Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

December 31, 2013

இசையால் நனைய செய்த இளமை - Music Mojo - Keba Jeremiah

2013 அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை. எந்த வருடத்தையும் விட மிக அதிகமான (ஏ)மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த வருடமாகவே பார்க்கிறேன் 2013 ஆம் வருடத்தை. ஆனால் அத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் என்னை இன்னும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வைத்திருப்பதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. நீரின்றி அமையாதுலகு என்பது போன்று இசையின்றி அமையாதுலகு என கூறினாலும் தகும்.

அந்த வகையில் இந்த வருடம் அசர வைத்து, ஆச்சரியப்பட வைத்த இரு தருணங்கள் Music Mojo மற்றும் Keba Jeremiah வின் இசைத் தீண்டல்கள் தான். இளைஞர் பட்டாளமே வரிந்து கட்டிக்கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள் இன்றைய இசையுலகை. அதனை எந்த மொழி பாரபட்சமுமில்லாமல் ஊக்குவித்து வருகிறது கேரளத்தைச் சார்ந்த மாத்ருபூமி பத்திரிக்கை நிறுவனம் ஆரம்பித்த கப்பா தொலைக்காட்சி செய்து வரும் Music Mojo நிகழ்ச்சி.

Music Mojo வில், மொழி வேறுபாடின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் திரைப்படப்பாடல்களும், சுயமாக மெட்டமைக்கப்பட்ட பாடல்களும் இளம் இசைக்குழுக்களால் அற்புதமாக அரங்கேற்றப்படுவது தான் சிறப்பு. இளம் இசைக்கலைஞர்களின் திறமைகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதோடு அவர்களின் இசை புல்லரிக்க வைக்கிறது. இதில் குறிப்பிடும்படியாக ASIMA, Acoustika, Bennet & The Band, Agam, Thaikkudam Bridge, Staccato போன்ற இசைக்குழுக்களைக் கூறலாம் இவர்களுடன் இளம் பாடகர்களான ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், காயத்ரி, நிகில் மேத்யு, ஜ்யோத்சனா, ஜாப் குரியன், நேகா நாயர், மஞ்சரி, பென்னி தயாள், "மூங்கில் தோட்டம்" புகழ் - அபய் ஜோத்புர்கர் என திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இதில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் பலவற்றில்  சில இங்கே. 
ஸ்வேதா மோகன் பாடிய "இன்னும் கொஞ்சம் நேரம்"
 

நிகிதா, நிகில் பாடிய "ஏதோ" 



மஞ்சரி பாடிய "வான் மேகம்"



ஹரிச்சரண் பாடிய "நிலாவே வா"


கேபா ஜெரேமியாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பல ஆண்டுகள் முன்னர் சன் தொலைக்காட்சியில் Route10 இசைக்குழு என்ற பெயரில் ஊ ல ல லா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் Harmonize Project ற்காக பங்களித்து இப்போது பல இசையமைப்பாளர்களுக்கு Guitar இசை மீட்டுபவர் தான் கேபா. இத்தனை இளம் வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான Guitarist ஆகி இருக்கிறார்.


மூங்கில் தோட்டம் - கேபா ஜெரேமியா


செய்யக்கூடிய விஷயத்தில கவனமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இவர்கள் அடைந்த சிறப்பைப் போல் எவரும் அடையலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. இசையின்றி அமையாது உலகு. இவர்களின் இசைக்கு என் வணக்கங்கள். 

December 31, 2012

கடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு


2012 ல் நான் மிக அதிகம் கேட்டப் பாடல். கடல் திரைப்பட மூங்கில் தோட்டம் பாடல் தான். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனதை தொடும் வரிகளுக்கு அற்புதமான இசையை கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

பாடல் வரிகளுடன் காணொளி வடிவில் மூங்கில் தோட்டம் பாடல் இங்கே. 



மூங்கில் தோட்டம்
மூலிக வாசம்
நிறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தயடி பாதை
ஒன் கூட பொடி நட

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

கொளத்தாங்கரையில
குளிக்கும் பறவைக
சிறகு ஒலர்த்துமே
துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
இரத்தம் உறையும்
குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வயில
இருவரும் இருக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே


July 14, 2011

தெய்வத் திருமகன்-விழிகளில் ஒரு வானவில்-சைந்தவி

தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற "விழிகளில் ஒரு வானவில்"  பாடலை இரு தினங்கள் முன்னர் தான் கேட்க நேரிட்டது முதல் முறை கேட்ட போதே அது சைந்தவியின் குரலாகத் தான் இருக்கும் என உணர முடிந்தது. இணையத்தில் தேடிப் பார்த்து சைந்தவி தான் என உறுதி செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து இதனைக் குறித்து கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அந்த பாடலை இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் சைந்தவி அவர்களின் குரலும் தான் முதல் முக்கிய காரணங்கள்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற  மாலை நேரம் பாடல் தான் இதற்கு முன்னர் நான் அதிகம் ரசித்தது. "விழிகளில் ஒரு வானவில்" பாடல் அந்த பாடலை விடவும் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறது. நா.முத்துக்குமார்  அவர்களின் பாடல் வரிகள் குறித்து எதுவும் சொல்ல தேவை இல்ல. பாடல் வரிகளும், இசையும், குரலும் மென்மையாய் இதமாக மனதை வருடுகின்றன. 

