Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

June 19, 2026

சிங்காரச் சென்னை எனும் தோற்றப்பிழை

 சிங்காரச் சென்னை என்பதெல்லாம் பெயரளவிற்குத்தான் என்பதை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒற்றைக் காணொளி சொல்லி விடுகிறது

இத்தனைக்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஜார்ஜ் டவுன், பிராட்வே ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய சென்னையின் மையப்பகுதி தான் துறைமுகம் தொகுதி.

சுகாதாரமின்மை, வீடுகள் இல்லாமல் பொதுமக்கள் வீதிகளிலும், நடைமேடைகளிலும் தங்கும் நிலைமை. பெண்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு கூட போதிய வசதி இல்லாத நிலை என அத்தனை பிரச்சனைகளைத் தாங்கி நிற்கிறது இந்த பகுதி. ஈக்கள் மொய்க்கும் அந்த இடத்தைப் பார்க்கையில் தலையில் அடித்துக் கொண்டேன்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட - அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்கள் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகள் எழுந்தாலும் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசு தான். 

இந்த பகுதியை இத்தனை காலம் யார் ஆட்சி செய்தார்கள் இப்போது தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் யார், சென்னையின் தற்போதைய மேயர் யார் என்பதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. 

இப்படியானச் சூழலில் வாழும் மக்களுக்காக பரிதாபப்படும் அதே நேரம், சென்னையில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் சபைகளை, பிரார்த்தனைக் கூடங்களை உருவாக்கி பணம் ஈட்டும் கிறிஸ்தவ நிறுவனங்கள் எத்தனை இப்படியான மக்களை சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. 

இதனாலேயே தான் ‘நான் ஓர் கிறிஸ்தவனாக சா*க மாட்டேன்’ எனத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. மக்களோடு மக்களாக நின்ற இயேசுவுக்கும் இன்றைய பணம் விழுங்கி போலி கிறிஸ்தவத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. 

காலம் எல்லாவற்றையும் நம் முன் தெளிவாக நிறுத்தி வைத்திருக்கிறது. 

இதைப் பார்த்துவிட்டு மீண்டால் சிங்காரச் சென்னை 3.0 திட்டத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் என செய்தி. வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆட்சி எப்படியான சக்தி என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளில் தெரிந்து விடும் 🚶🏽‍♂️

காணொளி - நீலம் சமூக அமைப்பு 

https://youtu.be/fcD3erwGTNg?is=lgZr1LYnmCvHgPGU 

August 03, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 5

  ‘இதுவரை இல்லாத அளவு’ அச்சுறுத்தல்!

ஒரு நாட்டின் தூண்கள் என சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய இந்நான்கை குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப காலங்களில் காட்சி ஊடகங்கள் என்றால் அரசே ஏற்று நடத்திய தூர்தர்சன் மட்டும் தான். 1991 ல்  அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் தாராளமயமாக்கக் கொள்கைகளினால் தனியாருக்கும் தொலைக்காட்சி உரிமங்கள் வழங்கப்பட்டன, தென் இந்தியாவின் முதல் தனியார்த் தொலைக்காட்சியாக 1992 ல் சன் குழுமத்தினர் அறிமுகமானார்கள்; இன்றைய தேதியில் அந்த எண்ணிக்கை பல நூறுகளைத் தொடும்.

அரசு ஏற்று நடத்துகின்ற தூர்தர்சனில் இன்றளவும் அரசு சம்பந்தமான நிகழ்வுகளும், செய்திகளும் தான் இடம் பெறும். அந்த தொனியில், தனியார் ஊடகங்களும் அதன் தலைமைக்குச் சாதகமான செய்திகளையே வெளிக்கொணர்ந்தாலும் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரானக் கருத்துகள் இருப்பின் அவற்றையும் அவ்வப்போது எடுத்துரைப்பவையாக இருந்து வந்திருக்கின்றன. 

ஆனால் இன்றைய தேதியில் தனியார் செய்தி ஊடகங்களில் கூட எப்படியான செய்திகளை முன்னிறுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டும் என்பதை ஆளும் ஒன்றிய அரசே தீர்மானம் செய்வதாகத்தான் படுகிறது. குணசேகரன்கள் தரம் தாழ்ந்து நடத்தப்படுவதற்கும் அதைத்தான் காரணம் என்கிறார்கள். இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அவர்களும் அதனை உறுதி செய்திருக்கிறார்.

கோவிட்-19 குறித்தச் செய்திகள் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை ஊடகங்கள் ‘இன்று மட்டும்/ இன்று ஒரே நாளில்/ இதுவரை இல்லாத அளவு’ என்பவற்றைத் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி வருகின்றன. ஆகஸ்ட் 3  மாலை நேரப் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தில் 56,698 பேருக்கு தொற்று இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. இது வெறும் தொற்று இருப்பவர்களது எண்ணிக்கை தான். இவர்களில் எத்தனை பேர் நலமாய் இருக்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மறைத்து விட்டு மொத்த எண்ணிக்கையை மட்டும் குறிப்பிட்டு ‘இதுவரை 2.63,222’ பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

ஆகஸ்ட் 3 நிலவரத்தின் படி, தொற்று ஏற்பட்டு நலமாகி வீட்டிற்கு போனவர்கள் 2,02,283 பேர். இந்த எண்ணிக்கையையும் சேர்த்து இதுவரை இவ்வளவு என்று லட்சக்கணக்கை காட்டுவதும், இன்று இத்தனை பேருக்கு என குறிப்பிடுவதை விடுத்து, ‘இன்று மட்டும் ஒரே நாளில் இது வரை இல்லாத அளவிற்கு’ எனவும் அழுத்தி சொல்வதும் மக்களை பயமுறுத்துவதற்கான ஒரு உக்தியாகத்தான் படுகிறது. 

