July 21, 2011

வெற்று வேர்கள்: புதைத்தவர் எவரோ!!



உறவாடிய பொழுதுகளும்
உணர்வாடிய நிமிடங்களும்
உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

தொலைந்து போன தூக்கங்களும்
தொலைதூரமாய் அகன்ற நேசங்களும்
தொலையாமல் இன்னும் உள்ளிருக்க

வெறுமையாய்
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

மீள வழியறியாமல்
மேலெழவும் அறியாமல்
மௌனங்கள் மட்டுமே உள்ளிருக்க

வெறுமையாய் பரந்து
விரிந்திருக்கின்றன
வெற்று வேர்கள்

புதைக்கப்பட்டிருக்கும் வேர்களின் 
வலியை உணர்ந்தவர் எவரோ!
புதைத்தவர் எவரோ!!

வேர்கள் நிச்சயம்
வெற்று அல்ல - அவை ஒரு விருட்சத்தின்
வெற்றி
------------

புகைப்படம் நன்றி: அலெக்ஸ்


July 14, 2011

தெய்வத் திருமகன்-விழிகளில் ஒரு வானவில்-சைந்தவி

தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற "விழிகளில் ஒரு வானவில்"  பாடலை இரு தினங்கள் முன்னர் தான் கேட்க நேரிட்டது முதல் முறை கேட்ட போதே அது சைந்தவியின் குரலாகத் தான் இருக்கும் என உணர முடிந்தது. இணையத்தில் தேடிப் பார்த்து சைந்தவி தான் என உறுதி செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து இதனைக் குறித்து கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அந்த பாடலை இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் சைந்தவி அவர்களின் குரலும் தான் முதல் முக்கிய காரணங்கள்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற  மாலை நேரம் பாடல் தான் இதற்கு முன்னர் நான் அதிகம் ரசித்தது. "விழிகளில் ஒரு வானவில்" பாடல் அந்த பாடலை விடவும் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறது. நா.முத்துக்குமார்  அவர்களின் பாடல் வரிகள் குறித்து எதுவும் சொல்ல தேவை இல்ல. பாடல் வரிகளும், இசையும், குரலும் மென்மையாய் இதமாக மனதை வருடுகின்றன. 

அனுபல்லவி உயர்ந்த சுருதியில் பாடப்பட்டாலும் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் "மாலை நேரம்" பாடலைப் போன்றே தாழ்ந்த சுருதியில் பாடப்பட்ட பாடல்.  மாலை நேரம் பாடலை இயக்குனர். செல்வராகவன் அவர்கள் எழுதி இருந்தார்; இந்த இரு பாடல்களுமே காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை; எளிய தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட இரு பாடல்கள் என்றும் கூறலாம்.

சைந்தவி அவர்களைக் குறித்து 2003 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியில் தான் அவர் முதலில் பாடக் கேட்டிருக்கிறேன். அப்போதே அவரது குரலை அதிகம் வியந்ததுண்டு. அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே மேடைகளில் பாடத் துவங்கி விட்டாராம் சைந்தவி.

இவரது சகோதரி வினயா உடன் இணைந்து பல கர்நாடக மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார் சைந்தவி. இன்றைய இளைய தலைமுறையில் கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் மிகச்சிறப்பாக பாடுபவர்களில் சைந்தவி குறிப்பிடத்தக்கவர். அதோடு திரை இசைப்பாடல்களிலும் முத்திரைப் பதித்து விட்டார். மேற்கத்திய இசையும் முறையாக கற்று தேர்ந்தவர் என்பது இணையத்தில் உலவிய போது கிடைத்த தகவல்.

நாளை (15.07.2011) வெளியாகவிருக்கும் தெய்வத்திருமகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மாலைநேரம் பாடலைப் போன்றே விழிகளில் ஒரு வானவில் பாடலையும் எனது கைவண்ணத்தில் சில புகைப்படங்களுடன் + பாடல் வரிகளுடன் காணொளியாக மாற்றியிருக்கிறேன். அதன் யூடியூப் சுட்டி இங்கே. பாடலை கீழே இணைக்கவும் செய்திருக்கிறேன்.



புகைப்படம் நன்றி: http://www.lakshmansruthi.com/index.asp 


July 11, 2011

கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம்: இதெல்லாம் ஒரு பொழப்பு

அடப்பாவிகளா 15 ஓவர் மீதியிருந்திச்சேடா அதுக்குள்ள Mutual Understanding அது இதுன்னு சொல்லி ஆட்டத்த நிறுத்திப்புட்டு Draw னு ஏமாத்திப்புட்டீங்களே.(மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில்) இதுல தரவரிசைல முதல் இடமாம் இந்தியாவுக்கு... நல்லாக்கீது உங்க அழுகுனி ஆட்டம்

இந்த அழுகுனி ஆட்டம் ஆடுறதுக்கு ஆட்டமே ஆடியிருக்க வேண்டாமே! ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆட்டத்த சமநிலைல முடிச்சிருவோம்னு சொல்லிட்டு கும்மியடிக்கவாது போயிருக்கலாமே.

பதினைந்து ஓவர்கள் அதாவது 90 பந்துகளுடன் ஏழு விக்கெட்டுகளும் மீதமிருக்க 86 ஓட்டங்கள் எடுக்க முடியாதா என்ன? இரு பக்கமும் வெற்றி சாதகமாகத் தானே இருந்தது.

இரு அணிகளுக்குமே தோற்று விடுவோம் என்ற பயமா இல்லை ஐந்து நாட்கள் ஆடி விட்டோம் என்ற களைப்பா தெரியவில்லை?! இத்தனைக்கும் முதல் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழையினிமித்தம் முழுமையாக நடைபெறவில்லை.

இப்படி அழுகுனி ஆட்டம் ஆடினால் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க எவர் தான் மைதானத்திற்கு வருவார்?

இரு அணித்தலைவர்கள் பரஸ்பரம் பேசி சமநிலையில் முடித்துக் கொள்கிறார்கள்; இன்றையதினத்தை கிரிக்கெட்டில் மற்றுமொரு கருப்புதினமாக கணக்கில் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ஒரு கிரிக்கெட் ரசிகனால் :(


July 01, 2011

ஜூன் போனா ஜூலைக் காற்றே...

குடும்பப் பொறுப்புகள் ஏதும் எழுத விடாமல் முடக்கிப்போட்டு விட்டன. எழுதப்பட்டும் முடங்கிக் கிடக்கும் கட்டுரைகள் வலையேற்றப்படாமல் இருக்கின்றன.

ஜூலையிலாவது வாய்ப்பு அமையுமா தெரியவில்லை. அனைவருக்கும் இந்த மாதம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். 

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு... 
Related Posts with Thumbnails