Showing posts with label FIFA 2010. Show all posts
Showing posts with label FIFA 2010. Show all posts

July 12, 2010

FIFA 2010 சில நினைவுகள்


 


July 11, 2010

தோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன பிற

தோனி

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் தோனிக்கு கல்யாணம் ஆயிடிச்சா? என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்பிடின்னு காமெடி பண்ற மாதிரி தான் இன்னைக்கு பலரும் கேள்வி கேக்கிறாங்க. அந்த அளவுக்கு 'தல'(அஜீத் ரசிகர்கள் மன்னிக்க... இவரு கிரிக்கெட்டுக்கு தல :)) சத்தமே இல்லாம கல்யாணத்த முடிச்சிருக்காரு. வாழ்த்துக்கள் மிஸ்டர் கூல் தோனி.

மதராசப்பட்டினம்

வெகு நாட்களுக்கு பின்னர் தமிழில் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த நிறைவு திரையரங்கை விட்டு வெளியே வரும் போது இருந்ததை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்க முனைந்ததற்கே திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.திரையரங்கின் வெளியே இதே விஷயத்தைக் குறிப்பிட்டு பாராட்டிய குடும்பங்களை காணமுடிந்தது(குவைத்தில்). என்றாலும் ராவணனுக்கு வந்த கூட்டம் இங்கு மிஸ்ஸிங்.

அந்த காலத்து மதராஸை அருமையாக காட்டியிருக்கிறார்கள். கலையும் ஒளிப்பதிவும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவை. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் அசத்தியிருக்கிறார். என்றாலும் "வாம்மா துரையம்மா" என்ற பாடலுக்கு உதித் நாராயணனை பாட அழைத்து அந்த பாடல் வரிகளை ஏன் அசிங்கப்படுத்தினார்கள் என்பது தான் புரியவில்லை.

"ஆருயிரே" பாடலை படமாக்கிய இடமும், விதமும் வெகு அருமை. 'Amy Jackson' ன் மிக நேர்த்தியான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பு. அவரை இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது. ராவணனில் அரைகுறை ஆடையுடன் ஐஸின் அங்கங்களை காண்பித்து முகம் சுளிக்க வைத்த ஆபாசம் துளியும் இங்கு இல்லை என்பது ஒரு பெரிய சமாதானம். ஏமி பல இடங்களில் நடிகை நிஷா அமோகாவை நினைவுபடுத்துகிறார்.


ஏமியின் இணையதளமான இந்த http://www.amylouisejackson.com/ தளத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கும் இந்த திரைப்படத்தில் அவர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசமே இயக்குனரின் வெற்றி.

மறைந்த ஹனிஃபாவும் பிற துணை நடிகர்களும் சிரிக்க வைத்து வயிற்றை பின்னி எடுக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலம் கற்கையில் தமிழில் 'அ' விற்கு அடுத்து 'ஆ' என்றால் ஆங்கில 'A' விற்கு பின்னர் 'ஏ' வும் 'B' விற்கு பின்னர் 'பீ' யும் அல்லவா வரவேண்டும் என்கின்ற போது திரையரங்கே சிரிப்பலையில் மிதக்கிறது. மதராசப்பட்டின திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.

கால்பந்து-FIFA 2010 FINALS

ஜூன் 11 அன்று துவங்கிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஜூலை 11 அன்று முடிவுறப்போகின்றன. இதுவரை உலகக்கோப்பையே வெல்லாத நெதர்லாந்து @ ஹாலந்தும் ஸ்பெயினும் இறுதிப்போட்டியில் ஆடவிருக்கின்றன. நெதர்லாந்து ஏற்கெனவே 1974 மற்றும் 1978 ல் இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஸ்பெயினுக்கு இதுதான் முதல் இறுதிப்போட்டி.

ஜெர்மனியைச் சார்ந்த ஆக்டோபஸ் ஒன்று ஸ்பெயினுக்கு தான் வெற்றி என்று கணித்திருப்பதாக சொல்லுகிறார்கள். (இதுல கூடவா மூடநம்பிக்கை) இதற்கு வலுசேர்ப்பார் போல் இதுவரை (நேற்றைய ஜெர்மனி-உருகுவே ஆட்டம் உட்பட) ஆக்டோபஸ் கணித்தவை எல்லாம் பலித்திருக்கிறது.