உள்ளிருப்பில் நான்கு மாதங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வாதாரத்திற்கு மக்கள் பெரும் அல்லல் படுகிறார்கள். இன்னமும் உள்ளிருப்புக் காலத்தைத் தொடர்வதன் மூலம் மக்களை அடைத்து விட்டு, தொடர் அச்சத்தில் வைத்துக்  கொண்டு, உரிமைகளுக்கெதிரான அவர்களின் குரல்வளைகளையும் நெறித்து விட்டு என்ன சாதிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

July 23, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 3



சமகாலத்தில் இப்படியானதொரு உலகளவிலான பெருந்தொற்று நமை ஆட்கொண்டிருப்பது பெருந்துயரம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமை தகவமைத்துக் கொள்வதற்கும், நமது அதீத சுயநலம் பிடித்த லட்சியங்கள் தவறென்பதை உணர்ந்து கொள்வதற்கும், நமை ஆளும் தலைமைகள் எப்படியானவை என்பதை புரிந்து கொள்வதற்கும், அவர்களின் பின்னிருக்கும் கயமைகளை அறிந்து கொள்வதற்கும் கூடவே அவர்களது இயலாமைகளை உலகறிந்து கொள்வதற்கும் நமக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது.

ஒவ்வொருவருக்கும் அவரவர் சார் நலன்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; எனினும், குறிப்பிட்ட சில சுய தேவைகளைத் தாண்டி பொதுநலன் சார் விடயங்களிலும், சமூகம் சார் விடயங்களிலும் கண்களைக் கட்டிக் கொண்டிருப்போமானால் நமது பிறப்பிற்கு நியாயம் செய்து விட முடியும் எனத் தோன்றவில்லை.

தொற்றின் ஆரம்ப நிலையில் அறிவியல் பூர்வமாக அதனை அணுகாமல், தமிழகத்திற்குள் தொற்று வரும் வாய்ப்பில்லை; ஏப்ரல், மே மாதங்களின் வெயிலுக்கு எந்த கிருமியானாலும் பரவாது; வயது மூத்தோருக்கு மட்டும் தொற்றும்/ பாதிப்பை ஏற்படுத்தும் என அவையிலேயே கேலி பேசிக்கொண்டும், மெத்தனமாகவும் இருந்து விட்டு இப்போது முட்டிக்கொண்டிருக்கிறது அரசு.

அரசு மருத்துவமனைகளுக்கான முக்ககவசங்கள், தற்காப்பு உடைகள் கொள்முதலில் கூட பெருமளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. மறுபுறம், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 ன் பெயரில் பெருங்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ரூபாய் 500 மதிப்பிலான தற்காப்பு உடைகளுக்கு ரூ. 2500 வரை கணக்கு காட்டப்படுகின்றன. நுகம் சுமக்கும் மக்களின் மீது தனியார் மருத்துவமனைகள் தமது வணிகத்தை வலிந்து திணிக்கின்றன என்பது கண்கூடு.

PPE எனப்படும் தற்காப்பு உடைகளின் தேவையிலும், அவற்றை அணிவதிலும் சில நகைமுரண்களும், பெருமுரண்களும் இருப்பதாகப் படுகிறது. இன்றைய தேதியில் எந்த மருத்துவமனை வளாகத்தை நெருங்கினாலும் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கும் மருத்துவப் பணியாளர்களை நாம் காண முடியும். அவர்கள் அணிந்திருக்கும் தற்காப்பு உடையை அவர்களின் பணி நேரம் முடியும் மட்டும் அணிந்திருப்பார்கள் என்பது திண்ணம்.

முரண் என்னவென பார்ப்போம்… தொற்று இருக்கும் ஒரு நபரை, மருத்துவப் பணியாளர் ஒருவர் சோதனை செய்திருக்கிறார் அல்லது குறிப்பிட்ட அறையில் சென்று அனுமதித்து விட்டு வருகிறார் அல்லது கொரோனாப் பிரிவில் உடனிருந்து கவனிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பின்னர் அம்மருத்துவப் பணியாளர் அதே தற்காப்பு உடையுடன் தொற்று இல்லாத வேறொருவரை அணுகுதல் புதிய தொற்றிற்கு வழிவகுக்கத்தானே செய்யும்!! அதைத்தானே நம் சமூகம் தொடர்ந்து செய்கிறது.

மருத்துவப்பணியாளர்கள் அவ்விதம் செய்வதிலும் தவறில்லை… PPE என்பதற்கு Personal Protective Equipment – ‘தற்’காப்பு உடைகள் என்பது தானே பொருள். பிறர் எக்கேடு கெட்டால் என்ன!!  

