Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

May 25, 2025

இன்று இப்படியே சற்று ஆசுவாசமாய் - Lag Jaa Gale

பெருந்துயர்களில் இருந்து மீள எழுத்தையும், கலையையும், இசையையும் விட சிறந்த துணை வேறு என்ன இருந்து விடப் போகிறது 

எதையும், எவரையும் எப்போது வேண்டுமானாலும் இழப்போம் என்பது நம் ஆழ்மனங்கள் அறிந்தவை தான். ஒருவேளை அப்படியான எண்ணங்கள் நம் ஆழ்மனங்களில் இருப்பதாலேயோ என்னமோ அதன் தாக்கம் இல்லாமல் நமது புறம் சார்ந்த விசயங்களிலும், கேளிக்கைகளிலும், அன்றாட நடவடிக்கைகளிலும் இயல்பாக நாம் தொடர்ந்து இயங்குகிறோம். 


வலி, துயரம், ஆற்றாமை என்றிவை நம் ஆழ்மனங்களில் தேங்கிக் கிடந்தாலும் இவற்றை மிஞ்சி நிற்கின்ற பசி, வளர்சிதை மாற்றங்கள், இயற்கை உபாதைகள், சார்ந்திருப்போரின் நலம் பேணல் என ஏதாவது ஒன்றினால் நாம் இன்னமும் பிழைத்துக் கிடக்கிறோம் அல்லது நம் முந்தைய அனுபவங்கள் நமை பக்குவப்படுத்தியிருப்பதால் மனச் சமநிலை பிறழாமல் தொடர்கிறோம். 


இப்படியாக மனச் சமநிலை பிறழாமல் தொடர்வது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. குறிப்பாக வலி, துயர், ஆற்றாமை என்றிவைகள் சூழ் வட்டத்தினின்று வெளிவர இயலாதோர் இன்னமும் சோர்வுற்று அவைகளிலேயே உழன்று தமை வருத்திக் கொள்வதும் நிகழும் என்பது தான் இப்பிரபஞ்சத்தின் இன்னொரு பக்கம்.


அதிலும் சிறு வயதில் ஏற்படுகின்ற மனச்சிதைவுகள் ஒரு வகையில் வருங்காலங்களின் துயர்களை எதிர்கொள்ள பெரும்பாடங்களாக அமையும் என்றாலும், மறுவகையில் இவ்வாழ்க்கையின் மீதும், உறவுகளின்  மீதுமான நம்பிக்கையின்மையையும், எவ்வித செயற்பாடுகள் மீதுமான பிடிமானமற்றத் தன்மையையும் ஏற்படுத்தும் என்பது தான் பெருஞ்சோகம். 


‘வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்கிற ஜெயகாந்தன் கூற்று ஒன்று உண்டு, அது தான் நிதர்சனமும் கூட. இங்கு நமை, நம் செயல்களைப் பிடிக்காத பலர் உண்டு, நமக்குப் பிடிக்காதவர்களும் ஏராளம் உண்டு. எவரும் எவரையும், எல்லோராலும் எல்லா நேரமும் எல்லோரையும் திருப்திப் படுத்தி விடமுடியாது. அது  தான் இப்பிரபஞ்சத்தின் சூட்சுமம்.    


உலகம் எதிர்மறை சிந்தனைகளுடன் இருந்தாலும் நாம் நேர்மறையாகச் சிந்தித்தலையும், நன்மையானவைகளைப் பாராட்டாமல் விட்டுவிடுதலும் நன்றன்று. நன்றி மறத்தலும், நம் தோளோடு தோள் நின்று நமை உயர்த்துகிற எவரையும் மறத்தலும் அத்தனை எளிதல்ல, அப்படி இருந்து விடுதலும் முறையல்ல. 


நாளை இருப்போமா என்பதறியாத உலகில், நாளை சந்திப்போமோ என்பது உறுதியில்லாத நிலையில் இன்றைய தினத்தை முழுமையாக வாழ்ந்து விட்டுப் போதல் சிறந்தது. 

அப்படியான கருத்தாழத்தில் Raja Mehdi Ali Khan அவர்களால் எழுதப்பட்டு மதன் மோகன் அவர்கள் இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய Lag Ja Gale பாடலை ஒர் தந்தையும் மகளும் நேற்று பாடக் கேட்டேன். இந்த நேரத்தின் ஆகச் சிறந்த ஆறுதல் அந்த இசையும் அப்படியான வரிகளும் தான். 


இதில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம், ராஜா மெஹ்தி அலி கான் Wazirabad (அன்றைய பிரிட்டிஷ் இந்தியா மற்றும் இன்றைய பாகிஸ்தான்) பகுதியில் பிறந்தவர்.


கலையும் இசையும் மதங்களுக்கும், பிரிவினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை விட நிம்மதி என்ன வேண்டும் நமக்கு. வாழ்வோம், வாழ விடுவோம். 