அனுபல்லவி உயர்ந்த சுருதியில் பாடப்பட்டாலும் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் "மாலை நேரம்" பாடலைப் போன்றே தாழ்ந்த சுருதியில் பாடப்பட்ட பாடல்.  மாலை நேரம் பாடலை இயக்குனர். செல்வராகவன் அவர்கள் எழுதி இருந்தார்; இந்த இரு பாடல்களுமே காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை; எளிய தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட இரு பாடல்கள் என்றும் கூறலாம்.

சைந்தவி அவர்களைக் குறித்து 2003 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியில் தான் அவர் முதலில் பாடக் கேட்டிருக்கிறேன். அப்போதே அவரது குரலை அதிகம் வியந்ததுண்டு. அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே மேடைகளில் பாடத் துவங்கி விட்டாராம் சைந்தவி.

இவரது சகோதரி வினயா உடன் இணைந்து பல கர்நாடக மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார் சைந்தவி. இன்றைய இளைய தலைமுறையில் கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் மிகச்சிறப்பாக பாடுபவர்களில் சைந்தவி குறிப்பிடத்தக்கவர். அதோடு திரை இசைப்பாடல்களிலும் முத்திரைப் பதித்து விட்டார். மேற்கத்திய இசையும் முறையாக கற்று தேர்ந்தவர் என்பது இணையத்தில் உலவிய போது கிடைத்த தகவல்.

நாளை (15.07.2011) வெளியாகவிருக்கும் தெய்வத்திருமகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மாலைநேரம் பாடலைப் போன்றே விழிகளில் ஒரு வானவில் பாடலையும் எனது கைவண்ணத்தில் சில புகைப்படங்களுடன் + பாடல் வரிகளுடன் காணொளியாக மாற்றியிருக்கிறேன். அதன் யூடியூப் சுட்டி இங்கே. பாடலை கீழே இணைக்கவும் செய்திருக்கிறேன்.



புகைப்படம் நன்றி: http://www.lakshmansruthi.com/index.asp 


December 11, 2010

இசைக்கருவிகள் ஏதுமின்றி ஐ.ஃபோனிலும் ஐ. பேடிலும் இசை


உலகம், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புதுமை என்று கொண்டாடிய காலம் மாறி இன்று அந்த புதுமையிலும் புதுமை செய்திருக்கிறார்கள்.

இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.

இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

மூன்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளே இல்லாமல் மீட்டி வாயை பிளக்க வைத்து விட்டார்கள். நீங்களும் பாத்து வியக்க வேண்டிய நேரமிது.


யூடியூபில் பார்க்க இந்த சுட்டியில் க்ளிக்குங்க. யூடியூபில் வெளியான மூன்றே தினங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் இதற்கு.

இன்று மட்டும் சுமார் 25 முறை பார்த்திருப்பேன் இந்த இசை மீட்டலை. www.northpointmusic.org/christmas இது அவர்களது இணைய தளம்

இது GodTube ன் காணொளி

June 25, 2010

மைக்கேல் ஜாக்சனின் மறுபக்கம்

இன்றோடு (25.06.2009) பாப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் இறந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் காலஞ்சென்று ஒரு வருடமாகிய பின்னும் அவரது மரணத்திற்கான காரணம் சரிவர தெளிவாகவில்லை.பிரபலமானவர்களின் மரணம் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கிறது.

அவர் உயிரோடு இருக்கையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்; சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டன.

அவரது குழந்தையை உயரத்திலிருந்து கீழே போடுகின்ற விதம் பயமுறுத்திய நிகழ்வு ஒன்று அவரது மனநிலையைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

இவைகள் இப்படியிருந்தாலும் MJ வின் நற்பணிகளையும் மறக்க முடியாது. 1991 ல் வறுமையில் வாடும் சிறார்களை மனதில் கொண்டு "Heal The World" என்ற பாடலை அவரே எழுதியிருந்தார். அந்த பாடலைத் தான் அவர் பாடிய பாடல்களிலே சிறந்த பாடலாகக் கருதுவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

I think about the generations and they say we want to make it a better place for our children and our children's children so that they know it's a better world for them and I think they can make it a better place.இப்படித் தான் பாடலுக்கு முன்னர் மைக்கேல் கூறிப்போகிறார்.

Michael Jackson - Heal The World .mp3
Found at bee mp3 search engine

அதன் தொடர்ச்சியாக 1992 ல் "Heal The World Foundation" என்ற அமைப்பை ஏழ்மை மற்றும் வறுமையினால் வாடும் சிறுவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யும் வகையிலும்; மனோ ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லெண்ணத்திலும் ஏற்படுத்தினார்.

பல மில்லியன் டாலர்களையும் இதற்கென்றே செலவிட்டிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

1984 ல் Pepsi Cola வின் விளம்பரம் ஒன்றில் நடிக்கையில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக அவருக்கு பெப்ஸிகோலா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 1.5 மில்லியன் டாலர்கள் முழுவதையும் "Michael Jackson Burn Center" தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக அமெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

"Can You Feel It", "We Are the World" மற்றும் "Man in the Mirror" ஆகியவை உலக அமைதிக்காகவும், பிரிவினைகளுக்கு எதிராகவும் MJ ஆல் பாடப்பட்ட பிற பாடல்கள். இவற்றில் "We Are the World" பாடல் 1985 ல் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 39 இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.  அந்த பாடலை Lionel Richie என்ற மற்றொரு பாப் பாடகருடன் சேர்ந்து MJ எழுதினார். இப்படி MJ செய்த நற்பணிகள் பலப்பல.

