Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com

July 29, 2015

கலாம், எம் எஸ் வி மரணமும் ஊடகங்களின் மறுபக்கமும்

ஊடகங்களின் வளர்ச்சி ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில ஊடகங்கள் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்று அவைகளின் மறுமுகத்தை காட்டி விடுகின்றன. ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் மூலம் முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பலர் பகிர்வதும் இணையம் வளர்ந்த அளவு எண்ணங்கள் வளரவில்லை என்பதையும் உறுதி செய்கின்றன.

கடந்த இரு வார இடைவெளியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் இயற்கை எய்தினர். இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் அவர்கள் இருவர் தொடர்பான செய்திகளை வெளியிட்டும், அவர்கள் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்டும் இருந்தன.

எம்.எஸ்.வி அவர்கள் இயற்கை எய்திய மறு தினம் தந்தி தொலைக்காட்சியில் எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களிடம், பெண் தொகுப்பாளர் ஒருவர், விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த 'காதோடு தான் நான் பாடுவேன்' பாடலைப் பாடுங்கன்னு கேக்கவும், பயங்கரமா கோபப்பட்டாங்க ஈஸ்வரி அவர்கள். அது குமார் இசையமைத்தது, இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க, இது கூட தெரியாம ஏன் கேள்வி கேக்குறீங்கன்னுட்டாங்க.

அத சமாளிச்சிட்டு அந்த பெண் தொகுப்பாளர், எம்.எஸ்,வி இசையில வேற எதாவது பாடல் பாடுங்கன்னு கேக்கப் போக, அதுக்கு ஈஸ்வரி அவர்கள் சொன்ன பதிலை அந்த தொகுப்பாளர் மறக்க பல நாட்கள் ஆகலாம். 'மனுசர் இறந்திட்டாருங்கிற துக்கத்தில இருக்கேன், இதில பாடல் பாட சொல்றீங்களேன்னு சொல்ல, சரி தொடர்ந்து பேசுவோம்னு எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள் இணைப்பைத் துண்டித்து விட்டு தொடர்ந்து சங்கர் கணேஷ் அவர்களோடு உரையாடலைத் துவங்குகிறார்.

இது இப்படியெனில், கலாம் அவர்கள் மறைவிற்கு பின்னர் தேச, மத, இன, மொழி வேறுபாடின்றி மக்களும், ஊடகங்களும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில், 24/7 செய்திகள் என விளம்பரம் செய்திருக்கின்ற சத்தியம் தொலைக்காட்சியில் நள்ளிரவு ஒரு மணி வரை கிறிஸ்தவ போதனைகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். காலை 6 மணி வரை அவரகளது ட்விட்டர் பக்கத்திலோ, இணையதளத்திலோ கலாம் அவர்களின் மறைவு குறித்த எந்த பதிவும் கிடையாது. இதிலிருந்தே இவர்கள் எதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

மறுபுறம் சமூக வலைதளங்கள் வாயிலாக சில சுயநலம் பிடித்த பதிவர்கள், பழைய நிகழ்வுகளை, கலாம் அவர்களின் இறுதிப் புகைப்படம், அவர் பேசிய இறுதி காணொளி/லி எனவும்; அமெரிக்க அதிபர் ஒபாமா, கலாம் அவர்களின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க வருகிறார், கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதம் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருக்கிறது (திர்) என உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பதிவு செய்து மக்களை ஏமாற்றினர்.



இது போன்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பதிவு செய்பவர்கள் தான் இப்படி என்றால், அதன் ஆழமும், உண்மையும் அறியாமல் பகிர்பவர்களும் ஆயிரக்கணக்கானோர் என்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இன்று பெரும்பாலான வீடுகளில் இணைய இணைப்பு இருக்கிறது. ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் பலரும் பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. கூடவே, தகவல்களை உறுதிப்படுத்தாமல் பகிர்வதும் அதிகரித்திருக்கிறது. 2011 ஆம் வருடத்திலிருந்தே பலமுறை இந்த சமூக வலைதளங்கள் டாக்டர்.கலாம், ஆச்சி மனோரமா, இயக்குனர் பாலச்சந்தர் போன்ற பலரை  புரளிகளால் நோயாளிகளாக்கியிருக்கிறது, சாகடித்துமிருக்கிறது.

இது, 2014 ல் நான் நலமாய் இருக்கிறேன்  என மறைந்த அப்துல் கலாம் அவர்களே எழுதிய ட்வீட்.
  
சில like களுக்காகவும், share களுக்காகவும் சமூக வலைதளங்களில் இது போன்ற பொய் பிரச்சாரங்களை பதிவு செய்வது வாடிக்கையாகவே தொடர்கிறது. நாம் சுதாரிக்கவில்லையென்றால் நம்மையும் முட்டாளிக்கி விடும் இந்த இணைய சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பி.கு: இதுவரை ஷில்லாங்கில், கலாம் அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்ததோ, அவர் உரையாடிய இரு நிமிட உரையோ எங்கும் வலையேற்றப்படவில்லை.

July 28, 2015

அக்னிச்சிறகுகள் விரித்த அப்துல் கலாம் அவர்கள்

திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மறைந்து விட்டார் என்று இரவு 11 மணி அளவில் செய்தியறிந்ததும் முதலில் நம்பவில்லை. நல்ல உடல்திறனோடு இருந்தவருக்கு என்னவாயிற்று என்று யோசித்துக்கொண்டே தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி உறுதி செய்து கொண்டேன்.