ஸ்பெயினுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னரே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எனது கணிப்பும்,ஆக்டோபஸின் கணிப்பும் நிஜமாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

Google-Doodle I Love Soccer

இன்று Google @ கூகுள் இணையதளத்தின் முகப்பில் கால்பந்தினை குறிப்பிடும் விதம் சின்னம்(Logo) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் அந்த சின்னம் இடம் பெறும் என கூகுள் அறிவித்திருக்கிறது.

கால்பந்தை கருவாக வைத்து கூகுளின் சின்னத்தை வரையும் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் தெரிந்தெடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அதனை வரைந்தவர் பதினான்கே வயதான பிரான்சை சார்ந்த Barbara Szpirglas. இவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்.

மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க பகுதிகளுக்கான வெற்றியாளர் துபாயில் வசிக்கும் பதினேழு வயதான அனிருத் S மேனன் என்பவர். அவர் ஒரு இந்தியர் என்பதில் நமக்கும் பெருமை தான். அவர் வரைந்த கூகுள் சின்னம் கீழே.

பங்களாதேஷ் முதன்முறையா இங்கிலாந்தை ஒருநாள் கிரிகெட்டில் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

July 03, 2010

FIFA - ஆனைக்கும் அடி சறுக்கும்

என்ன தான் பெரிய இணைய தளமானாலும் சிறு சிறு தவறுகள் நேர்வது இயல்பு தான்.

உலகம் முழுதும் கடந்த நான்கு வாரங்களாக உற்று நோக்கிவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிகழ்வுகளை சர்வதேச கால்பந்து பேரவை http://www.fifa.com/ என்ற தளத்தில் நொடிக்கு நொடி தரவேற்றி வருகிறது.

அந்த தளத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு எதிரான போட்டியின் முடிவில் ஆரம்பத்தில் 'ஸ்பெயின்' காலிறுதி போட்டியில் "ஜப்பானை" சந்திக்கும் என்று (தவறுதலாக) குறிப்பிட்டிருந்தார்கள்.


சில நிமிடங்களுக்குள்ளாக பராகுவே என்று சரி செய்தும் விட்டார்கள்.

இது தான் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதோ!! இந்த பழமொழிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இன்றும் நேற்றும் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டிகள்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தென் அமெரிக்க நாடுகள் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா இரண்டும் காலிறுதியிலேயே வெளியேறி விட்டன. தென் அமெரிக்காவில் இருந்து எஞ்சியிருப்பது உருகுவே மற்றும் பராகுவே மட்டுமே. பராகுவே நிலைக்குமா விடைபெறுமா என்பது இன்று தெரிந்து விடும்.

June 21, 2010

கால்பந்து - CALL BANDH- ஒரு பார்வை

உலகக்கோப்பைக் கால்பந்து ஆட்டங்கள் தொடங்கியதும் தொடங்கின; பலரின் பணிகளோடு எனது பணிகளும் (பந்த்) முடங்கிப் போயிருப்பது தான் உண்மை. பதிவுலகின் பக்கம் வந்தே ஒரு வாரமாகி விட்டது. (பந்த் என்ற இந்தி வாக்கியத்திற்கு பணி முடக்கம் என்பது தானே அர்த்தம்!)

ஆட்டங்கள் நடக்கும் நேரங்களில் அரபு நாடுகளின் சாலைகள் பல வெறிச்சோடிக் கிடப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என வளைகுடா வாழ் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சில நாட்களாக எதுவும் கிறுக்கவுமில்லை. இந்திய-பாக் கிரிக்கெட் ஆட்டம் குறித்தும் பகிர்ந்து கொள்ளவியலவில்லை. எனவே தொலைக்காட்சிக்கு பந்த் சொல்லிவிட்டு கால்பந்தைக் குறித்தே கிறுக்கலாமென்று தான் இந்த பதிவு.

FIFA வின் தரவரிசைப் பட்டியலில் முதல் இருபது இடங்களை வகிக்கும் பல அணிகள் ஆட்டம் கண்டிருப்பது தான் கடந்த போட்டிகள் மூலம் அனைவரும் கண்டது.

எளிதாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என பலராலும் கணிக்கப்பட்ட ஸ்பெயின் அணி தனது முதல் ஆட்டத்திலேயே சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக ஒரு கோல் வாங்கித் தோற்றுப் போனது. இன்று நடக்கும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். முன்கள வீரர் டோரஸ் ஆரம்பம் முதலே ஆடினால் வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும்.

அல்ஜீரியாவிற்கு எதிராக ஆடிய இங்கிலாந்து அணியின் முதல் 30 நிமிடங்களின் ஆட்டத்தைப் போல் மகா மோசமான ஆட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நான் அதிகம் எதிர்பார்த்த இங்கிலாந்து அணி இதுவரை ஆடிய இரு ஆட்டங்களிலும் ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்து அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் இதுவரை தோல்வியடையவில்லை என்பது தான்.

எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் அவர்களது பிரிவான 'சி' ல் மூன்றாவதாகவே உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்திற்கு.

செல்ஸீ club ற்காக ஆடும் 'ஜோ' கோலிற்கு(cole) இரண்டு ஆட்டங்களிலும் வாய்ப்பு அளிக்கப்படாதது கேள்விக்குரிய விஷயம். முன்னாள் தலைவரும் தடுப்பு ஆட்டக்காரருமான ஜான் டெர்ரியும் இதைத் தான் கூறியிருக்கிறார்.

பிரான்ஸ் அணி அநேகமாக இந்த உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது என கூறலாம். தங்களது இறுதி ஆட்டத்தில் குறைந்தது 4 கோல் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வெல்ல வேண்டும்.அதே பட்சம் உருகுவே-மெக்சிகோ அணிகள் ஆட்டம் சமநிலையில் முடியாமலும் இருக்க வேண்டும்.

அதிக அனுபவமுள்ளவரும், பிரான்சின் சிறந்த முன்கள வீரருமான தியரி ஹென்றிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிரான்சின் நிக்கோலஸ் அனெல்கா அணி மேலாளரை தரக்குறைவாக பேசினார் என்பதற்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரான்ஸ் அணியினர் பயிற்சியில் இரு நாட்களாக ஈடுபடவில்லை. கால்பந்திற்கு பந்த் அழைப்பு விடுத்து விட்டார்கள் போலும் இது தான் தற்போதைய பரபரப்பு.

தற்போதைய சாம்பியன் இத்தாலி அணியும் இதுவரை ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அவர்களும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 கோல் அடித்த அதி வேக ஜெர்மனி அணிக்கு செர்பிய அணி தங்களது அபாரமான தடுப்பு ஆட்டத்தால் அதிர்ச்சி அளித்தனர். ஜெர்மனியும் தங்களது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்; குறைந்த பட்சம் தோல்வி அடையாமலாவது இருக்க வேண்டும்.

இது வரை ஆடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரேசில் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டார்கள் என கூறலாம்.

பிரேசிலின் முன்கள வீரர் 'kaka' வின் முன்கோபத்திற்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டது பிரேசிலுக்கு பின்னடைவு தரும். எனினும் அவர் கடந்த 12 ஆட்டங்களில் பிரேசிலுக்காக ஒரு கோல் கூட அடிக்கவில்லையாம்.

நைஜீரியாவின் வீரர் ஒருவர் தேவையில்லாமல் கிரீஸ் வீரர் ஒருவரை உதைத்தார் என்பதற்காக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு தற்போது நூற்றுக்கணக்கான கொலை மிரட்டல்கள் மின்னஞ்சல்கள் வழியாக வருகின்றனவாம். விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி தான்.



இன்றைய போட்டியில் கொரியாவிற்கு எதிரான போட்டியில் போர்ச்சுக்கல், மழையினிடையில் கோல் மழை பொழிந்திருக்கிறது.(7-0) போர்ச்சுக்கல்லுக்கு அடுத்த ஆட்டம் பிரேசிலுக்கு எதிரானது என்பதால் 25/06/2010 அன்று அந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: fifa, getty images, wiki

June 14, 2010

Waka வக்கா Vs செம்மொழிப்பாடல்

Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.

அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.


இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.

அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.

அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.

ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.

நன்றி: விக்கி

June 08, 2010

மதுக்கோப்பை Vs உலகக்கோப்பை

கவியரசு கண்ணதாசன் அவர்கள் "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" என பாடல் எழுதிவிட்டு போனார்.இன்றும் கோப்பையில் குடியிருக்கிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கோப்பையினால் வென்றவர்களும் உண்டு, வீழ்ந்தவர்களும் உண்டு. எந்த பழக்கமாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வரம்பு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகத் தான் அமையும்.

கடந்த மாதம் மங்களூரில் நிகழ்ந்த விமான விபத்து கூட விமானி குடிபோதையில் இருந்ததால் ஏற்பட்ட அலட்சியத்தால் நிகழ்ந்திருக்குமோ என கூட சந்தேகக்கிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. 2009 ஆம் ஆண்டில் மட்டும் 39 விமானிகள் குடித்து விட்டு விமானம் ஓட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ப்ரஃபுல் பட்டேல் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கோப்பைக்கு அதிகம் பெயர்போனவர்கள் நமது பக்கத்து மாநிலத்தவர்களான கேரளத்தினரும், கர்நாடகத்தினருமே. அதுவும் குறிப்பாக மல்லுகள் அருகில் எவரும் நெருங்கி விட முடியாது.


குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் இன்றளவும் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டாலும்  சட்டத்திற்கு புறம்பாக மது தயாரிப்பதும், விற்கப்படுவதும் தொடரத்தான் செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருக்கும் நம்மவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

நேற்றைக்கு கூட குவைத்தில் குடித்து விட்டு கார் ஓட்டிய பெண்மணி விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார். குவைத் பத்திரிக்கைகளைத் திருப்பினால் கள்ளச்சாராயம் தயாரித்தவர் கைது, கடத்தல், பதுக்கல் செய்தவர் கைது என்று தான் வாசிக்க நேரிடுகிறது.

உலககோப்பை கால்பந்து இன்னும் இரு தினங்களில் துவங்கவிருப்பதால் கோப்பைக்கும் உலகக்கோப்பைக்கும் உள்ள தொடர்பையும் குறிப்பிட்டாக வேண்டும் இங்கு. 1994 ல் உலகக்கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியில் இருந்த பிரான்கோ என்பவர் "நாங்கள் மது அருந்தியது எங்கள் உடல்திறனை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியது என்றும் அதனால் நன்றாக விளையாட இயன்றது" என்றும் கூறுகிறார். அவரது மனைவியுடனான தாம்பத்ய உறவும் அவரை மேலும் சிறப்பாக ஆட உதவி செய்தது என்கிறார்.

ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மீது சமீபத்தில் வைக்கப்பட்ட இதே குற்றச்சாட்டு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை... வித்தியாசம் ஒன்று மட்டும் தான்... இந்தியா தோல்வியடைந்தது; பிரேசில் வெற்றி பெற்றது. ஒருவேளை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தால் அவர்கள் கோப்பையுடன் ஆடியதை நாம் மறந்திருக்கக்கூடும்.

மேற்கத்திய நாடுகளில் மதுப்பழக்கம் வழக்கமாகிப் போன ஒரு விஷயம், ஆனால் நம்மூரில் அப்படி பார்க்கப்படுவதில்லையே!

எதுவாயினும் அளவோடு இருந்தால் அழகு தான். இல்லையென்றால் கோப்பையை வைத்துக்கொண்டு ஆடுபவர்களுக்கு நாம் ஆட வேண்டியிருக்கும்.

கார்ட்டூன் நன்றி: http://www.caricatures-ireland.com/

நடால்,ஷகிரா,ஸ்பெயின்,கால்பந்து

இளம் டென்னிஸ் நட்சத்திரம், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நடாலின் காட்டில் இப்போது மழை தான்.ஒருபுறம் டென்னிஸ் ஆட மறுபுறம் வீடியோக்களிலும் ஆடத் தொடங்கி விட்டார் போலும்.

