Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts
Showing posts with label யூத்ஃபுல் விகடன். Show all posts

July 22, 2009

நீ உன்னை அறிந்தால்


பக்கத்து வீடு ஒன்றின் மின்விசிறியை சரிசெய்வதில் மும்முரமாயிருந்தான் ரவி, மேல் மாடியிலிருந்து வழக்கம் போலவே அவனது அம்மாவின் குரல்... ஏண்டா ரவி, தெனம் காலங்காத்தால உனக்கு இதே வேலயா போச்சு... எதாவது ஒரு வீட்டில ரிப்பேர் பாத்திட்டு நிக்க வேண்டியது; அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னு அறக்க பறக்க ஓட வேண்டியது... ஸ்கூல்ல வாத்தியார் கிட்ட திட்டும் வாங்க வேண்டியது. உனக்கு என்னைக்கு தான் நல்ல புத்தி வரப்போவுதோ தெரியல.

உன்னச் சொல்லி என்ன குறை? ஒரே பையன் ஒரே பையன்னு உனக்கு இத்தன செல்லம் குடுத்து வளத்து வச்சிருக்காரு பாரு உங்க அப்பா... அவர சொல்லணும். எல்லாம் என் தலை எழுத்து; நீ இந்த மாசமாவது நல்ல மார்க் வாங்குறியா இல்லயான்னு பாக்கத்தான போறேன். இந்த வருஷம் பெரிய பரீட்சை வேற வருது. நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கணும்னா நல்ல மார்க் இருந்தா தாண்டா முடியும்; யார் கிட்டயும் கை ஏந்த வச்சிராத ராசா... என பெருமூச்சு விட்டுக்கொண்டே சமையலறைக்குள் புகுந்தாள் ரவியின் அம்மா.

கையில் தட்டுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்தவள்... ஏண்டா உனக்கு இந்த ரிப்பேர் பாக்கிற வேல? மோட்டார் ரிப்பேர், கிரைண்டர் ரிப்பேர்ன்னு எல்லாத்துக்கும் காலனில வேற ஆளே இல்லன்னா உன்ன தேடி வராங்க எல்லாரும்? நீ காசு வாங்காம செய்றதாலயோ என்னமோ என்றாள். அவன் செய்றதில அவன் சந்தோஷப்படுறான்... அவன அப்படியே விட்டிரேன் என்றார் தினசரியை புரட்டிக்கொண்டிருந்த ரவியின் அப்பா. சரி சரி நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன் என்ற ரவி சைக்கிள் சாவியை எடுத்துக்கொண்டான்.

பிறிதொரு நாள்... என்னங்க இன்னைக்கு தான பிளஸ் 'டூ' ரிசல்ட் வருது; போய் பேப்பர் வாங்கிட்டு வராமா ஏன் சும்மா மூஞ்ச தொங்கப் போட்டுட்டு உக்காந்து இருக்கீங்க! ரிசல்ட் தான...பாத்தாச்சுடி என்றார். என்னாச்சுங்க என் புள்ள பாஸ் தான என ஆவலாய் வினவியவளுக்கு... இல்லை என தலையை அசைத்தார் ரவியின் அப்பா. எனக்கு தெரியும்....அப்பவே தெரியும், எதுவும் படிக்காம ஓடி ஓடி ரிப்பேர் பாக்கும் போதே தெரியும் இவன் தேற மாட்டான்னு. இவனுக்கு நல்ல புத்தி எப்போ தான் வரப்போவுதோ ஆண்டவனே என கண் கலங்கினாள் ரவியின் அம்மா.

தோல்வியடைந்த பாடங்களை இரு முறை மீண்டும் எழுதிய பின்னரும் ரவி தேறவில்லை... பிளஸ் 'டூ' தேறவில்லையே என்ற அவமானம் ரவியையும், மகனின் வாழ்க்கையைக் குறித்த கவலை அவனது பெற்றோரையும் சூழ்ந்திருந்தது.