அப்துல் கலாம் அவர்களைக் குறித்து நான் எழுதித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை எனினும் அவரது வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொண்ட சில பாடங்களை பதிவு செய்யவில்லையென்றால் அது எனது கடமையிலிருந்து மாறுவதாகப்படும்.

ராமேஸ்வரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர் எனினும் படிப்பில் அவரது கெட்டித்தனமும், கடின உழைப்பும், நேர்மையும், வைத்திருந்த உயர் பண்புகளும் தான் அவரை இந்த தேசத்தின் தலைவராகும் அளவிற்கு உயர்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டின் மூத்த விஞ்ஞானி, குடியரசுத்தலைவர் என்ற அகங்காரத்தையோ, தலைக்கனத்தையோ அவரது இறுதி மூச்சிருக்கும் வரை காண்பிக்கவில்லை என்பதை விட வேறு என்ன வேண்டும் அவரது எளிமையைப் பற்றிக் குறிப்பிட.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' கணியன் பூங்குன்றனார் பெருமையையும், தமிழின் பெருமையையும் உயர்த்திப் பேசியவர் என்பதையும், மரண தண்டனைக்கு எதிரான கொள்கையுடைவர் என்பதையும் மறந்து விட முடியாது. 



புத்தகங்கள் அதிகமாக வாசித்திராதவன் எனினும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அக்னிச்சிறகுகள் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு சில ஆண்டுகள் முன் வாய்த்தது. ஆங்கிலத்தில் முதலில் எழுதப்பட்ட அந்த புத்தகம் சைனீஸ், ப்ரெஞ்ச் உட்பட பதிமூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அவரது சுயசரிதை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அளப்பெரிது.



இன்றும் அவர் மறைவிற்கு நாடு, மொழி, இன, மத வேறுபாடின்றி இரங்கல் தெரிவிக்கிறார்கள் என்றால் அது அவரது எளிமைக்கும், திறமைக்கும், நற்பெயருக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் மரியாதையே.

அவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தாலும், இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனது குடும்பத்தில் ஒருவராக பாவிப்பதை அவரது மறைவிற்குப் பின் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர் மறைந்தாலும் அவரது புகழும், இந்திய விஞ்ஞானத்திற்கு அவர் அளித்த அறிவுக் கொடைகளும் என்றும் மறையாது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

-----

பி.கு: ஜூலை 28 ஒரு தினம் மட்டும், வழக்கமாக Facebook பக்கத்தை தற்காலிகமாக செயலிழக்க செய்வது உண்டு, காரணம், அதில் கடமைக்கென வலையேற்றப்படும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி எழுதுவதில் இருந்து தப்பிப்பதற்காக. அது போன்று Deactivate செய்து விட்டு மற்றுமொரு தலையங்கத்தில் எழுதலாம் என மனதில் எண்ணிக்கொண்டிருந்தேன், அதன் முன் தற்செயலாக தொலைக்காட்சியைக் கவனிக்கவே கலாம் அவர்களின் மறைவுச் செய்தி. அதனாலேயே இந்த பதிவு.

May 04, 2015

பாமரனுக்கு பாதகமாகும் பந்த்/ முழு அடைப்பு போராட்டங்கள்

கடந்த மாதம் ஏப்ரலில் மட்டும் குறைந்தது மூன்று முறை (முழு அடைப்பு) போராட்டங்களை சந்திக்க நேரிட்டது; மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று. துறைக்கு ஒரு சங்கங்களை வைத்துக் கொண்டு போராட்டம் என கொடிகளை பிடித்து விடுகின்றனர். அல்லல் படுவதோ சாமானியன் தான்.

பாமரனின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படும் என்பதறிந்தும் வங்கி ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் முதலானவர்களும் இதர துறை ஊழியர்களும் போராட்டம் என எளிதாக அறிவித்துவிட்டு வீடுகளுக்குள் முடங்கி விடுகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி போக்குவரத்து சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் பார்த்தவன் என்ற நிலையில் இதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதோடு கடந்த காலங்களில் இது போன்ற போராட்டங்களின் பாதிப்புகளையும் கடந்து வந்திருக்கிறேன்.

ஏப்ரல் 30 அன்று தமிழகத்தில் சில இடங்களில் பாதிப்பு இருந்தாலும், ஆளுங்கட்சியினர் சார்ந்த தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுபடாததால் அத்தியாவசிய பேருந்துகள் இயக்கத்திலிருந்தது சற்று ஆறுதல் தான். இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தமிழக எல்லைக்கு சற்று அப்பால் கேரள எல்லைக்குள் பணிக்காகவும், வியாபரத்திற்காகவும், மருத்துவ வசதிக்காகவும், விமான பயணங்களுக்காகவும் பயணித்தவர்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.


காரணம், தமிழக எல்லையான களியக்காவிளைக்கு அப்பால் பேருந்துகள் இயக்கப்படவில்லை, நான்கு சக்கர வாகனங்களும் கேரள எல்லைக்குள் நுழைய தயங்கிய நிலை தான் ஏப்ரல் 30 அன்று முழுவதும் இருந்து வந்தது. கேரள தமிழக எல்லைப் பகுதிகளைச் சார்ந்த சில வாகனங்கள் குறிப்பாக KL ல் துவங்கும் கேரள பதிவு எண்கள் கொண்டவையே அதிகம் இயக்கத்திலிருந்தன. அவையனைத்தும் மருத்துவமனை அவசரம்/திருமணம்/ஏர்போர்ட் அவசரம் என்று அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கண்ணாடிகளில் தாங்கிக்கொண்டே இயக்கப்பட்டன.

