Showing posts with label பாலிவுட். Show all posts
Showing posts with label பாலிவுட். Show all posts

September 28, 2010

We Are Family - திரைப்படம் ஒரு பார்வை

தமிழில் இது போன்ற திரைப்படங்கள் வருவது மிகக்குறைவே. அப்படியே வந்தாலும் வசூலில் பெரிய சாதனை ஏதும் செய்யப் போவதில்லை என்பது வேறு விஷயம். பணம் இருந்தால் தான் பந்தங்கள் கூட பக்கத்தில் என்றாகி விட்ட இந்த காலத்தில் திரைப்பட உலகை அதிகம் குறை கூறுவதில் நியாயமில்லை தான்.

நகைச்சுவை, அடிதடி, குத்தாட்டம், பஞ்ச் வசனங்கள் ஏதும் இன்றி எடுக்கப்பட்டதற்காகவே இந்த திரைப்படத்தைப் பாராட்டலாம்.

கணவன், மனைவி மூன்று குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் மனைவியின் Perfectionism என்ற குணாதிசயத்தால் விவாகரத்து பெற்று தனியே போய் விடுகிறார் கணவன்/ திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜூன் ராம்பால்.

Perfectionism என்பதற்கு ... அனைத்து விஷயங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் அல்லது இந்த மாதிரி தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறையோடு இருத்தல் என பொருள் கொள்ளலாம். குழந்தைகளோ, கணவரோ அதற்கு எதிர்மாறாக செய்தால் கதாநாயகியான கஜோல் கோபித்துக் கொள்கிறார். அது திருமண விவாகரத்தில் போய் சேர்க்கிறது.

கதநாயகன் அர்ஜூன் தனியாக இருந்தாலும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் அதிகம் அக்கறை காட்டுகிறார். இந்த குடும்பத்திற்குள் 'கரீனா கபூர்' கதாநாயகனின் நண்பி வடிவத்தில் நுழைகிறார். அவரை அர்ஜூன் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

குழந்தைகள் - கரீனா முதல் சந்திப்பு சுமூகமாக அமையாமல் போய்விடுகிறது. மூன்றாவது குழந்தை அஞ்சலியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கதாநாயகனின் நண்பி/கரீனா பிறந்த நாள் கேக்கை கையிலிருந்து தவற விடுவதால் வெறுப்பையும் சூனியக்காரி (Witch) என்ற பெயரையும் சம்பாதிக்கிறார் கரீனா.

கரீனாவால் தான், அம்மாவைப் பிரிந்து அப்பா இருப்பதாக மூத்த மகள் 'ஆல்யா' தவறாக நினைத்துக் கொண்டு மற்ற இரு குழந்தைகளிடமும் இதையே சொல்லி வைக்கிறார்.

பின்னர் ஒருவழியாக குழந்தைகளிடம் நெருங்கி விடுகிறார் கரீனா. இதனிடையில் கஜோலுக்கு (Cervical Cancer) புற்றுநோய் இறுதி நிலையில் இருப்பதாகவும் அதிக நாட்கள் உயிரோடு இருக்க முடியாது என்பதும் தெரியவருகிறது. இதனை அறிந்த அர்ஜூன் மீண்டும் கஜோலுடன் இணைந்து வாழ முடிவு செய்கிறார்.

தனது கணவனையும், குழந்தைகளையும் நேசிக்கும் கரீனாவை அது வரை எதிர்த்து வந்த கஜோல், தனது குடும்பத்திற்குள் ஒருவராக ஏற்றுக்கொள்ள பார்க்கிறார். வீட்டிற்குள்ளும் அழைத்து வந்துவிடுகிறார். அதன் பின்னர் குடும்பத்திற்குள் என்ன நிகழ்ந்தது என்பது தான் படத்தின் முடிவு.

தான் இருக்கும் போதே தனது கணவனை இன்னொருத்தியுடன் வைத்துப் பார்ப்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது எனவும்; இந்த மாதிரியான திரைப்படங்கள் தேவையற்றவை எனவும் எதிர்கருத்துக்கள் எழாமலும் இல்லை.

