August 11, 2021

மெஸ்ஸி எனும் கால்பந்து வைரம்

கால்பந்து உலகில் கடந்த ஒருவாரமாக அதிகம் பேசப்பட்டு வருவது பார்சிலோனா வில் இருந்து பாரிஸ் ற்கு இடம் பெயர்ந்திருக்கும் மெஸ்ஸி குறித்து தான். 


இடம் பெயர்ந்து வாழ்தல் எல்லோருக்கும் எளிமையாக அமைந்து விடுதல் இல்லை. 2000 ஆவது ஆண்டில் பதிமன்றே வயது இருக்கையில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டு சிகிச்சைக்கான வசதிக்காக பார்சிலோனா கால்பந்து அணியின் வாயிலாக அர்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினில் தனது தந்தையுடன் குடி பெயர்கிறார் "லியோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி" 


அன்று துவங்கி அடுத்த 20 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தவர் தற்போதைய கோவிட் காலத்து புதிய பொருளாதாரத் தடைகளால் பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை இழக்க நேரிடுகிறது!


தனது வருமானத்தை பாதியாகக் குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்த பின்னரும் கூட தொடர்ந்து பார்சிலோனாவிற்காக விளையாடுவது மறுக்கப்பட்ட ஒன்றாகிப் போய்விட்டது. 


அதனை அவர் அறிவிக்கையில் உடைந்து அழுத போது மெஸ்ஸியைத் தொடர்கிற ஒவ்வொருவரும் அவரது வலியை உணர்ந்திருக்கக் கூடும். 



தற்போது மெஸ்ஸி, PSG - பாரிஸ் செயின்ட் ஜெர்மன் என்கிற பிரான்ஸ் நாட்டின் அணிக்காக இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 


அது இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் விட்டது. அதே அணியில் அவரது சக அர்ஜென்டினா வீரர் டி மரியா, அவருடன் பார்சிலோனாவில் முன்னர் ஆடிய நெய்மர், கூடவே பிரான்சின் சிறந்த இளம் வீரர் ம்பாப்பே என பன்முகத் திறமைகளும் அடங்கியிருக்கிறது. 


பார்சிலோனாவில் மெஸ்ஸி விளையாட ஆரம்பித்த காலங்களில் அளிக்கப்பட்ட 30 ஆம் எண் பாரிஸ் அணியிலும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அணியிலிருக்கும் நெய்மர் எண் 10 உடன் ஆடுவதால் மெஸ்ஸிக்கு எண் 30 வழங்கப்பட்டிருக்கிறது. 


இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் (UCL) பட்டத்தைப் பெற்றிராத PSG யை அதை நோக்கி பயணிக்க வைப்பதே முதல் நோக்கம் என்றிருக்கிறார் மெஸ்ஸி. 


இதுவரை PSG அணி குறித்து பேசாதவர்களும் இனி பேசக்கூடும்; அந்த அணிக்கு வியாபார ரீதியான நன்மைகளும் நடந்தேறும்; இங்கிலாந்தில் அதிகம் கவனிக்கப்படாத பிரான்சின் Ligue1 இனி கவனம் பெறக் கூடும்; இவை எல்லாவற்றிற்கும் பின்புலம் "லியோனல் ஆன்ட்ரஸ் மெஸ்ஸி" எனும் ஒற்றைப் பெயரும் அவரது திறமையும் தான்! 


மெஸ்ஸி காலத்தால் அழியாத கால்பந்து வைரம் என்றால் அது மிகையல்ல. 




July 25, 2021

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்

ரித்விக்/ குழந்தை நட்சத்திரங்கள்


ரித்விக் போன்ற குழந்தைகள் நடிப்பிலோ, பிற கலைகளிலோ சிறந்து விளங்குவது குறித்து தொடர்ந்து பலதரப்பட்டக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

செய்தி வாசிப்பாளர்களை பகடி செய்த காணொளி நிச்சயம் வாய் விட்டு சிரிக்கக் கூடிய வகையறா தான்.

ஆனாலும் 'என்ன வெங்காயத்துக்கு' மாதிரியான அல்லது 'லிப்ஸ்டிக் நல்லாருக்கு' ; ட்ரெஸ் நல்லாருக்கு மாதிரியான வயதுக்கு ஒவ்வாத வசனங்கள் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ஒருசாரார், ரித்விக்கின் பெற்றோர் அவன் மீது சுமையை ஏற்றுகிறார்கள் என்கின்றனர்; மறுசாரார் கல்வி, கலை, விளையாட்டு, மதம் சார்ந்த ஏதாவது ஒரு விடயத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் மீது வலிந்து திணிக்கத் தானே செய்கிறார்கள் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர்; அதுவும் உண்மை தான்.

எதுவாயினும், சிறுவர்களின் புரிதலுக்கு அப்பாலான வசனங்களை, அவர்களைக் கொண்டு பேச வைப்பது பெரும் அபத்தம்.

மழலை மொழிகளும், சிறுவயது குறும்புகளும் எப்போதும் ரசிக்கக் கூடியவையே. ஆனால் அவற்றை நமது சுயப்பிடித்தங்களுக்குள் நிறுத்த முயற்சிப்பது முறையல்ல!

