Showing posts with label Swine Flu(HIN1). Show all posts
Showing posts with label Swine Flu(HIN1). Show all posts

August 07, 2009

பன்றிக்காய்ச்சலுக்கு பன்றிகள் தான் காரணமா?

பன்றிக் காய்ச்சல் என்பது H1N1 காய்ச்சல் என மூன்று மாதங்களுக்கு முன்பே உலக சுகாதார நிறுவனத்தால் (WHO), மாற்றி அறிவிக்கப்பட்ட பின்னரும் பொது மக்களாலும், ஊடகங்களினாலும் பன்றி காய்ச்சல் என்றே இன்னமும் அறியப்பட்டு வருவதை மக்களின் அறியாமை என கொள்வதா? இல்லை ... சரியான தகவலை அறிய மறுக்கிறார்கள் என கொள்வதா?

இந்த மாதம் H1N1 காய்ச்சலுக்கு பலியான முதல் இந்திய உயிருக்குப்பின் தற்பொழுது இந்நோய் குறித்த பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமாகி வருகிறது. என்றாலும் பெரும்பாலோனாரால் இன்னமும் பன்றிக்காய்ச்சல் என்றே அறியப்படுவது வருந்தத்தக்கது.

மனிதரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த H1N1 வைரஸ்கள், நோயுற்ற பன்றிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ்களுடன் ஒன்றிப்போகவில்லை என்கிறது உலக விலங்குகள் நல நிறுவனம். இதனாலும், காரணமே இன்றி பன்றிகள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும் உலக சுகாதார நிறுவனம், Swine Flu (பன்றிக் காய்ச்சல்) என்ற பெயரை H1N1 Flu (H1N1 காய்ச்சல்) என மாற்றி அமைத்தது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.

ஆனால் இன்னமும் நம்மூர்களில், பன்றி இறைச்சியை உண்பதால் பன்றிக் காய்ச்சல் பரவும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஊடகங்களும் பன்றிக் காய்ச்சல்...பன்றிக்காய்ச்சல் என்றே விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களின் மனதிலும் 'பன்றி' என்பது மாற்ற முடியாத சொல்லாகி விட்டது.

பன்றிக்காய்ச்சலுக்கு H1N1 காய்ச்சல் என்ற பெயர் மாற்றத்தையும், பன்றி இறைச்சி உண்பதால் இந்நோய் பரவுவதில்லை என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள சற்றே சிரமப்படுவார்கள் என்றாலும் அதனை செய்ய வேண்டியது மத்திய மாநில அரசுகள் மற்றும் ஊடகங்களின் கடமையாகும்.

H1N1 காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களையும், இந்தியாவில் இந்நோயின் தீவிரம்,கட்டுப்பாட்டு முறைகள் போன்ற பல தகவல்களையும் http://www.swineflu-india.org/ என்ற இணையதளத்தின் மூலம் அறிய முடியும்; புதிதாக கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் இங்கு பதிவேவேற்றமும் செய்கிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு http://www.cdc.gov/h1n1flu/qa.htm என்ற தளத்திலும் உலவலாம்.

May 07, 2009

பாலியல் சித்திரவதை,பன்றிக்காய்ச்சல்,கால்பந்து களேபரம்

ஸ்காட்லாந்தில் குழந்தைகளை சில வருடமாகவே பாலியல் சித்திரவதை செய்ததாக '8'நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 மாத குழந்தையையும் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள் இந்த கயவர்கள். இவர்களில் அனைவரும் படித்து உயர் வேலைகளில் இருப்பவர்கள்,அதிலும் ஒருவன் கிறிஸ்தவ பணி செய்து வருகிறவனாம்... என்ன கொடுமை!! Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகள் மீதான இவ்வகை பாலியல் ஈர்ப்பு மிகக் கொடியது.உலகம் முழுவதும் பல குழந்தைகள் இது போன்ற கொடூரங்களுக்கு ஆளாகின்றனர்.

Paedophile என அறியப்படும் இந்த கொடியவர்களிடமிருந்து குழந்தைகள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீபா அவர்கள் "குட் டச் பேட் டச்" என்ற ஒரு இடுகையை எழுதியிருந்ததார்கள்.அதனை இங்கே படிக்கலாம்.

---------------

swine flu அதாவது பன்றிக் காய்ச்சல் என அழைக்கப்படுவதற்கு பன்றி பண்ணை வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் H1N1 flu என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

பன்றிக் காய்ச்சல் என ஆரம்பத்தில் அறியப்பட்டாலும் பன்றிகளிலிருந்து மனிதனுக்கு பரவியதாக இது வரை நிரூபிக்கப்படாததும் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம்.H1N1 காய்ச்சல் குறித்த மேலும் தகவல்கள் இங்கே.