எனினும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என (என்னைப்போன்று) Perfectionism கொண்டிருக்காமல் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என சொல்லியிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதோடு Cervical Cancer - கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டியை கேவலமாக திட்டிய இங்கிலாந்தைச் சார்ந்த Jade Goody யும் தனது 27 ஆவது வயதிலேயே இந்த புற்றுநோயால் தான் இறந்து போனார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

இந்த திரைப்படத்திற்கு மறறொரு ப்ளஸ் இசை. பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்கள் ஷங்கர்-எஸான்-லாய். பாடல்களும் அருமையாக இருக்கின்றன. அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக கஜோலின் நடிப்பு மிகச்சிறப்பு

Hamesha-Forever-எப்பொழுதும் உறவுகள் தேவை என்பதையும், உறவுகளின் மேன்மையையும் உணர்த்தியிருக்கும் திரைப்படம் We Are Family.

திரைப்படம் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் திரைப்படமாக்கப்பட்டிருப்பதும்; இது தான் இயக்குனருக்கு முதல் திரைப்படம் என்பதும்; ஜூலியா ராபர்ட்ஸ் நடித்து 1998 ல் வெளியான Stepmom என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்பதும்; இயக்குனர் கரன் ஜோகரின் தயாரிப்பு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.



May 26, 2010

சட்டில இருந்தா தான அசலான சுறா வரும்!!

நடிகர்! விஜய் அவர்களின் சுறா திரைப்படம் வரும் முன்னரே விமர்சனம் குவிந்தது என்றால்(இது யாருக்கும் உள்குத்து இல்லீங்கோ) திரைப்படம் வெளிவந்த பின்னர் திரைப்படத்தையும், விஜயையும், இயக்குனரையும் வாங்காதவர்களே இல்லை.விஜயின் அடுத்த படமான காவல்காரன் வரை விமர்சனம் வந்திருச்சாம்ல, மெய்யாலுமா!!!

'சுறா'வ தாக்கினதுல இயக்குனர் ஊரயே காலி பண்ணி போய்ட்டதா வேற புரளிய கிளப்புறாங்க. விஜய் ரசிகர்கள் அவர் மேல ரொம்பவே பாசமா இருக்காய்ங்க போல. இல்லன்னா இயக்குனர இப்பிடி குறி வைப்பாகளா என்ன!!

கதய கேட்டுப்புட்டு தான நடிகரும் ஒத்துக்கிட்டு இருப்பாரு. இயக்குனர் என்ன செய்வாரு. நடிகரையும் குறை சொல்றதுக்கில்ல அவருக்கு இஷ்டப்பட்டு தான் ஒத்துக்கிட்டு இருப்பாரு படத்துக்கு.

கேவலமாக விமர்சிக்கப்பட்ட சுறா உள்ளிட்ட அவரது அனைத்து திரைப்படங்களிலும் அவரால முடிஞ்சத அவர் விருப்பப்பட்டு செஞ்சிருக்காரு. ஆனா நம்ம ஒண்ண மனசில நெனச்சிக்கிட்டு அது அவர் படங்கள்ல இல்லன்னா என்ன பண்றது! நம்ம நெனக்கிறது இல்லன்னு கோபப்பட்டா எப்பிடி... சட்டில என்ன இருக்கோ அது தான அகப்பைல வரும். பாவம் அவர விட்டுருங்க.

அரசியலுக்கு வரணும் நெனச்சாச்சு, இனி எப்பிடி படம் எடுத்தா என்னன்னு அவர் அண்ணன் விஜயகாந்த் மாதிரி கூட விஜய் நெனச்சிருக்கக்க்கூடும்! ஆனா பாவம் இரண்டு பேருக்கும் அரசியல், சினிமா இரண்டிலும் நேரம் சரியில்ல போல இருக்கு... ம்ம்ம்
---------
அசல் படத்தின் சில காட்சியமைப்புகளும், கதைச் சாயலும் 2004 ல் வெளிவந்த இந்தி திரைப்படமான முசாஃபிர்(Musafir) ல் அமைக்கப்பட்டது போன்று இருக்கிறது என சில நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டேன். நேற்றைக்குத் தான் Musafir பார்க்க முடிந்தது. கதை அப்படியே அசல் போல் இல்லையென்றாலும், காட்சியமைப்புகள் அசலோடு ஒன்றிப்போவதை மறுப்பதிற்கில்லை

பிரான்ஸின் போலீஸாக வரும் மொட்டை சுரேஷ், அஜீத்தின் சுருட்டு, கடத்தல் கும்பல், சமீரா ரெட்டி என பலதும் அசல் போலவே Musafir லும் உண்டு. Musafir ல் அனில்கபூர், சஞ்சய்தத், சமீரா ரெட்டி நடித்திருக்கிறார்கள்.