ஆனா இன்னைக்கு நம்மூரிலயே பல பேர் கொஞ்சம் காச பாத்திட்டாங்கன்னா கண்ணு மண்ணு தெரியாம ஆடுவாங்க. உதவின்னு வந்தா ஓடி ஒளிவாங்க. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். "மனம் இருந்தா மார்க்கம் உண்டு".

Lionel Richie Stevie Wonder Micheal Jackson - We Are The World.mp3
Found at bee mp3 search engine

அவர் உயிரோடு இருக்கையில் அவர் சம்பாதித்ததை விட அவர் இறந்த பின்னர் இதுவரை அவரது இசை சம்பாதித்தது தான் அதிகமாம்.ஒரு பில்லியன் டாலர்களாம்!!

நன்றி: dailymail & wiki  
Heal The World

June 22, 2010

You Tube ல அடிச்சிட்டோம்ல செஞ்சுரி



காணொளிகளை அதாவது வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ ல் ஒரு நாளில் மட்டும் கோடி கணக்கான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இணையம் குறித்து அறிந்திருப்பவர்களில் இன்று Youtube தளத்தை அறியாதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள் என சொல்லலாம். 2005 ஆம் வருடம் முதல் இந்த தளம் இயங்கி வருகிறது. யூடியுப் வீடியோக்களை அதன் embed code ஆல் எளிதாக பிற தளங்களிலும் இணைக்கவியலுவதும் அதன் தனித்தன்மை.

குறிப்பாக இந்தியர்கள் அதிகம் உலவும் ஆர்குட்டில் குறிப்பிட்ட youtube காணொளியின் சுட்டியை(URL link) அளித்தாலே வீடியோவை சுலபமாக இணைக்க முடிவதால் மேலும் பிரபலமாகியிருக்கிறது யூடியூப்.

அப்படிப்பட்ட youtube தளத்தில் விளையாட்டாக 2008 முதல் வீடியோக்களை இணைக்கத் துவங்கினேன். இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு அன்பரும், புதிய பதிவருமான கெர்ஷோம் @ கிறிச்சானுக்கு உண்டு. http://www.youtube.com/arnoldedwinp இது தான் எனது பக்கம்.

ஆரம்பத்தில் யூடியூப் தளத்தில் இடம்பெறாத பாடல்களை இணைக்கலாம் என்ற ஆர்வம் தான் உத்பால் பிஸ்வாஸ், வைரமுத்து, ஹரிஹரன் கூட்டணியில் உருவான காதல் வேதம் தமிழ் பாப் பாடல்களை இணைக்க தூண்டியது.(copy right யாரும் கேக்காம இருக்கிற வரைக்கும் சந்தோஷம்) அதன் பின்னர் சில கிறிஸ்தவ பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் இணைத்தேன்.

தியாகராஜ பாகவதரின் பூமியில் மானிடன் பாடலையும் புகைப்படங்களைக் கொண்டு காணொளியாக மாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதற்கு காரணமான அண்ணன் அன்பு அவர்களுக்கும், கிறிச்சானுக்கும் நன்றி. அந்த காணொளி, தியாகராஜ பாகவதரின் விசிறிகள் பலரது கவனம் ஈர்த்திருப்பதும் சந்தோஷம் தான். (பலருக்கு பிடிக்காமல் போனது வேறு விஷயம்)

உலகின் பல முனைகளிலிருந்து முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் காணொளிகளுக்கு கருத்துரைக்கும் போது நிச்சயமாகவே இணையத்தைக் குறித்தும். யூடியூபைக் குறித்தும் ஆச்சரியமும் பெருமிதமும் தோன்றும்.

இன்றுவரை 104 அன்பர்கள் யூடியூப் தளத்தில் என்னை பின் தொடருகிறார்கள் என்பது கொசுறு தகவல். இங்கயும் அடிச்சிட்டோம்ல செஞ்சுரி.

நான் அதிகம் ரசித்த "நீ என்பதில் நானும் அடங்கும்" பாடல், காதல் வேதம் ஆல்பத்திலிருந்து இங்கே.

நன்றி: youtube &  விக்கி

June 14, 2010

Waka வக்கா Vs செம்மொழிப்பாடல்

Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.

அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.


இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.

அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.

அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.

ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.

நன்றி: விக்கி

January 07, 2010

ஆஸ்கர் நாயகனிடம் இத்தனை எளிமையா!

ஜனவரி 6 ஆம் தியதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பிறந்த நாள் ஆதலால் அவரது பேட்டியை CNN ஆங்கில தொலைக்காட்சி talk asia என்ற நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை தற்செயலாக காண நேரிட்டது.

மனிதர் மிக எளிமையாக பேசிவிட்டு போனார், சென்னையிலிருக்கும் இசைப்பள்ளியைக் குறித்தும், அவர் பாடல்களுக்கு எவ்விதம் மெட்டமைக்கிறார் போன்ற விடயங்களையும், ஹாலிவுட் வாய்ப்புகளையும் குறித்து விவரித்தார்.


ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக கிடைத்த இரு ஆஸ்கர்களுக்கு பின்னர் மேற்கத்திய உலகில் பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறார் நம் இசைப்புயல்.

ஆஸ்கருக்குப் பின்னர் அமெரிக்காவின் பிரபல ஓப்ரா மற்றும் ஜே லெனோ நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்; ஆங்கில பாப் இசைக்குழுவான Pussy Cat Dolls உடன் பணியாற்றியிருக்கிறார்; என சொல்லிக்கொண்டே போகலாம்.


(அண்மை காலத்து பேட்டி என்று தான் ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அது மே மாதம் 2009 ல் அவர் அளித்த பேட்டி என்று பின்னர் தான் தெரியவந்தது)

எதுவாயினும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பதே பெரிய விஷயம் அதுவும் மேற்கத்திய நாடுகள் நம்மவர் ஒருவரை திரும்பிப் பார்க்கிறது என்றால் நமக்கெல்லாம் அது பெருமையே

December 29, 2009

போர் போதும் தோழா! மனிதம் வாழ வைப்போம்

நாகரீகம் வளர வளர அதன் கூடவே வெறுப்பும், விரோதங்களும் தேசங்களிடையேயும், மனித மனங்களிடையேயும் இன்று பெருகி வருவது மனிதத்தை எங்கு கொண்டு செல்லுமோ தெரியவில்லை.

"முன்னெல்லாம் கோபம் என்றால் கல்லெறிவார்கள். இப்போது குண்டுகளை வீசிப் போகிறார்கள்"உண்மையில் நாம் நாகரீகமடைந்து விட்டோமா?சந்தேகமாக இருக்கிறது!என சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கூறியது தான் மீண்டும் நினைவில் வருகிறது

காலங்காலமாக இருந்து வரும் பிரிவினைகளும், சூழ்ச்சிகளும் இன்னமும் தொடர்ந்து வருவதும் வருத்தம் தரும் விஷயம் தான்.

இலங்கையில் தமிழனுக்கு உரிமைகள் மறுக்கப்படுதலும் , இந்தியா-பாக், இஸ்ரேல்-பாலஸ்தீன், சவுதி-ஏமன் உள்ளிட்ட எல்லைப்பிரச்சினைகளும், மதவாதிகளின் தீவிரவாதங்களும் என்று ஓயுமோ.

இவற்றின் தாக்கத்தால், இக்கொடுமைகள் மாற வேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஹபீப் என்பவர் பாடல் ஒன்றை சென்ற ஆண்டு காணொளியாக வெளியிட்டுள்ளார்

இந்த பாடலில் இடம் பெறும் "இணையங்களால் இணையும் மானிடா! இதயங்களால் இணைவது எப்போது" என்ற அரூர் புதியவன் அவர்களின் வரிகளுக்கு நம்மிடம் நிச்சயம் பதிலில்லை தான். இந்த பாடல் வரிகள் அனைவரையும் நிச்சயம் அந்த ஒரு தருணத்திற்காக ஏங்கச்செய்யக்கூடும்.

இந்த பாடலை பின்னணி பாடகர் திப்பு இன்னும் சில பாடகர்களுடன் பாடியுள்ளார். புஹாரி என்பவர் இயக்கியிருக்கிறார்.

காணொளியை கீழே இணைத்துள்ளேன்.



பூ வாசல் திறந்தால்
வாசம் மயக்கும்
வாழ்க்கை இனிக்கும்

போர் வாசல் திறந்தால்
வாழ்க்கை எரிக்கும்
ஜீவன் மரிக்கும்

இதயமெல்லாம்
இணைந்திடும் நாளெல்லாம்
என் பகைமை வீழாதோ

அதிசயமாய் அகிலமும் மாறியே
அமைதியிலே வாழாதோ

ஓ - மனித மனமே
மடியும் இனமே
மயக்கம் தெளிவாய்

போர், உலகில் வெறியும்
எரியும் வரையில்
தினமும் அழிவாய்(முனைவாய்)

ஒரு ஜீவன்
உயிர் வாழ
நீ பாதை காட்டினாய்

முழு உலகம்
உயிர் வாழ
வகை செய்தோன் நீயே

இது உனக்கு
இது எனக்கு
என பிரிக்கும் உலகம்
ஒன்றானால் நன்றாகும்;
நம் துன்பம் நீங்கிடும்

ஒரு நாட்டை ஒரு நாடு
களவாடும் பிழை தான்
இதனாலே மண்மேலே
தினம் கண்ணீர் அலை தான்

எது புனிதம்
எதில் புனிதம்
என தேடும் மானிடா
இவ்வுலகில் மனிதனைப் போல்
ஒரு புனிதம் ஏதடா

இணையங்களால் இணைந்திடும் மானிடா
இதயங்களால் இணைவோம்-வா

எரிந்திடுதே அனுதினம் உலகமே
அன்பினில் நீ நனைவாயா

போர் போதும் தோழா
மனிதம் வாழ வைப்போம்
ஓர் தாயின் மக்கள்
ஒன்று சேர்ந்து நிற்போம்
ஒன்றாவோம்.

