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களில் களமிறங்கியிருப்பது சரியென படவில்லை.

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கும் சச்சின் 2011 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு அவரை எந்தவிதம் தயார் செய்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

சச்சினின் இதே எண்ணம் தொடருமானால் சச்சினின் கரங்களில் உலகக்கோப்பை தவழ்வதை நாம் காண முடியாது என்பதாகவே எனக்கு படுகிறது.  இது வரை 1992 முதல் 2007 வரை ஐந்து முறை உலகக்கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள சச்சின் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை என்ற நிஜத்தை எவரும் மறந்து விட முடியாது. 

-----

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளின் துவக்க விழாவில் "மையக்கருத்து பாடலுடன்" (Theme Song அப்படிங்கிறதுக்கு இது தான் தமிழாம்ல) நான் அதிகம் ரசிக்கும் Enrique Iglesias பாடிய Be With You பாடலைக் கேட்டு மீண்டும் ஒருமுறை மலைத்துப் போனேன்.



April 29, 2010

ஐ.பி.எல்-என்ன கொடும இதெல்லாம்

ஐ.பி.எல் 20-20 கிரிக்கெட்டில் கிரிக்கெட் நடந்ததோ இல்லையோ ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும், 'ஆ' பாசமும் ரொம்ம்ம்ப கரிக்டா நடந்திருக்கு.

அந்த நேரங்களில் க்ளிக்கப்பட்ட சில கொடுமைகளும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆட்டங்களை பார்வையிட வந்திருந்த சில நம்மூர் வி.ஐ.பி களும், சில அருமையான தருணங்களும் இங்கே புகைப்படங்களாய் (நன்றி ndtv)

ஐ.பி.எல்ல நானும் விடுறதா இல்ல, அதுவும் என்ன விடுறதா இல்ல... ம்ம்ம்ம்

ஹர்பஜனுடன் நீதா அம்பானி
ஷில்பா ஷெட்டி-ராஜ்
ஷில்பா ஷெட்டி-விஜய் மல்யா-ராஜ்






சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள்?!!

சச்சின், அர்ஜூன், சாரா

ஷாருக், ஆர்யன், சுகானா



April 27, 2010

ஐ.பி.எல்-3 ஒரு பார்வை

மூன்றாவது ஐ.பி.எல் சாம்பியன் நம்ம சென்னை சூப்பர் கிங்சுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதனை சிறப்பாக வழிநடத்திய மிஸ்டர் கூல் தோனிக்கும் பாராட்டுக்கள்.

இந்த சீசனில் சென்னை சிங்கங்களுக்கு பல சிறப்புகள் உண்டென்றால் அது மிகையல்ல.

1. மூன்று சீசனிலும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஒரே அணி

2. இறுதிப் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி

3. மூன்று சீசனிலும் 400 ற்கும் அதிகம் ஓட்டங்கள் குவித்த ரெய்னாவை சொந்தமாகக் கொண்ட அணி

4. நீல நிற உடையணிந்த அணியே வெற்றி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையை உடைத்த அணி.

5. மூன்று சீசனிற்கும் ஒரே அணித்தலைவரை உடைய அணி.

இப்படி பலப்பல

பிற அணிகள் குறித்து சொல்ல வேண்டுமானால் பஞ்சாப், ராஜஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடின என்றே கூறலாம். நான் அதிகம் எதிர்பார்த்தது டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளிடமிருந்து தான்.

டெல்லியின் தலைமை மாறியதாலோ என்னமோ!! சேவாக் முக்கியமான ஆட்டங்களில் சரியாக ஆடவில்லை. யுவராஜின் சொதப்பலான ஆட்டத்திற்கும் இதே காரணம் கூட ஒத்துப் போகக்கூடும். சங்கக்காராவிற்கும் எனக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை என யுவராஜ் கூறியிருந்தாலும் அது எந்த அளவிற்கு உண்மை என அவருக்கே வெளிச்சம். சென்னைக்கு எதிராக மட்டும் அதிரடி ஆடி சூப்பர் ஓவரில் வெற்றி ஈட்டினார்.  

