December 31, 2020

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்!

 

கடந்த பத்து ஆண்டுகளில் அளப்பெரிய மாற்றங்களை அடைந்திருக்கிறோம்.

செய்தித்தாள்களை/ வானொலியை/ தொலைக்காட்சியை நாம் திருப்பினால் மட்டுமே நுகர முடிகின்ற செய்திகள் பிரேக்கிங் நியூஸ்களாய்; ஆப்களில் நோட்டிபிகேசன்களாய் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

இவை போதாதென்று மெசஞ்சர்/வாட்சப் என நீளும் செயலிகளின் டிங் டிங் சத்தங்கள் நமை அடிமைகளாக்கி வைத்திருக்கின்றன.

வேலைகளை முடித்து விட்டு அமருகையில் கூட அடுத்த கணம் கரங்கள் போனைத் துழாவத் துவங்கி விடுகின்றன.

அலுவல்கள், இ. மெயில், என ஆன்லைனிலேயே இருந்து விட்டு, நண்பர்கள், உறவுகளிடம் கணினி வழியே பேசி அமர்ந்தாலும் பல நேரங்களில் மனம் வெறுமையாய் உணர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.

வீடுகளில் கனிவான உரையாடல்கள் நிகழ்வது வெகுவாகக் குறைந்து வருவதாகவே படுகிறது. பெற்றோர் - குழந்தைகள்; கணவன் - மனைவி; அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை என நீளும் உறவுகள் இன்னும் உறுதிப்படுதல் அவசியம். இல்லையென்றால் உறவுகளில் அடுத்த தலைமுறை பெரிதாக நம்பிக்கைக் கொள்ளுதல் அரிது.

எந்தவொரு உறவிற்கும் அடிப்படை, அன்பும்; பகிர்ந்து கொள்ளுதலும்; வெளிப்படைத்தன்மையுமே!

இரு பத்தாண்டுகளுக்கு முன்னர் எனது நாட் குறிப்புகளின் முகப்பில் எல்லாம் 'Only Caring and Sharing would keep us all alive and peaceful' என எழுதி வைத்திருப்பேன்.

இன்று அன்பையும், பொருட்களையும் பகிர்ந்து கொள்ளுகிறோமோ இல்லையோ... டிஜிட்டல் தகவல்களை Share செய்து முடங்கிக் கிடக்கிறோம்.

அன்பு தணிதல் ஒன்று போதும் மனதின் சமநிலை மாறுவதற்கும்; உறவுகள் உடைந்து போவதற்கும்.

பெற்றோர் இருந்தும், பெயருக்கென உறவுகள் இருந்தும் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத ஒருவரது மனது, சமநிலையற்றதாக தொடர்ந்து பயணிக்கும்.

ஏமாற்றம், வெறுப்பு, தனிமை, என ஒன்றின் மேல் ஒன்றாக சுமையேற்றப்படும் சமநிலையற்ற அந்த மனது ஏதாவது ஓர் புள்ளியில் தனது ஆற்றாமையை/ உள்ளக்கிடக்கைகளை அழுகை வடிவிலோ, கூச்சலிட்டோ, தன்னைத் தானே/பிறரைக் காயப்படுத்திக் கொள்வதன் மூலமாகவோ வெளிப்படுத்துகின்றது. உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் கூட இது தான் அடிப்படை.

இவ்வுலகை நம்பிக்கையாய் எதிர்கொள்ள கொஞ்சம் கவனிப்பும், அரவணைப்பும் தான் அடிப்படை!

சிறுவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரிடமும் பேசுங்கள், அவர்கள் மனதும் இலகுவாகும். மொபைலிலும், கணினியிலும் வாசிப்புகள், உரையாடல்கள் தொடர்ந்தாலும் ஒன்றாய் அமர்ந்து பேசுதல் மனங்களை அமைதிப்படுத்தும்.

அடுத்த பத்தாண்டுகள் இன்னும் மேம்பட வெறுப்பு தவிர்த்த அன்பு நம்மிடையே நிலைக்க வேண்டும்.

உடன் பயணித்த, பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பும், நன்றிகளும்.

31/12/2020
சென்னை

December 30, 2020

விழாக்காலப் பேறுகள்

 

நான் சார்ந்திருந்த சமூகத்தில் டிசம்பர் துவங்கி விட்டாலே விழாக்கால உணர்வு மேலிடுவது பலர்க்கும் பொதுவானது. 


