Showing posts with label தேர்தல்2009. Show all posts
Showing posts with label தேர்தல்2009. Show all posts

May 16, 2009

சந்தர்ப்பவாத அரசியலுக்கு சம்மட்டி அடி


பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் வர ஆரம்பித்ததிலிருந்தே எளிதில் வெற்றி பெறலாம் என எண்ணிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத அரசியல்கட்சிகளுக்கும் "அரசி"யல்வாதிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக தமிழகத்தில் அய்யா அவர்களின் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி,விருதுநகரில் அண்ணன் அவர்களின் தோல்வி, தேர்தலுக்கு நாற்பது நாட்களிருக்கையில் ஈழம் ஏற்படுத்துவோம் என்றதோடு நாற்பதும் நமக்கே என நாடகமாடிய அம்மாவின் பின்னடைவு,காங்கிரஸ் பெருந்தலைகளுக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, என வரிசையாக நோக்கினால் மக்கள் தெளிவாக வாக்களித்து சந்தர்ப்பவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள் எனலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அனைத்து மத்திய அமைச்சரவைகளிலும் பதவி வகித்து வந்திருக்கும் 'அய்யா' வின் பதவி மோகத்திற்கு மக்கள் சரியான சம்மட்டி அடி அடித்திருக்கிறார்கள்.ஆவேச பேச்சாளர் அண்ணனின் சந்தர்ப்பவாதத்தைக் குறித்து சொல்லவே தேவையில்லை.சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை அலசாத 'எம்.பி'க்களுக்கும் அமைச்சர்களுக்கும் தக்க அடி கிடைத்திருக்கிறது.

விலைவாசி உயர்வு,மின்தடை,இலங்கைப் பிரச்சினையில் தடுமாற்றம் இவைகளுக்கு அப்பாலும் முதியவரின் உண்ணாவிரதமும் கள்ள ஓட்டும், சொல்லும்படியான வாக்குகளை அளித்திருக்கிறது என ஒருசாரார் நம்பினாலும் பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கிய இலவசங்களும்,கேப்டன் சிதறச் செய்த வாக்குகளும் முதியவருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இதே பாணியிலேயே இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் நல்லாட்சி செய்த ஆளுங்கட்சியினருக்கே மக்கள் மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள்,ஆந்திராவில் காங்கிரஸின் ரெட்டி,டெல்லியில் காங்கிரஸின் ஷீலாதீட்சித்,ஒரிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக்,பீகாரில் ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்,ஜம்முகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா,குஜராத்தில் பா.ஜ.க வின் நரேந்திர மோடி என இந்த முதல்வர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் மக்களுக்கு அவர்கள் செய்த நலத்திட்டங்கள் அவர்களுக்கு பெரும்பான்மை இடங்களை அளித்திருக்கிறது.

நல்லாட்சி செய்யாத கேரளா,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு சரியான அடியும் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளின் பழமைவாத கொள்கைகளையும் மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

ஐக்கிய முற்போக்கு முன்னணியில் ஒருகாலும், மூன்றாவது அணியில் ஒருகாலுமாக நாடகமாடிய லாலு சரண்,பாடலிபுத்திரா என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.இரு தொகுதிகளிலும் தோற்க வேண்டிய நிலையிலிருந்தவர் இறுதியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சரண் தொகுதியிலிருந்து மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரதமர் கனவு கண்ட சந்தர்ப்பவாதிகள் மாயாவதி, சந்திரபாபுநாயுடு, பாஸ்வான் ஆகியோருக்கு பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள் வாக்காளர்கள்.இத்தனைக்கும் பாஸ்வான் தனது சொந்த தொகுதியிலேயே தெரிந்தெடுக்கப்படவில்லை.இதே பீகார்,ஹஜிபூர் தொகுதியில் 4,24,000 வாக்குகள் வித்தியாசத்தில் 1977 ல் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை செய்தவரும், 1977 முதல் 2004 வரை ஏழு முறை இந்த தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கபட்டவரும் இவரே.

சரிவர செயல்படாத மத்திய சமூகநலைத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியும் ஆந்திராவில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

இப்படியாக நல்லாட்சி செய்தவர்களுக்கும்,ஓரளவு நியாயமாக இருந்தவர்களுக்கும் மக்கள் மீண்டும் தங்கள் ஆதரவை அளித்து சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் அகங்காரிகளுக்கு தக்க பதிலும் கொடுத்திருக்கின்றனர்.

பொருளாதர வீழ்ச்சியிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் எவருக்குமே பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமானால் அது மேலும் இந்திய பொருளாதாரத்தை சீரழித்திருக்கும்.அந்த நோக்கத்தில் நிலையான ஆட்சி வேண்டியும் மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.

ஆனாலும் காங்கிரசுக்கு 200 ற்கும் மேல் தொகுதிகள் கிடைத்தது சற்றே ஆச்சரியம் தான்!

May 13, 2009

ஆட்சியை பிடிக்கும் அணி என்ற புதிய அணி உருவாக்கம்?

கார்ட்டூன் நன்றி sulekha.com
---------------

இந்தியா முழுதும் ஒரு வழியாக ஐந்து கட்ட தேர்தலும் நடந்து முடிந்தாகி விட்டது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எந்த கூட்டணி ஆட்சியமைக்கும்,எவர் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு சற்றே அதிகமாகத் தான் உள்ளது.

1991 ற்கு பிறகு எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்ற கேள்வி மாறி எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்ற நிலைமை உருவெடுத்துள்ளது எவரும் மறுக்கமுடியாத ஒன்று.இந்தியா முழுதும் தனக்கு ஆதரவைக் கொண்டிருந்த காங்கிரஸ் தனது ஆட்சி முறைகளினாலும் மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாமையாலும் தனது செல்வாக்கை பல மாநிலங்களில் இழந்தது.