எட்வின்
சென்னை
23/7/2020

July 19, 2020

கோவிட் - 19 சில புரிதல்கள் – 2


சென்னையில் மெதுவாகத் தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் வாய்ப்பில்லை.

ஆரம்பத்தில் 'குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின்' டெல்லி மாநாட்டைக் காரணம் சொல்லிக் கொண்டும், பின்னர் ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றானக் கோயம்பேடு சந்தையை காரணம் சொல்லிக்கொண்டும் இருந்தார்களே தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ/ சுகாதார நடவடிக்கைகளையோ போதுமான அளவு திட்டமிடவில்லை.

பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூடுகின்ற சந்தைகளிலேனும் போதுமான கண்காணிப்பு நடவடிக்கைகளை செய்திருத்தல் அவசியம். அதை விடுத்து டாஸ்மாக் கடைளைக் கண்காணிப்புச் செய்த பெருமையெல்லாம், காலத்திற்கும் பல்லிளிக்குமாறு வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றன.

இதற்கடுத்து கையைக் காண்பித்தது வடசென்னையின் சேரிப் பகுதகளைத் தான். சாலையோரங்களிலும், தெரு ஓரங்களிலும், குடிசைகளிலும், வாழ்க்கை நடத்தும் மக்கள் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் என்ன பங்களிப்பைச் செய்து விட முடியும்!?

ராயபுரம், மண்ணடி, தண்டையார்பேட்டை முதலான இடங்களில், சுகாதாரமில்லாத பகுதிகளில் வாழும் மக்களைப் பள்ளிக்கூடங்களிலோ, கல்லூரிகளிலோ ஆரம்பத்திலேயே தனிமைப் படுத்தியிருந்தால் வடசென்னையின் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

உள் ஊரடங்கு அறிவித்த அன்று ராயபுரம் சந்தையில் கூடிய பெருந்திரளான மக்களையும் கூடக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் களுக்கு டோக்கன் விநியோகம் சிறப்பான கண்காணிப்புகளோடு நடைபெற்றது.

இன்றளவும், மண்ணடி, தண்டையார்பேட்டைப் பகுதிகளைக் கடந்து போகின்ற போது, சாலையோரங்களில் குடியிருக்கும் மக்களைக் காண முடியும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு தொற்றிற்கு அவர் காரணம், இவர் காரணம் என்கிற பழி போடல்கள் இன்றளவும் தொடர்கிறது… இன்னும் உண்டு

July 18, 2020

கோவிட் – 19 சில புரிதல்கள்


முடக்கல் ஆரம்பித்த மார்ச் ஏப்ரலிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயங்களும், அனுபவங்களும் பல உண்டு.

பொதுவாக தொற்று வியாதிகள் மக்கள் நெருக்கடி மிகு இடங்களிலும், சுகாதாரமில்லாத இடங்களிலும் இன்னும் அதிகமாக தொற்றவே செய்யும் என்பது பிறர் விளக்கித்தான் நமக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.

அதிலும் பிற மாநிலங்களைக் காட்டிலும் உயர் மருத்துவக்கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் நமது சுகாதாரத் துறைக்கும், அரசுக்கும் நினைவூட்ட வேண்டிய அவசியமேயில்லை.

கைகளைக் கழுவுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடியுங்கள் என அறிவித்து விட்டு

மூக்கிற்கு கீழே முகக்கவசத்தை மாட்டிக் கொண்டு நடப்பதும்
அருகருகே நின்று கொண்டு விழாக்களில் பங்கு பெறுவதும்
முடக்குதலின் உள்ளேயே உள் முடக்குதல் அறிவிப்பதும்
கூடி நின்று கைதட்டுவதும், விளக்கேற்றுவதும்
மதுக் கடைகளை திறந்து விடுவதும்

என இருந்தால் தொற்று பரவாமல் என்ன செய்யும்!

சில நூறுகளாகத் தொற்று இருந்த போதும் சரி, கட்டுப்படுத்தவியலாத அளவிற்கு பரவிய  பின்னரும் சரி, பொது சுகாதாரத்தைக் குறித்து அரசும் மக்களும் எவ்வித கவலையும் பட்டதாகவோ! படுவதாகவோ! தெரியவில்லை.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன, அவைகள் முறையாக அகற்றப்படுவதில்லை, அவைகளில் எவ்விதமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்பதும் எவருமறியார்; அதின் துர்நாற்றம் அதன் வழியாக கடந்து போகின்றவர்களின் முகக்கவசத்தையும் மீறி மூக்கிலடிக்கிறது.

மறுபுறம் மக்கள், தனி மனித இடைவெளியை முறையாகக் கடைபிடிப்பதில்லை, கறிக்கடைகளிலும். மீன் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் இடைவெளி விட்டு நில்லுங்கள் என Flex விளம்பரங்கள் கண் சிமிட்டினாலும், ‘அத ஏன் நாங்க செய்யப்போறோம்‘ என்கிற தொனியிலேயே கூடுகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு அடைப்பு என அறிவித்ததில் இருந்து மேற்குறிப்பிட்ட கடைகளில் சனிக்கிழமை அந்தி வேளைகளில் தள்ளுமுள்ளு என்பது வாடிக்கையாகிப் போனது. ‘சண்டேன்னா கறி’ அப்படிங்கிற எண்ணத்தில இருந்து கூட இன்னும் மீள முடியாத சமூகம் கொரோனா தொற்றிலிருந்து மீள இன்னும் காலம் இருக்கிறது!