அஜீத்-சரண்-யூகி சேது கூட்டணியின் கதைக்கும் Musafirன் கதைக்கும் எதாவது சம்பந்தமா! இல்லை... தற்செயலாக அமைந்ததா? தெரியவில்லை!!Musafir கூட Sean Penn, Jennifer Lopez நடித்த ஹாலிவுட் திரைப்படமான U Turn என்பதன் remake என்பது மற்றொரு சுவாரஸ்யம்.

மொத்தத்தில தமிழ் சினிமா உலகில் சிலரோட சட்டில எதுவுமே இல்ல போல இருக்கு!!!

Musafir ன் Climax


May 15, 2010

நான் வியந்த ஷங்கர் மஹாதேவன்

சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்ற "வராக நதிக்கர ஓரம் ஒரே ஒரு பார்வ பாத்தேன்" பாடலை ஆரம்பத்தில் கேட்ட போது என்னடா தமிழ் திரையுலகில இப்படி ஒரு குரலா என வியந்ததுண்டு. அதே பாடலின் முதல் சரணத்தில் 'காவேரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோகமடி' என உச்ச ஸ்தாயியில் அவர் பாடியதை இப்போது கேட்டாலும் வியக்கிறேன். அந்த பாடலை கீழே இணைத்துள்ளேன்

அண்மைக் காலத்தில் ரஹ்மானிற்கு அடுத்தபடியாக உச்ச ஸ்தாயியில் பாடுபவர்களில் நான் அதிகம் ரசித்தது ஷங்கர் மஹாதேவனைத் தான். ரஹ்மானே பலமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார்.
TamilBeat.Com - Varaaga Nadhi .mp3
Found at bee mp3 search engine

சில தினங்கள் முன்னர் அந்த பாடலை மீண்டும் கேட்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கவே ஷங்கர் மஹாதேவனை குறித்து எழுதலாமே என்ற எண்ணம் தோன்றியது.

இந்த பாடலில் ஷங்கருக்கு சொல்லுபடியான புகழ் கிடைத்தாலும் அதற்கு முன்னரே ஒரே மூச்சில் தான் பாடிய Breathless என்ற POP பாடலின் மூலம் பாலிவுட்டில் பிரபலமாகியிருந்தார் அவர். தமிழ் திரையுலகிலும், பாலிவுட்டிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Shankar Mahadevan - Breathless
Found at bee mp3 search engine
1999 ல் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் 'என்ன சொல்ல போகிறாய்' பாடலுக்காகவும் அதன் பின்னர் மூன்று இந்தித் திரைப்பட பாடல்களுக்காகவும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

என்னடா இந்திக்காரர் ஒருத்தர் சரியான தமிழ் உச்சரிப்போட மிகத்தெளிவா பாடுறாரேன்னு ரொம்ப காலமா எனக்கு சந்தேகம் இருந்தது. பக்கா ஐயர் குடும்ப சூழ்நிலையில வளர்ந்தவர் அப்படின்ற விஷயம் அப்புறம் தான் தெரிய வந்தது. பாலக்காட்டில் பிறந்தாலும் மும்பையிலேயே வளர்ந்ததால் இந்தியின் பக்கம் அவரது பார்வை அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

எஹ்சான் மற்றும் லாய் என்ற இருவருடன் இணைந்து இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ஷங்கர் மஹாதேவன். அவர்கள் இசையமைத்த திரைப்படங்களில் ஆளவந்தான், kal ho na ho, kabhi alvida naa kehna, Dil chahta hai, Mission Kashmir, Rock On, Taare Zameen Par குறிப்பிடும்படியானவை.

ஷங்கர்-எஹ்சான்-லாய் ஜூலை 16, 2010 முதல் உலக அளவில் இசைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம் . மேலும் தகவல்களுக்கு அவர்களது இணையதளமான http://www.shankarehsaanloy.com/ பாருங்கள்.
Related Posts with Thumbnails