குறிப்பாக தமிழகத்தில், காங்கிரசின் அழிவிற்கு காங்கிரசாரே காரணம் என்றாலும் மிகையல்ல.உட்கட்சி விவகாரங்களினாலும்,பதவி மோகத்தினாலும் ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த ஓரளவு மரியாதையையும் குறைத்துக் கொண்டனர்.அவர்களின் கோஷ்டி பூசல்கள் இன்று வரை தீர்ந்த பாடில்லை.பிற மாநிலங்களும் (சில கட்சிகளும்) இதற்கு விதிவிலக்கல்ல. பதவி மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலைமையினால் மாநில கட்சிகள் தேசிய அரசியலில் மெதுவாக காலூன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.மெல்ல காலூன்றிய மாநில கட்சிகள் தேசிய ஆட்சியில் பதவிகளைப் பிடிக்கவும் செய்து தற்போது டெல்லியில் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் உறுதியான இடத்தையும் பிடித்துள்ளன.

15 ஆவது மக்களவையைத் தெரிந்தெடுக்கும் தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்துக்கட்சிகளும் கூட்டணிக்காக தங்கள் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பிற கட்சிகளின் வாலைப்பிடித்துக் கெஞ்சத் தொடங்கியிருந்தன.இழுபறியின் இறுதியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி;பாரதீய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி;கம்யூனிஸ்டுகள்,பகுஜன் சமாஜ்,அ.தி.மு.க,தெலுங்கு தேசம் உட்பட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி என மூன்று கூட்டணிகள் உருவாகின.

ஒவ்வொரு கட்ட தேர்தலும் முடிந்து வர வர இந்த மூன்று கூட்டணிகளினுள் உள்ள கட்சிகள் எந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை கணித்து அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தன.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்த லாலு,பாஸ்வான் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஆப்பு வைத்தனர்.பா.ஜ.க வுடன் இருந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணிக்கு தாவினார்,அது போன்று ஒரிசா முதல்வர் பிஜூ பட்நாயக் பா.ஜ.க வுடனான உறவை முடித்துக் கொண்டார்.மூன்றாவது அணியிலிருந்த ஆந்திராவின் டி.ஆர்.எஸ் கட்சி அதிலிருந்து விலகியது.தற்பொழுது அம்மாவும்,சரத்பவாரும்,சந்திரபாபு நாயுடுவும் எந்த கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கு சாடுவதற்கு மதில் மேல் பூனையாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியில் மூன்றாவது அணி உருவாக காரணமான,தங்கள் கொள்கைகளை எளிதில் விட்டுக்கொடுக்காத இடது மற்றும் வலதுசாரி தோழர்கள் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாகவே தோன்றுகிறது. தோழர்கள் ஏமாற்றப்பட போகிறார்கள் என்பது கர்நாடகாவின் குமாரசாமி-சோனியாகாந்தியின் நேற்றைய சந்திப்பிலேயே துளிர் விட்ட நிலையில் எவருக்கும் ஆதரவு என்ற ஜெ'ன் இன்றைய நிலையும்,சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜ.க வின் வெங்கையா நாயுடு சந்திப்பும் அதனை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.

எனவே அடுத்து வரும் சில நாட்களில் இந்த மூன்று அணிகளும் மாறி "ஆட்சியைப் பிடிக்கும் அணி" என்ற ஒரு அணி தான் உருவாகும் வாய்ப்புள்ளது.அவர்கள் அதற்கு என்ன விதமான பெயரினை வைத்தாலும் அது ஆட்சியை பிடிக்கும் அணியாகவே இருக்கும்.அதற்கு என்ன விலையும்,என்ன பதவியும் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்... தங்கள் கொள்கைகளையும் காற்றில் பறக்க விட்டு பதவி மோகம் பிடித்துத் திரியும் சில அரசியல் ஆதாய ஆசாமிக் கூட்டங்கள்.

இந்த கொடுமைகளை எல்லாம் நாம் கண்டு சகிக்க வேண்டியிருக்கிறது... என்ன செய்வது இந்தியனாகி விட்டோமே!

May 05, 2009

கலைஞருக்கு இது தேவையா...?

தமிழகத்தில் எட்டு வருடங்களில் முதல் முறையாக அரசுப்பேருந்துகளில் பயணக் கட்டணத்தைக் 50% சதவீதத்திற்கும் கீழே குறைத்திருப்பதாக கூறி சென்னை,திருச்சி,மதுரை பேருந்துகளில் குறைவான பயணக்கட்டணம் மே 1,2 ஆகிய தேதிகளில் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழக அரசு போக்குவரத்துத் துறை அமைச்சரான நேருவோ, கட்டணம் குறைப்பிற்கான உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை எனவும்,சில வழித்தடங்களில் பேருந்துகளின் தரம் டீலக்சிலிருந்து சாதாரணப் பேருந்துகளாக மாற்றப்பட்டிருப்பதால்,அதனடிப்படையில் குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார். உண்மை யாருக்கு தெரியும்!

இதனை அறிந்த தேர்தல் ஆணையம் கட்டணக் குறைப்பிற்கான உத்தரவை திரும்பப் பெறும்படி தமிழக அரசுக்கு நேற்று(4.5.09) உத்தரவு இட்டது.

இவ்வாறு கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

ஏற்கெனவே இலங்கைப் பிரச்சினையில் தமிழக மக்கள் எதிர்பார்த்தபடி ஏதும் செய்யாத காங்கிரஸ்-தி.மு.க கூட்டணிக்கு இது மேலும் பின்னடைவே.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நலத்திட்டங்களையோ,சலுகைகளையோ அமல்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைககளுக்கு எதிரானது என்பது 70 வருடத்திற்கும் மேல் அனுபவம் உள்ள ஒரு முதல்வருக்கு தெரியாமல் போனது ஏனோ?

ஓட்டுகளைப் பெறுவதற்கு மக்களை நல்லாவே ஏமாத்துறீங்கன்னு மட்டும் புரிஞ்சுப் போச்சுங்க பெரியவரே.கலைஞரைப் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இந்த காமெடி எல்லாம் தேவைதானா!

நாங்கள் கொண்டுவரும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என கூறி மக்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி தான்.

April 30, 2009

வம்பு பேசிய வாக்காளர்கள் எங்கே போனார்கள்?


இந்தியாவின் பதினைந்தாவது பாராளுமன்றத்திற்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்பு இன்று(30.04) மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது.

மூன்றாவது கட்ட வாக்கெடுப்பில் பதிவான மொத்த வாக்கு சதவீதம் வெறும் 50 மட்டுமே. குறிப்பாக மும்பை தொகுதியில் பதிவான வாக்குகள் 45% மட்டுமே. 2004 ல் பதிவான வாக்குகளை விட இரு சதவீதம் இது குறைவாகும்.

வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள்,பாலிவுட் திரைத்துறையினர் பலராலும் பல விதமான கோரிக்கைகளும்,வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்ட பின்னரும் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பின்னர் அரசியல்வாதிகள் மேலும்,ஆட்சியாளர்கள் மேலும் வெகு கோபம் கொண்டு அமைதி ஊர்வலங்கள், போராட்டங்கள், இணைய பிரச்சாரங்கள் பலவும் செய்தவர்கள் வாக்கெடுப்பு சமயத்தில் எங்கு சென்றார்களோ தெரியவில்லை.இத்தனைக்கும் இன்று மும்பையில் விடுமுறையாகும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னரே jaagore.com என்ற இணைய தளத்தின் மூலம் infosys, wipro ஆகியவற்றின் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இளைஞர்கள் மத்தியில் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பை மக்கள் நாட்டின் மேல் தட்டு மக்கள்,விவரமானவர்கள் என ஊடகங்கள் செய்து வந்த பொய் பிரச்சாரங்களையும்,பிரமையையும் இன்று பதிவான வாக்கு சதவீதம் பொய்க்க வைத்துள்ளது. அவர்களும் நாட்டின் பிற பகுதிகளின் மக்களுக்கு சமமே என்பதும் நிரூபணமாகியிருக்கிறது.

மும்பை 40 சதவீதத்திற்கும் மேல் சேரிப்பகுதியாக இருப்பதும் குறைவான வாக்குப்பதிவிற்கு ஒருவேளை காரணமாகியிருக்கலாம்.

இளைஞர்கள் பலரும் இணையத்தில் உலவுகிறார்கள்,சூடான அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.ஆனால் வாக்கெடுப்பு என்று வரும் போது அவர்களால் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்கான சமயம் ஒதுக்க முடியாதது ஏனோ?

பார்ட்டி,டிஸ்கொதே ஆகியவற்றிற்கு முக்கியத்துவமும் போதிய நேரமும் அளிக்கும் மும்பை வாசிகள் வாக்கெடுப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.தேர்தலை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை போலும்.

ஒருவேளை ஆன்லைனிலோ,ஆர்குட்டிலோ,ஃபேஸ்புக்கிலோ வாக்கெடுப்பு வைத்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ?

இவ்வாறு வாக்களிக்காமல் இருந்து விட்டு ... பின்னர் அரசியல்வாதிகள் நல்லதே செய்யவில்லை,பாதுகாப்பு சரியில்லை என்றெல்லாம் வாய் கிழிய வசைபாடுபவர்களும் இதே பொதுமக்கள் தான்.

யாரைக்குற்றம் சொல்வதோ? பொதுமக்களையா? இல்லை வாக்களிக்காமல் இருப்பதற்கும் சட்டமியற்றி வைத்திருக்கும் இந்திய அரசாங்கத்தையா?

இந்திய திருநாட்டில் இதெல்லாம் சகஜம் தானோ!!

April 23, 2009

ஏப்ரல்,மே மாதங்களின் சுடும் வெயிலில் தான் தேர்தல் வேண்டுமா?

பொதுவாகவே பாரதத்தில் ஏப்ரல் மே மாதங்களிலேயே தேர்தல் நடைபெற்று வந்திருக்கின்றன. பதினைந்தாவது பாராளுமன்றத்தை தெரிந்தெடுக்கும் இந்த முறையும் அனல் வீசும் ஏப்ரல் மே மாதங்களில் தான் ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த இன்று(23.04.2009)ஒரிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் இரு தேர்தல் அலுவலர்கள் மரணமடைந்ததாக ஊடகங்கள் வழி செய்தியைக் கேள்விப் பட நேரிடுகிறது.

மேலும் ஒரிசா,பீகார் போன்ற பிற்படுத்தப்பட்ட மாநிலங்களில் பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீரோ,வெயிலில் இருந்து மறைவதற்கு ஒரு மறைவோ தேர்தல் பணியாளர்களால் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை.

இவை போன்ற மாநிலங்களில் கேள்வி கேட்பதற்கு எவருமிருக்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் இதற்கு காரணமா என்றும் தெரியவில்லை.

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற 16.04.2009 அன்று வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை.இனி நடக்கவிருக்கின்ற அடுத்த மூன்று கட்ட வாக்குப்பதிவுகளின் போதும் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கப் போகிறது.

இந்தியாவின் ஒரிசா, பீகார் உள்ளிட்ட கிழக்குமாநிலங்களில் மட்டும் ஏப்ரல் 19 வரை 23உயிர்கள் வெயிலின் கொடுமைக்கு பலியாகி இருக்கின்றனர்.அதிகபட்சமாக44 டிகிரி பதிவாகியிருக்கிறது அங்கு.

குறிப்பாக தமிழ்நாட்டில் மே 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அக்னி நட்சத்திரம் என சொல்லப்படும் உச்ச கட்ட வெயில் அந்த இடைவெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே தமிழர்கள் சுதாரிப்பாக இருத்தல் நல்லது.

ஏப்ரல்,மே மாதங்களில் பொதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை காலம்.வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளிலேயே அமைக்கப்படுகின்றன.மேலும் வாக்குப்பதிவு நடந்த பின்னர் (முன்பு)வாக்குச்சீட்டுகள்,(தற்பொழுது)வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு பள்ளிகள் தேவையாதலால் ஏப்ரல்,மே மாதங்களை தேர்தல் ஆணையம் தெரிந்தெடுத்திருக்கலாம்.

ஆனால் 5 வருடத்திற்கு முன்னர் இருந்த தட்பவெப்பநிலை இப்போது நிலவுகிறதா என்றால்... நிச்சயமாக இல்லை. மும்பை பிப்ரவரி மாதமே 40 டிகிரிக்கும் மேலான வெப்பத்தை அனுபவித்து விட்டது இம்முறை.சென்னையும்,இந்தியாவின் பிற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.டில்லியில் புழுதியுடன் அனல் காற்றி வீசி வந்திருக்கிறது மார்ச் மாதத்திலும்,இந்த மாதத்திலுமாக.

