Showing posts with label பருவநிலை மாற்றம். Show all posts
Showing posts with label பருவநிலை மாற்றம். Show all posts

January 28, 2010

எங்கே செல்லும் இந்த பாதை!!!

முன்னெப்போதுமில்லாத அளவிற்கு இந்த வருடம் பருவநிலையில் மாற்றம் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கி விடுகின்ற பனிப்பொழிவும், குளிரும் இந்த வருடமும் அப்படியே தொடங்கியது என்றாலும் நவம்பரும் டிசம்பரும் போன பின்னர் இப்போது தான் அதன் தீவிரத்தைக் காண்பிக்க தொடங்கியுள்ளது.

பல மத்திய ஐரோப்பா நாடுகளில் வெப்பநிலை -10 டிகிரிக்கும் கீழே தான் உள்ளது.

குளிரால் பாதிப்பு ஒருபுறமென்றால் மறுபுறம் இயற்கை தனது கோபத்தை வெளிப்படுத்தி !? உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஹெய்ட்டியில் நில அதிர்வு என்றால் பிரேசிலிலும், பெருவிலும் மழை தனது கோரதாண்டவத்தைக் காண்பித்து வருகிறது.


மரங்களை வெட்டி காகிதங்களையும் உருவாக்கி அதே காகிதத்தில் மரங்களை பாதுகாப்போம் என எழுதும் ஒரே ஜென்மம் மனித ஜென்மமாக மட்டுமே இருக்க முடியும் என்ற குறுந்தகவல் ஒன்று வெகுவாக யோசிக்க வைத்தது.



இது போன்ற இன்னும் எத்தனை எத்தனை இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் நாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை.

பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகள், வானங்களில் இருந்து வெளியேறும் புகை, குளிர்சாதனப் பெட்டியின் CFC என பட்டியல் நீளத்தான் செய்கிறது.

நீங்களும் நானும் உபயோகிக்கும் கணினி இயற்கைக்கு என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்துமென தெரியவில்லை...!!

இவையெல்லாம் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் என்ற கேள்விக்கு விடை தெரிந்தவர் யாரோ?

எங்கே செல்லும் இந்த பாதை!

யாரோ யாரோ அறிவாரோ!!!

---------

குறுந்தகவலை பகிர்ந்து கொண்ட மெரினுக்கு நன்றி

December 07, 2009

இந்தியா மாற வேண்டியது கோப்பன்ஹேகனில் இல்லை இந்தியாவில்

உலக பருவநிலை மாற்றங்களைக் குறித்து விவாதிக்க கோப்பன்ஹேகனில் இன்று நடைபெறவிருக்கும் ஐக்கியநாடுகளின் கூடுகையில் என்ன விதமான முடிவுகள் எடுக்கப்படுமோ தெரியவில்லை.

இந்தியா ஏற்கெனவே உலக நாடுகளின் பொருளாதார ஆதரவும், நவீன கருவிகளின் உதவியும் இல்லையென்றால் எங்களால் மாசுபடுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்துதலையும், சுற்றுசூசல் மாசுபடுதலை தவிர்க்கின்ற முறைகளையும் சரியாக செயல்படுத்தவியலது என தனது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டது.

இந்தியா,சீனா,அமெரிக்கா ஆகிய நாடுகளே அதிக அளவில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இந்த நாடுகளின் மீது மற்ற நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தாலும் ஒவ்வொரு நாடும் மாசுபடுதலை குறைக்க தங்களது பங்கை அளிக்க வேண்டியது கட்டாயமே.

ஒவ்வொரு இந்தியனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்கை அளிக்க முன்வர வேண்டும். இந்தியாவில் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கப்பட வேண்டும்.

இந்தியா தனது நிலைப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டியது இந்தியாவில் தானே அல்லாமல் கோப்பன்ஹேகனில் அல்ல என்பதற்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களே சாட்சி.

நம்மவர்கள் முனைவார்களா...!!!

புகைப்படங்கள் நன்றி: http://beta.thehindu.com/news/international/article60523.ece


மும்பை



கங்கை


ஜம்முவின் தொழிற்சாலை ஒன்றிலிருந்து வெளியேறும் புகை

April 22, 2009

பூமி தினத்தில் விழிப்புணர்வு பெறுவோம்

பூமி தினமான இன்று 22.04.2009 தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் சில ஆங்கில Slides உங்கள் பார்வைக்கு. இதனை power point format ல் தரவிறக்கம் செய்ய இங்கே க்ளிக்கவும்.

நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.வரும் சந்ததிக்கு பசுமையான உலகை விட்டுச் செல்வோம்.

(இதனை மின்னஞ்சலில் அனுப்பிய அண்ணன் ஜீவா அவர்களுக்கு நன்றி)
















April 15, 2009

தண்ணீர் வீணாகுதலை நாமும் தவிர்ப்போம்...