மற்றொரு நாள் அண்டை வீட்டு நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரவே அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார் ரவியின் அப்பா. ரவி பாஸ் ஆகாதத பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க... கையில வெண்ணை இருக்கும் போது எதுக்கு நெய்க்கு அலையுறீங்க என்றவரை புரியாமல் பார்த்தார் ரவியின் அப்பா. ரவியோட கைவசம் தொழில் இருக்கும் போது எதுக்கு கவலப்படுறீங்க; சின்னதா ரிப்பேர் பாக்கிற கடை வச்சு குடுங்க, காலனில இருக்கிற நாங்களும் எங்களால முடிஞ்ச உதவி செய்றோம் என்பதை கேட்ட ரவியின் பெற்றோர் மனதில் சந்தோஷம் பெருக்கெடுத்தது.

தனது திறமையை அப்போது தான் முழுமையாக உணர்ந்தான் ரவி.
------------------
யூத் புல் விகடனில் படிக்க இங்கே சொடுக்கவும்.

April 28, 2009

உறவுகளின் மறுபக்கம்


உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது
---------------------------------------------------
தாய்-சேய் உறவு
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

தொட்டிலில் தொடர்ந்து
கரங்களில் தவழ்ந்து

கடல் போன்ற தரணியைக்
கரிசனையுடன் கற்றுத்தந்து

கனிவால்
கண்ணீர் களைந்து

கவலையுடன்
கரை சேர்க்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு

சுயநலம் கருதி
சிசுக்கொலை செய்கையில்

சுய இன்பம் வேண்டி
சுரணையற்று சிசுவை விற்கையில்

சில்லறை காண
சிறார் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கையில்

கரை சேர வேண்டிய
கனவுகளை

கடலிலேயேகவிழ்த்து
கருமாதியும் செய்கிறது

தொப்புள் கொடியில்
துளிரும் (சில)முதல் உறவு
----------------------------------
நட்பு

முன்னாளில்

கல்விச் சாலையின்
கசப்பான பாலைகளில்

கருத்தாய் மாறி
கவிதையாய் கலந்து

கண்ணீரிலும் கவலையிலும்
கைத்தாங்கலானாய்

காவலனாய்-முதல் உறவின்
கவனிப்பிற்கு போட்டியாய்


அதிர்ச்சிகள் ஆக்கிரமிக்கையில்
அன்புடன் ஆதரவானாய்


நட்பு என்னும் புதிய உறவாய்
நாழிகையும் என்னுடன் கழித்தாய்
-----------------------------------------
பின்னாளில்

பிரமை பிடித்தவனாய் - நான்
பிதற்றுகையில்
பிரதானமாகிப் போனாள் - நின்
பெண்ணொருவள்.

நட்பினைத் தேடி
நடையாய் நடந்தவனை
நானில்லை என
நாணமில்லாமல் நவின்றாய்

அநாதையாய்
அவசர தேவை என-சில நூறுகளுக்காக
அண்டுகையில்
அயலானாய் அகன்றாய்-பின்னாளில்

நட்பு என்ற உறவும்-சில
நூறு நாழிகையே
நிலைக்கும் என கூறாமல் கூறிச் சென்றாய்
------------------------------------------------------
சகோதர/சகோதிரி இரத்த உறவு

முன்னாளில்

சகோதரனாய்/சகோதரியாய் சளைக்காமல்
சகோதரம் பாராட்டினாய்

சிறு சண்டைகள்
சிடுமூஞ்சியாக்கினாலும்
சில்மிஷங்களால் சிரிக்கச் செய்தாய்

பனித்த கண்களுக்கு
பரிவு காட்டினாய்

பகடிகளின் மத்தியில்
பாசத்தின் பகலவனானாய்-முன்னாளில்
-------------------------------------------------
பின்னாளில்

விரும்பியது வினையானதால்
வெறுப்பை விதைத்தாய்

புதிய வழி நாடியவனை
புதிரால் புதைத்தாய்

சில்லறை விஷயங்களை
சிக்கலாக்கினாய்

நம்பிக்கை கொண்டு காத்திருக்கையில்
நம்ப வைத்து கழுவேற்றினாய்
------------------------------------------------
உறவுகள் சுமையானால்-மனித
உறவுகள் சுமையானால்
உறவுகளை உதறவும் செய்யும்-மனதுகள்
உலவும் உலகமிது

------------------------------------------------

தொலைதூரம் உடன் பயணித்து
தொலைந்தும் போன உறவுகளை
தொலைவிலிருந்து! திரும்பிப் பார்க்கையில்
தோன்றியவை!