கொலம்பியா பாப் பாடகியும் நடிகையுமான ஷகிராவுடன் (பிப்ரவரி 2010) GYPSY என்ற ஆங்கில பாப் பாடல் ஒன்றில் ராஃபா  நடித்திருக்கிறார். 33 ம் 23 ம் சில இடங்களில் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்!! Gypsy என்றால் பிழைப்பிற்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு (நடால் மாதிரி, நம்மள மாதிரி கூட) அடிக்கடி இடம்பெயர்பவர் எனலாம்.


அதனாலேயே இந்த இசைத் தொகுப்பிற்கு நடாலை தெரிவு செய்ததாக ஷகிரா தெரிவித்திருக்கிறார். பல விஷயங்களில் ஷகிராவின் வாழ்க்கையைப் போன்றே நடாலின் வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவும் சொல்லிப் போகிறார்.

பாடல் இங்கே
shakira - gypsy (live).mp3
Found at bee mp3 search engine

வாழ்க்கையை அது போகின்ற வழியிலேயே எடுத்துக்கொள்வேன். இடையில் நீ பிரிந்தாலும் அதனால் வேதனைப்படாமல் வாழ்க்கை போகிற பாதையில் செல்வேன் ஏனென்றால் நான் பயணிக்கிறவள் என சொல்லிப்போகிறார் ஷகிரா. ஆனா இது எதுவும் பாடல் பார்க்கும் போது புரியாது... (ஏனென்று முன்னாடியே சொல்லிவிட்டேன்) பாடல் வரிகளை தேடிப்பிடித்த பின் புரிந்தவை இவை

ஷகிராவின் Laundry Service (2001)ஆல்பத்தின் Whenever, Wherever பாடல் தான் என்னை ஆரம்பத்தில் அவரது பாடல்களை கேட்கத்தூண்டியது. அதன் பின்னர் Hips don't Lie (2006) மிகப்பெரிய ஹிட். மொழி புரியவில்லையென்றாலும் அவரது Latin POP, Salsa, பாடல்களின் இசைக்கு ரசிகனாகிப்போனேன்.

இந்த Gypsy பாடலில் கூட Mouth Organ இசைக்கருவி அருமையாக இசைக்கப்பட்டிருக்கும். ஷகிராவுக்கு பாடகி, நடிகை, நடனக்கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஐ.நாவின் நல்லெண்ண தூதுவர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் உண்டு.

GYPSY காணொளி

நடால் ஸ்பெயினைச் சார்ந்தவர்.கால்பந்திலும் ஸ்பெயினைச் சார்ந்த ரியல் மேட்ரிட், பார்சிலோனா club அணிகள் அருமையாக ஆடக்கூடியவை.

2008 ன் ஐரோப்பிய(யூரோ) கால்பந்து சாம்பியன் பட்டத்தையும் ஸ்பெயின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை ஸ்பெயின் அல்லது அர்ஜென்டினா அணிகள் தான் பட்டம் வெல்லும் என தெரிவிக்கின்றன.

இனியெஸ்டா, பிக்கே, புயோல், ரேமோஸ் என தடுப்பாட்ட வீரர்களும், டோரஸ், பெட்ரோ, வில்லா என முன்கள வீரர்களும் தொடர்ந்து அருமையாக ஆடி வருவது அவர்களுக்கு சாதகம் தான். பந்து காப்பாளர்களான ரெய்னா, கேசியாஸ், வால்டெஸும் ஸ்பெயினுக்கு மேலும் வலு சேர்ப்பார்கள்.


ஸ்பெயின் கடைசி பிரிவான 'H' ல் சுவிட்சர்லாந்து,ஹோன்டுராஸ், சிலி ஆகிய அணிகளுடன் உள்ளது. இதை விட எளிதான பிரிவு வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

2007 முதல் 2009 வரை ஸ்பெயின் ஆடிய 35 ஆட்டங்களிலும் தோல்வியே அடையாமல் இருந்தது இன்றும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. ஸ்பெயினின் வெற்றி வாய்ப்பு எப்படி அமைகிறது என பார்க்கலாம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அட்டவணையை இந்த சுட்டியில் இருந்து (Excel வடிவம்) தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆட்டம் முடிவில் கோல்களின் எண்ணிக்கையையும் இதில் குறிப்பிட முடியும். Pdf வடிவில் தரவிறக்கம் செய்ய இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.
Related Posts with Thumbnails