மனிதன் என்று தன் மிருகத்தனத்திலிருந்து மாறி மனிதத்தை மதிக்கிறானோ அன்று தான் இம்மண்ணில் மகிழ்ச்சி பிறக்கும்.

November 24, 2009

மாலை நேரம் - பாடல் வரிகளுடன் காணொளியாய்

'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "மாலை நேரம்" பாடல் குறித்து இப்போது சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.இதமான காதல் பாடல்களை ரசிக்கும் அனைத்து தமிழ் ரசிகர்களையும்; இசைப்பிரியர்களையும் சில மாதங்களாகவே கட்டிப்போட்டிருக்கிறது என்பதற்கு அந்த பாடலைக்குறித்து இதுவரை எழுதப்பட்டிருக்கும் எண்ணற்ற வலைப்பதிவுகளே சாட்சி.

இந்த பாடல் குறித்து பதிவர் கார்க்கியின் பதிவு இங்கே

பாடல் வரிகளை புகழ்வதா இல்லை மெட்டைப் புகழ்வதா இல்லை பாடகியை புகழ்வதா என தெரியவில்லை.

அற்புதமாக கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அதே போன்று ஆன்ட்ரியாவின் குரலை எத்தனை பாராட்டினாலும் தகும். பாடல் வரிகளைக் குறித்து சொல்லவே தேவையில்லை. பாடலாசிரியர் செல்வராகவன் பாடல் வரிகளுக்கு காதல் வர்ணம் தீட்டியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.

பாடகி ஆன்ட்ரியா (ல,ள) (ன,ண) உச்சரிப்புகளில் கவனம் செலுத்தியிருந்தால் பாடல் இன்னும் சிறப்பைப் பெற்றிருக்கும்.

மாலை நேரம் பாடலை பாடல் வரிகளுடன் கீழே காணொளியாக கோர்த்திருக்கிறேன்...




Search and Download More Music Free

July 30, 2009

உங்களையும் பாதித்திருக்கக் கூடிய 10 இல்லை 11 விஷயங்கள்

பத்து பத்துன்னு எல்லாரும் பட்டைய கெளப்பிட்டு இருக்காங்க; சரி நம்ம ஏன் பத்த போடணும்! பத்து நம்ம கிரிக்கெட்டில செல்லாத ஆட்டம் ஆச்சே. நம்ம ஆட்டத்துக்கு பதினொரு ஆள் இல்ல வேணும்... அந்த வகையில் இத்தனை வருடங்கள் என்னைக் கவர்ந்த, கவிழ்த்த ; நான் ரசித்த, வியந்த; என்னால் மறக்க, மறுக்கவியலாத பதினொரு விஷயங்கள் இங்கே.

இவற்றில் பல உங்களையும் கவர்ந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.

1.ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

புன்னகை மன்னன் திரைப்படத்தின் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடலை இப்போது கேட்டாலும் புதிதாகத் தான் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக எளிதான பாடல் வரிகள், மனதை லயிக்கும் இசைஞானி இளையராஜாவின் மெட்டு, சின்னக்குயில் சித்ராவின் சிறைவைக்கும் குரல் என அசத்தலான ஒரு பாடல் இது.


2.The Corrs-Breathless

அயர்லாந்தின் Andrea Corr, Carolilne Corr, Sharon Corr & Jim Corr என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இணைந்த பாப் இசைக்குழு தான் THE CORRS. இவர்களின் Leave Me Breathless என்ற பாடலைக் கேட்டு அசந்து போனேன்.

குறிப்பாக இந்த குழுவில் drum இசைக்கும் Caroline ன் திறமையைப் பார்த்து இன்றும் மலைத்து நிற்கிறேன். ஒரு பெண் அத்தனை வேகமாக drum இசைக்கவியலுமா என ஆச்சரியப்படுகிறேன். இவரின் அதிரடியை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.


3.911

ஒரு மனிதனின்/சமூகத்தின் கோபம் இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியோடு எனக்குள்ளே மேலும் பல கேள்விகளை எழுப்பிய சம்பவம் 9.11.2001 ல் அல்-கொய்தாவால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்.

4.உயிரே-1998

இசைப்புயலின் இசையென்றால் கொள்ளைப் பிரியம்.இசைப்புயல் இசையமைத்த திரைப்படங்களின் ஒலிநாடா (cassette) எப்போது வெளிவருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். 1998 ல் உயிரே வெளியாகியிருந்த சமயம் அது.

ஒலிநாடா வாங்க சென்ற வேகத்தில் இருசக்கர வாகனத்தை No Parking ல் நிறுத்தி விட்டோம் நானும் எனது மைத்துனரும்; மறுநாள் நீதிமன்றம் வரை சென்று அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வந்ததை நினைத்து இன்றும் சிரிக்கத் தோன்றுகிறது. 5.தர்மபுரி பேருந்து எரிப்பு-2.2.2000

தர்மபுரியில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அரசியல் பிரச்சினை காரணமாக கோவை வேளாண் பல்கலைகழக பேருந்திற்கு சில கயவர்கள் தீ வைப்பும் ,மூன்று மாணவிகளின் மரணமும் அதன் பின்னர் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களுக்கு பணிவிடைகள் செய்ததும் இன்றும் மறக்கவியலாது. அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் வெறுப்பு தோன்றிய நாள் அது.

