November 20, 2022

கிரிக்கெட்டிலிருந்து கால்பந்து வரை

ன்று உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் துவங்கவிருக்கிறது.  அந்த களிப்பில் மனம் திளைத்திருக்கையில், கிரிக்கெட் பைத்தியமான எனை கால்பந்து ஆட்டங்கள் அதன் பக்கம் ஈர்த்தது குறித்து அசை போடாமல் இருக்கவியலவில்லை.


இன்றைய தேதியில், எனக்கு  பரிச்சயமானவர்களில் பெரும்பாலோனோர் கிரிக்கெட் பிரியர்கள் தான்.

என் நினைவில், ஆறு வயது முதல் கிரிக்கெட் என்கிற விளையாட்டு மட்டுமே பதிவாகியிருந்திருக்கிறது.

கிரிக்கெட் ஒரு கட்டத்தில் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டிருந்தது. கவாஸ்கரின் தடுப்பாட்டமும், ஶ்ரீகாந்தின் சில நிமிட அதிரடிகளும், கபில்தேவின் ஆக்ரோஷமான  பந்துவீச்சும் பால்யத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வழி நினைவலைகள்.

1987 - 1990 வரையிலான கால கட்டத்தில் கிரிக்கெட் பேட்டில் காம்பஸ் கொண்டு துளையிட்டு அதில் எண்ணெயை தேய்த்துக் கொண்டிருக்கும் ' மனோ ' அண்ணன் இன்றும் பசுமரத்தாணி போன்று மனதில் பதிந்திருக்கிறார்.

நெல்லை ஹைகிரவுண்ட் (இன்றைய மேட்டுத்திடல்) ஜான்ஸ் பள்ளி / கல்லூரி மைதானங்களில் கால் கடுக்க லெதர் பால் ஆட்டங்களைக் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

ஐந்தாவது படிக்கும் போது மார்த்தாண்டத்தில் பள்ளி முடிந்து நான் நேரத்திற்கு வீடு திரும்பவில்லையென்றால் ' ஸ்டார் லாட்ஜ் வெளிய நின்னு கிரிக்கெட் பாத்திட்டிருப்பான் ' என்கிற புரிதல் வீட்டிற்கு இருந்தது;  கூடவே, 'வந்ததும் இருக்கு அவனுக்கு '  என்கிற வசைகளும் ஒலித்துக் கொண்டிருக்கும். அப்போது தான் (1991) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிமுகாகியிருந்தது.

இப்படியான கிரிக்கெட் பிரியம், 2008-2015 ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கிரிக்கெட் குறித்ததான 80 பதிவுகளை எழுதவும் வகை செய்திருந்தது.

எனினும், கிரிக்கெட் மீதான ஆர்வம் 1999 ல் அசாருதீன் உள்ளிட்டோர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செய்தியைக் கண்டதில் இருந்து குறையத் தொடங்கியிருந்தது.

அதற்கேற்றார் போல, 1996-1998 களில், வண்ண வண்ண உடைகளை அணிந்து பந்தை அங்கும் இங்கும் உதைக்கும் அணிகளை தொலைக்காட்சி நேரலையில் பார்க்கும் நண்பன் ஆனந்த் @ ஜோஷியைப் பார்த்து ' என்ன இவன் சனி ஞாயிறு ஆனா இதையே பாத்திட்டு இருக்கான் ' என்பதாக இருந்தது! கூடவே கால்பந்து மீதான ஆர்வமும் துளிர்த்தது

Live என்பதை லிவ் எனவும்; Chelsea என்பதை செல்சியா எனவும் உச்சரித்து அவனிடம் பல்ப் வாங்கியதும் உண்டு 😂

அப்படி எனக்கு அறிமுகமானது தான் EPL எனப்படும் English Premier League Club Football.

இதனைப் பின்பற்றித்தான் லலித் மோடி IPL Cricket துவங்கினார் என்பது வரலாறு.

2000 த்திற்கு பின்னர் பல நாடுகளின் கால்பந்து லீக் களையும், பிற கால்பந்து தொடர்களையும் பின் தொடர்வது வழக்கமாகிப் போனது.

மெஸ்ஸி இருந்தவரை பார்சிலோனா வையும். தற்போது மேன்செஸ்டர் யுனைட்டட் அணியையும் பிடித்த அணிகளாகக் கொள்ளலாம்.

கிரிக்கெட் சில நாடுகளால் மட்டுமே விளையாடப்படும் ஒரு ஆட்டம்.

கால்பந்து என்பது அப்படியல்ல!

" உலகக் கோப்பை " என்கிற பதம் " கால்பந்து உலகக் கோப்பை " ஆட்டங்களுக்கு மட்டுமே நியாயம் செய்யும்.

அடுத்த 29 நாட்களும் பெருவாரியான உலகின் பார்வை கத்தாரின் மீதே குவிந்திருக்கும்.

கூடவே, உலகக் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர், கத்தார் பேச விரும்பாத LGBTQ, ஐரோப்பா பேச விரும்பாத நிறவெறி மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் குறித்து பேசி உலகின் பார்வையை கத்தார் நோக்கி திருப்பியிருக்கிறார்!

அடுத்த ஒரு மாதம் கால்பந்து ரசிகர்களின் உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது ⚽



Related Posts with Thumbnails