டெல்லியின் டேவிட் வார்னரின் கேட்சுகள் அனைத்தும் அற்புதம், அவரது சதமும் மறக்கவியலாது. அது போன்று ராஜஸ்தானின் யூசுப் பத்தானின் அதிரடி சதமும், முரளி விஜயின் சதமும், ஜெயவர்தனேவின் சதமும் சிறப்பானவையே. இந்த நான்கு சதங்களில் யூசுப்பின் சதம் மட்டுமே அணியின் தோல்வியில் முடிந்தது.


கொல்கத்தா தல தாதா கங்குலி ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் அசத்தி விட்டார். அவர் எடுத்த சில கேட்சுகள் மிக அற்புதம். அதிக ஓட்டங்கள் குவித்தவர்களில் தாதாவிற்கு நான்காவது இடம். எனினும் கொல்கத்தா ஒரு அணியாக சிறப்பாக ஆடவில்லை.


ராஜஸ்தானின் தல வார்னுக்கு சரியாக அணி அமைந்தும் அதிக வெற்றிகளை பெறமுடியவில்லை. அவர்களின் பலமற்ற பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சாதகமாகிப் போனது.

டெக்கான் தல கில்லி சரியாக ஆடாதது அவர்களுக்கு ஏமாற்றமாகிப் போனது. கிப்ஸும் சரிவர ஆடவில்லை. சுமன் மற்றும் சைமண்ட்ஸ் அதிரடியால் அரையிறுதி வரை நுழைந்தனர். ரோஹித் ஷர்மா ஆரம்பத்தில் சரியாக ஆடாவிட்டாலும் பின்னர் சுதாரித்துக் கொண்டார். பந்துவீச்சில் வாஸ் அசத்தினார்.

பெங்களூர் மிக உறுதியான அணியாக இருந்தும் அரையிறுதியில் கோட்டை விட்டு விட்டார்கள். உத்தப்பாவின் அதிரடியும், திராவிட், காலிஸின் கனக்கச்சிதமான ஆட்டமும், கும்ப்ளே, ஸ்டெயினின் பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது.

மும்பை இந்த சீசன் முழுவதும் அருமையாக ஆடினாலும் கேட்சை தவற விட்டது, நாயரின் தேவையற்ற ரன் அவுட், ஹர்பஜன் நான்காவதும் பொல்லார்ட் ஏழாவதுமாக ஆடவந்தது என இறுதிப் போட்டியில் அவர்களே அவர்களுக்கு சங்கு ஊதிக்கொண்டார்கள். எனினும் தொடரில் சச்சின் 618 ஓட்டங்கள் குவித்தது அடுத்த வருடம் உலகக் கோப்பையை எதிர்நோக்கியிருக்கும் இந்திய அணிக்கு நிச்சயம் நல்லதே.


இந்திய இளம் வீரர்களில் எஸ்.எஸ்.திவாரி, சுமன், ஜுஞ்சுன்வாலா, அஷ்வின், ரெய்னா, உத்தப்பா, ராயுடு, முரளி விஜய், ஜெகதி, பிரக்யான் ஓஜா, வினய்குமார், அசத்தினார்கள்.

எனினும் அனைத்து அணிகளிலும் மூத்த வீரர்களின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சச்சின், சவுரவ், திராவிட், கும்ப்ளே ஆகிய இந்தியரும், காலிஸ், ஸ்டெயின், பொலிஞ்சர், ஜெயவர்தனே, சைமண்ட்ஸ், வாஸ், மலிங்கா என இந்தியரல்லாதவர்களும் சிறப்பாகவே ஆடினார்கள்.

புதிய இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் நல்ல அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனினும் அரசியலும், ஆபாசமும் இல்லயென்றால் ஐ.பி.எல் இன்னும் சிறப்பாக இருக்குமென்பது என் கருத்து.

April 26, 2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றியின் மர்மம்

டிஸ்கி: ரொம்ம்ம்ம்ப சீரியஸா இந்த பதிவ பார்க்க வந்து ஏமாற்றமும் அடைந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

பதிவர் சரவணகுமரன் அவர்களின் பதிவைப் பார்த்த பின்னர் தான் இப்படி ஒரு பதிவு போடலாமென்ற எண்ணமே வந்தது. அவரது பதிவை இந்த சுட்டியில் பார்க்கலாம்.