பாடலின் இணைப்புகள்


Lata Mangeshkar Version with English Translation https://www.youtube.com/watch?v=YJHs3Sa73NQ


Sanam Acoustic Version

https://www.youtube.com/watch?v=HnLtNrvfZTU 


Papon Version 

https://www.youtube.com/watch?v=R1A8AbYPCaM


March 09, 2025

இளையராஜாவும் சிம்பொனியும் பெருங்கனவுகளும்!




 1970 லேயே தொலைதூர பயிற்சி வழியாக செவ்விசை (Classical) கிட்டார் இசைப்பதில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியின் தங்கப்பதக்கம் பெற்ற இளையராஜா அவர்கள் அதன் பிறகு லண்டனுக்கு நேரடியாக வந்து பல கச்சரிகளை செய்திருந்தாலும் அவரது வேர்களான நாட்டுப்புற இசை, இந்திய செவ்விசை, கர்நாடக சங்கீதம் என  அவரது பின்னணிக்கு எவ்வித தொடர்புமில்லாத மேற்கத்திய இசையை சிம்பொனி வடிவில் இன்று (மார்ச் 8, 2025) Ilaiyaraaja Symphony No. 1 - (Valiant) என்ற பெயரில் Royal Philharmonic Orchestra வழியாக நிகழ்த்துவது தான் அவரது இசையின் உச்சம் எனலாம். 

இளையராஜா அவர்கள் மேலும் பல Symphony இசைக் கோர்வைகளைப் படைக்கக்கூடும். அதனாலேயே இந்த முறை Symphony No. 1 என பெயர் சூட்டியிருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.   

இளையராஜா அவர்கள் இந்த அளவு உயர்ந்து நிற்பதற்கு அவர் ஒருவரே காரணம். அவரைக் கேட்டால் இறைவனையும், ரசிகர்களாகிய நமையும் காரணம் சொல்வார். 

இசையின் மீதான அவரது தீரா காதலும், அர்ப்பணிப்பும், நேரம் தவறாமையும், இழப்புகளை இசையினாலே வென்றெடுத்த அற்புதத் திறமையும் எண்பத்தொரு வயதிலும் அவரை தொடர்ந்து இயங்க வைப்பதுமன்றி சாதனைகளையும் நாம் எண்ணுவதற்கும் அப்பாற்பட்ட இசைக் கோர்வைகளைப் படைக்கவும் செய்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம். 

இத்தனைச் சாதனைகளுக்குப் பின்னர் இன்றளவும் வெறுப்பை உமிழும் ஆதிக்க  மனோபாவம் உடையோரையும், வன்மமேறிய ஊடகங்களின் முட்டாள்தனமான கேள்விகளையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை, கூடவே அவை அவரது இசை ராஜாங்கத்தை எவ்விதத்திலும் பாதிப்பதுமில்லை என்பது தான் ஆச்சர்யம். 

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் ‘முயன்றால் முடியாத கனவுகள் எதுவுமில்லை’. அதனை நானும் என் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன்; இப்போதும் அதனை நுகர்ந்து கொண்டே இசைஞானியின் இசைக்கோர்வைககளின் மாயாஜாலத்தின் ஊடே Eventim Apollo அரங்கிலிருந்து இதனைப் பதிவு செய்கிறேன்.

Royal Philharmonic Orchestra வலைத்தளம் இப்படியாக இசைஞானியை பதிவு செய்கிறது. 

The release of Symphony No. 1 – Valiant on 26th January 2025 marks a groundbreaking milestone in global music history as the first full Western classical symphony composed in the UK by an Indian artist. This momentous achievement highlights Ilaiyaraaja’s unparalleled artistry and cements his legacy as a trailblazer across cultures and genres.

பண்ணைபுரம் ஞானதேசிகன் இசைஞானி இளையராஜா அவர்கள் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பேறு தான்.

February 19, 2015

விஜய் டிவி சூப்பர் சிங்கர் - சர்ச்சைகளும் புரிந்ததும்



பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட சூப்பர் சிங்கர் ஜூனியரின் நான்காவது சீசன் இறுதி சுற்று நாளை அதாவது பிப்ரவரி 20 ஆம் தியதி சென்னையில் அரங்கேறுவதாக இருக்கிறது.

இசையில் நாட்டம் இருப்பதாலும், தொடர்ந்து இந்த பாடல் நிகிழ்ச்சியை பார்த்து வருவதாலும் எனக்கு புரிந்த சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்பதால் தான் இந்த பதிவு.