பேபி ஷாமிலிகளும், குற்றாலீஸ்வரன்களும் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதறிவோம் தானே!

போற்றபோட வேண்டியவை மழலை மொழிகள் தானேயல்லாமல் வலிந்து திணிக்கப்படுகின்ற மலிவான வசனங்கள் அல்ல!

June 26, 2021

எரிக்சன்/CPR/யூரோ2020/Faith

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளில் டென்மார்க் - ஃபின்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம், முதல் பாதியை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். 42 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் சுயநினைவற்று கீழே விழுகிறார்.

அத பாத்ததும், பசங்க... "அப்பா... என்னாச்சி, என்னாச்சி!  ன்னு கேள்வி கேக்குறானுக; எனக்கும் அதிர்ச்சி! அவர் முகம் குப்புற விழுந்த விதமும் எவ்வித அசைவும் இல்லாத கண்களும் எரிக்சன் மரித்து விட்டார் என்பதைத் தான் உணர்த்தியது.

எரிக்சன் கீழே விழுந்ததும் டென்மார்க் அணியின் கேப்டன், எரிக்சன் உடைய நாக்கு அவரது தொண்டையை அடைக்காமல் இருப்பதற்கான முதலுதவி செய்கிறார்; அடுத்த சில வினாடிகளில் மருத்துவக் குழு களத்திற்குள் ஓடி வருகிறார்கள்.

இரு அணிகளைச் சார்ந்த வீரர்களும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்; சிலர் கண் கலங்குகின்றனர்; மைதானத்தில் பேரமைதி நிலவுகிறது.

CPR எனப்படும் அவசர கால முறைமையை மருத்துவக் குழு எரிக்சன் மீது செயல்படுத்துகிறது. அவரது நெஞ்சின் மேல் அழுத்துவதும், கூடவே Defibrillator கருவி மூலம் Electrical Shock அளிப்பதுமாக இருந்த அந்த காட்சியை மருத்துவத் துறை சாராத எவரும் காணுதல் நிச்சயம் இன்னும் பதட்டத்தையே ஏற்படுத்தும்.

இன்னும் சொல்லப்போனால் ஒருவரது தனிப்பட்ட சிகிச்சை முறைகளை நேரலையில் காண்பித்ததே அறமற்ற செயல். சிறுவர்கள் முதல் மனோதிடம் இல்லாதவர்கள் வரை இவற்றைக் காணும் வாய்ப்பு இருப்பதால் நேரலையை நிறுத்தியிருக்க வேண்டும்.

டென்மார்க் அணியின் மொத்த வீரர்களும் மருத்துவக் குழுவை சுற்றி நின்று எரிக்சனுக்கு கிடைக்க வேண்டிய தனிமையை உறுதிப்படுத்தியது நெகிழச் செய்த நிகழ்வு.

ஐந்து நிமிட அவசர முதலுதவிக்குப் பின்னர், எரிக்சனின் இதயம் மீண்டும் செயல்படத் துவங்கியிருக்கிறது! கேப்டன், நடுவர், மருத்துவக்குழு என அனைவரும் அதி வேகமாக செயல்பட்டதால் தான் இது சாத்தியப்பட்டது என்பதே நிதர்சனம்.

இத எல்லாம் பாத்த பசங்க, என்ன பண்ணாங்க, எப்டி இறந்து போன எரிக்சன் திரும்ப வந்தான்னு மேலும் கேள்விகள அடுக்கவே... CPR குறித்த தகவல்களை அவர்கள் காதிலும் போட்டு வைத்துவிட்டு இறுதியாக, கடவுளை நம்பி வேண்டினா மட்டும் இப்ப எரிக்சன் திரும்ப வந்திருப்பானான்னு ஒரு கேள்விய வச்சேன்!

அதுக்கு... ம்ம் ஹும், சான்சே இல்ல அப்டின்னானுக!

சற்று தெளிவாகத் தான் இருக்கானுக என்பதில் சிறிய ஆறுதல்!

எரிக்சனின் முழுப்பெயர் "கிறிஸ்டியன் டேனேமேன் எரிக்சன்" என்பது வெறும் தகவலுக்கு மட்டுமே! 🤭

CPR குறித்த விழிப்புணர்வை நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் ஏற்படுத்துவது நமது கடமை.

https://youtu.be/bEkrQzID8oc

May 29, 2021

இரு கொள்ளை நோய்கள் இடைவெளியில் தொலைக்கப்பட்ட பேரடையாளம் - CBH

பிறந்த சில மாதங்களில் தாயைப் பறிகொடுத்து விட்டு எங்கோ அனாதையாய் இருந்திருக்க வேண்டிய சிறுவன், தொண்டு நிறுவனம் ஒன்றினால் தத்து எடுக்கப்படுகிறான்; பின்னாளில் ஏழை எளிய மக்களுக்காக நாகர்கோவிலில் மருத்துவமனை ஒன்றைத் துவங்கிச் செல்கிறார்; துவங்கப்பட்ட போது  இந்தியா முழுவதும் காலரா எனும் கொள்ளைநோயினால் பீடிக்கப்பட்டிருந்திருக்கிறது.