------------------------------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 11, 2009

தேர்தல் வாக்குறுதிகள் இப்படியும் இருக்கலாமோ!

தேர்தலும் நெருங்கி விட்டது.இந்த முறை கட்சிகள் என்ன மாதிரியான தேர்தல் வாக்குறுதிகள் முன் வைப்பார்கள் என்ற ஒரு சிந்தனை.

திராவிட முதியவர் கழகம்

1.எங்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் வாரம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் கழக கடிதம்/இரங்கற் பா கலரில் அனுப்பி வைக்கப்படும்.

2.தமிழக நலன் கருதி எம்.பிக்கள் பதவியேற்றதுமே ராஜினாமா செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்படும்(நன்கு கவனிக்க... தீர்மானம் மட்டும் தான் நிறைவேற்றப்படும்)

3.குடும்பங்களில் சண்டை போட்டு சொத்திற்காக மீண்டும் இணைபவர்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும்

அம்மா திராவிடம் முன்னேற்றும் கழகம்

1.ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவிகளின் பெயருக்கு கீழ் தான் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டம் அமுலாக்கப்படும்.

2.பெண்கள் அனைவரையும் அம்மா என்றழைக்கவும் அவர்கள் காலில் ஆண்கள் விழவும் சட்டம் கொண்டு வரப்படும்.

இதயமில்லா தேசிய காங்கிரேசு

1.தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளனும் ஒரு முறையாவது இல்லையென்றால் ஒரு நிமிடமாவது கட்சியின் மாநில தலைவராக பதவியேற்க பரிந்துரைக்கப்படும்.

2.அவதியுறும் தமிழினத்தை காக்க நிவாரண பொருட்கள் அனுப்பப்படும் (அதே நாளில் டில்லியில் இருந்து ரணம் ஏற்படுத்தும் வெடிபொருட்களும் அனுப்பப்படும்)

3.2011 ல் மாநிலத்தில் காமராஜி ஆட்சி அமைத்து திராவிட முதிய கழகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.(மன்னிக்கனும் வாக்காளர்களே... 2111 என வாசிக்கவும்)

பாட்டாளி மகன் கட்சி

1.முதலில் ஒரு அறிவிப்பு... எங்கள் சின்னம் வாக்காளர்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையில் குரங்கு சின்னமாக மாற்றப்பட்டிருக்கிறது.

2.மகனை மத்திய மந்திரி ஆக்கி அவதியுறும் தமிழ் உடன்பிறப்புகளின் அல்லல் உடனே துடைக்கப்படும்

3.திட்டங்களை எவர் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் சார்பாக அறிக்கை விடப்படும்.

மறுபுரட்சி திராவிட முனங்கலேற்ற கழகம்

1.உலகமே உற்றுநோக்கும் விதம் தமிழக நலன் காக்க! உணர்ச்சிப்பூர்வ கருத்துகள் முனங்கப்படும்.

2.சிறைச்சாலையில் மக்கள் குறை தீர்க்கும் கவுண்டர் ஒன்று திறக்கப்படும்.

3.தமிழின எதிரிகள் தமிழகத்திலிருந்து துரத்தப்பட ஆயுதம் ஏந்தப்படும்

இடவலசாரி கட்சி

1.மக்கள் நலனிற்காக குரல் கொடுத்து ஆட்சியின் இடையிலேயே மக்கள் நலன் கருதி ஆளுங்கட்சிக்கு ஆதரவும் விலக்கப்படும்

2.தமிழர் பண்பாட்டிற்காக சிவப்பேறிய எங்கள் கொள்கைகளையும் விட தயாராக இருக்கிறோம்.