சூப்பர் சிங்கர் 2006 ஆம் ஆண்டு துவங்கி கடந்த 8 ஆண்டுகளில் நான்கு சீனியர் போட்டிகள், நான்கு ஜூனியர் போட்டிகள் என எட்டு சீசனை நிறைவு செய்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியின் விளம்பரப்படுத்தலாலும், தொகுத்து வழங்கும் பாணியினாலும், நட்சத்திரங்களை அரங்கத்திற்குள் அழைத்து வருகிற திறமையினாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருப்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

பங்கு பெறும் போட்டியாளர்களை ஊக்குவிப்பதும், அனந்த் வைத்யநாதன் அவர்களைக் கொண்டு போட்டியாளர்கள் குரலை மென்மேலும் மெருகேற்றுவதும், சரிவர பாடமுடியாமல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் தருவாயிலிருக்கும் போட்டியாளர்களையும் அரவணைத்து செல்வதும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் எல்லா நிகழ்ச்சிகளைப் போன்றே சூப்பர் சிங்கராலும் சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. நடுவர்கள் பாகுபாடு பார்க்கிறார்கள் எனவும், திறமைகளை இருட்டடிப்பு செய்து அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கே அதிக ஆதரவு தருகிறார்கள் என்பதும், பிற மாநிலத்தவர்களுக்கே (நடுவர்கள் உட்பட) அதிக வாய்ப்புகள் தருகிறார்கள் எனவும், அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் சூப்பர் சிங்கரின் அனைத்து சீசனிலும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

இந்த ஜூனியர் சீசன் 4 ல் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என சொல்லிவிட்டு வேற்று மாநிலத்தவர்களின் குரலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.

ஆனால் இந்த சூப்பர் சிங்கரின் தாரக மந்திரமான 'தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்/ தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல்' என்பது விஜய் தொலைக்காட்சியின் சாதாரண விளம்பரப்படுத்தல் தான்; கடந்த எட்டு வருடங்களாக தமிழகத்தில் இருந்து மட்டுமே போட்டியாளார்களை ஏற்றுக்கொள்வோம் என எங்கும் விளம்பரப்படுத்தி இருந்ததாக தெரியவில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து வரும் போட்டியாளர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதென்பது விஜய் தொலைக்காட்சியின் வியாபார உக்தியாகத்தான் தெரிகிறது.

அதற்கான முதல் அச்சாரம் தான் முதல் சீசனில் வெற்றிபெற்றவரும், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சார்ந்தவருமான 'நிகில் மேத்யூ'. இதைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா, காஷ்மீர் என பிற மாநிலங்களில் இருந்தும் பலர் படையெடுக்கத் துவங்கினர்.

இந்த சீசனின் மற்றுமொரு சர்ச்சை நன்றாக பாடிக்கொண்டிருந்த அனுஷுயாவை போட்டியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என்பது தான். இதற்கு வருத்தப்பட்டவர்கள், வசைபாடியவர்கள், தரம்தாழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அனுஷுயா தமிழ்நாட்டைச் சார்ந்தவர் இல்லை என்பதை மறந்து விட்டுத்தான் அவற்றை செய்திருக்க வேண்டும்!! ஒரு கட்டத்தில் நடுவர்களான சித்ரா, மனோ இருவர் மீதான தனிப்பட்ட தாக்குதல், கருத்து சுதந்திரம் என்பதன் பெயரில் எல்லை மீறிப் போகவே 'யூடியூப்' தளத்தில் இருந்து அந்த காணொளியையே நீக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டது விஜய் தொலைக்காட்சி. 

தமிழக போட்டியாளர்களையே இந்த நிகழ்ச்சியில் வைக்க வேண்டும், மற்ற மாநிலத்தவர்களை எல்லாம் எதற்கு விஜய் தொலைக்காட்சி தூக்கி வைத்து கொண்டாடுகிறது என்று ஆதங்கப்பட்டவர்களே, அனுஷுயா பாண்டிச்சேரியைச் சார்ந்தவர் என்பதறியாமல் அவர் வெளியேற்றப்பட்ட போது அவர்களே அவர்களை ஏமாற்றிக்கொண்டார்கள்.

எனக்குப் புரிந்த வரை பிற மாநிலம் சார்ந்தவர்களை பங்குபெற செய்வது முழுக்க முழுக்க விஜய் தொலைக்காட்சியின் தாரக உரிமை மட்டுமல்லாது அது அவர்களின் வியாபார உக்தியும் கூ. அதோடு மொபைல் மற்றும் ஆன்லைன் ஓட்டு முறையும் அவர்களின் வியாபாரமே! (இல்லையென்றால் குறைவான வாக்குகளே வாங்கியிருந்த ஸ்ரீஷாவை இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்து ஓட்டு போட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசியிருப்பார்களா!!) (ஸ்ரீஷா மிகச்சிறந்த குரல்வளமும், திறமையும் கொண்டவர் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும்) யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நிகழ்ச்சியை ரசிப்பதை விட்டுவிட்டு வசைபாடுவதும், வீண் தர்க்கங்களிலும் ஈடுபடுவதும் நேர விரயமே.

இறுதிப்போட்டியில் அனுஷுயா, ஹரிப்பிரியா அல்லது பரத் வெற்றி பெற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது, நாளை இரவு தெரிந்து விடும்.