இந்த பதிவை இட காரணமான... பதிவர் ஜீவா அவர்களுக்கு முதலில் நன்றி

-----------------------------


நீரின்றி அமையாது உலகம் எனவும்; நீர் வாழ்க்கையின் அமிர்தம் எனவும்,(water is the elixir of life) எனவும் பள்ளிக்கூடத்தில் படித்த ஞாபகம்.

அமிர்தம் போன்ற அந்த நீரானது இன்று பல பகுதிகளில் கிடைக்கவே மிகக் கடினமாக இருக்கிறது.

நான் அறிந்த வரை...தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிகம் கேட்டிராத தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூட இன்று தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட நேரிடுகிறது.

நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் தண்ணீரை வீணாக்குகிறோம்.

wwf-world wide fund for nature எனப்படும் அமைப்பானது இயற்கையை இன்றைய உலகமயமாக்கலில் இருந்தும்,வெப்பமாகுதலில் இருந்தும் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதத்தில் பூமி நேரம்(Earth Hour) என்ற பெயரில் அந்த அமைப்பு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

wwf அமைப்பு தண்ணீர் வீணாகுதலைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2007 ல் வெளியிட்ட 40 வினாடிகளே கொண்ட இந்த காணொளியில் சிறுகுழந்தை ஒன்று குழாயிலிருந்து வீணாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த முயற்சிப்பது மனதை தொடும்படி உள்ளது.நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.



ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தண்ணீரை தேவைக்கு மட்டும் உபயோகித்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

March 25, 2009

மார்ச் 28 அன்று 'புவி'க்கு வாக்களியுங்கள்


புவி வெப்பமாகுதலை குறித்த விழிப்புணர்வுக்கும் வெப்பமாகுதலை குறைக்கும் ஒரு பகுதியாகவும் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று Earth Hour என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

முதன்முதலில் 2007 மார்ச் 31 அன்று சிட்னி நகரில் மட்டும் 2.2 மில்லியன் மக்கள் ஒளிவிளக்குகளை ஒரு மணிநேரம் அணைத்து புவி வெப்பமாகுதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.(எனினும் 2005ஆம் ஆண்டு தாய்லாந்தில் தான் முதலில் இந்த எண்ணம் உருவெடுத்ததாம்)

2008 ல் அது 50 மில்லியன் மக்கள் பங்குபெற்ற ஒரு உலக நிகழ்வாகியது.கடந்த ஆண்டு 35 நாடுகளின் 370 நகரங்கள் இதில் பங்கெடுத்தன.

இந்த வருடம் புவிக்கும் புவி வெப்பமாகுதலுக்கும் இடையே நடக்கும் வாக்கெடுப்பாக இது கருதப்படுகிறது.அதோடு அகில உலகமே முதல் முறையாக வாக்களிக்கவிருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம்.

ஒவ்வொருவரும் தங்கள் உபயோகப்படுத்தும் மின்சார ஒளி விளக்குகளை ஒரு மணிநேரம் அணைப்பது புவிக்கு அவர்கள் அளிக்கும் வாக்காகவும் ஒளி விளக்குகளை அணைக்காமலிருப்பது புவி வெப்பமாகுதலுக்கு அளிக்கும் ஓட்டாகவும் கருதப்படவிருக்கிறது.

மார்ச் 28 அன்று ஒரு மணி நேரம்(இரவு 8.30-9.30) ஒளிவிளக்குகளை நிறுத்தி தங்கள் ஆதரவை மக்கள் இதற்கு தெரிவிக்கவுள்ளனர். இது வரை 83 நாடுகளின் 2712 நகரங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

குறைந்தது ஒரு பில்லியன் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியிருக்கிறது WWF(Worldwide Fund for Nature/World Wildlife Fund) அந்த ஓட்டுகள் இந்த வருடம் டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹேகனில் உலக தட்பவெப்ப மாற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் உலக தலைவர்களிடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எனவே உங்களால் முடிந்தால் மார்ச் 28 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒளி விளக்குகளை அணைத்து புவிக்கு உங்கள் ஓட்டளியுங்கள்.

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

இந்தியர் சிலரின் ஆதங்கம்: இங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கரண்டே இல்லாம இருட்டா கிடக்கு இதுல இது வேறயா?

Earth Hour குறித்த Youtube ஒளியோவியம் கீழே


February 09, 2009

வெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி

இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும்; முன்னெப்போதுமில்லாத அளவு தொலை தொடர்பில் வளர்ச்சி கண்டிருப்பினும் (செல்போன் இல்லாத நபரே இல்லையெனலாம்) 50 வருடத்திற்கு முன்னிருந்த அதே வளமையும், பசுமையும்,செழுமையும், ஆரோக்கியமும்இன்று இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து.