முகக்கசவசங்கள் நாடிக் கவசங்களாகவே அணியப்படுகின்றன. அறிகுறிகள் தமக்கு இருந்தாலும், அதனை மறைக்கும் முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன; அதற்கு,  சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோம் என்பதும், அரசினால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவோம் என்பதும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன… இன்னும் உண்டு

June 24, 2020

சென்னை – சுயநலங்களுக்கு இரையாக்கப்பட்ட நகரம்!


‘சென்னைலயா இருக்கீங்க’?
‘சென்னை அழிஞ்சிருமாமே’?
‘சென்னைல தான் இன்னும் இருக்கீங்களா’?
‘சென்னைல உங்களுக்கு ஒண்ணுமில்லையே’ ?
‘சென்னைல கவனமா இருங்க’!

இவைகளில் ஏதாவது ஒன்று இல்லாமல் சென்னைவாசிகளின் சமீபத்திய தொலைபேசி உரையாடல்கள் துண்டிக்கப்பட்டிருக்காது என்பது திண்ணம்!

1997 ல் தான் முதன்முறையாக சென்னையில் காலடி வைத்தேன். ஐதராபாத்திற்குப் பள்ளிச் சுற்றுலா போகின்ற வழியில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சில மணி நேரங்களும், திரும்பி வருகையில் மக்கள் நெருக்கடி நிறைந்த வணிகப் பகுதியான தி.நகரில் சில மணி நேரங்களுமாக முற்றுப் பெற்றது அந்த பயணம்.

அப்போதே சில கேள்விகள் மனதை ஆக்கிரமித்திருந்தன. அதிகம் பிறரிடம் பேசிப் பழக்கமில்லாதால், எழுகின்ற எண்ணங்கள் பெரும்பாலும் குரல்வளையைத் தாண்டியதில்லை; ஆசிரியர்களிடம் கூட சொல்ல  முற்பட்டதுமில்லை!

அவற்றில் சில…

‘சென்னை ஏன் இத்தனை நெருக்கடியாக இருக்கின்றது’
‘ஏன் தேநீர் கோப்பைகளையும், குப்பைகளையும் பொது இடங்களில் வீசுகிறார்கள்’
‘குப்பை தொட்டிகள் ஏன் நிரம்பி வழிகின்றன’

அதே எண்ணங்கள் 1998, 2000, 2002, 2003, 2006, 2008 என தொடர்ந்த பயணங்களிலும் மனதை ஆக்கிரமித்திருந்தன. பத்து வருட இடைவெளிக்கு பின்னர் 2018 ல் மீண்டும் சென்னைக்கு வந்த போது, பலர் கரங்களில் சரளமாக மொபைல் போன்கள் தவழ்ந்திருந்ததும்; உயர் கட்டிடங்களும், மெட்ரோ பாலங்களும் முளைத்திருந்ததுமான மாற்றங்களைத் தவிர்த்து நகரம் ஒரு நகரத்திற்கான அடையாளத்தைப் பெற்றிருந்ததா என்றால், அதற்கு பதிலில்லை!

கூடவே, முதல் சென்னைப் பயணத்தில் தோன்றிய கேள்விகள் மீண்டும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு, ’இதற்கு விடிவே இல்லையா’ என்ற புதியதொரு கேள்வியையும் விதைத்திருந்தது.

1997 ல் நான் பார்த்த சென்னையாகவே 2020 லும் சென்னை தொடர்கிறது.

வணிகத்திற்காக, பிழைப்பிற்காக, தங்களின் திறமைகளை எப்படியாவது உலகறியச் செய்து விட வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த என் போன்ற மக்களால் அதிகரித்தச் சென்னைக் குடியேறல்கள் குளங்களையும், ஏரிகளையும், காடுகளையும், வயல்நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் தனது இருப்பை விரிவு படுத்திக் கொண்டிருக்கின்றது.

இதைப் பதிவு செய்வதும் ஏரியை ஆக்கிரமித்து (அரசு அனுமதியுடன்) கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் இருந்து தான். இதற்கு சொல்லப்படும் காரணங்கள்

1.    மக்கள் நெருக்கடியைச் சமாளிக்க வேறு வழியில்லை
2.    வறட்சியான பயனற்ற நீர்நிலைகள்

சரி, மக்கள் வாழ்வதற்காக இயற்கை வளங்களைக் ஆக்கிரமித்து குடியிருப்பாக மாற்றி இருக்கிறீர்கள், சுற்றுப்புறத்தை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்!! முக்கிய இடங்கள் தவிர்த்து பரவலான இடங்களில் சென்னையின் அடையாளம் இவைகள் தான் என்று சொல்லுமளவிற்கு குப்பைகளும், நெகிழிப் (Plastic) பைகளும், துர்நாற்றமும் ஆக்கிரமித்திருக்கின்றன.

போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் இல்லை, பெரும்பாலானோர் குப்பைகளை முறையாகக் களைவதில்லை; அப்படியே முறையான தொட்டிகளில் குப்பைகளைக் களைந்தாலும் அவற்றை  அகற்றுவதற்குப் போதுமான துப்புரவு தொழிலாளர்களும் இல்லை. பலர் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகின்றனர்.

இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கையில், மக்கள் நெருக்கடி நிறைந்த, சுகாதாரம் குறித்தும், சுற்றுப்புறங்கள் குறித்தும் பெருமளவில் அக்கறையில்லாத மக்கள் கொண்ட  சென்னைப் போன்றதொரு நகரத்தில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகப்பெரும் சவால்.

இதில் இன்னும் வருத்தம் தரும் விடயம் என்னவென்றால், மருத்துவப்பணிகளில் இருப்போர் கூட முறையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை; முகக்கவசங்கள் ஆங்காங்கே தெருக்களில்  சிதறிக் கிடக்கின்றன;

வீட்டுக்கழிவுகளே சரிவர அகற்றப்படாமலும், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாமலும் இருக்கும் நகரத்தில், மருத்துவக் கழிவுகளைக் குறித்து வாயைத் திறந்தால் இன்னும் குமட்டும். பள்ளிக்கரணை சதுப்புநிலமே அதற்கு சாட்சி!

இப்படியான ஒரு நகரத்தில் தான் இன்னும் பிழைப்பிற்காக பலரும் ஒட்டிக் கொண்டுள்ளனர். இயற்கையின் சமநிலையை சீர்குலைத்து விட்டு, நாம் சீரும்  சிறப்புமாக இருந்து விட முடியுமா என்பதற்கு பதில், "முடியவே முடியாது" என்பது தான்!

  

December 17, 2015

சென்னை வெள்ளத்தில் வெளுத்த கிறிஸ்தவ சபைகளின் சாயம்!

சென்னையில் வெள்ளம் இன்னும் முழுமையாக வடிந்தபாடில்லை; நிவாரணப்பணிகள் முழுமையாக சாமானியனை சென்று அடையவுமில்லை; குப்பைமேடுகளும், காசிமேடுகளும், முழுமையாக சுத்தமாக்கப்பட்டு மக்கள் குடுயேறும் நிலைக்கு வரவில்லை; அதற்குள்ளாக கிறிஸ்தவ வியாபாரிகள் டிசம்பர் 12 ஆம் தேதி புதுவாழ்வு ஏஜி சபையில் திறப்பின் வாசல் ஜெபம் என்பதன் பெயரில் தங்கள் சுயமுகத்தை மீண்டும் காண்பித்திருக்கிறார்கள்.

சாமானியர்களும், நெஞ்சில் ஈரமுடையவர்களும், தன்னார்வலர்களும் களத்தில் நின்று உதவிகளும், நிவாரணப்பணிகளும், சுகாதாரப்பணிகளும், மருத்துவப் பணிகளையும் செய்து வரும் இத்தருணத்தில் இவர்கள் ஜெபம் செய்கிறார்கள் (அதையும் விளம்பரப்படுத்தித் தான் செய்கிறார்கள்!!) அதிலும் சென்னையைப் பேரழிவிலிருந்து காத்த தேவனுக்கு நன்றி என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள் (அதாவது இவர்கள் பணம் ஈட்டுகின்ற தலைநகரத்தை முழுமையாக அழிக்காததற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள் போலும்!!)


"அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம், மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கிற மத்தேயு 6:5 ஐ அறியாதவர்களா இந்த வியாபாரிகள்!!

ஜெபம் என்பதன் பெயரில், இது போன்ற சுய தம்பட்டங்களைத் தவிர்த்து இவர்கள் தலைமையில், இவர்களுக்கு கீழிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து களமிறங்கியிருந்தாலே, இந்நேரம் சென்னை சுத்தமாகியிருக்குமே! களப்பணி ஆற்றுவதிலிருந்து இவர்களை தடுப்பது எது?

 ஓய்வு நாளாதலால் ஜெபமும், போதனையும் தவிர்த்து உதவி செய்தல் ஆகாது என்று இறுமாப்புக் கொண்ட சீடர்களை இவர்கள் வணங்கும் இயேசு கடிந்து கொண்டதை அறியாதவர்களா!! இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். மத்தேயு 12:10-12

இந்த சிறியவர்களுக்கு எவனொருவன் செய்யாமலிருக்கிறானோ அது பரலோகத்திலிருக்கும் பிதாவுக்கு செய்யாமற் போனதாகும் என்பதையும் அறியாத பதர்களா இவர்கள்!! மத்தேயு 25:34-46

கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது என்பதையேனும் அறிவார்களா இந்த கிறிஸ்தவ வியாபாரிகள். யாக்கோபு 2:16-20

நற்போதனைகளைத் திரித்து மக்களுக்கு எடுத்துரைப்பதாலும், நற்செயல்கள் செய்ய இவர்கள் கைகள் குறுகியிருப்பதும் கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு புகழைச் சேர்ப்பதுமல்ல.

மக்களிடம் இருந்து காணிக்கை என்பதன் பெயரில் இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மக்கள் அவர்களையும் அறியாமலே பலியாவது தான் வேதனை தரும் விடயம். மக்கள் இனியேனும் விழித்துக் கொள்ளல் அவசியம்.