எந்த தேர்தலிலும் இல்லாத படி இந்த முறை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து முன்வைக்கும் வாக்குறுதி:பொதுமக்களின் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல,மலர்கள் மீது. அதனால் காலணிகளுக்கு குறிப்பாக ஷூக்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படும்.

-------------------------

யூத்ஃபுல் விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

April 08, 2009

நினைவுகள் அழிவதில்லை (அயல் நாட்டு வாழ்க்கை)















ரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்

ரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

தில் அளிக்கவே-எதிரொலியால்
தில் அளிக்கவே படைக்கப்பட்ட னை உயர மலைகளும்

ருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்

கலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

திலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்

ல்லாத ஒன்றை
ன் தேடுகிறாய் என
.சி அறையின் சுவர்கள்
ளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில்
------------------------------------
youthful விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

March 24, 2009

ஓ(ன்) ஓட்டு யாருக்குலே


ட்ர்ர்ர்ர்ர்ரிங்க்...ட்ர்ர்ர்ர்ர்ரிங்க் என தொலைபேசி வெகுநேரம் சிணுங்கிக் கொண்டிருக்கவே 'எம்மா ராணி அந்த போன எடுமா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தார் செடிகளுக்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருந்த வாத்தியார் அய்யா தமிழ்துரை.

பெல் வேற லாங் பெல்லா இருக்கே ட்ரங்க் காலா தான் இருக்கனும் என மனதில் நினைத்துக் கொண்டே தேர்தல் சிறப்புப் பத்திரிக்கையை புரட்டினார்.

'என்னங்க, உங்களுக்கு தான்' என சொல்லி முடிக்கும் முன்னரே சமையலறையை நோக்கி நகர்ந்தார் துரையின் மனைவி.

என்னலே எப்பிடி இருக்க?இப்ப தான் தூத்துக்குடி ஆளுவள ஞாபகம் வருதோ... ஊர்ல எல்லாரும் சவுக்கியமாடே?

உங்க தயவுல எதோ இருக்கோம் அண்ணே என்று எதிர் முனையிலிருந்து மணியனின் குரல் வந்தது.

துரையே மேலும் தொடர்ந்தார்...'எலக்சன் இந்த தடவ எப்பிடிலே அங்க? 'பிரச்சாரத்துக்கு வண்டிய கட்டி கூப்பாடு போட ஆரம்பிச்சிருப்பானுவளே திருநவேலி பயலுவ' என்று சொன்னவாறே நாற்காலியை தன் பக்கம் இழுத்து அதில் அமர்ந்தார்.

ஆமாண்ணே அது பத்தி எதும் உங்க கிட்ட கேக்கலாமுன்னு தான் போன் போட்டேன்.

முந்தி மாறி இல்லணே... இப்போல்லாம் பெரிய பெரிய காருல வாராணுவ, ட்ரக்கரு ஜீப்புல இந்த பயலுவ பிரச்சாரம் பண்ண காலமெல்லாம் போச்சு. எல்லாம் நல்லா வசதியாத்தாண்ணே இருக்காவ.

நம்ம தே இப்பிடியே வயக்காட்டில இன்னும் காலத்த தள்ளிக்கிட்டு இருக்கோம்,வயக்காட்டுக்கு ஒரு டிரர்க்டர் கேட்டு லோன் போட்டதயே இன்னும் காங்கல.

சரிதாம்லே என துண்டினால் நெத்தியை ஒற்றினார் துரை, என்னத்தல சொல்ல...ரோடெல்லாம் கேவலமா கிடக்கு, நம்ம பயன்னு பாத்து ஓட்டு போட்ட அந்த எம்.எல்.ஏ பய கூட இந்த பக்கம் திரும்பிப் பாக்கலயேடே. அப்புறம் இந்த எம்.பி பயலுவள நம்பி என்னத்த அறுக்கச் சொல்லுத.