(கேரளம், 'ஹர்த்தால்' என்ற பெயரில் நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களுக்கு பெயர் போனது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்)

ஏப்ரல் 30 ம் அன்று தேர்வு ஒன்றிற்காக திருவனந்தபுரம் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்தேன், குறிப்பிட்ட தியதியில் தான் வந்தாக வேண்டும் என முன்னரே அறிவுருத்தப்பட்டிருந்ததால் சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம். பேருந்து நிலையம் சென்றால் களியக்காவிளை கடந்து கேரள எல்லைக்குள் பேருந்துகள் செல்லாது என்று அறிவித்து விட்டார்கள். நான்கு சக்கரவாகன ஓட்டுனரும் கைவிரிக்கவே வேறு வழியின்றி இரு சக்கர வாகனத்திலேயே சென்று வர வேண்டியதாகிப் போனது.


இவை போன்ற போக்குவரத்து முடக்கங்கள் பாமரனை பாதிப்பது ஒருபுறமென்றால் மருத்துவர்கள் போராட்டம் என்ற பெயரில் பாமரனின் உடல்நிலையை மேலும் கவலைக்கிடம் ஆக்குவதும், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்பதன் பெயரில் பண பரிவர்த்தனைகளை முடக்குவதும் இன்னும் தொடரத்தான் செய்கிறது. இவர்களின் நியாயமான கோரிக்கைகளை பணியிலிருக்கும் போது தான் அரசுக்கோ, அவர்கள் துறை சார்ந்த மேலிடங்களுக்கோ புரிய வைக்க வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான் புரியவில்லை.


தங்களின் பணி நேரத்தில் தான் போராட்டங்கள் செய்ய வேண்டுமா? பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் ஏன் அரசாங்க பொது ஊழியர்கள் போராட்டம் செய்ய மறுக்கின்றனர்? இவர்களது கோரிக்கைகளை முறையாக அரசிடமும், பெருகியிருக்கும் ஊடகங்கள் மூலமும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெரிவிக்கலாமே? 

April 21, 2015

குவைத் - நர்சிங்/ செவிலியர் பணியமர்த்தலில் கொள்ளை

இரு ஆண்டுகளாகவே குவைத்திற்கான செவிலியர் பணியமர்வில் நடைபெற்று வரும் பெருங்கொள்ளையை குறித்து எழுத வேண்டுமென மனதில் கருதி வந்திருந்தேன். செவிலியன் என்ற முறையிலும், குவைத்தில் ஐந்தரை ஆண்டு காலம் பணி செய்து வருகின்றதாலும் இந்த கொள்ளையைக் குறித்து நானறிந்தவற்றையும், பிற ஊடகங்கள் பிரசுரித்தவற்றையும் தொகுத்து ஒரு பதிவாக வலையேற்றுகிறேன்.

செவிலியப் பணி என்பது நமது மக்களால் இழிவான பணியாக கருதப்பட்ட காலம் போய் ஓரளவு அங்கீகரிக்கப்பட்ட பணியாக மாறி தற்போது பணம் கொழிக்கும் பணியாக மாறியிருக்கிறது (குறிப்பாக அயல்நாடுகளில்). எனினும், இன்றும் நம் குக்கிராமங்களில் செவிலியப்பணியை உயர்வாகப் பார்ப்பதும், குறிப்பாக பிரசவம் பார்க்கின்ற தாதிகளை பெரிதும் மதிப்பதும் தொடரத்தான் செய்கிறது.

தாதியர் பணிக்கு அயல்நாடுகளில் மிக அதிக வேலைவாய்ப்புகள் (குறிப்பாக வளைகுடா நாடுகளில்) தொடர்ந்து இருந்து வருகின்றன; இதற்கு முதல் காரணம் வளைகுடா நாடுகளில் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தாதியர் பணியை செய்ய தயங்குவதே! இந்த நிலைமை மெதுவாக மாறி வருகிறது என்றாலும், ஒரு மருத்துவமனையில் 2 சதவீதத்திற்கும் குறைவான அரேபியர்களே தாதியராக இருந்து வருகின்றனர்.

இதனால் அரபு நாட்டினர், தாதியர் பணிக்காக பெரும்பாலும் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத்தான் சார்ந்திருக்கின்றனர். அதற்காக அவர்கள் இந்திய முகவர்களை (ஏஜென்ட்) நாட வேண்டிய கட்டாயம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முகவர்கள் பலர் பெரும் பணக் கொள்ளையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெர்ரி வர்கீஸ் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த முகவர்கள் ஒருபுறமிருந்தாலும், மற்ற பல முகவர்கள், அவர்களின் துணை முகவர்கள், அவர்களின் கீழ் முகவர்கள், விசா மற்றும் பயணக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளைகள் அடிக்கின்றனர்.