அம்மருத்துவமனையின் மூலம் அப்பகுதியைச் சார்ந்த பெருந்திரளான மக்கள் பயனடைகின்றனர். சம காலத்தில் அங்கு சிகிச்சை பெற்றவர்கள்படித்தவர்கள்பணி செய்தவர்கள் என சில லட்சம் பேர் மிக உயர்ந்த நிலையில் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கின்றனர்.

நூற்றிருபத்தைந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓரு கொள்ளை நோய் கொரோனா உருவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் வாழும் சனங்களை வெகுவாகப் பாதிக்கிறதுநாம் சிகிச்சைப் பெற்ற மருத்துவமனையாயிற்றே,

நாம் பயின்ற இடமாயிற்றேநாம் பணிபுரிந்த நிறுவனமாயிற்றேநம் உணர்வுகளோடு பிணைந்த மருத்துவமனையாயிற்றே என்பவற்றின்  பெயரில் மூச்சுத்திணறல்களோடும் நெஞ்சு வலிகளோடும் சாமானியர்கள் நம்பிக்கையோடு அம்மருத்துவமனையை நாடுகிறார்கள்போகின்ற வேகத்தில்அவர்கள் நம்பிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் விதம் "இங்கு சிகிச்சையளிக்க முடியாது" என்கிற பதிலுடன் திருப்பி அனுப்பும் மிக மிகப் பரிதாபமான நிலையில் இன்று இருக்கிறது அம்மருத்துவமனை!

 அம்மருத்துவமனை துவங்க காரணமாக இருந்தவர் 'Harry' Henry John Andrews [b.1873 d.1919]

 அவரது சிறு வரலாறு கீழே

1873 ல் லண்டன் கிழக்கு முனையில் அனாதையாக தன் வாழ்நாளைக் கழித்திருக்க வேண்டிய அவர் எம்மா பூத் என்கிற பெண்மணியால் தத்து எடுக்கப்பட்டு அவர் பணி புரியும் சிறுவர் இல்லத்தில் வளர்க்கப்படுகிறான்.

எம்மா 1888 ல் இந்தியாவிற்கு பயணப்படுகையில் அச்சிறுவனையும் உடன் அழைத்து வருகிறார். இந்தியாவில் காலரா நோய் அதி தீவிரமாக இருந்த நேரமது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது பதின் பருவத்திலேயே (1893) மருத்துவப் பணியில் ஈடுபாடு காட்டத் தொடங்குகிறான் அச்சிறுவன்.

நாகர்கோவிலில் அவர்களது அலுவலகக் குளியலறையை மருத்துவப்பணிக்காக பயன்படுத்துகிறார்.

பின்னர் சிக்காகோ சென்று மருத்துவம் பயின்று விட்டு நாகர்கோவில் திரும்பும் அவர் மருத்துவர் பெர்சி டர்னருடன் 1901 ல் மருத்துவமனையை துவக்குகிறார். அங்கிருந்து குஜராத் Emery மருத்துவமனையில் சில காலமும்பின்னர் உ.பி மொரதாபாத்தில் சில காலமும் பணியாற்றி விட்டு வஷிரிஸ்தான் (இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது) பகுதியில் இருந்த இந்திய ராணுவ முகாமில் மருத்துவராகப் பணியில் இருந்த போது தோட்டாக்களால் காயமடைந்த ராணுவ வீரர்களைப் பாதுகாப்பான இடத்தில் மாற்றிக் கொண்டிருந்த தருணத்தில் தோட்டாக்களால் துளைக்கப்பட்டு உயிர் நீத்திருக்கிறார்!

தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டச் சிறுவன்அவனது காலம் முழுமையும் பிறர் நலனிற்காக உழைத்து இறக்கும் தருவாயிலும் பிறருக்காகவே மாண்ட பேராளுமை எங்கே! அவர் துவக்கி வைத்துப் போன மருத்துவமனையினால் மூன்று தலைமுறைகள் வரை நன்மைகளைப் பெற்று விட்டுஇன்று அவ்விடத்தையே மீச்சிறு அவசரச் சிகிச்சைக்கு கூட ஒவ்வாத ஒரு இடமாக பேணுகின்றவர்கள் எங்கே!!

அங்கு பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையிலும்அங்கு பணிபுரிந்தவன் என்கிற அடிப்படையிலும்இன்றளவும் ஒரு அங்கமாகத் தொடர்பவன் என்கிற ஆதங்கத்திலும் இதைப் பதிவு செய்கிறேன்! 

இன்றைய தேதியில் - சுயநலன்களால் தொலைக்கப்பட்ட ஆகப்பெரும் அடையாளமாகத் தான் அவ்விடத்தைப் பார்க்கிறேன். 

நான் அண்ணாந்துஅதிகம் வியந்து பார்த்தஎன் மனதிற்கினிய CBH குறித்து மன வருத்தத்துடன் எழுதுவது இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில்  கனத்த இதயத்துடன் முடிக்கிறேன்.




Related Posts with Thumbnails