நேற்று (22.04.2009)தான் சர்வதேச பூமி தினம் அனுசரிக்கப்பட்டது.பல அமைப்புகள் பொதுமக்களுக்கு பூமி வெப்பமாகுதலையும்,தண்ணீர் வீணாகுதலையும் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் இயற்கைக்கு நவீன உலகம் செய்த துரோகத்தை இயற்கை ஒரு போதும் மன்னிக்க தயாராக இல்லை என்றே தெரிகிறது.வருடத்திற்கு வருடம் தட்பவெப்பநிலையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

சரி காலநிலையை நம்மால் மாற்ற முடியாது,தேர்தல் நாளை மாற்றலாம் அல்லவா.தவிர்க்க முடியாத காரணத்தால் தேர்தல் நாள்களையும் மாற்றி வைக்க முடியவில்லை என்றால் வாக்குச்சாவடிகளுக்கு உரிய வசதிகளையாவது செய்து கொடுக்கலாமே தேர்தல் ஆணையம்.

வேட்பாளர்கள்,கட்சித்தலைவர்கள் ஹாயாக ஏ.சி.காரில் கூலிங் க்ளாஸ் சகிதம் வந்து விட்டு போய் விடுவார்கள். இதைக் குறித்து எல்லாம் அவர்கள் ஏன் கவலைபடுகிறார்கள்.எத்தனை வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன என நோக்குகின்றனரோ?

April 14, 2009

சுயேட்சை வேட்பாளர்கள் மீது ஏன் இந்த சாடல்?


"சுயேட்சை வேட்பாளர்கள் என்பவர்கள் சீரழிப்பவர்கள்"

இப்படி ஒரு வாக்கை இந்திய நாட்டின் உயர் பதவியிலிருப்பவர் ஒருவரிடமிருந்து அதுவும் பிரதமரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

சில நாட்களாகவே பிரதமர் சிங் அவர்கள் முன் வைக்கும் கருத்துகள் முன்னுக்கு பின் முரணானவையாகவும். ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பிற கட்சியினரை சாடுவதும், குறை சொல்வதும்,தனி மனித தாக்குதல் செய்வதுமாக இறங்கியிருக்கிறார் பெரியவர்.

முந்தைய பதிவிலேயே இவரை போன்றவர்களின் பிரச்சார பிதற்றல்களை குறிப்பிட்டிருந்தேன்.

இன்று அவற்றிக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்...'சுயேட்சை வேட்பாளர்கள் சீரழிப்பவர்கள்; அவர்களால் வெற்றி பெற முடியாது;அவர்களை ஊக்குவிக்க கூடாது' என்ற தரம் தாழ்ந்த கருத்தை கூறியிருக்கிறார் பிரதமர்.

சுயேட்சை வேட்பாளர்களின் மேல் ஏன் இந்த திடீர் சாடல் என்று தான் புரியவில்லை. மக்கள் அல்லவா அவர்கள் முடிவை சொல்ல வேண்டும்... சுயேட்சைகள் சீரழிப்பவர்களா இல்லை சீர்ப்படுததுபவர்களா என்று.

அதோடு "மாநில கட்சிகள் எவ்வளவு காலம் தேசிய அரசியலில் தாக்கு பிடிப்பார்கள் என சொல்ல முடியாது" ஆதலால் தேசிய கட்சியான எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார். நீங்கள் தேசிய கட்சி என்றால்... நாணமில்லாமல் என்னத்திற்கு மாநில கட்சிகளுடன் கூட்டணி கூடுகிறீர்கள்?

சுயேட்சைகள் போட்டியிடுவதில் இவர்களுக்கு என்ன சிக்கல வந்து விட்டது. அவர்கள் தொகுதி மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களிக்க தான் போகிறார்கள்.

அப்படி சீரழிப்பவர்கள் என்றால் உங்கள் ஆட்சியில் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டியது தானே... சுயேட்சை வேட்பாளர்களுக்கு போட்டியிட தடை என்று.

மைக் கிடைத்து விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா? இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா?

April 12, 2009

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

அரசியல்வாதியாக இல்லாதிருப்பதும் அமேதியில் அவரின் அமைதியான பேச்சிற்கு காரணமாகி இருக்கலாம்.இவரைப் போன்றவர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் பிரியங்கா மேடம்.

April 11, 2009

தேர்தல் வாக்குறுதிகள் இப்படியும் இருக்கலாமோ!

தேர்தலும் நெருங்கி விட்டது.இந்த முறை கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகள் முன் வைப்பார்கள் என்ற ஒரு சிந்தனை.

திராவிட முதியவர் கழகம்

1.எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் வாரம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் கழக கடிதம்/இரங்கற் பா கலரில் அனுப்பி வைக்கப்படும்.

2.தமிழக நலன் கருதி எம்.பிக்கள் பதவியேற்றதுமே ராஜினாமா செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்படும்(நன்கு கவனிக்க... தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படும்)

3.குடும்பங்களில் சண்டை போட்டு சொத்திற்காக மீண்டும் இணைபவர்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும்

அம்மா திராவிடம் முன்னேற்றும் கழகம்

1.ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவிகளின் பெயருக்கு கீழ் தான் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டம் அமுலாக்கப்படும்.

2.பெண்கள் அனைவரையும் அம்மா என்றழைக்கவும் அவர்கள் காலில் ஆண்கள் விழவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இதயமில்லா தேசிய காங்கிரேசு

1.தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு முறையாவது இல்லையென்றால் ஒரு நிமிடமாவது கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க பரிந்துரைக்கப்படும்.

2.அவதியுறும் தமிழினத்தை காக்க நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் (அதே நாளில் டில்லியில் இருந்து ரணம் ஏற்படுத்தும் வெடிபொருட்களும் அனுப்பப்படும்)

3.2011 ல் மாநிலத்தில் காமராஜி ஆட்சி அமைத்து திராவிட முதிய கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.(மன்னிக்கனும் வாக்காளர்களே... 2111 என வாசிக்கவும்)

பாட்டாளி மகன் கட்சி

1.முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2.மகனை மத்திய மந்திரி ஆக்கி அவதியுறும் தமிழ் உடன்பிறப்புகளின் அல்லல் உடனே துடைக்கப்படும்

3.திட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் சார்பாக அறிக்கை விடப்படும்.