மற்ற வளைகுடா நாடுகளைக் காட்டிலும் பணமதிப்பு உயர்வாக இருப்பதாலும், வருமானமும் அதிகம் ஈட்டமுடியும் என்பதாலும் செவிலியர்கள் பலர் குவைத்திற்கு வருவதை முன்னுரிமையாகக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக குவைத் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிவதே அவர்களின் குறிக்கோள்; ஏனென்றால் அப்போது தான் 60 வயது வரை பணிக்கு பங்கம் வராது; வேலையும் நிரந்தரம்.

இத்தகைய (MOH-Ministry Of Health) அரசாங்க மருத்துவமனைகளுக்கு தாதியர்களை பணியிலமர்த்த 2004 ஆம் ஆண்டு, 2 லட்சம் ரூபாயில் ஆரம்பித்த இவர்களின் லஞ்சம் இன்று 22 லட்சமாக ஓங்கி நிற்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 10 லட்சம் என இருந்த (மு)க(ய)வர்களின் லஞ்சம் கடந்த ஏழு மாதங்களுக்குள் இரண்டு மடங்கு கூடி 20 லட்சம் என உயர்ந்திருப்பது பலரை அதிரச்செய்தது என்றாலும், அத்தனை லகரங்களை வாரியிறைத்து வேலையெடுக்கவும் தயங்காதவர்களைப் பார்க்கும் போது வியப்பாகத்தானிருக்கிறது.

கடந்த வருடத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 10 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணியிலமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இந்தியாவிற்கு வெறுங்கையுடன் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முழுமையாக ஒரு வருடம் கூட அவர்கள் பணியிலமர்த்தப்படவில்லை. முகவர்களுக்கு வாரியிறைத்த 10 லட்சத்தைக் கூட மீண்டும் சம்பாதிக்க வழியில்லாமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றவர்களும் உண்டு.

இதனை பலரும் பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்தவித பலனும் இல்லாமல் இருந்தது, எனினும் முகவர்களுக்கிடையேயான போட்டி பொறாமையினால் தற்போது கேரளா, கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட 'அல் ஷராஃபா' நிறுவனம் சி.பி.ஐ யின் பிடியில் மாட்டியிருக்கிறது. இவர்கள் 300 கோடிக்கும் மேல் ஊழல் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
  
19,500 ரூபாய் மட்டுமே செவிலியர்களிடமிருந்து கட்டணமாக வாங்க வேண்டிய இம்முகவர்கள் 19.500 ஐ தொடர்ந்து மேலும் இரு பூஜ்யங்கள் சேர்த்து 19,50,000 ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்த தொகைக்கு சான்று ஏதும் அளிப்பதும் கிடையாது.

கிட்டத்தட்ட 1600 செவிலியர்களை இவ்விதம் குவைத்தில் பணியில் அமர்த்தியுமிருக்கிறார்கள். கணக்குப் பார்த்தால் எத்தனையோ கோடிகள் இவர்கள் விழுங்கியிருக்கிறார்கள். இந்த 'அல் ஷராஃபா' நிறுவனத்தின் நிர்வாகி வர்கீஸ் என்பவர், கேரள முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு மிக நெருக்கமானவர் என கேரள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் இந்த ஊழல் சி.பி.ஐ ன் விசாரணையில் இருக்கவே, அடுத்த மாதம் முதல் குவைத்தில் தாதியர்கள் பணியமர்வு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற ODPEC/NORKA/OMC மூலம் மட்டுமே நடைபெற வேண்டுமேன அரசு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இந்த ஊழலின் பின்புலத்தில் கேரளத்தைச் சார்ந்த முகர்வர்கள் மட்டுமல்லாது, கேரளத்தின் பிரபல அரசியல்வாதிகளுக்கும், குவைத் அரசு மருத்துவத்துறையைச் சார்ந்த சில பணியாளர்களுக்கும் பங்கு உண்டென்று சி,பி.ஐ ன் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

குவைத் அரசும் இந்த ஊழல் சம்மந்தமாக விசாரணை நடத்தப்படும் என கடந்த நவம்பர் மாதமே அறிக்கை வெளியிட்டிருந்தது. நேற்றைய தகவலின் படி இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட வர்கீஸ் குவைத்தில் தங்கியிருந்து விசாக்களை வழங்கி வருவதாக ஏசியாநெட் தொலைக்காட்சி தெரிவிக்கிறது. அவர் சரணடைய வேண்டி கேரள காவல்துறை விதித்த கெடு ஏப்ரல் 20 ஆம் தேதியோடு முடிந்த பின்னரும் அவர் சரணடையாததால் அவரை இந்தியாவிற்கு கொண்டு வர சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ன் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளது.

இத்தனைக்கும் நேற்று 20 ஆம் தேதி அவர் குவைத்தில் கைது செய்யப்பட்டு, ஷுவைக் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் குவைத்தில் அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாகவும் ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது.

குவைத் தாதியர் பணியமர்வில் வளைகுடா நாடுகளில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இத்தனை கோடி அளவு ஊழல் நடைபெற முதல் காரணம் முகவர்களென்றாலும், எத்தனை லகரங்களானாலும் கொடுத்து பணியிலமரும் செவிலியர்களையும் குற்றம் சொல்ல வேண்டியது தான் இங்கு துரதிருஷ்டம்.

இதே 'அல் ஷராஃபா' நிறுவனத்தில் 2009 ஆம் ஆண்டில், குவைத்தில் தனியார் மருத்துவமனை பணி ஒன்றிற்காக கட்டணம் என நம்பி நான்கு லட்சம் ரூபாயை கொடுத்தவன் என்ற நிலையில் எனக்கும் வருத்தமுண்டு.