இவனுகள எல்லாம் நம்பினா சுடுகாட்டுக்குத் தாம்லே போவனும். எலக்சன் வந்தா மட்டும் "ஓட்டுப் போடுங்கனு" வெக்கமில்லாம ஊரு பக்கம் வறானுவ .

எலக்சன் முடிஞ்சா இங்க யாம்ல வராணுவ இவனுவ, நேரா சிட்டில ஒரு வீடு,மெட்றாஸ்ல ஒண்ணு, டெல்லில ஒண்ணுனு அங்கயே கதியா கிடக்கானுவ.

வருசத்தில ரெண்டு தடவ பாக்கதே பெரிய விஷயம்,இவனுக கிட்ட போய் என்னத்த சொல்லதுக்கு நம்ம.

இல்லணே இந்த தடவயும் பெரிய கட்சிக்கே ஓட்டு போட்டு பாப்போம்;டெல்லி ஆட்சியயும் பாக்க வேண்டியிருக்குல்ல என்றார் மணியன்.

டெல்லிய எல்லாம் பாத்தா நம்ம ஊர எவன்டே சரி பண்ணுறது?ஏலே நீ என்ன வேணா சொல்லுலே என் ஓட்டு நம்ம தொகுதிக்கு நல்லது செய்யாத பழயவனுக்கு இல்ல, உருப்படியா எதும் செய்வேன்னு சின்ன கட்சி ஒண்ணுல இருந்து எம்.ஏ படிச்ச ஒரு பையன் நிக்கானாம்; இந்த தடவ அவனுக்கு தாம்ல என் ஓட்டு என்று தீர்க்கமாக சொன்னார் தமிழ்துரை.

மற்றொரு முனையில் தமிழ்துரை ஓட்டளிப்பதாக சொல்லிக் கொண்டிருந்த வேட்பாளரின் தொலைபேசி உரையாடல்... "என்னய்யா பி.ஏ, பெரிய கட்சி காரனுவ எவ்ளோ சக்கரம் தருவாங்களாம் அவங்க கூட்டணிக்கு போனா; நம்ம கேட்டது இல்லனா அடுத்த கூட்டணிக்காரங்க கிட்ட பேசிப்பாருலே" என சொல்லிவிட்டு போனை துண்டித்தார் !!

March 01, 2009

அதிகாலை உத்வேகம்...

பனி மூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தாலும் அதிகாலமே நெத்தியில் பட்டையும், தோளில் துண்டுமாக சாயக்கடை மணி சேட்டன் கடையை திறந்து வைத்துக் கொண்டு "கோயம்புத்தூரில ஷோப்பின(Shop)வச்சிருக்கணும், மேட்டுப்பாளயத்து வந்து ஒண்ணும் நடக்கல", சின்ன வயசில எதும் படிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா என முனங்கிக் கொண்டே கடைக்கு சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார்.

எப்போவும் போலில்லாமல் டிசம்பரில் ஆட்கள் கடைக்கு வருவது குறைவு தான்.அத்தனை பனிமூட்டத்தில் காலையிலே யார் தான் வருவார்!

"ஈஸ்வரா இன்னெங்கிலும் நல்ல விதம் நாலு காசு கிட்டனே" என சொல்லி முடிக்கும் முன்னரே வழக்கமாக வரும் பாலக்காட்டு சேல்ஸ் ரெப் விமல் ஆஜர். சேட்டா சுகம் தன்னே, என்ன ஒரு வல்லாத்த சோகம்,என்றார்.

ஒந்நுமில்லா என்ற சாரே... ஹோர்லிக்ஸானோ(Horlicks) அதோ கோஃபியானோ(Coffee) என தொழிலில் மும்முரமாயிருந்தார் சேட்டன்.

கோஃபி போதும்,ப்ரோப்ளம் (Problem)உண்டெங்கி சொல்லு அண்ணாச்சி,நம்ம கிட்ட சொல்றதுக்கு ஏன் தயங்குது என்றார் விமல்.