மறுபுரட்சி திராவிட முனங்கலேற்ற கழகம்

1.உலகமே உற்றுநோக்கும் விதம் தமிழக நலன் காக்க! உணர்ச்சிப்பூர்வ கருத்துகள் முனங்கப்படும்.

2.சிறைச்சாலையில் மக்கள் குறை தீர்க்கும் கவுண்டர் ஒன்று திறக்கப்படும்.

3.தமிழின எதிரிகள் தமிழகத்திலிருந்து துரத்தப்பட ஆயுதம் ஏந்தப்படும்

இடவலசாரி கட்சி

1.மக்கள் நலனிற்காக குரல் கொடுத்து ஆட்சியின் இடையிலேயே மக்கள் நலன் கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவும் விலக்கப்படும்

2.தமிழர் பண்பாட்டிற்காக சிவப்பேறிய எங்கள் கொள்கைகளையும் விட தயாராக இருக்கிறோம்.

எந்த தேர்தலிலும் இல்லாத படி இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் வாக்குறுதி:பொதுமக்களின் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல,மலர்கள் மீது. அதனால் காலணிகளுக்கு குறிப்பாக ஷூக்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படும்.

-------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 09, 2009

தேர்தல்-பிரச்சார கத்தலும்,கருத்துகளும்,காமெடிகளும்

நடக்கவிருக்கும் 15ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் பீரங்கி பிரச்சாரத்தையும்,கூப்பாட்டையும்,கத்தலையும் உலகமே வேடிக்கைப் பார்த்து வருகிறது.

பீரங்கியாவது உடலைத் தான் துளைக்கும்; இங்கோ சிலரின் பீரங்கி பிரச்சார கருத்துக்கள் பிறரின் மனதை துளைக்கும் வீரியம் நிறைந்ததாக இருப்பது வருத்தத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழித்து பேசும் எவரையும் ரோலரை ஏற்றி நசுக்குவேன் என மத்திய மந்திரி பதவியில் இருப்பவரும் மதச் சார்பற்றவன் என காட்டிக் கொண்டிருப்பவருமான லாலு பகிரங்கமாக கூச்சலிடுகிறார்.

வருணின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்,லாலுவின் கருத்து,ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வருண் கூறிய கருத்துகளுக்கான எதிர் பதிலே என்பதும் மறுக்க முடியாத விஷயம்.

அக்கருத்துக்களினால் இருவருமே கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.(மற்றொரு வழக்கில் வருண் இன்னும் விடுவிக்கப்படவில்லை)இதில் காமெடி என்னவென்றால் தேர்தல் ஆணையத்திற்கு இவர்களை தண்டிக்கும் உரிமை இல்லையாம்;தண்டனைக்கான சட்டமும் இவர்கள் கைவசம் இல்லை.

பின்னே எதற்கய்யா அரசு சாரா அமைப்பு என்று பாவனா காட்டுகிறீர்கள்.வெறுமனே விதிமுறைகளை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்??

இலங்கையில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நேற்று வைகோ அய்யா அவர்கள் வீறு கொண்டு பேசியிருக்கிறார்.அவர்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதே மேடையில் இருந்திருக்கிறார்கள்.இதனை தமிழகக் கட்சிகள் எவையும்(ஆளுங்கட்சி உட்பட) கண்டித்ததாக தெரியவில்லை.

இப்படியெல்லாம் பேசுவதினால் தமிழகத்திற்கு என்ன நன்மை பயக்க போகிறது!(அல்லலுறும் தமிழர்களுக்கு குரல் கொடுங்கள்! அதை விட்டு விட்டு...)

(தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவு அதிகமென்றால் ம.தி.மு.க விற்கு வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே தமிழகத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என ஆங்கில ஊடகங்கள் சில கேள்வி எழுப்புகின்றன)

சிறுபான்மையினருக்கு எதிராக விரல் நீட்டும் எவரின் விரல்களையும் வெட்டி வீசுவேன்;டெல்லியில் ஆந்திர காங்கிரஸ் காரிய குழு தலைவர் ஸ்ரீனிவாஸ் இரு தினங்களுக்கு முன்னர் கூறியது இது.

இப்படி வெறி பிடித்தவர்கள் தான் நாளைய மந்திரிகள்,நாடாளப் போகிறவர்கள்!!

பிரதமர் சிங் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தெரியாதவர்,நோஞ்சான் பிரதமர்,ஒன்றிற்கும் லாயக்கில்லாதவர் என பா.ஜ.க முழங்காத பிரச்சார மேடைகளே இல்லை.பதிலுக்கு காங்கிரஸ் பக்கமிருந்து,அத்வானி 1992 ல் என்ன செய்தார் என இந்தியாவிற்கே தெரியும் என்கிறார்கள்.

மேலும் காங்கிரஸ் 2002 கலவரத்தையும் அதற்கு பதிலாக பா.ஜ.க 1984 கலவரத்தையும் கூறி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவதயே அனைத்து பிரச்சார மேடைகளும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி விட்டு கூட்டணி தாவுவதிற்கு எந்த கட்சியும் விதி விலக்கல்ல(இது குறித்த எனது முந்தைய பதிவு இங்கே) மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைக்க இயலாத நிலைமை இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணமோ?

தேர்தலில் போட்டியிட டைட்லருக்கு அனுமதியளித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இருந்து சோனியாவிற்கு (உபயோகப்படுத்தப்பட்ட) ஷூக்கள் அடங்கிய பெட்டி ஒன்றை அனுப்பவிருப்பதாக அகாலிதளம் அறிவித்திருக்கிறது.

புஷ்ஷை நோக்கி எறியப்பட்ட ஷூ நிகழ்வு சீக் சமூகத்தைச் சார்ந்த நிருபர் ஒருவரை அது போன்று செய்யத் தூண்டியது என்றால் பிப்ரவரியில் பெண்கள் ராம் சேனாவிற்கு chaddi அனுப்பிய சம்பவம் இப்போது அகாலிதளத்தை ஷூ அனுப்ப தூண்டியிருப்பதாகவே படுகிறது!! (எப்பிடித் தான் யோசிக்கிறாங்களோ)

நேற்று (8.4.09) அத்வானி,முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவருமே மிகச் சரியாக 12.39 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.அந்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தால் வெற்றி நிச்சயம் என நம்புகிறார்களாம்.