December 31, 2013

இசையால் நனைய செய்த இளமை - Music Mojo - Keba Jeremiah

2013 அத்தனை எளிதாக கடந்துவிடவில்லை. எந்த வருடத்தையும் விட மிக அதிகமான (ஏ)மாற்றங்களையும், தோல்விகளையும் சந்தித்த வருடமாகவே பார்க்கிறேன் 2013 ஆம் வருடத்தை. ஆனால் அத்தனை பிரச்சினைகளின் மத்தியிலும் என்னை இன்னும் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வைத்திருப்பதில் இசைக்கு பெரும்பங்கு உண்டு. நீரின்றி அமையாதுலகு என்பது போன்று இசையின்றி அமையாதுலகு என கூறினாலும் தகும்.

அந்த வகையில் இந்த வருடம் அசர வைத்து, ஆச்சரியப்பட வைத்த இரு தருணங்கள் Music Mojo மற்றும் Keba Jeremiah வின் இசைத் தீண்டல்கள் தான். இளைஞர் பட்டாளமே வரிந்து கட்டிக்கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள் இன்றைய இசையுலகை. அதனை எந்த மொழி பாரபட்சமுமில்லாமல் ஊக்குவித்து வருகிறது கேரளத்தைச் சார்ந்த மாத்ருபூமி பத்திரிக்கை நிறுவனம் ஆரம்பித்த கப்பா தொலைக்காட்சி செய்து வரும் Music Mojo நிகழ்ச்சி.

Music Mojo வில், மொழி வேறுபாடின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளின் திரைப்படப்பாடல்களும், சுயமாக மெட்டமைக்கப்பட்ட பாடல்களும் இளம் இசைக்குழுக்களால் அற்புதமாக அரங்கேற்றப்படுவது தான் சிறப்பு. இளம் இசைக்கலைஞர்களின் திறமைகள் வாய்பிளக்க வைக்கின்றன. அதோடு அவர்களின் இசை புல்லரிக்க வைக்கிறது. இதில் குறிப்பிடும்படியாக ASIMA, Acoustika, Bennet & The Band, Agam, Thaikkudam Bridge, Staccato போன்ற இசைக்குழுக்களைக் கூறலாம் இவர்களுடன் இளம் பாடகர்களான ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், காயத்ரி, நிகில் மேத்யு, ஜ்யோத்சனா, ஜாப் குரியன், நேகா நாயர், மஞ்சரி, பென்னி தயாள், "மூங்கில் தோட்டம்" புகழ் - அபய் ஜோத்புர்கர் என திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.

இதில் நான் அதிகம் ரசித்த பாடல்கள் பலவற்றில்  சில இங்கே. 
ஸ்வேதா மோகன் பாடிய "இன்னும் கொஞ்சம் நேரம்"
 

நிகிதா, நிகில் பாடிய "ஏதோ" 



மஞ்சரி பாடிய "வான் மேகம்"



ஹரிச்சரண் பாடிய "நிலாவே வா"


கேபா ஜெரேமியாவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. பல ஆண்டுகள் முன்னர் சன் தொலைக்காட்சியில் Route10 இசைக்குழு என்ற பெயரில் ஊ ல ல லா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் Harmonize Project ற்காக பங்களித்து இப்போது பல இசையமைப்பாளர்களுக்கு Guitar இசை மீட்டுபவர் தான் கேபா. இத்தனை இளம் வயதிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான Guitarist ஆகி இருக்கிறார்.


மூங்கில் தோட்டம் - கேபா ஜெரேமியா


செய்யக்கூடிய விஷயத்தில கவனமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இவர்கள் அடைந்த சிறப்பைப் போல் எவரும் அடையலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. இசையின்றி அமையாது உலகு. இவர்களின் இசைக்கு என் வணக்கங்கள். 

October 18, 2013

தாயும் நானே தங்க இளமானே Vs தேவனே நான் உமதண்டையில்

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 16/10/2013 தேதி ஒளிபரப்பில் தற்செயலாக மதுமிதா பாடிய "தாயும் நானே தங்க இளமானே" என்ற பாடலை கேட்க நேர்ந்தது. பாடலின் ஆரம்பத்திலேயே இந்த மெட்டு "தேவனே நான் உமதண்டையில்" என்ற கிறிஸ்தவ பாடலின் மெட்டைப் போலல்லவா இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனினும் முழுப்பாடலையும் கேட்டு விட்டு ஒரு தீர்மானத்திற்கு வருவோம் என காத்திருந்தேன்; முழுப்பாடலும் முடிந்தது... சந்தேகமேயில்லாமல் 'தேவனே நான்' பாடலின் மெட்டும் 'தாயும் நானே' பாடலின் மெட்டும் ஒன்றே என தெளிவாகியிருந்தது..