வீடுகளில் குடில்கள், வண்ணக் காகிதங்கள், நட்சத்திரங்கள், கொடிகள் வடிவமைப்பதில் இளைஞர்கள் தீவிரம் காட்டுவார்கள். 


வாழ்த்து அட்டைகள் அனுப்புவதில் முதிர்ந்தவர்கள் ஈடுபாடு காட்டுவார்கள். கூடவே தங்களுக்கு பிறர் அனுப்புகிற வாழ்த்து அட்டைகளை வீடு முழுவதும் அலங்காரமாக தொங்க விட்டிருப்பர்.


வீட்டைச் சுத்தம் செய்வதில் துவங்கி, வீட்டிலேயே இனிப்பு, பலகாரங்களைச் செய்வதற்கானப் பணிகளில் பெண்கள் மும்முரமாக இருப்பர். 


இவையனைத்தும் எனைச் சூழ்ந்திருந்த போதிலும், வாழ்த்து அட்டைகள் அனுப்புவது தவிர்த்து மற்றவைகள் எதிலும் அதீத நாட்டமில்லாமலே இன்றளவும் கடந்து வந்திருக்கிறேன். 


புத்தாடை அணிவதில் கூட ஆர்வம் காட்டியதில்லை. (அது என்னாத்துக்குங்கிறேன் 😆) 


இன்றைய தேதியில் வீடுகளில் வெகு அரிதாகத் தான் இனிப்பு, பலகாரங்கள் செய்கிறார்கள்.


கைப்பட எழுதி அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. 


அலங்காரப் பொருட்களையும் கடைகளிலேயே வாங்கி விடும் போக்கும் இருக்கின்றது. 


நமது நலனைக் குறித்து எண்ணுவதற்குக் கூட நேரமின்றி எதற்காகவோ ஓடிக்கொண்டு இருக்கிறோம். 


இப்படியானதொரு பொழுதில் தான்... வாழ்த்து அட்டைகளும்; கைப்பட எழுதி அனுப்பும் கடிதங்களின் முக்கியத்துவமும்; அவைகள் அளிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சியும் அடுத்த தலைமுறையினரையும் சென்றைடைய வேண்டும் என்கிற நோக்கில் மகர்களைக் கொண்டு எழுத வைத்தவை இவை. 


என்ன தான் கணினியிலும், கைபேசியிலும் பக்கம் பக்கமாய் எழுதினாலும், கையெழுத்துகள் தரும் மனநிறைவிற்கு அவை ஈடாகாது. 






December 24, 2020

வலிந்து திணிக்கப்பட்ட மரணங்கள்!

 காஞ்சிபுரம் சரண்யா வில் துவங்கி, மதுரவாயல் பிரிசில்லா - இவாலின்; விழுப்புரம் ரெமி; திருச்சி யஸ்வந்த் என தொடரும் மரணங்கள் நமது உள்ளாட்சி கட்டமைப்புகளின் செயலற்ற தன்மையைப் பறைசாற்றுகின்றன.


இவை எல்லாம் கடந்த இருபது நாட்களுக்குள் நிகழ்ந்த சோகங்கள்.

இந்த ஐந்து இழப்புகளும் மூடப்படாத கழிவு நீர் தொட்டிகளால் ஏற்பட்டவை.

நிர்வாக அலட்சியங்கள் மக்களைப் படுகொலைகள் செய்திருக்கின்றன. இதில் டிஜிட்டல் இந்தியாவிற்கு ஒன்றும் குறைவில்லை!

ஆறு, குளங்களில் குளிக்கையில் எதேச்சையாக மூச்சுக் குழாயில் நீர் சென்று விடும் போதே நாம் பெரும் அவதிக்குள்ளாகி விடுகிறோம்.

நல்ல நீர், மூச்சுக் குழாயில் செல்வதற்கே அந்த நிலை என்றால், நெடி வீசும் கழிவு நீர் மூச்சை அடைக்கையில் என்ன பாடு பட்டிருக்கும் அந்த உயிர்கள். சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

திருச்சியில் நேற்று காலமான யஸ்வந்த் ற்கு ஐந்தே வயது! 😥

சொச் பாரத் என்கிற வெற்று வாக்கு அரசியல் ஒருபுறம்; அந்த வெற்று வாக்கு அரசியலுக்கு ஒத்து ஊதி அண்டிப் பிழைக்கும் அடிமைக் கூட்டம் மறுபுறம்!

இவர்களை ஆட்சியாளர்களாகக் கொண்டதற்கு நாம் தான் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது! 