வியாபாரமாக்கப்பட்ட இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளிடம் மனிததத்தையும், சக மனிதனுக்கு உதவும் திராணியையும் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம் என்பது மட்டும் புரிகிறது.

February 19, 2009

முன்பதிவும் என்பதிவும் :)

பேருந்து முன்பதிவானாலும் சரி, ரயில் முன்பதிவானாலும் சரி நம்ம போய் வரிசைல நின்னா தான் பிரச்சினைகளே ஆரம்பிக்கும்; டிக்கெட்டும் கிடச்ச மாதிரி தான் :) நம்ம மூஞ்சிக்கெல்லாம் டிக்கெட் கிடையாது போலன்னு பேசாம வந்திர வேண்டியது தான்.

பஸ்ஸுக்கு வெயிட் பண்ணாலும் இப்படி தான்.ரொம்ப நேரமா பஸ்ஸே காணோமே, சரி ஆட்டோல போகலாமென நினைத்து ஆட்டோல கால வச்சதுமே பின்னாடி பஸ் வந்து நிக்கும்.கேயாஸ் தியரி மாதிரி இதுக்கெல்லாம் தியரி இருக்குதோ என்னமோ.

இப்படி பல முறை கவுண்டரில் இருந்து(சாதி இல்லீங்க;இது பீட்டர்-Counter!) ஆமாங்க டிக்கெட் கவுண்டரிலிருந்து தான், பலமுறை டிக்கெட் இல்லாமல் திரும்புவதே எனக்கு பதிவு.

டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு சென்றிருந்த போது ரயிலில் திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவிற்காக சென்ட்ரல் பயணச்சீட்டு முன்பதிவு மையத்திற்கு சகோதரருடன் போயிருந்தேன்.கவுண்டர்கள் பல இருந்த போதும் டிசம்பர் மாதம் விடுமுறைகளின் மாதம் என்பதால் அனைத்து கவுண்டர்களிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

எப்போதும் முன்பதிவுகளுக்கு இருவர் சென்றால் இரு வேறு வரிசைகளில் நிற்பது வழக்கம்.எந்த கியூ வரிசை(இப்படித் தான் பல பேர் பேசிக்கிறாங்க,நடு சென்டர் மாதிரி.இது தான் "பீட்டர்தமிழாமாம்"சில அரசு அறிவிப்பு தட்டிகளும் இந்த பீட்டர் தமிழுக்கு விதிவிலக்கல்ல) டிக்கெட் கவுண்டரிடம் முதலில் இட்டுச் செல்கிறதோ அப்பொழுது மெதுவாக நகரும் வரிசையிலிருந்து விலகி விடுவோம்.

ஆனால் அன்று வரிசையில் நின்று 5 நிமிடமாகியும் நாங்கள் நின்று கொண்டிருந்த இரண்டு வரிசைகளும் சிறிதும் நகரவில்லை.5 நிமிடம் 10 நிமிடங்கள் ஆகியது அப்போதும் நகரவில்லை வரிசை.20 நிமிடம் ஆகியும் வரிசை நகராமல் இருக்கவே, என்னவென்று எட்டிப்பார்த்தால்... கத்து கத்தாக முன்பதிவு படிவங்களுடன் சினிமாக்களில் வரும் வில்லனைப் போன்ற தோற்றமுடைய ஒருவர் கவுண்டர் முன் நின்று கொண்டிருக்கிறார்,அவரைச் சுற்றி இன்னும் மூன்று பேர்.

அவர்கள் அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்து விற்கும் முகவர்கள் (agents)என புரிந்து கொண்டேன்.இப்படியாக அனைத்து கவுண்டர்களிலும் அவர்கள் தொல்லை. நாங்கள் பின்பற்றிய உத்தியைப் போலவே அவர்களும் பல வரிசைகளில் நின்று கொள்கிறார்கள்.ஒரு கவுண்டரில் அவர்கள் கூட்டத்தில் உள்ளவர் ஒருவர் முதலில் சென்று விட்டாரென்றால் மற்றவரும் அவரிடமே பிற முன்பதிவு படிவங்களையும் கொடுத்து விடுகிறார். (ஆனா நாங்க கொண்டு போனது ஒரு படிவம் தான்,ஆள் தான் இரண்டு :))

மொத்தமாக பயணச்சீட்டுகள் (bulk booking) முன்பதிவெற்கென்றே தனி கவுண்டர்கள் உள்ளன.என்றாலும் டிக்கெட் வழங்குபவர் அந்த வரைமுறையைப் பின்பற்றாமல் முகவர்களிடமிருந்து கைக்கூலியும் பெற்றுக் கொண்டு இதனை அனுமதிக்கிறார்.

45 நிமிடம் பார்த்து விட்டு போதும்டா ராசா, இது நடக்கிற மாதிரி தெரியல என தென்னக ரயில்வே மீது கோபம் கொண்டு கிளம்பி விட்டோம்.சென்ட்ரலைப் போலல்லாமல் எக்மோரில் ஒரு படிவத்திற்கு மேல் வாங்குவதில்லை என தெரிகிறது.