6.முதல் காதல்

பெரும்பாலானவர்களின் முதல் காதல் போன்றே எனது காதலும் ......... ஆமா அதே தான்... கவுந்து போச்சு.

7.இணையம்,பதிவுலகம்,கூகுள், ஆர்குட்

பத்து வருஷத்துக்கு முன்னால இது மாதிரி எதும் எழுதினா நான் மட்டும் தான் உக்காந்து ரசிக்கணும் sorry கொடுமயேன்னு உக்காந்து படிக்கணும், ஆனா இப்போ முகமே தெரியாத பல நண்பர்களை இணையம் தந்திருக்கிறது இந்த கொடுமய எல்லாம் சகிக்க.

பத்து நொடிகளுக்குள்ளாக பத்தாயிரம் இணையபக்கங்களை திரட்டித்தருகிறது Google.சில காலம் காணாமல் போன முகங்களை எல்லாம் orkut ம், facebook ம் தேடித்தருகிறது.இப்படியெல்லாம் உலகம் மாறிப்போகும் என பத்து வருடங்களுக்கு முன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

8.Guitar

90' களில் Guitar இசைக்கருவியின் மீது அத்தனை ஆர்வம். அதன் பின்னர் நாகர்கோவிலில் 1994ஆம் ஆண்டு எனது நண்பர்களும் இரட்டைப்பிறவிகளுமான வால்டர் மற்றும் மோகனின் மூலம் இசைக்க கற்றுக்கொண்டது கனவை நனவாக்கிய ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று கூட கூறலாம்.

9.சச்சின்-1998

சச்சினின் ஆட்டத்தை ரசிக்க சொல்லித்தரவா வேண்டும். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த இரண்டு அதிரடி சதங்கள் இன்றும் நினைவிலிருக்கிறது.


இறுதிப் போட்டியின் மறுநாள் நான் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை கூட பொருட்படுத்தாமல் நண்பன் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன் முடங்கிக் கிடந்தேன்

10.Manchester United-சர்.அலெக்ஸ் ஃபெர்குசன்,பெக்காம்,

இங்கிலாந்து எனக்கு பிடித்த நாடு என்பதால் அங்கு உள்ள கால்பந்து அணிகளையும், வீரர்களையும் அதிகம் கவனிப்பது உண்டு. Manchester United அணியையும் அதன் மேலாளரான சர்.அலெக்ஸ் ஃபெர்குசனையும் கண்டு வியப்பதுண்டு. இத்தனை வயதிலும் அயராமல் உழைக்கும் இந்த மேலாளரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை பல.

அதே போன்று Manchester United அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமின் திறமையும் ஆச்சரியப்பட வைக்கும்.

11.இந்தியா-தமிழகம்-நம்ம ஊரு

நமக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரையோ அல்லது ஒரு இடத்தையோ விட்டு நாம் அகலும் போது தான் பிரிவின் கொடுமையை உணர்வோம்.அந்த வகையில் படிப்பினிமித்தமும், பணியினிமித்தமும் சொந்த ஊரை,தமிழகத்தை,இந்தியாவை விட்டு அகன்று நின்ற போது தான் அந்த வலியை உணர்ந்தேன்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...

இப்படி கிறுக்குகிறவன் புத்தகங்களையும்,எழுத்தாளர்களையும் பட்டியலிடாமல் போனது ஏனென்றால் முறையான புத்தக வாசிப்புகள் இல்லாமையால் தான். எனினும் எம்.எஸ்.உதயமூர்த்தி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். பாரதியார் கவிதைகளையும் படித்ததுண்டு. முறையாக இப்போது தான் படிக்கத்தொடங்கி உள்ளேன்.

இந்த நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்கும்ணு நினைக்கிறேன் :))

April 22, 2009

இசைஞானியின் மயக்கும் மலையாள மெட்டுக்கள்

இசைஞானி இளையராஜாவைக் குறித்து தமிழர்களிடம் சொல்லவே தேவையில்லை. மேஸ்ட்ரோவின் இசைக்கு மயங்காதவர் வெகு அபூர்வம் எனலாம்.

தமிழ் திரையுலகில் அதிக நேரம் செலவிட்டு வந்தாலும் பிற மொழி கலைஞர்கள்,நண்பர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப அவர்கள் மொழியிலும் இசையமைக்க நேரம் ஒதுக்கியே வந்திருக்கிறார் இசைஞானி.

அந்த வரிசையில் மலையாள மொழியில் 1986,2005 மற்றும் 2007 களில் இசைஞானி இசையில் பிரபலமடைந்த சில மலையாள பாடல்களை இங்கு தொகுத்துள்ளேன்.

1986
பாடல்:பூங்காற்றினோடும்,பாடியவர்:ஏசுதாஸ்,ஜானகி,திரைப்படம்:பூமுகப்படியில் நின்னயும் காத்து.

மலையாளத்தில் இன்றும் பலரால் அதிகம் விரும்பி கேட்கப்படும் ஒரு பாடல் இது.




2005

பாடல்:எந்து பறஞ்சாலும்
பாடியவர்:சின்னக்குயில் சித்ரா,திரைப்படம்:அச்சிவின்டே அம்மா
ஊர்வசியும்,மீரா ஜாஸ்மினும் அம்மாவும்,மகளுமாக பாசத்தால் செய்யும் சேஷ்டைகள் பாடலை இன்னும் நம்மோடு ஒன்றிப் போக செய்கின்றன.