தகவல்கள் ஆதாரம் - ArabTimesOnline, KuwaitTimes, AsiaNet, MediaOneNews

February 14, 2015

தில்லியின் காதல் நாயகன் - அரவிந்த் கெஜ்ரிவால்

பிப்ரவரி 14 - உலகம் இன்று, வேலன்டைன் தினம் - காதல் என உணர்வுப்பூர்வமாக அணுகிக்கொண்டிருக்க. தில்லியில் பாமரன் மீதான தன் காதலை ஆம் ஆத்மி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

46 வயதான அரவிந்த் கெஜ்ரிவால் எட்டாவது முதல்வராக தில்லியில் அமர்ந்திருக்கிறார் இன்று; அமர்ந்திருக்கிறார் என்று சொல்வதை விட பாமரனுக்காக தன் முதுகில் பாரத்தை ஏற்றியிருக்கிறார் என்று சொல்லலாம். 

வெகு விரைவாக ஒரு உயர்ந்த பதவியில் அவர் அமர்ந்து விட்டதாக தோன்றினாலும், இந்த உயரத்தை அடைய 14 வருடம் ஆகியிருக்கிறது என்றால் அது சற்று ஆச்சர்யமே! அவரது வெற்றிக்குப் பின் 14 ஆண்டு கால கனவும், கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், விடாத முயற்சிகளும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாத மன தைரியமும் இருந்திருக்கின்றன எனலாம்.

கூடவே, அனைத்து தருணங்களிலும் உறுதுணையாக இருந்த துணைவியும், மக்கள் நலனுக்காக களத்தில் நின்று தொடர்ந்து போராடி வரும் சக நண்பர்களும் அவரது பெரிய பலம். 

பதவியேற்பு விழாவின் போது அவர் பல விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், என்னை அதிகம் கவர்ந்தது 'lal battis' குறித்த கருத்தே! அமைச்சர்களின் வாகனங்களில் உபயோகப்படுத்தும் சிவப்பு விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டோம் என்பதே அது.

அதோடு ஆட்சி செய்கிறோம் என்ற பெயரில் தற்பெருமை கொள்வதோ, அமைச்சர் செல்கிறார் என்பதற்காக போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பதோ, பாமரனுக்கு இடையூறாக இருப்பதோ கூடாது எனவும் தெளிவாக பேசியிருக்கிறார். இது போன்ற அவர்களது எளிமையும், சாதாரண மனிதர்களையும் மதித்து நடக்கும் போக்கும் தான் அவர்களுக்கு வெற்றி பெற்று தந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

முன்னாள் கேரள முதல்வரான அச்சுதானந்தன் இது போன்றதொரு எளிமையான வாழ்க்கை முறையைத்தான் கடைபிடித்து வந்தார்; சாமானியர்களோடு கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார், காய்கறி சந்தைக்கு கூட அவரே சென்று வருவார். ஆனால் அங்கிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரால் ஊழலை சமாளிக்க முடியவில்லை. 

அதே போன்றதொரு எளிமையை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பார்க்க முடிகிறது. ஊழலுக்கு எதிரான அவரது முயற்சி வெற்றியடைய வேண்டும் என்பதே பாமரனின் எதிர்பார்ப்பு. 

தில்லியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளும், இளைஞர்களுமே. இந்த படையினர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியர்களுக்காக தற்போது நிர்ப்பந்தத்தால் அரசியலில் பிரவேசித்திருக்கும் கெஜ்ரிவால் அவர்கள் கல்கத்தாவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருந்த சமயம் அங்கிருக்கும் அன்னை தெரசாவின் தொண்டு நிறுவனத்திலும், ராமகிருஷ்ணா மிஷனிலும் சிறிது காலம் ஆர்வலராக இருந்திருக்கிறார். 

பாமரனின் கஷ்டம் புரிந்த ஒருவரால் தான் இத்தனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

பெரிய அரசு அலுவலகங்களிலிருந்து, சிறு அரசு பணிகள் நடக்கும் இடங்கள் வரை ஊழல் வியாபித்திருந்ததை சான்றிதழ்களில் அரசின் அங்கீகார முத்திரை வேண்டி தில்லி சென்றிருந்த போது கண்கூடாக காண நேர்ந்தது. இதற்கு முழுமுதற் காரணமே இடைத்தரகர்கள் தான். 

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதுமே இது போன்ற இடைத்தரகர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக தகவல்கள் வருகின்றன; இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் தில்லி விரைவில் ஊழலற்ற மாநிலமாகும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 

ஆம் ஆத்மியின் பாமரனனுடனான இந்த புதிய காதல் அத்தியாயம் சுபமாக முடிவுரை எழுதப்பட்டால் இன்னும் பல மாநில ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு முன்னுரையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பிரபல கருத்துச்சித்திர கலைஞர் ஆர். கே. லக்ஷ்மன் அவர்கள் இன்று இருந்திருந்து கெஜ்ரிவாலின் வெற்றியை பார்த்திருப்பாரானால் பெருமகிழ்ச்சியடைந்திருப்பார்.