பின்னர் கூகுளில் "தாயும் நானே" பாடலின் முழு விவரங்களை தேடினேன். 1982 ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ஜானகி அம்மையார் அவர்கள் ரஜினி காந்த் நடித்த "எங்கேயோ கேட்ட குரல்" என்ற திரைப்படத்திற்காக பாடிய பாடல் என்ற விவரம் கிடைத்தது. இதே மெட்டில் பி. சுசீலா அம்மையார் அவர்கள் குரலில் "இந்த மங்களம் செழிக்கவே" என்ற கிறிஸ்தவ திருமணப்பாடலும் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவனே நான் உமதண்டையில் பாடல் மதுரை ஜில்லா பகுதிகளில் ஊழியம் செய்து வந்த போதகர். சந்தியாகு என்பவரால், Nearer, my God, To Thee என்ற ஆங்கிலப்பாடலைத் தழுவி எழுதப்பட்டது. எழுதப்பட்ட ஆண்டின் விவரம் தெரியவில்லை.

இவ்விதமாக கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்த காலகட்டங்களில் பாடல்கள் நமது பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் மெட்டமைக்கப்பட்டன. தஞ்சையை சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரி என்பவரும், பாளையங்கோட்டையை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை என்பவரும்  பல கிறிஸ்தவ கீர்த்தனைகளை  எழுதி இருக்கிறார்கள்.  அவற்றை பெரும்பாலும் இசைத்தட்டில் பாடியவர்கள் நடராஜ முதலியார் மற்றும்  ஜிக்கி அவர்கள். சில பாடல்களை பி.சுசீலா அவர்களும் பாடியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான எல்.ஆர்.ஈஸ்வரி (லூர்து மேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி) பாடிய அம்மன் பக்தி பாடல்கள் மிக பிரபலம். இந்துவான ஜிக்கி பாடிய கிறிஸ்தவ பாடல்கள் மிக பிரபலம்.  (சுசீலா அவர்கள் பாடிய எல்லா ஹிந்து, கிறிஸ்தவ,   பக்தி பாடல்களும் பிரபலம்.).

ஆனால் இன்று மதத்தின் பெயரால் அடித்துக்கொண்டு சாவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது, மனிதன் என்று மதத்தை விட்டு மனிதத்தை தழுவுகிறானோ அன்று தான் இம்மண்ணுலகம் மகிழும்.

தேவனே நான் உமதண்டையில் பாடலும், தாயும் நானே பாடலும் "துஜாவந்தி" ராகத்தில் மெட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவையிரண்டில் எந்த பாடல் முதலில் மெட்டமைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி: விஜய் தொலைக்காட்சி
விக்கிப்பீடியா


December 31, 2012

கடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு


2012 ல் நான் மிக அதிகம் கேட்டப் பாடல். கடல் திரைப்பட மூங்கில் தோட்டம் பாடல் தான். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனதை தொடும் வரிகளுக்கு அற்புதமான இசையை கோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.

பாடல் வரிகளுடன் காணொளி வடிவில் மூங்கில் தோட்டம் பாடல் இங்கே. 



மூங்கில் தோட்டம்
மூலிக வாசம்
நிறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தயடி பாதை
ஒன் கூட பொடி நட

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

கொளத்தாங்கரையில
குளிக்கும் பறவைக
சிறகு ஒலர்த்துமே
துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து
முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க
நான் உன்ன அணைக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
இரத்தம் உறையும்
குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்த போர்வயில
இருவரும் இருக்க

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே


July 14, 2011

தெய்வத் திருமகன்-விழிகளில் ஒரு வானவில்-சைந்தவி

தெய்வத் திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிற "விழிகளில் ஒரு வானவில்"  பாடலை இரு தினங்கள் முன்னர் தான் கேட்க நேரிட்டது முதல் முறை கேட்ட போதே அது சைந்தவியின் குரலாகத் தான் இருக்கும் என உணர முடிந்தது. இணையத்தில் தேடிப் பார்த்து சைந்தவி தான் என உறுதி செய்து கொண்டேன்.

அன்றிலிருந்து இதனைக் குறித்து கண்டிப்பாக பதிவிட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்கி இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அந்த பாடலை இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசையும், அவர் திருமணம் செய்யவிருக்கும் சைந்தவி அவர்களின் குரலும் தான் முதல் முக்கிய காரணங்கள்.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இடம்பெற்ற  மாலை நேரம் பாடல் தான் இதற்கு முன்னர் நான் அதிகம் ரசித்தது. "விழிகளில் ஒரு வானவில்" பாடல் அந்த பாடலை விடவும் அதிகம் ரசிக்க வைத்திருக்கிறது. நா.முத்துக்குமார்  அவர்களின் பாடல் வரிகள் குறித்து எதுவும் சொல்ல தேவை இல்ல. பாடல் வரிகளும், இசையும், குரலும் மென்மையாய் இதமாக மனதை வருடுகின்றன. 