 
எம்.ஏ.சி மைதானம் வர போன என் மஞ்சத்துண்டுக்கும் இந்த வெற்றில பங்குண்டு என்பதை என் உடன்பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்... தமிழகத் தலைவர் அப்படியும் சொல்லுவாரோ!!! 


மும்பைக்கு அவுகளே சங்கும் ஊதிக்கிட்டதா பேச்சு. இறுதிப் போட்டியில் சச்சின் ஆடாமலே இருந்திருக்கலாம். சச்சின் ஆடாமல் இருந்திருந்தால் கூட ஜெயித்திருக்கக் கூடும்.

ஹர்பஜன் ஆட வந்த இடத்தில் பொல்லார்ட் ஆட வந்திருக்க வேண்டும். அவர் ஏழாவது வந்ததும் மும்பைக்கு அவர்களே சங்கு ஊதிக்கிட்டது போன்றது தான்.

நீல நிறமணிந்த அணியே வெற்றி பெறும் என்றவர்களின் பேச்சை தகர்த்த சென்னைக்கு வாழ்த்துக்கள். சென்னைக்கு விசில் போட்டுட்டோமில்ல.

April 19, 2010

சென்னையின் சூப்பர் கிங் தோனி

ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அரையிறுதிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது.கடந்த இரு சீசனிலும் சற்று எளிதாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற சென்னை இந்த வருடம் அரையிறுதிக்கு தகுதி பெற ரொம்பவே சிரமப்பட வேண்டியதாகிப் போனது.

ஹெய்டன், தோனி, பத்ரிநாத், ஹஸி என மட்டைவீச்சாளர்கள் பலரும் சரியாக ஆடாததே இதற்கு காரணம்.

சில ஆட்டங்களில் மட்டைவீச்சாளர்களின் சொதப்பலினால் தோல்வியடைந்த சென்னை மற்ற சில ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களால் தோல்வியடைந்தது.

கடைசி ஆட்டத்தில் சென்னை, பஞ்சாப்பிற்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருந்தாலும் இதற்கு முன்னர் அவர்களுடனான போட்டியொன்றில் அடைந்த தோல்வியை தவிர்த்திருந்தால் இத்தனை போராட வேண்டி வந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்பிடம் முன்னர் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்ததாகி விட்டது. தமிழக அணித்தலைவர் பத்ரிநாத்தும், இந்திய அணித்தலைவர் தோனியும் ஐ.பி.எல் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவித்த ரெய்னாவின் அதிரடியுடன் சிறப்பான வெற்றியை சென்னைக்கு அளித்திருக்கிறார்கள்.

இதுவரை சென்னை ஆடிய 14 ஆட்டங்களில் காயம் காரணமாக தோனி மூன்று ஆட்டங்களில் ஆடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஆடாமல் இருந்த மூன்று ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே சென்னை வென்றிருந்தது. மற்ற 11 ஆட்டங்களில் அவர் எடுத்த மொத்த ஓட்டங்கள் 235 மட்டுமே.

இதனையும், துவக்க ஆட்டக்காரராக ஹெய்டன் சரியாக ஆடாமல் இருந்ததையும் ஆட்டம் துவங்கும் முன் தெரிவித்து வருத்தப்பட்டவர் இறுதி ஓவரில் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரி உட்பட 18 ஓட்டங்கள் எடுத்து வெற்றியடைந்த பின்னர் தனக்குள்ளேயே பேசிக்கொண்டதும், ஒரு குத்துச்சண்டை வீரரைப்போன்று விறைப்பாக நடந்து வந்ததும், அவரது தாடையில் அவராகவே ஓங்கி குத்தியதையும் என்னவென்று சொல்வதோ!!

அந்த தோனியை பாக்கணும்னா youtube ன் இந்த சுட்டிக்கு போங்க. ipl ன் காப்புரிமையால் காணொளியை இங்கு இணைக்கவியலவில்லை.