December 23, 2020

ஆதாமும் - ஏவாளும் - கொசுவும் பின்னே IQ வும்

 


கொஞ்ச நாளாவே இத பதிவு செய்யணும்னு நினைவு வரும்; அப்புறம்... அப்புறம்னு... தள்ளிப்போட்டு நேத்திக்கு கொசு கொடுத்த தொல்லையால 'இப்ப இல்லன்னா எப்ப'ன்னு தான் இது...


ரெண்டு மாசம் முன்னால ஒரு சண்டே காலைல பயலுக கூட பேசிட்டிருந்தேன். 


Me: இப்ப நாம கோயிலுக்குப் போகல சரி, ஆனா அங்க பேசுற, சொல்லிக் குடுக்குற கதைகள் உங்களுக்கும் தெரியணும்.


A2: சரிப்பா, ஆனா ஒரு டென் மினிட்ஸ் ல முடிச்சிருங்க! 🤭


Me: அடேய்... ஒரு 30 நிமிசமாவது கேக்கப்பிடாதா?!


A1: சரி பாப்போம், சொல்லுங்க


Me: ஏழு நாள் ல கடவுள் உலகத்த உண்டாக்கின கத தெரியுமா?!


A2: அதான் சண்டே கிளாஸ் ல 'செவன் டேஸ் ஆப் கிரியேசன்' ன்னு' சொல்லிக் குடுத்திருக்காங்களே!! 


Me: அப்போ, அந்த 6 + 1 நாட்கள் ல 'கடவுள் எத எத உண்டாக்கினார்' அப்டின்றத மட்டும் வாசிச்சி காட்டுங்க போதும்!


A2: வாசிக்கணுமா? தமிழ்ல யா!! 


Me: சரி அப்ப யூடியூப் ல வீடியோ பாத்து வாசிங்க. 


வாசிச்சி முடியிற நேரம் A1 ஒரு கேள்விய கேட்டான்...


A1: Genesis 1:28 ல "Humans can rule over every living thing on the earth" அப்டின்னு சொன்ன God சர்ப்பத்துக்கு மட்டும் Extra IQ வச்சிட்டாரோ? எப்டி ஆதாமும் ஏவாளும் ஏமாந்தாங்க!! 


Me: இப்பிடி கேள்விலாம் கேக்கப்பிடாது கேட்டியா!! அதையும் மீறி கேட்டன்னா... என் வரிசைல ஒன்னயயும் சேத்திருவாங்க 🤭


"அன்னைக்கு ஏவாள் பழத்த கடிக்காம இருந்திருந்தா இன்னைக்கு கொசு கடிக்காம இருந்திருக்கும்" ப்ச்ச்ச்ச் ... 😂



December 05, 2020

மழை - மிதப்பு - மெத்தனம்

 சென்னை மாதிரியான பெருநகரங்கள் என்றில்லை, முறையான நீர் வடிகால் அமைப்புகள் இல்லாத எந்த நகரமும்/ கிராமமும் சிறு மழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் செய்யும். 

சென்னையில் சில இடங்களில் வடிகால் அமைப்புகள் இருந்தும் நீர் வடியாமல் இருப்பதற்குக் காரணம், பிளாஸ்டிக் (நெகிழி) பைகளையும், குவளைகளையும் வீசும் மக்களின் முட்டாள்த்தனமும் அலட்சியமும் தான். 

கூடவே, கழிவுகளை நேரத்திற்கு நேரம் அப்புறப்படுத்தாமல் இருக்கும் பணியாளர்களின் ஏனோதானோ மன நிலையும் வடிகால்கள் அடைப்பிற்கு பெருங்காரணம்.

ஆண்டாண்டு காலமாய் சிறு மழைக்கே நகரம் மிதக்கிறது என்றால் அதற்கு முழு முதற் காரணம் அதனைத் தடுக்கவும், முறையான திடக் கழிவு மேலாண்மை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டிய அரசு அவற்றை செயல்படுத்தாமல் இருப்பதே! 

மக்களின் சுயநலன், அரசின் மெத்தனம், பணியாளர்களின் அலட்சியம் இவை மாறி, மக்கள் - பணியாளர்கள் - அரசு ஆகிய மூன்றும் பொதுநலன் என்கிற புள்ளியில் இணைந்து செயல்படவில்லை என்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறுமழைக்கே வெள்ளத்தில் மிதக்கத்தான் போகிறோம். 

Related Posts with Thumbnails