பொட்டல் காட்டிலும், புழுதிக் காட்டிலும் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் மேற்கத்திய இசையைக் கற்று மேற்கத்தியர்களே அசந்து போகும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்; உடன், இளையராஜா அவர்களின் இசைக் குறிப்புகளுக்கு அவர்கள் வாசிப்பதற்கெல்லாம் எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
டோரதி திரைப்படத்தின் இசைத் துணுக்கு ஒன்றை Mikel Toms அவர்கள் Conduct செய்ய London Royal Philharmonic Orchestra அதனை வாசிக்க இளையராஜா அவர்களும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களும் கணினி வழியே பார்க்கும் இந்த காணொளியை பார்க்கப் பார்க்க அவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இதே இசைக்குழு தான் இளையராஜா அவர்களின் Valiant சிம்பொனியையும் இசைத்திருந்தார்கள். அந்த நிகழ்வை நேரடியாக பார்க்கவும் கேட்கவும் காலம் எனக்கு நல்வாய்ப்பை அளித்தது.
இளையராஜா எனும் இசைப் பேராளுமை குறித்து பலருக்கு பலவித கருத்துகள் இருக்கலாம், ஆனால் தமிழர் வாழ்வின் எல்லா விதமான உணர்வுகளுக்கும் இசையைத் தந்திருக்கிற அவரது படைப்புகள் இந்த பிரபஞ்சம் அழியுமட்டும் இசை ரசிகர்கள் மனதில் நிலைக்கும் என்பது குறித்து மாற்றுக்கருத்துகள் கட்டாயமாக இருக்க முடியாது.
இந்த வீடியோவில் இசைக்குறிப்புகளை தந்து விட்டு ஒன்றுமறியாதவர் போல் கரங்களை பின்னால் கட்டிக் கொண்டு நிற்கும் அந்த படம் ஒரு கலையம்சம் கொண்ட Frame 🥰❤️. இளையராஜா அவர்களது கரங்களுக்கு அன்பு முத்தங்கள்.
-----
சில தன்விளக்கங்கள் இனி...
இளமையில் ஏ. ஆர் ரஹ்மான் அவரகளது இசையை அதிகம் கேட்டு வளர்ந்து அந்த பிரமையில் மூழ்கி புதுப்பட கேசட் எப்போது வந்தாலும் முதல் நாளே வாங்கி விடும் வழக்கம் வைத்திருந்தேன்.
இளையராஜா அவர்களின் இசையில் காசி பட கேசட் தவிர்த்து வேறு எதற்கும் பணம் கொடுத்து வாங்கிய நினைவு இல்லை. எனது அறியாமையால் இளையராஜா அவர்களின் இசை மீது அவ்வளவு நாட்டம் இல்லாமல் இருந்தேன்.
இதற்காகவேத்தான் மார்ச் 8 2025 அன்று லண்டனில் Mikel Toms அவர்கள் நடத்திய இளையராஜா அவர்களின் முதல் சிம்பொனியான Valiant - ஐ கேட்க யார் வரவில்லையென்றாலும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாம் அந்த வரலாற்றின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக நேரடியாக சென்று ரசித்தேன்.
அதை, தமிழர் ஒருவர் அதிலும் ஆசியாவிலே முதல் முறையாக ஒருவர் சிம்பொனி இசையை கோர்த்திருக்கிறார், அதை எப்படி தவற விடுவது என்கிற அடிப்படையிலும், லண்டனுக்கு அருகிலிருந்தும் நாம் செல்லவில்லையென்றால் எப்படி என்பதாலும், இளையராஜா அவர்களுக்கு இந்த வழியிலாவது நன்றி சொல்லவும், மரியாதை செலுத்தவும் ஒரு வாய்ப்பாக கருதி Hammersmith Eventim Apollo அரங்கிற்கு சென்றிருந்தேன்.
இசைப் பேரரசர் இளையராஜா வாழியவே!