பெங்களூருவில் இந்தியாவின் முதல் H1N1 காய்ச்சல் உறுதிப்படுத்தப்படலாம் என தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய இருவர் தனி அறைகளில் வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இது உறுதி செய்யப்படலாம்.

------------------

சாம்பியன்ஸ் லீக் என அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து 'கிளப்'புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது.இதன் இரண்டாவது அரை இறுதி போட்டியின் இரண்டாம் நிலை (second leg) ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து கிளப்பான செல்சீ (chelsea) ம் ஸ்பெயினின் பார்சிலோனாவும் நேற்று லண்டனில் மோதின.

ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே அடித்த கோல் மூலம் முன்னணியில் இருந்த செல்சீ அணியே வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் மீதமிருக்கையில் பார்சிலோனா அணி கோல் அடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது.

ஆட்டத்தில் நடுவர், இருமுறை வழங்கப்பட வேண்டிய பெனால்டிகளை வழங்காதமையால் கோபம் கொண்ட செல்சீ அணியினர் ஆட்ட முடிவின் போது நடுவரை சூழ்ந்து கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.குறிப்பாக டிடியர் ட்ரோக்பா எனப்படும் வீரர் நடுவரை அடிக்க பாய்ந்து விட்டார்.தற்பொழுது நடுவருக்கு கொலைமிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன.


செல்சீ அணிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தும் அவர்களால் மேலும் கோல்களை இட முடியாததே தோல்விக்கு காரணம்.மாறாக பார்சிலோனா அணியினர் ஆரம்பம் முதலே அருமையாக ஆடினர்.அவர்களின் போராட்ட குணமும் நம்பிக்கையும் அவர்களுக்கு வெற்றி ஈட்டித் தந்தது.

முதல் அரையிறுதிப் போட்டியில் அர்சினல் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்தின் சிறந்த 'கிளப்'பான மேன்செஸ்டர் யுனைட்டட் அணியை ஸ்பெயினின் சிறந்த 'கிளப்'பான பார்சிலோனா இறுதிப் போட்டியில் சந்திக்கவிருக்கிறது.

வீரர்களின் எதிர்ப்பும் skysports ன் விவாதமும் காணொளியாக கீழே

April 27, 2009

உலகை அச்சுறுத்தும் swine flu


(பதிவர் சுல்தான் அவர்களின் பதிவைத் தொடர்ந்து மேலும் சில தகவல்களுடன்)
swine flu எனப்படும் பன்றிக் காய்ச்சல் மேற்கத்திய நாடுகளை வெகுவாக கவலைக்குள்ளாக்கியிருக்கிறது

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் மட்டும் 150பேர் பலியாக காரணமாகியிருக்கும் இந்த பன்றிக் காய்ச்சல் தற்போது வேகமாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பன்றிகளையே (swine) அதிகம் தாக்கியதால் பன்றிக் காய்ச்சல் என அறியப்படுகிறது.இந்த வகை காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவியது என்றாலும் மெக்சிகோவில் தற்பொழுது பாதிக்கப்பட்ட எவரும் பன்றிகளுடன் நெருங்கி இருந்ததாகக் கண்டறியப்படவில்லை.

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து, ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது swine flu.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி நிலையை அமுல்படுத்தியுள்ளது.இந் நோய் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருக்குமாறு இந்திய அரசாங்கம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Swine flu வைக் குறித்து அனைவருக்கும் எழும் சில கேள்விகளும் பதில்களும்

ப்படி பரவுகிறது?

1.இந்த காய்ச்சல் H1N1 swine flu எனப்படும் வைரஸால் பரவுகிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை விரைவாக தாக்குகிறது.
3.வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ வைரஸ் காற்றில் கலப்பதால் அருகில் இருப்பவருக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்க முடியுமா?

1.வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் 70-90% வரை வைரஸ் பரவுவதலை தடுக்க முடியும்
2.இருமும் போதோ தும்மும் போதோ கை அல்லது கைக்குட்டையால் வாயை மறைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.
3.சுத்தமாக இருப்பதன் மூலம் தடுக்கலாம்.

வைரஸ் தாக்குவதால் என்ன பாதிப்பு?

1.மூன்று நாள்களுக்கும் அதிகமான காய்ச்சல்
2.தொடர்ச்சியான இருமல்
3.உடல் சோர்வு
4.வாந்தி,வயிற்றுப் போக்கு
5.கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

Swine flu விற்கு சிகிச்சை உள்ளதா ?

1.ஓரிரு நாள்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
2.வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தக்க சிகிச்சை பெறுதல்
3.வைரஸ் தாக்குதலுக்குள்ளான நபர் 48 மணி நேரத்திற்குள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பெறுவாரானால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

swine flu வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மெக்சிகோவிற்கு பயணம் செய்ய வேண்டாமென சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏற்கெனவே நலிந்திருக்கும் பொருளாதாரம் swine flu வினால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நன்றி யாஹூ
Related Posts with Thumbnails