2007
பாடல்:கையெத்தா கொம்பத்து,திரைப்படம்:வினோதயாத்ரா
பாடியவர்:ஏசுதாஸ்,மஞ்சரி




2007
பாடல்:மந்தாரப்பூ திரைப்படம்:வினோதயாத்ரா,
பாடியவர்:மதுபாலகிருஷ்ணன்,ஸ்வேதா(பாடகி சுஜாதாவின் மகள்)

இதில் ஒளிப்பதிவும்,மீரா ஜாஸ்மின் செய்யும் சில்மிஷங்களும் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.


March 22, 2009

கேரளத்தவர்கள் ரசிக்கும் இளையராஜாவும்!ரஹ்மானும்!

பொதுவாகவே கேரளத்தில் பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் மலையாள பாடல்களைக் காட்டிலும் தமிழ் பாடல்களே அதிகம் பாடப்படுகின்றன.கேரள இசைப்பிரியர்கள் தமிழ் பாடல்களையே அதிகம் விரும்புவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் ஸ்டார் சிங்கர் என்ற சிறந்த பாடக பாடகிகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
பாடகர் உன்னிகிருஷ்ணன்,பாப் பாடகி உஷா உதூப்,இசையமைப்பாளர் ஷரத் போன்றோர் நடுவர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.தமிழ் பாடல்களின் ஆக்கிரமிப்பு ஸ்டார் சிங்கர் போட்டியையும் விட்டு வைக்கவில்லை.இதில் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருக்கும் சோனியா என்பவர் பாடிய சில தமிழ் பாடல்கள் இங்கே.
இளையராஜாவின் "குருவாயூரப்பா"



ரஹ்மானின் "மலர்களே"

இதில் சோனியா உடன் பாடியிருக்கும் நஜிம் 2007-ஸ்டார் சிங்கரின் சாம்பியன் ஆவார்.தற்போது பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.சோனியா மலையாளி என்ற சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அருமையாக பாடியிருக்கிறார்.



இளையராஜாவின்"நின்னுக்கோரி வரணும்"

March 04, 2009

கம்ப்யூட்டர இங்க கூட வைக்கலாமோ!

சோனியின் இந்த Pocket PC 9.65" x 4.72" அளவே உள்ளது.
மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
சோனி அறிமுகப்படுத்தியுள்ள புதிய P-series Pocket PC தொலைக்காட்சி விளம்பரத்தின் காணொளி கீழே

March 02, 2009

ஓப்ரா நிகழ்ச்சியில் ரஹ்மானின் ஜெய்ஹோ

ஆஸ்கர் விருது பெற்ற மறு தினமே அமெரிக்காவின் புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய்கோ பாடலை நடனக்குழுவினருடன் ரஹ்மான் நிகழ்த்தி காட்டினார்.

நிகழ்ச்சியில் ரஹ்மானின் பெயரை கூட சரியாக உச்சரிக்க வரவில்லை ஓப்ராவிற்கு... ஆனால் எப்படியோ ஜெய்ஹோவை மட்டும் சரியாக உச்சரித்து விட்டார்.(அமெரிக்கர்கள் உச்சரிக்கும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளது குல்சாரின் ஜெய்ஹோ வரிகள்)காணொளியை இங்கே இணைத்துள்ளேன்

ரஹ்மானின் (அமெரிக்க) காட்டில மழை... எல்லா புகழும் ரஹ்மானுக்கே

February 25, 2009

ஆங்கிலத்தில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய் ஹோ பாடல்

ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ரஹ்மானின் ஸ்லம் டாக் மில்லினியர்,ஜெய் ஹோ பாடல் Pussycat Dolls என்ற ஆங்கில பாப் குழுவினால் You are my Destiny என்று ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளது. இதனை Pussycat Dolls ன் Nicole Scherzinger பாடியுள்ளார்.அவர்களது Official video விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆங்கில பாடலுடனான ஸ்லம்டாக் மில்லினியரின் காணொளியை கீழே இணைத்துள்ளேன்.
ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய்ஹோ வரிகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது.இந்தியரின் திறமை உலகெங்கும் அறியப்பட அடித்தளம் அமைத்துக் கொடுத்த இயக்குனர் டேனி போயலுக்கு நன்றி.

மேலும் தகவல்களுக்கு:

http://www.pcdmusic.com/jaiho/



February 11, 2009

Grey's Anatomy தொடருக்கு பின்னடைவு


2005 முதல் abc நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகின்ற மருத்துவ தொலைக்காட்சி தொடரான Grey's Anatomy ல் Dr.Izzie Stevens கதாபாத்திரத்தில் நடித்த Katherine marie Heigl ம் Dr.George O'Malley கதாபாத்திரத்தில் நடித்த T.R. Knight ம் விடை பெறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வளைகுடா நாடுகளில் mbc4 தொலைக்காட்சி சானல் இந்த மருத்துவ தொடரை ஒளிபரப்பி வந்தது. மிக பிரபலமடைந்த இந்த தொடருக்கு ஆர்குட்டிலும் facebook ம் பலத்த வரவேற்பு உள்ளது. அதற்கென தனி Community களும் இருக்கின்றன.