அனுபல்லவி உயர்ந்த சுருதியில் பாடப்பட்டாலும் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் "மாலை நேரம்" பாடலைப் போன்றே தாழ்ந்த சுருதியில் பாடப்பட்ட பாடல்.  மாலை நேரம் பாடலை இயக்குனர். செல்வராகவன் அவர்கள் எழுதி இருந்தார்; இந்த இரு பாடல்களுமே காதலை மையமாக வைத்து எழுதப்பட்டவை; எளிய தமிழில் சிறப்பாக எழுதப்பட்ட இரு பாடல்கள் என்றும் கூறலாம்.

சைந்தவி அவர்களைக் குறித்து 2003 முதல் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜெயா தொலைக்காட்சியின் ராகமாலிகா நிகழ்ச்சியில் தான் அவர் முதலில் பாடக் கேட்டிருக்கிறேன். அப்போதே அவரது குரலை அதிகம் வியந்ததுண்டு. அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே மேடைகளில் பாடத் துவங்கி விட்டாராம் சைந்தவி.

இவரது சகோதரி வினயா உடன் இணைந்து பல கர்நாடக மேடைக் கச்சேரிகளும் செய்திருக்கிறார் சைந்தவி. இன்றைய இளைய தலைமுறையில் கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் மிகச்சிறப்பாக பாடுபவர்களில் சைந்தவி குறிப்பிடத்தக்கவர். அதோடு திரை இசைப்பாடல்களிலும் முத்திரைப் பதித்து விட்டார். மேற்கத்திய இசையும் முறையாக கற்று தேர்ந்தவர் என்பது இணையத்தில் உலவிய போது கிடைத்த தகவல்.

நாளை (15.07.2011) வெளியாகவிருக்கும் தெய்வத்திருமகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மாலைநேரம் பாடலைப் போன்றே விழிகளில் ஒரு வானவில் பாடலையும் எனது கைவண்ணத்தில் சில புகைப்படங்களுடன் + பாடல் வரிகளுடன் காணொளியாக மாற்றியிருக்கிறேன். அதன் யூடியூப் சுட்டி இங்கே. பாடலை கீழே இணைக்கவும் செய்திருக்கிறேன்.



புகைப்படம் நன்றி: http://www.lakshmansruthi.com/index.asp 


December 14, 2010

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கோல்டன் க்ளோபில்


ஸ்லம்டாக் மில்லினியருக்காக ஏற்கெனவே சென்ற வருடம் கோல்டன் க்ளோப் விருதை பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் 2010 வருடத்திற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்லம்டாக் மில்லினியரை இயக்கிய டேனி போயலுடன் இணைந்து பணியாற்றிய 127 Hours என்ற திரைப்படத்திற்காகத் தான் இந்த பரிந்துரை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விருதுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்படவுள்ளன.


ஏற்கெனவே இந்த வருடம் நோபல் விருது வழங்கும் விழாவில் இசையமைத்து மேலும் புகழ் தேடிய ரஹ்மானின் புகழ் உலகின் எல்லா திசைகளிலும் இன்னும் எட்ட வாழ்த்துவோம்.

December 11, 2010

இசைக்கருவிகள் ஏதுமின்றி ஐ.ஃபோனிலும் ஐ. பேடிலும் இசை


உலகம், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புதுமை என்று கொண்டாடிய காலம் மாறி இன்று அந்த புதுமையிலும் புதுமை செய்திருக்கிறார்கள்.

இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.

இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

மூன்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளே இல்லாமல் மீட்டி வாயை பிளக்க வைத்து விட்டார்கள். நீங்களும் பாத்து வியக்க வேண்டிய நேரமிது.


யூடியூபில் பார்க்க இந்த சுட்டியில் க்ளிக்குங்க. யூடியூபில் வெளியான மூன்றே தினங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்ஸ் இதற்கு.

இன்று மட்டும் சுமார் 25 முறை பார்த்திருப்பேன் இந்த இசை மீட்டலை. www.northpointmusic.org/christmas இது அவர்களது இணைய தளம்

இது GodTube ன் காணொளி

July 24, 2010

தமிழ் ராப்,பாப் பாடல்கள்-கவிதை குண்டர்

தமிழ் பாடல்களில் திரைப்பட பாடல்களுக்கு தான் அதிக மவுசு என்றால் அது மிகையல்ல. பாப் பாடல்களுக்கு அதிகம் பெயர் கிடைப்பதில்லை. பாப் பாடல்களுக்கே அந்த நிலைமை என்றால் ராப் பாடல்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.

காதலன், குளிர் 100', பொல்லாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ராப் வகை பாடல்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் திரைப்படத்தில் இடம் பெற்ற "பேட்டை ராப்" பாடல் அதிகம் பிரபலமான ஒன்று.

