அமெரிக்க தேர்தல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாக 2012 அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி இப்போதே செய்தி ஊடகங்களும், அரசியல் ஆய்வாளர்களும் அலச ஆரம்பித்து விட்டன.அதில் அதிகம் பேசப்பட்டு வருபவர் குடியரசு கட்சியைச் சார்ந்த இந்திய-அமெரிக்கர் பியுஷ் பாபி ஜின்டால் (Piyush "Bobby" Jindal ) இவர் லூசியானாவின் 55 ஆவது கவர்னராக இருந்து வருகிறார். அக்டோபர் 20, 2007 அன்று தனது 36 ஆவது வயதிலேயே அமெரிக்காவின் மிக இள வயது கவர்னராக பதவியேற்ற பெருமைக்குரியவர்.
மேலும் ஒரு இந்திய-அமெரிக்கர் என்ற முறையில் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் சிறப்பையும் பெற்றவர். இவருக்கு Supriya Jolly Jindal என்ற மனைவியும் Selia Elizabeth,Shaan Robert,Slade Ryan என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
ரோமன் கத்தோலிக்கத்தைப் பின்பற்றுகிறார் இவர்.அமெரிக்க மருத்துவ சங்கத்திற்காக சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

2008, ஆகஸ்ட்டில் லூசியானா மாகாணத்தில் உருவான கஸ்டாவ் எனும் சூறாவளியின் போது வெகு வேகமாக,மிக நுணுக்கமாக செயல்பட்டு கடலை ஒட்டியிருப்போரை 3000 தேசிய பாதுகாப்பு படையினரோடு விரைந்து இடம் மாற்றியிருக்கிறார்.இதனால் ஏற்படவிருந்த பெருத்த மக்கள் சேதம் வெறும் 16 பலியோடு நிறுத்தப்பட்டது. 2005 ல் கட்ரினா சூறாவளியின் போது ஏற்பட்ட பாதிப்பை விட (கிட்டத் தட்ட 1836 மரணம்) பெருமளவில் இது குறைவாகும்.இதனால் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் அதிக நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.
மேலும் சூறாவளியின் சமயத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்காக நடக்கவிருந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கிறார்.(நம்மவர்கள் எங்கே?)
இந்த 2008 தேர்தலின் போதே துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப் பட வேண்டி பரிசீலிக்கப் பட்டவராம் "ஜின்டால்".ஆனாலும் 2012 அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறித்து இவரைக் கேட்டால் நான் அதைப் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை 2011 ல் மீண்டும் லூசியானா கவர்னர் ஆகுவதையே விரும்புகிறேன் என்கிறாராமாம்.
ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் அமெரிக்க அதிபர் ஆகியுள்ள நிலையில் ஒரு இந்திய-அமெரிக்கர் அதிபராவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.
நன்றி & தகவல் ஆதாரம்
1.Yahoo
2.Wikipedia