ஏ... பெருசா பிரஸ்னம் இல்லா,ஷோப்பில (Shop) மும்பு(முன்பு) போல ஆள் வரத்து இல்லே,அது தன்னே; வேற ஒண்ணுமில்ல என்றார் காஃபியை கொடுத்தவாறு.

அதனிடையில் கோயம்புத்தூர் கல்லூரி ஒன்றில் படிக்கும் சிநேகிதர் ராஜனும் வரவே சேல்ஸ் ரெப்புக்கு அரட்டை அடிக்க துணையாகி விட்டது.

என்ன ராஜன் பாஸ்,கால்ல என்ன கட்டு என்று கேட்டார் சேல்ஸ் ரெப்,அது ஒண்ணுமில்ல சார் நேத்து வாலி பால் விளையாடினப்போ கீழ விழுந்திட்டேன்,சின்ன அடி தான் என்ற ராஜன்,சேட்டா ஒரு வில்ஸ் ஃபில்டர் ஒரு காஃபி என்று ஆப்பத்திற்கு மாவு கலக்கிக் கொண்டிருந்த சேட்டனிடம் கூவினார்.

"வோளிபோள் (Volley ball) மும்பு நானும் விளையாடி இருக்கு கோலேஜ்ல(College) படிக்கும் போது"என சேல்ஸ் ரெப் கதை அளக்க தொடங்கினார்.கிரிக்கெட் தான் ஆனா எனிக்கு இஷ்டம்,ஞான் நல்ல ஸ்பின் பௌளர்(பௌலர்/bowler) ஆணு என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.

காஃபி டம்ளரை சேட்டனிடம் நீட்டியவாறு ... ராஜனிடம், பின்னே ... ராஜன்ற ஓரஞ்சு (Orange) பிசினஸ் எங்கன உண்டு என்றார் சேல்ஸ் ரெப்,

அது பரவாயில்ல சார்,அப்பாக்கு உடம்பு சரியில்லாத தால சாயந்திரம் முழு நேரமும் நானே பாக்க வேண்டியதா இருக்கு;அங்க இருந்தே படிக்கவும் செய்யணும் சார்,வீட்டில போனா வீட்டு வேலக்கே நேரம் சரியா இருக்கும் என்றார் வருத்தத்துடன் ராஜன்.

அய்யோ பாவம்,இது போலே செறுக்கன்(பையன்) எல்லா அச்சன்மார்க்கும் (அப்பா) கிட்டியால் பாக்கியம், என்ற வீட்டில பிசாசு ஒண்ணு இருக்கே... பறஞ்சா (சொன்னா) கேக்காது என்று கோபத்தில் தோளில் கிடந்த துண்டை உதறிக் கொண்டு காஃபியை ராஜனிடம் கொடுத்தார்.

இப்போ தொழிலும் ரொம்ப மோஷம்,வீட்டிலே டிவி பின்னே கம்பியூட்டர் ஷோப்புகள்(shop) வந்த பின்னாடி முன்னப் போல பத்திரம்(செய்தித்தாள்), புஸ்தகம் வாங்கான் கூட ஆள் இல்லா.

டிஃபனும் சரியா போறது இல்ல,இதின்ற இடையில் கலியாண வயசாய மோளின்ற (மகளுடைய) செலவுக்கு எங்க இருந்து காசு பாக்கும் ஞான்;எந்தா செய்யா( என்ன செய்ய) என்ற ஈஸ்வரா என புலம்பினார் சேட்டன்.

வீடுகளில் சன்டே விடுமுறையில் அதிகம் விற்பனை செய்யலாம் என்பதால், சன்டே அல்லே இன்னு,ஓஃபீஸில(Office) நெறய பணி உண்டு. சரி ஞான் கொஞ்சம் சீக்கிரம் போகுவா என்றார் சேல்ஸ் மேன்.

சார் உங்க நாவல மறந்து வச்சிட்டு போறீங்க என்றார் ராஜன்,ஓ என்ற நோவல்( Noval) மறந்நு போயி என அதை வாங்கியவர் சாலையின் அந்த பக்கம் நின்று கொண்டிருந்த ஆட்டோவை பார்த்து ஓட்டோ (Auto) என்று கத்தினார்.