ராப் பாடகர்கள்/இசைக்குழுக்கள் யோகி.பி, நட்சத்ரா, ப்ளாசே, கவிதை குண்டர் என பலரும் தமிழ் ராப் இசை உலகை அதிர வைக்கிறார்கள். அவர்களோடு யுவன் ஷங்கர் ராஜாவும், ஸ்ருதி ஹாசனும் கூட ராப் பாட ஆரம்பித்தி விட்டார்கள். பாடுகையில் அவர்கள் வார்த்தைகளை புரிந்து கொள்வது தான் கொஞ்சம் கடினம்.

யோகி.பி "பொல்லாதவன்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் " எங்கேயும் எப்போதும்" என்ற பாடலில் பாடும் நிலா பாலு மற்றும் சுனிதா சாரதியுடன் இணைந்து தனது ராப் வரிசையை காண்பித்திருந்தார்.

'நிழல்கள்' திரைப்ப்டத்தில் இடம்பெற்ற இசைஞானியின் "மடை திறந்து தாவும் நதி" என்ற பாடலை யோகி.பி மற்றும் நட்சத்திரா, வல்லவன் என்ற ராப் ஆல்பத்தில் அவர்களது ராப் மற்றும் ஹிப்-ஹாப் (Hip-Hop)பாணியில் பின்னியிருப்பார்கள். அதன் காணொளி கீழே.


ராப் பாடல்களின் வரிகளை புரிந்து கொள்ள சற்று சிரமம் என்றாலும் அவர்கள் பாடல்களில் ஒரு நோக்கம் நிச்சயம் இருக்கும். வல்லவன் இசைத்தொகுப்பில் நட்சத்ரா "இசைக்கு எல்லை ஏதுமில்லை" என்றனர். கவிதை குண்டர் ஆல்பத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் பாடலை எழுதியிருக்கிறார்கள்.

எனினும் பெரும்பாலான ராப் பாடல்கள் அடல்ட்ஸ் ஒன்லி வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

கவிதை குண்டர் ஆல்பத்தில்  நேஹா பஸின் பாடிய "தனியே" பாடல் தான் பலரையும் கவர்ந்திருந்தது. அது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தமிழ் கலவையோடு பாடப்பட்டிருந்தது. அந்த பாடல் இங்கே.

Get this widget |Track details |eSnips Social DNA

நேஹா பஸின் மும்பையைச் சார்ந்தவர்; சானல் 'வி ' உருவாக்கிய "Viva"  என்ற இந்திய பாப் இசைக்குழுவைச் சார்ந்தவர்.

கவிதை குண்டர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை எனது பாப் பாடல்களுக்கான வலைப்பூவான http://thamizhpopsongs.blogspot.com/ என்ற வலைப்பூவில் தொகுத்திருக்கிறேன்.

ராப் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள் / காதை கிழித்துக் கொள்ளுங்கள்.

June 25, 2010

மைக்கேல் ஜாக்சனின் மறுபக்கம்

இன்றோடு (25.06.2009) பாப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் இறந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் காலஞ்சென்று ஒரு வருடமாகிய பின்னும் அவரது மரணத்திற்கான காரணம் சரிவர தெளிவாகவில்லை.பிரபலமானவர்களின் மரணம் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கிறது.

அவர் உயிரோடு இருக்கையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்; சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டன.

அவரது குழந்தையை உயரத்திலிருந்து கீழே போடுகின்ற விதம் பயமுறுத்திய நிகழ்வு ஒன்று அவரது மனநிலையைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

இவைகள் இப்படியிருந்தாலும் MJ வின் நற்பணிகளையும் மறக்க முடியாது. 1991 ல் வறுமையில் வாடும் சிறார்களை மனதில் கொண்டு "Heal The World" என்ற பாடலை அவரே எழுதியிருந்தார். அந்த பாடலைத் தான் அவர் பாடிய பாடல்களிலே சிறந்த பாடலாகக் கருதுவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

I think about the generations and they say we want to make it a better place for our children and our children's children so that they know it's a better world for them and I think they can make it a better place.இப்படித் தான் பாடலுக்கு முன்னர் மைக்கேல் கூறிப்போகிறார்.

Michael Jackson - Heal The World .mp3
Found at bee mp3 search engine

அதன் தொடர்ச்சியாக 1992 ல் "Heal The World Foundation" என்ற அமைப்பை ஏழ்மை மற்றும் வறுமையினால் வாடும் சிறுவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யும் வகையிலும்; மனோ ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லெண்ணத்திலும் ஏற்படுத்தினார்.