தோனி,சென்னை அணியின் மேல் அத்தனை காதல் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.(வாங்குகிற பணத்திற்கு நாங்கள் அரையிறுதிக்குக் கூட தகுதி பெறவில்லையென்றால் அது சரியல்ல என தோனியே ஆட்டமுடிவில் சொல்லிருந்தாலும்)

மூன்று ஐ.பி.எல் சீசன்களிலுமாக மொத்தம் 1316 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற புகழுக்கு சொந்தக்காரரான ரெய்னாவின் பங்களிப்பும், சென்னைக்கு சொந்தக்காரர் முரளி விஜயின் அதிரடி சதமும், அஷ்வின் மற்றும் பொலிஞ்சரின் பந்துவீச்சும் சென்னை அரையிறுதிக்கு தகுதி பெற மற்ற சில காரணங்கள் என்பதையும் மறுக்கவியலாது.

சென்னைக்கு விசில் போடு...தோனி பாணியில் இப்படித்தான் சொல்லத்தோன்றியது தோனியின் இறுதி சிக்சரைப் பார்த்த பின்.

நன்றி: cricinfo, ndtv

April 07, 2010

ஜெயவர்தனே எனும் Class act


Form is temporary but the Class is permanent அப்படின்னு ஒரு வாக்கு சொல்வாங்க கிரிக்கெட்ல, அது தான் கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனே சதமெடுத்த போது நினைவிற்கு வந்தது.

என்னைக் கேட்டால் ஐ.பி.எல் 3 ல் இதற்கு முன்னர் முன்னர் எடுக்கப்பட்ட மூன்று சதங்களை விட ஜெயவர்தனேவின் சதம் தான் சிறந்தது என்பேன்.

மும்பைக்கு எதிராக யூசுப் பத்தான் அதிரடியாக எடுத்த 100 ம் (8 சிக்ஸர்கள்), ராஜஸ்தானிற்கு எதிராக முரளி விஜய் குவித்த 127 ம் (11 சிக்ஸர்கள்) blast என்றால் ஜெயவர்தனே எடுத்த சதம் class எனலாம். வார்னர் கொல்கத்தாவிற்கு எதிராக எடுத்த சதமும் சிறந்தது என்றாலும் ஜெயவர்தனேவின் சதம் அதிலும் சிறந்ததே.

ஜெயவர்தனே கொல்கத்தாவிற்கு எதிராக சந்தித்த முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார்.  அதன் பின்னர் அவர் அடித்த 13 பவுண்டரிகளும் மிக நேர்த்தியாக, அருமையாக, கணித்து ஆடப்பட்ட shot கள். மொத்தம் 14 பவுண்டரிகளை அடித்த அவர் மூன்றே சிக்ஸர்களைத் தான் அடித்திருந்தார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சதமெடுத்தவர்களில் குறைவான சிக்ஸர்கள்(3) அடித்தவர் ஜெயவர்தனே தான். அதே நேரம் அதிக பவுண்டரிகளை(14) எடுத்தவரும் ஜெயவர்தனே தான். இதிலிருந்தே ஜெயா ஒரு class stroke player என்பது புரியும்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் 8000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்திருக்கும் ஜெயவர்தனே டெஸ்ட் போட்டிகளில் தான் அதிக சராசரி வைத்திருக்கிறார். 

2006 ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் அவர் குவித்த 374 ஓட்டங்கள் ஜெயசூர்யாவின் சாதனையான 340 ஓட்டங்களை முறியடித்தது இன்னமும் இலங்கைக்கான சாதனையாக தொடர்கிறது.

வாழ்த்துக்கள் ஜெயவர்தனேவிற்கு.

March 23, 2010

ஐ.பி.எல் அட்டகாசம்

இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் ஆட்டங்களின் புகைப்படங்களைக் கொண்டு புனையப்பட்டப் புகைப்பட பதிவு.

எத பாத்தாலும் பாக்கலைன்னாலும் கடைசி படத்த மட்டும் தவறாம பாத்திட்டு போங்க.



Mongoose பேட் குறித்த மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்


Related Posts with Thumbnails