ராமாயணத்தில் ராவணனை ராமன் 12.39 மணிக்கு வீழ்த்தினான் எனவே அந்த சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தால் நிச்சயம் வெற்றி அடைவோம் என்கிறது பா.ஜ.க.

(அப்போ எல்லா தொகுதியிலும் இந்த டைம்லயே வேட்புமனு தாக்கல் செய்தா ஆட்சிய பிடிச்சிரலாம்!!)

March 29, 2009

மதமென்னும் மாயவலையில் சிக்கியிருக்கும் மேனகாவும் மகனும்

பொதுவாக மதம் என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்த விரும்பாதவன் நான்,(சமயம் என கூறுவது தான் வழக்கம்)எனினும் உத்திரப்பிரதேச தேர்தல் தொகுதியான பிலிபித்தில் வருண்காந்தியால் நிகழ்த்தப்பட்ட உரையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களினாலும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மனதில் அவர்களின் சமய வழிபாடு,மதம் கோலோச்சியிருப்பதால் மதமென்று குறிப்பிட வேண்டிய கட்டாயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சமயத்தை/சமயத்தவரை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தாக்குவோம் என முழக்கமிட்டுள்ளார் நேரு வம்சா வழியைச் சார்ந்த வருண்காந்தி.

இவ்வாறு கூறுவதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டைப் பெறுவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென்றால்,வருண் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் முழங்கியிருக்கலாம்;அதுவும் இல்லை,அது அவர்களின் கட்சி கூட்டமென்கிறார்கள்.

கட்சியிலும் கட்சி மேலிடத்திலும் நல்ல பெயரை பெற வேண்டுமென்று அவ்வாறு முழங்கினாரா என்பதும் தெரியவில்லை.அவர் கூறிய கருத்து உண்மை என அறியப்பட்டால் அது 'அவரது தனிப்பட்ட கருத்து' என கட்சியும் அவரிடமிருந்து விலகி நிற்கிறது.

இளம் வயதிலேயே வருண் மத சாயம் கொண்டு முழங்கிய இக்கருத்துக்கள் அவரிடமிருந்து நல்ல அரசியலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே.அதோடு இன்றைய இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமும் ஆகியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் லண்டனில் சட்டமும் பொருளாதாரமும் பயின்றவர்.

அக்கருத்துகள் அவரது சொந்த கருத்துகளா இல்லை கட்சியினரால் உந்தப்பட்டு உரைக்கப்பட்டவையா என்பது யாருக்கும் புலப்படாத ஒன்று.

----------
வருண் கூறிய கருத்துக்களை விட அவர் நேற்று சரணடைவதற்காக சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகள் மேலும் வருந்தத்தக்கவை.அவரது ஆதரவாளர்களுடன் அவர் சென்ற பேரணியும் அதனைத் தொடர்ந்த கலவரங்களும் தடை உத்தரவு(144)அமல் படுத்துமளவிற்கு சென்றிருக்கிறது.அதன் பெயரில் புதிதாக வழக்கு ஒன்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

(சரணடைய சென்றவர் வாகனத்திற்குள் அமர்ந்து செல்லாமல் வாகனத்தின் மேல் அமர்ந்து ஊர்வலம் சென்று பிரச்சினை வலுக்க காரணமானது ஏனோ)

--------
வருண் ஆவேசப்பட்டு முழங்கி விட்டார் சரி, ஆனால் அவரது அன்னை திருமதி.மேனகாவும் அவருக்கு நிகராக பிரிவினையை தூண்ட முயற்சிப்பது தான் மற்றொரு கவலைக்குரிய விஷயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த காவலர் ஒருவர் தான் வருண் சரணடைய சென்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்திருக்கிறார் மேனகா.

இத்தனைக்கும் அந்த காவலர் அன்று பணியிலே இல்லை என மறுத்திருக்கிறார் பிலிபித் பகுதியின் காவல்துறை சூப்பிரண்ட்.

ஒரு காவலரையே காவலராக பார்க்க முடியாமல் அவரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக பார்ப்பது ஏனோ புரியவில்லை.

இவர்கள் கூறிய இக்கருத்துக்கள் இவர்களின் சொந்த கருத்துக்களா இல்லை மதமென்னும் மாய வலையில் சிக்கியமையால் தூண்டப்பட்டு தூவப்பட்ட விஷம கருத்துக்களா என்பது அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!

March 24, 2009

ஓ(ன்) ஓட்டு யாருக்குலே


ட்ர்ர்ர்ர்ர்ரிங்க்...ட்ர்ர்ர்ர்ர்ரிங்க் என தொலைபேசி வெகுநேரம் சிணுங்கிக் கொண்டிருக்கவே 'எம்மா ராணி அந்த போன எடுமா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தார் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த வாத்தியார் அய்யா தமிழ்துரை.

பெல் வேற லாங் பெல்லா இருக்கே ட்ரங்க் காலா தான் இருக்கனும் என மனதில் நினைத்துக் கொண்டே தேர்தல் சிறப்புப் பத்திரிக்கையை புரட்டினார்.

'என்னங்க, உங்களுக்கு தான்' என சொல்லி முடிக்கும் முன்னரே சமையலறையை நோக்கி நகர்ந்தார் துரையின் மனைவி.

என்னலே எப்பிடி இருக்க?இப்ப தான் தூத்துக்குடி ஆளுவள ஞாபகம் வருதோ... ஊர்ல எல்லாரும் சவுக்கியமாடே?

உங்க தயவுல எதோ இருக்கோம் அண்ணே என்று எதிர் முனையிலிருந்து மணியனின் குரல் வந்தது.

துரையே மேலும் தொடர்ந்தார்...'எலக்சன் இந்த தடவ எப்பிடிலே அங்க? 'பிரச்சாரத்துக்கு வண்டிய கட்டி கூப்பாடு போட ஆரம்பிச்சிருப்பானுவளே திருநவேலி பயலுவ' என்று சொன்னவாறே நாற்காலியை தன் பக்கம் இழுத்து அதில் அமர்ந்தார்.

ஆமாண்ணே அது பத்தி எதும் உங்க கிட்ட கேக்கலாமுன்னு தான் போன் போட்டேன்.