பல மில்லியன் டாலர்களையும் இதற்கென்றே செலவிட்டிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

1984 ல் Pepsi Cola வின் விளம்பரம் ஒன்றில் நடிக்கையில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக அவருக்கு பெப்ஸிகோலா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 1.5 மில்லியன் டாலர்கள் முழுவதையும் "Michael Jackson Burn Center" தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக அமெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

"Can You Feel It", "We Are the World" மற்றும் "Man in the Mirror" ஆகியவை உலக அமைதிக்காகவும், பிரிவினைகளுக்கு எதிராகவும் MJ ஆல் பாடப்பட்ட பிற பாடல்கள். இவற்றில் "We Are the World" பாடல் 1985 ல் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 39 இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.  அந்த பாடலை Lionel Richie என்ற மற்றொரு பாப் பாடகருடன் சேர்ந்து MJ எழுதினார். இப்படி MJ செய்த நற்பணிகள் பலப்பல.

ஆனா இன்னைக்கு நம்மூரிலயே பல பேர் கொஞ்சம் காச பாத்திட்டாங்கன்னா கண்ணு மண்ணு தெரியாம ஆடுவாங்க. உதவின்னு வந்தா ஓடி ஒளிவாங்க. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். "மனம் இருந்தா மார்க்கம் உண்டு".

Lionel Richie Stevie Wonder Micheal Jackson - We Are The World.mp3
Found at bee mp3 search engine

அவர் உயிரோடு இருக்கையில் அவர் சம்பாதித்ததை விட அவர் இறந்த பின்னர் இதுவரை அவரது இசை சம்பாதித்தது தான் அதிகமாம்.ஒரு பில்லியன் டாலர்களாம்!!

நன்றி: dailymail & wiki  
Heal The World

June 22, 2010

You Tube ல அடிச்சிட்டோம்ல செஞ்சுரி



காணொளிகளை அதாவது வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தளமான http://www.youtube.com/ ல் ஒரு நாளில் மட்டும் கோடி கணக்கான வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இணையம் குறித்து அறிந்திருப்பவர்களில் இன்று Youtube தளத்தை அறியாதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள் என சொல்லலாம். 2005 ஆம் வருடம் முதல் இந்த தளம் இயங்கி வருகிறது. யூடியுப் வீடியோக்களை அதன் embed code ஆல் எளிதாக பிற தளங்களிலும் இணைக்கவியலுவதும் அதன் தனித்தன்மை.

குறிப்பாக இந்தியர்கள் அதிகம் உலவும் ஆர்குட்டில் குறிப்பிட்ட youtube காணொளியின் சுட்டியை(URL link) அளித்தாலே வீடியோவை சுலபமாக இணைக்க முடிவதால் மேலும் பிரபலமாகியிருக்கிறது யூடியூப்.

அப்படிப்பட்ட youtube தளத்தில் விளையாட்டாக 2008 முதல் வீடியோக்களை இணைக்கத் துவங்கினேன். இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும்பங்கு அன்பரும், புதிய பதிவருமான கெர்ஷோம் @ கிறிச்சானுக்கு உண்டு. http://www.youtube.com/arnoldedwinp இது தான் எனது பக்கம்.

ஆரம்பத்தில் யூடியூப் தளத்தில் இடம்பெறாத பாடல்களை இணைக்கலாம் என்ற ஆர்வம் தான் உத்பால் பிஸ்வாஸ், வைரமுத்து, ஹரிஹரன் கூட்டணியில் உருவான காதல் வேதம் தமிழ் பாப் பாடல்களை இணைக்க தூண்டியது.(copy right யாரும் கேக்காம இருக்கிற வரைக்கும் சந்தோஷம்) அதன் பின்னர் சில கிறிஸ்தவ பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் இணைத்தேன்.

தியாகராஜ பாகவதரின் பூமியில் மானிடன் பாடலையும் புகைப்படங்களைக் கொண்டு காணொளியாக மாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. அதற்கு காரணமான அண்ணன் அன்பு அவர்களுக்கும், கிறிச்சானுக்கும் நன்றி. அந்த காணொளி, தியாகராஜ பாகவதரின் விசிறிகள் பலரது கவனம் ஈர்த்திருப்பதும் சந்தோஷம் தான். (பலருக்கு பிடிக்காமல் போனது வேறு விஷயம்)

உலகின் பல முனைகளிலிருந்து முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் காணொளிகளுக்கு கருத்துரைக்கும் போது நிச்சயமாகவே இணையத்தைக் குறித்தும். யூடியூபைக் குறித்தும் ஆச்சரியமும் பெருமிதமும் தோன்றும்.

இன்றுவரை 104 அன்பர்கள் யூடியூப் தளத்தில் என்னை பின் தொடருகிறார்கள் என்பது கொசுறு தகவல். இங்கயும் அடிச்சிட்டோம்ல செஞ்சுரி.

நான் அதிகம் ரசித்த "நீ என்பதில் நானும் அடங்கும்" பாடல், காதல் வேதம் ஆல்பத்திலிருந்து இங்கே.

நன்றி: youtube &  விக்கி

June 14, 2010

Waka வக்கா Vs செம்மொழிப்பாடல்

Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.

அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.


இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.

அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.

அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.

ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.

நன்றி: விக்கி
Related Posts with Thumbnails