January 31, 2015

இறை நம்பிக்கை எனும் இம்சை

எவரொருவர் தமது இறை நம்பிக்கையை
பிறரொருவர் மீது திணிக்க விழைகிறாரோ
பிறர் கேட்க வேண்டுமென
பட்டி தொட்டியெல்லாம் ஒலிபெருக்கி
வைத்து சாமானியர்களை சிரமத்திற்குள்ளாக்குகிறாரோ
அப்போதே அவரின் இறை நம்பிக்கை
கேள்விக்குறியதாகி விடுகிறது;

அவரது இறை கோட்பாடுகள் மேல்
அவருக்கு இருக்கிற நம்பிக்கையும்
குறைவுள்ளதாய் தோன்றச் செய்கிறது.

மெய்யான இறைநம்பிக்கை கொண்டவர்கள்
நல்லெண்ணம் கொண்டு பிறருக்கு
நல்லது செய்பவகளே ஒழிய
கூப்பாடும் கூத்தும் காண்பிப்பவர்கள் அல்லர்!

July 15, 2013

தந்தி சேவைகள் - வரலாறு ஆகியது

ஜூலைத்திங்கள் பதினான்காம் தேதியோடு தந்தி சேவைகள் நிறுத்தப்படும் என இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. மழையென்றும், வெயிலென்றும் பாராமல் தங்களது பணியை ஒரு சேவையாக செய்த ஒவ்வொரு தபால்துறை ஊழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.








April 26, 2012

அன்பர் 'அலெக்ஸ்' கடத்தலும் உணர்த்தும் விஷயங்களும்

வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு ஏதும் நிகழ்கையில் மட்டும் தான் மனமும், எண்ண ஓட்டங்களும் சற்றே விசாலமடையும் அல்லது வேறு விதமாக யோசிக்க துவங்கும்; அதிலும் குறிப்பாக நமக்கு நெருக்கமான ஒருவரை கணக்கில் கொள்கையில் அவர் சார்ந்த விஷயமென்றால் இன்னும் ஆர்வமாக அந்த விஷயத்தை அணுகுவோம். 

அப்படித்தான் நண்பர் 'அலெக்ஸ்' கடத்தப்பட்ட பின்னர் அவரை சார்ந்தவர்களாகட்டும்  நான் உட்பட்ட அவரை முன்பே அறிந்தவர்களாகட்டும்,   இன்னும் விசாலமாக யோசிக்க/ விவாதிக்க துவங்கியிருக்கிறார்கள்/ துவங்கியிருக்கிறோம். 


'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்று சொல்லிப் போனதெல்லாம் இறந்த காலமாகிப் போய் கொண்டிருக்க இன்னமும் நிகழ்காலமாகக் கருதிக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வடக்கில் செழிப்பாக இருக்கிறார்கள் இங்கு நாம் தான் ரேஷன் அரிசிக்கும்,மண்ணெண்ணைக்கும் தவியாய் தவிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புபவர்களும்  இல்லாமலில்லை.

இவ்வித மனநிலைமை கொண்டவர்களில் பலர் நக்சலைட்டுகள் குறித்தோ, வடகிழக்கு மாநிலங்கள் குறித்தோ, அங்கு வாழும் பழங்குடி - ஆதிவாசிகள் குறித்தோ, அவர்கள் படும் அல்லல்களை குறித்தோ அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்விதம் ஆதிவாசிகள் படுகிற சிரமங்களை அறியாதவர்களுக்காகட்டும், 'அலெக்ஸ்' மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிகிறார் என்று (மட்டுமே) அறிந்தும் அவர் எவ்விதமான சூழ்நிலையில் பணிபுரிகிறார் என்று அறியாதவர்களுக்காகட்டும், அன்பர் 'அலெக்ஸ்' அவர்களின் தற்போதைய நிலைமை, நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருக்கும் நக்சல் பிரச்சினையையும்; சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் இன்னமும் மின்சாரமில்லாத, சரியான மருத்துவ வசதிகள் இல்லாத குக்கிராமங்களையும்; அவர்கள் மத்தியில் பணிபுரியும் 'அலெக்ஸ்' அவர்களின் அயராத உழைப்பையும்; அர்ப்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

சாதாரணமாக கலெக்டர் என்றாலே உயர்ந்த பதவி என்பதும், எவ்வித பிரச்சினையும் இல்லாத வேலை என்பதும், சுகபோக வாழ்க்கை என்ற எண்ணமும் தான் பலரிடம் மேலோங்கியிருக்கிறது. பேச்சு வழக்கில் கூட ஒருவரை உயர்த்திக் கூற வேண்டுமென்றால் "அவனுக்கென்ன, கலெக்டர் மாதிரி வாழுறான்" என்பது மாதிரியான சொற்றொடர்களைத் தான் சமூகம் பிரயோகித்து வருகிறது.

அப்படித்தான் நானும் கருதி வந்திருந்தேன்... ஆனால் ஒரு மாவட்டத்தை ஆளுகிறவருக்கு எத்தனை விதமான நெருக்கடிகள் என சற்று சிந்தித்தால் தான் புரிய வருகிறது.

சமூக பணிகள் என்ற பெயரிலும், ஏழைகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரிலும் இன்று பணத்தை மட்டும் அனுப்பி விட்டு கைகட்டி நிற்கின்ற நாம் எங்கே...!! களத்தில் நேரடியாக, மக்களோடு மக்களாக அமர்ந்து அவர்கள் தேவைகளைக் கருத்தில் கொண்டு அர்ப்பணிப்போடு பணிபுரிகின்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்கே!!!