Global warming - உலகம் வெப்பமாகுதல் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்று. நமது சுற்றுப்புறத்தை நாமே சீரழித்து வருவதாகவே எனக்கும் சில ஆண்டுகளாக தோன்றுகிறது. பிற மாநிலங்களை விடுவோம்; மெட்ரோ என அழைக்கப்படும் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, கல்கத்தா நகரங்களில் நாம் காணும் குப்பைகளும், வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீரும் உலக அரங்கில் நமது புகழ் பாடுகின்றன.

சென்னை மெரினாவே குப்பைகளால் அலங்கோலமாக காட்சி தருவது இன்னும் வேதனை. இந்தியாவை குப்பை மேடாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி இரு தரத்தினரும் இத்தவறைச் செய்கின்றனர்.


எனது பழைய பதிவில் கூறியபடி பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு நடைமேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள் தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் போன்ற தவறுகளை நாமே செய்கிறோம்.

...இவற்றை நிறுத்துவதோடு

# பிளாஸ்டிக் பையை நம்பாமல் துணிகளினாலான பையை கடைகளுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது
# செல்போன் சார்ஜ் ஆகிவிட்டால் மின்சாரத்திலிருந்து துண்டிப்பது
# வேலையற்ற ஓய்வு சமயங்களில் கணினியை turn off செய்வது
# ஆளில்லாத அறைகளில் மின்சார ஒளி விளக்கை நிறுத்துவது
# அவசிய தேவைகளுக்கு மட்டும் கார் அல்லது இரு சக்கர வாகனம் உபயோகித்தல் மற்ற நேரங்களில் சைக்கிள் உபயோகித்தல்
# தேவையான அளவு மட்டும் நீரை செலவழிப்பது
# மற்றவர்களுக்கும் உலகம் வெப்பமாகுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது...

...போன்ற சின்னச் சின்ன விஷயங்களை கடைபிடிப்போமென்றால் உலக வெப்பமாகுதலை நம்மால் இயன்ற மட்டும் தடுக்கவியலும் அதோடு இன்னும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரமும் வழங்க இயலும்; மட்டுமல்லாமல் நாம் நோயற்ற வாழ்வை வாழ்வதோடு நமது வருங்காலத்தினரும் அனுபவிக்கும்படி செய்யலாம்.

இதற்கான முயற்சியில் NDTV தொலைக்காட்சி இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

மும்பை நவம்பர் 2008ல் தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பாரபட்ச ஒளிபரப்பும், ஈழத்தமிழர்கள் விஷயத்தை இருட்டடிப்பும் செய்யும் தனியார் தொலைக்காட்சி NDTV என்றாலும் அவர்களின் இந்தமுயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

நேற்றைய முன்தினம் (07.02.2009) இந்திய நேரப்படி இரவு 7 மணி முதல் நேற்று (08.02.2009) இரவு 7மணி வரை NDTV தொலைக்காட்சியில் இந்தியாவை பசுமையாக்கும் ஒரு முயற்சியாக Greenathon என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை டொயாட்டோ நிறுவனத்தின்உதவியுடன் நடத்தினார்கள்.

உலக வெப்பமாகுதலை (Global Warming) என்னென்ன முறைகளால் தடுக்கலாம் எனவும், சுற்றுப்புறத்தை நாமே எவ்விதம் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் எனவும் பல கருத்துக்கள் சமூக நல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வட இந்திய சினிமா பிரபலங்களால் முன் வைக்கப்பட்டன.

பொதுமக்கள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் விதம், இடையிடையே வட இந்திய சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.(சந்தடி சாக்கில் மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் !!)

அதோடு மின்சாரமில்லாத கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் விதம் உதவியை நாடியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் IPL சேர்மன் லலித் மோடி ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

இயக்குனர் P. வாசுவின் குசேலன் திரைப்படத்தின் ஹிந்தி Remake ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கானின் Billu Barber திரைப்படக்குழு 5 கிராமங்களுக்கு மின்சார உதவியளிப்பதாக ஷாரூக் உறுதியளித்தார்.

ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அவை அனைத்தும் IPCC (Intergovernmental Panel on Climate Change) சார்பாக நோபல் விருது பெற்ற திரு.பச்சோரி(Dr. R.K Pachauri) அவர்கள் துணை வேந்தராக பணிபுரியும் TERI(The Energy and Resource Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, தென்னிந்திய பிராந்தியமான புதுச்சேரி பள்ளி ஒன்றில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வினாடி வினாவும், மேற்கு பிராந்தியமான மும்பையில் தாதர் கடற்கரை சுத்தமாக்கும் பணியும், வடபிராந்தியமான தில்லியில் 24 மணி நேர தொடர் ஓட்டம் மற்றும் யமுனா நதியை சுத்தமாக்கும் பணியும் நடைபெற்றன.

Greenathon குறித்த மேலும் விவரங்கள் இங்கே

நாம் மனது வைத்தால் இந்தியாவை பசுமையாக்க முடியும் என்றே நம்புகிறேன்.
Related Posts with Thumbnails