சவாரி இருக்கு சார் என்றார் ஆட்டோ டிரைவர் பதிலுக்கு.
ஓ என்ற தெய்வமே, இந்நு என்ற நோவல் மறந்நு,இப்போள் ஓட்டோ கிட்டுந்நில்லா, பஸ்ஸும் இப்போ இல்லா ... எப்போளும் எனிக்கு ராசியே இல்ல ராஜன் என்று சலித்துக் கொண்டு சேட்டன் கடையில் சோகமாக வந்து அமர்ந்தார்.

இதோ வந்திருச்சிங்க பஸ், என்ற ராஜன்... சலிச்சுக்காதீங்க சார்.வாழ்க்கைல எல்லாம் நல்லதுக்காகத் தான் நடக்கும்,ஒண்ணு போனா இன்னொண்ணு வரும்,இப்போ கூட பாருங்க ஆட்டோ இல்லனா என்ன! பஸ் இருக்கு.

நாம விரும்பினது கிடைக்கலனா,கிடைச்சத வச்சு சந்தோஷப்பட்டுக்கணும்,எதயுமே பாஸிட்டாவா பாருங்க சார் என ராஜன் கூறவும் டீ கடை சேட்டன் பிரமித்தார்.

விடுமுறை நாளில் கூட உழைக்கும் சேல்ஸ் மேனையும்,சின்ன வயதில் இத்தனை பக்குவம் கொண்டு படிப்பையும் அப்பாவின் தொழிலையும் கவனிக்கும் ராஜனையும் கண்டு கண்கலங்கினார் சேட்டன்.

இனிமேல் ஏன் படிக்கவில்லை என நினைப்பதும்,சலித்துக் கொள்வதும் தவறு;தொழிலை முன்னேற்ற வழியில்லாமலா போய்விடும் என அந்த தெளிவற்ற பனி மூட்டத்தினிடையிலும் தெளிவான மனம் கொண்டார் சாயக்கடை மணி சேட்டன்.

பின்குறிப்பு:இச்சிறுகதையில் வரும் சில ஆங்கில சொற்களின் உச்சரிப்பு கேரளத்தவர்களுக்கே உரித்தான உச்சரிப்புகள்.அவற்றை கேரளத்தாரின் பேச்சு வழக்கிலேயே எழுதியிருக்கிறேன்; அவை அவர்களின் பேச்சு வழக்கை இழித்து எழுதப்பட்டதல்ல.

February 15, 2009

youthful விகடனில் எனது பதிவு

இந்த மாதம் 12 ஆம் தியதி வேலன்டை தினத்தின் வரலாறு என்ற தலைப்பில் நான் இட்ட பதிவு 14 ஆம் தியதி யூத் விகடனில் வெளியாகியுள்ளது.

ஆதரவு அளித்த இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.

என்னைப்போன்ற எழுத்துலகில் புதியவர்களையும்,கத்துக்குட்டிகளையும் ஊக்குவிக்கும் விகடனுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். யூத் விகடனின் சுட்டி இங்கே http://youthful.vikatan.com/youth/edvinloversday140209.asp

February 12, 2009

வேலன்டைன் தினத்தின் வரலாறு

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றனஅந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது.

கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம். (ராம் சேனாவினர் வேலன்டைன் தினத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோருவதற்கும் காரணமில்லாமலில்லை. கிறிஸ்தவ வரலாறுடைய மேற்கத்திய கொண்டாட்டம் என்பதாகத் தானிருக்கும் அவர்கள் காரணம்)

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது.

மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது.

வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது.

மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு .

இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன.

மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன.

18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது.

வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார்.

கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன.

வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம்.
வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மாத்திரமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.

நன்றி: history & wiki
"Caring" and "sharing" are the only things which makes one's life happy and keep moving
Related Posts with Thumbnails