சமூக நலனுக்காக, மக்கள் உரிமைகளுக்காக உழைக்கும் அலெக்ஸ் போன்றவர்கள் அனைவரும் வணக்கத்திற்குரியவர்கள். இவர்கள் முன் நாம் ஒன்றுமில்லை.

பள்ளிப்பருவத்தில் நெல்லையில் அவருடனும்,பிற நண்பர்களுடனும் பரிமாறிய சம்பாஷனைகளும், கிரிக்கெட் ஆட்டங்களும் தான் நினைவிற்கு வருகின்றன.

'அலெக்ஸ்' மீண்டும் வருவார்; மீண்டு வருவார்; என்ற நம்பிக்கையிருக்கிறது :)

April 04, 2011

கிரிக்கெட்டும் வெற்றியும் சச்சினும் பதிவுலகமும்


பதிவுலகில் கால் வைத்த இந்த நான்கு வருடத்தினிடையில் கிரிக்கெட் குறித்து எழுதாமல் இருந்ததில்லை; எனினும் இந்த வருடம் இதுவரை ஒரு கிரிக்கெட் பதிவும் எழுதாமல் இருந்து விட்டேன். இந்தியா வெற்றி பெற்ற பின்னரும் சில வார்த்தைகள் எழுதவில்லையென்றால் அது சரியில்லை என்பதால் தான் இந்த பதிவு.

ஏப்ரல் 2 அன்று இரவு இந்தியர்கள் பலரும் அடைந்த மகிழ்ச்சி சொல்லவொண்ணாதது. அறுபதை கடந்த பலரும் ஆறு வயது சிறாராய் மாறியிருந்தனர். தெருக்கோடியில் வசிப்பவரிலிருந்து பல கோடியில் மிதப்பவர் வரை ஒரே மைதானத்தில் இருந்து இந்திய அணி விளையாடியதை பார்த்து ரசித்தனர். அங்கு வேற்றுமை ஏதுமில்லை. அனைவரின் ஆசையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பது மட்டுமே.

பதினொரு வருடங்கள் பின்னிட்டு பார்க்கிறேன். 2000 ல் சூதாட்டம், ஊழல் என இந்திய கிரிக்கெட் நலிவுற்றிருந்த நேரம் அது. அசாருதீன், ஜடேஜா, மோங்கியா என பலருக்கு அதில் பங்கிருந்ததாகவும் செய்திகள் வெளிவரவே கிரிக்கெட்டை வெறுத்தவர்களில் நானும் ஒருவன்.

அதன் பின்னர் கிரிக்கெட்டில் மீண்டும் ஈடுபாடு காண்பிக்க தூண்டியது சச்சின் தான். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை வழிநடத்திய பெருமை சச்சினைச் சாரும். அந்த உலகக்கோப்பை தொடரின் நாயகனும் சச்சின் தான்.

அப்படியாக 11 ஆண்டு கசப்புகளைப் பின்னுக்குத் தள்ளி 11 ஆம் எண் அணிந்திருந்த சங்கக்காராவின் பதினொன்று பேரையும் பின் தள்ளி இந்திய நேரப்படி 11 மணியளவில் 2011 ல் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 

21 வருடங்கள்; ஐந்து உலகக்கோப்பை தொடர்கள் ஆடிய பின்னரும் கிடைக்காத பெருமை ஆறாவது முறை தான் கிடைத்திருக்கிறது சச்சினுக்கு.

21 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி சுமந்தவரை இன்று நாங்கள் சுமப்பதில் பெருமை அடைகிறோம் என விராட் கோலி கூறியிருப்பதும்; பெயர் சொல்ல விரும்பாத ஒரு முக்கியமானவருக்கு தான் இந்த வெற்றி என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு பின்னர் புதிர் போட்ட யுவ்ராஜ், சச்சின் தான் அந்த முக்கியமான நபர் என இப்போது கூறியிருப்பதும்; சச்சினுக்கு இந்த கோப்பையை சமர்ப்பிக்கிறோம் என தோனி, சகீர், ஹர்பஜன் உள்ளிட்ட பலரும் கூறியிருப்பதும்; சச்சின் பெருமைப்பட வேண்டியவை.

எளிமை, பொறுமை, இவற்றை சச்சினடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என அணியின் பயிற்சியாளர் கிர்ஸ்டனே கூறியிருப்பது சச்சினுக்கு மேலும் புகழ் சேர்க்கும்.

சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்றுவிடும் என சமீபகாலமாக நிலவும் கருத்து ஏற்புடையதல்ல. ஒருதின போட்டிகளில் சச்சின் அடித்திருக்கும் 48 சதங்களில்  33 சதங்கள் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தவை. அவர் சதமடித்தாலும் அணியிலிருக்கும் பிறர் ஒத்துழையாமல் வெற்றி எப்படி வரும்?

சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்றிருந்த நிலைமை தற்போது இல்லை என்பது தான் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய பலமே. சச்சின் ஆடவில்லையென்றால் சேவாக், அவருமில்லையென்றால் கோலி, யுவி, ரைனா என இளம்பட்டாளமே இருக்கிறது. என்றாலும் சச்சின் அணியில் இருப்பதே மற்ற வீரர்களுக்கு ஒரு பலமும், தன்னம்பிக்கையும் கூட.