Katherine marie Heigl with T.R. Knight


மருத்துவ பிண்ணனியோடு வாழ்க்கையின் தினசரி பிரச்சினைளையும் அடக்கிய ஒரு அற்புதமான தொடர் Grey's Anatomy. Anatomy=உடல் கூறு என்ற வாக்குக்கேற்ப உடல் கூறை அலசுவதோடு; வாழ்க்கையின் ஒவ்வொரு கூறையும் அலசியதே இதன் வெற்றிக்கு துணை செய்தது எனலாம்.அத் தொடரின் வசனங்கள் பல முறை நம்மையும் கூட தன்னம்பிக்கை பெறச் செய்வது தான் அதன் சிறப்பம்சம்.
வளைகுடாவில் (mbc4 சானல்) அதன் ஒளிபரப்பு ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

2006 ல் Screen Actors Guild Award என்ற ஹாலிவுட்டின் உயரிய விருதையும் பெற்றுள்ளது.

Dr.Stevens கதாபாத்திரத்தில் தனது எளிமையான அதோடு சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த Katherine marie Heigl 2007 ல் சிறந்த நடிகைக்கான அமெரிக்காவின் Emmy விருதை வென்றார். Knocked up, 27 Dresses போன்ற ஆங்கில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் தற்பொழுது Ugly Truth என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாலேயே தொலைக்காட்சியிலிருந்து விலகிச் செல்வதாக சொல்லப்படுகிறது.

எதுவாயினும் Grey's Anatomy ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது நிச்சயமே. Grey's Anatomy குறித்த மேலதிக விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Greys_anatomy

Obstacles are put in your way for a reason to see if what you really want is worth fighting for.... Grey's Anatomy

Katherine Marie Heigl ன் சில புகைப்படங்கள் இங்கே; Youtube video அதன் கீழே



November 19, 2008

ஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்

பிற மொழி இசை ஆல்பங்களுடன் ஒப்பிடுகையில் தமிழில் இசை ஆல்பங்கள் வெளிவருவது மிகக் குறைவு. எனினும் நல்ல இசை ஆல்பப் பாடல்களுக்கு இன்றும் கூட வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.அந்த முறையில் 1998ல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளுக்கு திரு.உத்பால் பிஸ்வாஸ் இசையமைத்து ஹரிஹரனும் சுஜாதாவும் பாடி வெளியான காதல் வேதம் இசை ஆல்ப பாடல்கள் என் மனதை விட்டு இன்றும் கூட நீங்காமலிருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை youtube வீடியோவாக மாற்றியுள்ளேன். இதமான இசையை ரசிப்பவர்கள் இது போன்ற பாடல்களுக்கு மனதை பறிகொடுப்பது நிச்சயம்.


கண்ணில் என்னென்ன மயக்கம்


நீ என்பதில் நானும் அடங்கும்


நட்சத்திர பூங்காவில் நீ மட்டுமே வெண்ணிலா


மலையும் நதியும் நிலமும் ஒருநாள் மறையும் காலம் வந்தாலும்


இரு கண்ணும் தூங்காமலே


அழகான காதல் நிலா


என் நெஞ்சில் தூங்கவா நிலாவே

November 14, 2008

மனிதர்களா விலங்குகளா? தியாகராஜ பாகவதர் பாடல்

மனித குலம் இன்று இத்தனை நாகரீக வளர்ச்சி அடைந்து என்ன பயன்? எங்கு திரும்பினும் கொலைகள்,கொள்ளைகள், பெண்ணினத்திற்கு எதிரான கொடூரங்கள், இன்றும் மாக்களைப் போன்றே திரிகின்றனர் மக்கள்.

இரு நாட்களுக்கு முன்னர் கூட தமிழகத்தின் எதிர்கால தூண்களான மாணவர்களின் கொடூரம் நெஞ்சை உறைய வைக்கின்றது.
இந்த கலி கால கொடுமைகளைக் காணவொண்ணாமல் நாற்பதுகளிலேயே திரு.தியாகராஜ பாகவதர் இப்படிப் பாடிச் சென்றிருக்கிறார்.அப்படியென்றால் அன்றும் இன்றைய நிலைமை தான் போலிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் நண்பர்கள் வாயிலாக நானறிந்த தியாகராஜ பாகவதரின் "பூமியில் மானிட ஜென்மம்" என்ற பாடல் இங்கே youtube வீடியோவில்




பாடல் வரிகள் இங்கே

பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ

உத்தம மானிடராய்
பெரும்புண்ணிய நல்வினையால்
உலகில் பிறந்தோம்
சத்திய ஞானதயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல்
நம் கடனே

உண்மையும் ஆருயிர்
அன்பும் அகிம்சையும் இல்லையெனில்
நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே
பொதி தாங்கிய
பாழ்மரமே வெறும் பாமரமே

November 12, 2008

ரீமிக்ஸ்லேயே ரீமிக்ஸ்

என்னால் முடிந்த ஒரு ரீமிக்ஸ் முயற்சி இங்கே youtube வீடியோவாக

இஞ்சி இடுப்பழகா



வசீகரா



நேற்று இல்லாத மாற்றம் என்னது



ஒஹோ எந்தன் பேபி

Related Posts with Thumbnails