முந்தி மாறி இல்லணே... இப்போல்லாம் பெரிய பெரிய காருல வாராணுவ, ட்ரக்கரு ஜீப்புல இந்த பயலுவ பிரச்சாரம் பண்ண காலமெல்லாம் போச்சு. எல்லாம் நல்லா வசதியாத்தாண்ணே இருக்காவ.

நம்ம தே இப்பிடியே வயக்காட்டில இன்னும் காலத்த தள்ளிக்கிட்டு இருக்கோம்,வயக்காட்டுக்கு ஒரு டிரர்க்டர் கேட்டு லோன் போட்டதயே இன்னும் காங்கல.

சரிதாம்லே என துண்டினால் நெத்தியை ஒற்றினார் துரை, என்னத்தல சொல்ல...ரோடெல்லாம் கேவலமா கிடக்கு, நம்ம பயன்னு பாத்து ஓட்டு போட்ட அந்த எம்.எல்.ஏ பய கூட இந்த பக்கம் திரும்பிப் பாக்கலயேடே. அப்புறம் இந்த எம்.பி பயலுவள நம்பி என்னத்த அறுக்கச் சொல்லுத.

இவனுகள எல்லாம் நம்பினா சுடுகாட்டுக்குத் தாம்லே போவனும். எலக்சன் வந்தா மட்டும் "ஓட்டுப் போடுங்கனு" வெக்கமில்லாம ஊரு பக்கம் வறானுவ .

எலக்சன் முடிஞ்சா இங்க யாம்ல வராணுவ இவனுவ, நேரா சிட்டில ஒரு வீடு,மெட்றாஸ்ல ஒண்ணு, டெல்லில ஒண்ணுனு அங்கயே கதியா கிடக்கானுவ.

வருசத்தில ரெண்டு தடவ பாக்கதே பெரிய விஷயம்,இவனுக கிட்ட போய் என்னத்த சொல்லதுக்கு நம்ம.

இல்லணே இந்த தடவயும் பெரிய கட்சிக்கே ஓட்டு போட்டு பாப்போம்;டெல்லி ஆட்சியயும் பாக்க வேண்டியிருக்குல்ல என்றார் மணியன்.

டெல்லிய எல்லாம் பாத்தா நம்ம ஊர எவன்டே சரி பண்ணுறது?ஏலே நீ என்ன வேணா சொல்லுலே என் ஓட்டு நம்ம தொகுதிக்கு நல்லது செய்யாத பழயவனுக்கு இல்ல, உருப்படியா எதும் செய்வேன்னு சின்ன கட்சி ஒண்ணுல இருந்து எம்.ஏ படிச்ச ஒரு பையன் நிக்கானாம்; இந்த தடவ அவனுக்கு தாம்ல என் ஓட்டு என்று தீர்க்கமாக சொன்னார் தமிழ்துரை.

மற்றொரு முனையில் தமிழ்துரை ஓட்டளிப்பதாக சொல்லிக் கொண்டிருந்த வேட்பாளரின் தொலைபேசி உரையாடல்... "என்னய்யா பி.ஏ, பெரிய கட்சி காரனுவ எவ்ளோ சக்கரம் தருவாங்களாம் அவங்க கூட்டணிக்கு போனா; நம்ம கேட்டது இல்லனா அடுத்த கூட்டணிக்காரங்க கிட்ட பேசிப்பாருலே" என சொல்லிவிட்டு போனை துண்டித்தார் !!

March 14, 2009

பிரதமர் பதவியை குறிவைக்கும் பிரபலங்கள்

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான கூட்டு சதிகளும் கூட்டு இல்லாத சதிகளும் இப்போதே அரங்கேற தொடங்கி விட்டன.

கடந்த 14 ஆவது பாராளுமன்ற தேர்தல் போலல்லாது காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும்,பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக முன்னணிக்கும் சவாலாக ஒரளவு பலம் நிறைந்த! மூன்றாவது அணியும் உருவெடுத்துள்ளது.

கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கின்றனவோ இல்லையோ அதற்கு முன்னர் பிரதமராக யார் வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றன.

பிரதமர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கே முன்னிறுத்தப்பட்டிருந்தாலும் சோனியா/ராகுல் காந்தியின் பெயர்களும் அடிபடாமல் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அத்வானியின் பெயர் முன்மொழியப்பட்டாலும் குஜராத் முதல்வர் மோடிக்கும் பா.ஜ.க வில் ஓரளவு ஆதரவு உள்ளது.

மூன்றாவது அணியில் தற்போது அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் பிரதமர் நாற்காலியை குறி வைத்தே மூன்றாவது அணியில் இணைந்திருப்பதாகத் தெரிகிறது.

பகுஜன் சமாஜின் மாயாவதி,தெலுங்கு தேசத்தின் சந்திரபாபு நாயுடு,அ.இ.அ.தி.மு.க வின் அம்மா,முன்னாள் பிரதமரான மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேவேகவுடா என அனைவரும் பிரதமர் பதவியைப் பெற இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டனர்.

மூன்றாவது அணியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்த இரு பெண் பெரும்புள்ளிகளான மாயாவும்,ஜெயாவும், எங்களிடம் நீங்கள் தான் கையேந்தி நிற்க வேண்டும் என்ற செய்தியையும்;பிரதமர் பதவிக்கு நாங்களும் போட்டியாளர்கள் தான் என்ற தங்கள் குறிக்கோளையும் மறைமுகமாக அறிவித்தாகி விட்டது.

மூன்றாவது அணியின் கட்சிகளுக்கு, நாளை (15.03.09) இரவு விருந்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மாயா என்ன மாயையை ஏற்படுத்த போகிறாரோ?

ஜெயாவின் விருந்தையும் விரைவில் எதிர்பார்க்கலாமோ!

இதனிடையில் பிரதமர் நாற்காலிக்கு குறி வைத்திருக்கும் மற்றொரு பிரபலம், ஏற்கெனவே பல நாற்காலிகளைக் கண்ட தேசியவாத காங்கிரசின் நாற்காலி நாயகன் சரத்பவார்.