அணித்தலைவர் தோனியையும், பயிற்சியாளர் கிர்ஸ்டனையும் இங்கு குறிப்பிடாவிட்டால் இந்த பதிவு முழுமையடையாது. சச்சினை தூக்கி சுமந்த இந்திய அணியினர் அதன் பின்னர் கிர்ஸ்டனையும் தூக்கிக் கொண்டு மைதானத்தில் வலம் வந்தனர் என்றால் எந்த அளவிற்கு கிர்ஸ்டன் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கின்றனர் என்பது புரியும்.

கிர்ஸ்டனை வெகுநேரம் யுவ்ராஜ் கட்டியணைத்துக் கொண்டிருந்தார். யுவ்ராஜை உடல்திறன் சரியில்லை என்பதற்காகவும், தொப்பை அதிகமாக இருக்கிறது என்பதற்காகவும் அணியை விட்டு விலக்கி வைத்ததும் கிர்ஸ்டன் தான் என்பது பலருக்கு நினைவில்லாமல் இருக்கலாம். யுவ்ராஜை மீண்டும் அணியில் சேர்த்த பெருமையும் தொடர் நாயகன் விருதிற்கான அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையும் கிர்ஸ்டனையே சாரும். 

எந்த சூழ்நிலையிலும் பதட்டமே அடையாத இரு அணித்தலைவர்களை இறுதிப் போட்டியில் கண்டது மகிழ்ச்சியே. பதட்டம் அடைந்தாலும் அதனை வெளிக்காண்பிக்காமல் வீரர்களின் திறமையை மட்டும் வெளிக்கொணரும் யுக்தி தெரிந்தவர்கள் தோனியும், சங்கக்காராவும்.

தோனியை சுற்றி இருக்கும் திறமையுள்ள இந்திய அணியினரும் இந்த வெற்றியை இலகுவாக்கினர் என்றால் அது மிகையல்ல. இறுதிப்போட்டி வரை உலகக்கோப்பை போட்டிகளில் தோனியின் அதிகபட்ச ஓட்டம் 34 தான். எனினும் இறுதிப்போட்டியில் அமர்க்களப்படுத்தி விட்டார்.

எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுவதும் தோனிக்கு அழகு தான். உதாரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான மைதானத்தில் அஷ்வினை வெளியே வைத்துவிட்டு நெஹ்ராவை எடுத்தது தவறு தான் என ஒப்புக்கொண்டது அவரது பாணி(இத்தனைக்கும் நெஹ்ரா 10-0-33-2 என்ற முறையில் பந்து வீசி வெற்றிக்கு வழி வகுத்திருந்தார்) அவரை எடுத்தது சரி தான் என்று தோனி அப்போது கூட நியாயம் கற்பிக்கவில்லை.

உலகக்கோப்பையை வென்ற பின்னர் அளித்த பேட்டி ஒன்றில் கங்குலி, திராவிட் மற்றும் கும்ப்ளே ஆகிய மூவரையும் (சச்சின் உட்பட) நினைவு கூர்ந்ததன் மூலம் தோனிக்கு மேலும் நற்பெயரே. 



இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய மற்றொரு காரணம், வீரர்களின் உடற்திறனும், மனவலிமையும் தான். இல்லையென்றால் கால், அரை, மற்றும் இறுதிப் போட்டிகளில் விழுந்து விழுந்து தடுத்திருப்பார்களா? இறுதிப்போட்டியில் 99 ஓட்டங்களை singles என்ற முறையில் ஓடி தான் எடுத்திருப்பார்களா? இதற்காக ஒரு வருடத்திற்கு முன்னரே திட்டங்களை தீட்டிய பயிற்சியாளருக்கும், பிற பயிற்சியாளர்கள் @ Supporting Staff ற்கும் இந்திய அணி கடமைப் பட்டிருக்கிறது.  

ஆட்ட முடிவில் பேசிய சங்கக்காராவின் நேர்த்தியான பேச்சு பலரை கவர்ந்திருக்கக்கூடும். இந்த இந்திய அணியை தோற்கடிக்க வேண்டுமானால் 350 ற்கும் குறைவான ஓட்டங்கள் போதாது என வெளிப்படையாக பேசியது பாராட்டிற்குரியது.

இந்த சந்தோஷங்களுக்கிடையில் கிரிக்கெட் ஏன்? இலங்கையில் தமிழனை காவு வாங்கிய ராஜபக்ஷேவின் வருகை ஏன்? தமிழினம் இலங்கையில் அழியும் போது தமிழன் ஏன் உலகக்கோப்பை வெற்றிக்கு சந்தோஷப்பட வேண்டும் என கேள்வி எழுப்புவர்களுக்கு... விளையாட்டை விளையாட்டாய் பார்த்தாலே போதுமானது என்பது தான் எனது பதில்.

 ---------------
MEMORIES THAT WILL LAST LONG FOR A LIFETIME
ரஜினி, கஜினி, தோனி மைதானத்தில் ஒருசேர இருக்கையில் இந்தியாவிற்கு ஏது தோல்வி என தத்துவமும் பேசுகிறார்கள் சில கிரிக்கெட் ரசிகர்கள். 

INDIAN TEAM SALUTES MURALI

SANGAKKARA THE COOL CAPTAIN STILL SMILES EVEN AFTER THE DEFEAT

SACHIN SHARES HIS HAPPINESS WITH HIS LONG TIME FAN SUDHIR GAUTAM

PLAYER OF THE TOURNAMENT YUVRAJ SINGH



நன்றி: cricinfo
Related Posts with Thumbnails