------------------------------------------------------

பேருந்துகளில் எதிலாவது டிக்கெட் இல்லாமலா போய்விடுமென்று சென்ட்ரலின் எதிரில் பூங்கா அருகில் KPN அலுவலகம் தேடினோம்.கண்ணில் படவில்லை. ஷர்மா டிராவல்ஸ் ன் அலுவலகத்தில் விசாரித்தோம்.பார்த்து விட்டு வருகிறேன் என போனார் அங்கிருந்தவர்.

எங்க போறாரு என அப்போதே சந்தேகம்! வந்தவர் டிக்கெட் 500 ரூபாய் என்றார். நெல்லைக்கு 500க்கும் குறைவு தான சார் என கேட்டேன்.இல்லப்பா 500 தான் என்றார்.சரி டிக்கெட் இருக்கிறதே என ரூ.500 கொடுத்தனுப்பினோம்.

திரும்பி வந்தால் அவர் கையில் KPN டிக்கெட்.டிக்கெட்டில் ரூ.450 தான் போடப்பட்டிருந்தது. ஆஹா KPN நம்ம கண்ணில படாம போயிடிச்சே;இல்லனா 50 ரூபா வீணா குடுத்து இருக்க வேண்டாமே என நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை அன்று. நம்ம போனாலே இப்படித் தான் :)

--------------------------------------------------

நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் சகோதரர் சென்னைக்கு திரும்புவதற்காக அரசு விரைவுப் பேருந்தில் டிக்கெட் கேட்பதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய முன்பதிவு மையத்திற்கு சென்றோம்.டிக்கெட் எல்லாம் ஃபுல்லு சார் எதுவுமில்லை என தெரிவித்தார்கள்.

எங்க நேரத்துக்கு, நெல்லை சந்திப்பில்(ஜங்சன்) தனியார் பேருந்துகளிலும் (டிசம்பர் 30)அன்று டிக்கெட் இல்லை.சரி இங்கேயும் அரசு விரைவு பேருந்திற்கான முன்பதிவு மையம் ஒன்று உண்டே என சகோதரர் சொல்லவும்;அங்கு போய் விசாரித்தால் டிக்கெட் இருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னர் டிக்கட் இல்லையென ஒரு முன்பதிவு மையத்தில் சொல்கிறார்கள்,இப்போது மற்றொரு மையத்தில் இருக்கிறது என்கிறார்கள் இது எப்படி சாத்தியம், என்னும் கேள்வி எழுந்தது.

ஒன்றில் யாரேனும் தங்கள் பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும் இல்லை முகவர்களின் நயவஞ்சக வேலையாக இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

அரசுப் பேருந்துகளில் முகவர்களின் தலையீடு சற்று அதிகமாகவே இருப்பதாகவே தெரிகிறது.ஆரம்பத்தில் டிக்கெட் இல்லையென்பார்கள் ஆனால் முகவர்களை அணுகி சற்று அதிகமாக பணம் கொடுத்தால் டிக்கெட் உடனே கிடைத்து விடும்.

இப்படி நாம் பணம் இறைத்தால் இவர்கள் தரும் சேவையோ மகா கேவலம்.அத்தனை அலங்கோலமாக இருக்கும் இருக்கைகள்.மூட்டைப்பூச்சி தொல்லைகள் மறுபுறம்.பலமுறை புகாரும் செய்தாகி விட்டது.கேட்பார் யாருமில்லை.

பதிவர் உண்மைத்தமிழன் இதனைப் பற்றி ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார்.அதை இங்கே படிக்கலாம்

இப்படியாக அரசு ஊழியர்கள்,முகவர்கள் மூலம் சாமானியன் நாம் தான் அலைக்கழிக்கப்படுகிறோம்.

February 05, 2009

சென்னை பேருந்து 50 காசு-கோயம்பேடு-நேர்மை

சென்ற வாரம் சென்னை சாந்தோமில் உள்ள செவிலியர் கழகத்திற்கு (Tamilnadu Nurses and Midwives Council) கனடாவின் தேவைக்காக மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவே, பாரிமுனையிலிருந்து வேளச்சேரி செல்லும் பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றால் 3.50 போக மீதி கிடைக்கவில்லை. சார் டிக்கெட்டு காசு மீதி அப்படின்னு லேசா சவுண்டு விட்டா... என்னப்பா சில்லறையா தரது இல்லயா? எத்தன பேருக்குத் தான் நான் சில்லற குடுக்கிறது? என பேருந்திலிருக்கும் அத்தனை பேர் செவியிலும் விழுகின்ற படி ஒரு கத்தல் (500 ரூபா நோட்டா தந்து விட்டேன் என நான் எனது மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்) சலிப்புடன் ஒரு ரூபாயை எடுத்து இந்தா... என்கிறார். சார் 50 காசு குறயுது என்றால்... இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்கிறார்.
------------------------------------
போகும் போது தான் அப்படியென்றால், சாந்தோமிலிருந்து பாரிமுனைக்கு திரும்பி வருகையிலும் அதே 50 காசு விஷயம் தான். கேட்டால் அந்த நடத்துனரும் அதே பதிலளிக்கிறார் "50 காசு குறயுதா இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்" அப்போது தான் ஒரு விஷயம் விளங்கியது,அந்த காசுகள் நடத்துனரின் பாக்கெட்டிற்கென்று! 50 காசு சென்னையில் பிச்சைக்காசு ஆகி விட்டது என்றே தோன்றுகிறது.(பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லையோ என்னமோ?)50 காசு புழக்கம் இன்று வெகுவாக குறைந்து வருவதாகவும் தோன்றுகிறது. 25 காசை செல்லாக் காசு ஆக்கியது போன்று 50 காசையும் ஆக்குவார்களோ?
------------------------------------
செவிலியர் கவுன்சில் போனால் அங்கு இருந்த களேபரம் இன்னும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. 7 ஆண்டுகள் முன் மல்லுக்கு நின்ற அதே குறுகலான நடைபாதையுடைய பழைய அலுவலகம்;(50 பேர் நிற்பதுவே பெரிய விஷயம்) அதில் சான்றிதழ்களை பதிவு செய்ய வந்திருந்த மாணவிகள் கும்பலாக சான்றிதழ்களுக்கு கூட மதிப்பளிக்காமல் அவற்றை முட்டி முனங்கி கவுண்டரினுள் திணித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வரிசையில வாங்கனு பதிவாளர் சொல்றது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.