"மகாராஷ்டிராவில் இருந்து பிரதமர் ஒருவர் வருவதை மகாராஷ்டிரா மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என கூறியிருப்பதிலிருந்து இவரும் மறைமுகமாக தனது நாற்காலி மோகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.

ஆனாலும் தற்சமயம் உள்ள மூன்று அணிகளிலும் இவர் இதுவரை தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

கிரிக்கெட் வாரிய தலைவராகவும்,மத்திய விவசாயத்துறை அமைச்சராகவும் உள்ள இவரையும் நாற்காலி மோகம் விட்டு வைக்கவில்லை. 2010 முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இவர் பொறுப்பேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலை பொருத்த மட்டில் ஒற்றை நாற்காலிக்கு போட்டி போடுபவர்களில் எவர் பிரதமராக வருவார் என கணிப்பது மிகக்கடினமே.

இப்படியாக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கின்றனவோ இல்லையோ பிரதமர் பதவிக்கான தங்கள் பிரதிநிதியை நேரடியாகவோ/மறைமுகமாகவோ அறிவித்திருப்பதிலிருந்து தங்கள் பதவி மோகத்தை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளன.

March 09, 2009

கூட்டணி கூத்துகள்

15 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. தற்பொழுது எந்த மாநிலத்தை நோக்கினும் கூட்டணி கூடும் முயற்சியில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.


இரு பெரும் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க வும் போட்டி போட்டுக் கொண்டு மாநில கட்சிகளை வளைத்துப் போடும் படலங்களில் பம்பரமாக இயங்கி வருகின்றன.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் முன்னமே கட்சிகள் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம், இல்லை இல்லை இது பழைய கூட்டணி, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இன்ன இன்ன தொகுதிகளில் தான் இடம் தருவோம், இன்ன இன்ன மாநிலங்களில் இத்தனை தொகுதிகள் தான் தருவோம் என தம்பட்டம் அடிக்க தொடங்கி இருந்தன.

கட்சிகளின் கொள்கைகளை (இன்றைய அரசியல் சூழ்நிலையில் அப்படின்னா என்னாங்க என கேட்கிற சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்வார்கள்)மூட்டை கட்டி வைத்து விட்டு நாணயமின்றி,வெட்கமின்றி வெறும் பதவி ஆசைக்காக மட்டும் கூட்டணி தர்மம் என்ற பெயரில் மகா கேவலமாக நடந்து கொள்வதை காண சகிக்கவில்லை.

கொள்கைகளை வியாபாரம் செய்து வெறும் பதவிகளுக்காக மட்டுமே அரசியல் செய்து, விடியலை காண்பிக்க வேண்டிய நாட்டிற்கு இருளை காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொஞ்சமும் கூச்சமில்லாமல் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களிடம், தங்களை சிறை தள்ளியவர்களிடம் கூட கூட்டணி எப்படித் தான் வைத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்தியாவில் எந்த கட்சியும் இது போன்ற கபட கூட்டணிகளுக்கு விலக்கில்லை,கட்சிகளினிடையே நடந்து வரும் கூட்டணிப் பேச்சுக்கள் கட்சிகளின் மேல் அதிருப்தியையே ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தை நோக்கினால் தங்களை மதசார்பற்றவர்கள் என தங்களை எப்போதும் அறிவித்து கொண்டிருக்கிற தமிழகத்தின் இரு பெரும் திராவிட கட்சிகள் பா.ஜ.க வுடன் மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டனர் கடந்த தேர்தல்களில்.

பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் போது மதவாதத்தை குறித்து தி.மு.க வோ, அ.தி.மு.க வோ கவலைப் படுவதில்லை.

பா.ஜ.க வுக்கு எதிரணி என்றால் போதும், உடனே ஆரம்பித்து விடுவார்கள் பா.ஜ.க வினரை குற்றம் குறைகள் சொல்ல.என்ன அரசியல்/கூட்டணி தர்மமோ இது!

காங்கிரஸ் மட்டும் சளைத்தவர்களா என்ன கூட்டணி அரசியலுக்கு. மத்தியில் ஆட்சியில் அமர மாநிலங்களில் எதையும் விட்டுக்கொடுப்பார்கள் அவர்கள்.

திராவிட கட்சிகள் ஒன்று மாறி ஒன்று ஏமாற்றவே, தமிழகத்தில் தற்போது சரியான பாடம் படித்துள்ளனர் பா.ஜ.க வினர்.எனினும் அகில இந்திய அளவில் அவர்களை முன்பு ஏமாற்றிய சிவசேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன.

தோழர்களை குறித்து சொல்லவே வேண்டாம்.

இப்படியாக கட்சிகள் அனைத்தும் பதவிகளுக்காக,நாற்காலிகளுக்காக தங்கள் கொள்கைகளை ம(து)றந்து கூட்டணி மாறி கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்

தேர்தல் ஆணையமும்,சட்டமும் இது போன்ற கூ(கெ)ட்டணிகளை வைத்து 5 வருட கேலிக் கூத்துகளுக்கு காரணமாகின்றன.இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதோ என்னமோ(கூட்டணிகளே இருக்கக் கூடாது என கருதுபவன் நான்.அது போன்று தெரிந்தெடுக்கப்பட்ட ஒருவர் தனது 5 வருட காலத்தில் பிறிதொரு கட்சிக்கு மாறுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது)

அப்படியே கூட்டணிகளால் ஆட்சி அமைந்து விட்டாலும், ஒரு முடிவெடுக்க அல்லது புதிய திட்டங்களை நிறைவேற்ற அவர்களுக்குள்ளாக கருத்து வேறுபாடு வேறு.

இந்த வேறுபாடுகள் மறைந்து திட்டங்கள் அமல்படுத்தும் முன்னர் 5 வருடமும் முடிந்து விடும், பின்னர் திட்டங்கள் மக்களை சென்று சேர்வது என்றோ?

அவர்கள் அடிக்கும் கூத்தை மக்கள் வேடிக்கை பார்க்கிறதோடு சரி, மீண்டும் தேர்தல் வந்துவிட்டால் அதிகம் பணமளிப்பவருக்கு ஓட்டளித்து விட்டு அவரவர் வேலையை கவனிக்க சென்று விடுவர்.

இது போன்ற கூட்டணி கூத்துக்களுக்கு முடிவு தான் என்றோ?

Related Posts with Thumbnails