நானும் பொருத்துப் பொருத்துப் பார்த்து ஒரு சமயத்தில். என்ன எல்லாரும் படிச்சவங்க தான வரிசையில வரலாம்லனு சவுண்டு விட்டுப் பார்த்தேன்...ம்ஹூம் யாரும் கேட்டப்பாடில்லை.கவுண்டரினுள் சான்றிதழ்களுடன் பல கைகள் நுழையவே கடுப்பாகிய பதிவாளர் இருமுறை வெளியே வந்து வரிசையை சரிப்படுத்தி விட்டுச் சென்றார்.5 நிமிடமாகவில்லை மீண்டும் நெரிசல்.

அதனிடையில் 35வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வரிசையில் நில்லாமல் சான்றிதழை நீட்டினார்.ஏங்க இத்தன பேர் வரிசையில் நிற்கும் போது நீங்க மட்டும் என்ன என்று கேட்டுவிட்டேன்.அவ்வளவு தான் பெண்மணிக்கு கோபம் தலைக்கு ஏறி...நீ யாரு கேக்கிறதுக்கு;நீ டிப்ளமோ முடித்திருக்கிறாய் நீ பேசாத.நான் டிகிரி முடித்திருக்கிறேன்; இப்படித் தான் பண்ணுவேன் என என்னைக் குறித்து முழுதும் அறியாமலே கத்த ஆரம்பித்து விட்டார்.
பின்னர் தான் வந்தது எனக்கு கோபத்தின் உச்சம்; பதிலுக்கு நான் ஏங்க பட்டம் பதவியெல்லாம் முக்கியமில்ல, எப்படி இருக்கோம்ங்கிறது தான் முக்கியம்; வரிசையில வாங்கனு சொல்லவே... அருகிலிருந்த பிற மாணவிகளின் உறவினர்களும் என்னோடு சேர அம்மணி ஜகா வாங்கினார்.
------------------------------------
இன்று படித்தவர்களுக்கு தலைக்கனம் எப்படித்தான் வருகிறதோ என தெரியவில்லை.அதுவும் பிறரை முழுமையாக அறிந்து கொள்ளுமுன்பே அவரைக் குறித்தான அபிப்ராயங்களும் கூட முன்வைக்கப்படுவது இன்னும் வருத்தத்திற்குரிய விஷயம். நண்பர்களுள்,வீடுகளினுள் இதினிமத்தமே பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதைக் களைந்தால் வாழ்வு களிப்பு பெறும்.

"புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்"
-----------------------------------------
சாந்தோமில் பணியை முடித்துவிட்டு பெங்களூரு செல்ல கோயம்பேட்டில் கர்நாடக மாநில விரைவுப் பேருந்து ராஜஹம்சாவிற்காக கவுண்டரில் 297 ரூபாய் டிக்கெட்டிற்கு ரூ.300 கொடுத்துவிட்டு சில்லறை கேட்டால் அங்கும் இல்லையாம் சில்லறை. என்ன கொடும சார் காலைல தமிழக பேருந்தில் தான் அப்படினா முன்பதிவு செய்யும் கர்நாடகா கவுண்டரிலுமா இப்படி என நொந்து கொண்டேன். (சில்லறை விஷயம் பெரிய விஷயம் தான் போல)
-----------------------------------
9 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் சேர்ந்தேன். இரவு 11:45 ற்கு தான் பயணம்.Internet Cafe ஏதும் இருக்கிறதா என பார்க்கலாமென கோயம்பேடு பேருந்து நிலைய நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்...பேருந்து நிலையம் முழுவதும் மூன்று முறை சுற்றி வந்து விட்டேன்; ஒன்றும் சிக்கவில்லை. சரி வெளியே சென்று தேடலாமென்றால் அங்கேயும் ஏதுமில்லை. இத்தனை பெரிய பேருந்து நிலையத்தில் ஒரு Internet Cafe கூடவா இல்லை என சலித்துக்கொண்டு ipod தான் கதியென காதில் மாட்டிக்கொண்டேன்.

கோயம்பேட்டில் Internet Cafe இருக்கிறதென்றால் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.
Related Posts with Thumbnails