Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

August 06, 2015

'நயா' பைசாவும் - சில புரிதல்களும்



சில தினங்கள் முன்பு பழைய நாணயங்களைக் குறித்த எண்ண ஓட்டங்களில் திளைத்திருந்த போது அணா என்ற சொல்லை உபயோகித்து எத்தனை வருடங்கள் கடந்து போயிற்று என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன்.

அணா என்ற சொல் வழக்கு 2000 ஆண்டு வரை இருந்ததாகவும் ஞாபகம். ஒரு அணா என்பது ஒரு ரூபாயின் 16 ல் ஒரு பங்கு என கணக்கிடப்பட்டு வந்ததாக வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

அணா முறை நாணயப் புழக்கத்தை தொண்ணுறுகளிலேயே அரசு விலக்கி வைத்த பின்னரும் அந்த சொல் வழக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இது, தமிழக அரசு விரைவுப் பேருந்து என பெயர் மாற்றம் செய்த பின்னரும்  திருவள்ளுவர் பேருந்து என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டது போன்றதே!


'அணா' நாணயப் புழக்கத்தை அரசு நடைமுறையில் இருந்து மாற்றிய பின்னரும் நாலணா (25 பைசா), எட்டணா (50 பைசா) என தொடர்ந்து மக்களால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2011 ல் நாலணா (25 பைசா) புழக்கத்தில் இருந்து முழுவதுமாக எடுக்கப்படுவதாக  அரசு  அறிவித்திருந்தது. எனினும் 50 பைசா இன்றளவும் பலராலும் எட்டணா என தொடர்ந்து அழைக்கப்பட்டுவருகிறது; 50 காசுகள் தொடர்ந்து புழக்கத்திலும் இருந்து வருகிறது.

1947 வரை பிரித்தானிய - இந்திய நாணய முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்து வந்த இந்தியா 1950 ல் தான் குடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை அச்சேற்றி வெளியிட்டிருக்கிறது. ஒரு ரூபாய் என்பது 64 Pice அல்லது 16 அணா என நடப்பில் வைத்திருந்த இந்திய அரசு 1957 ல் தசமபின்ன (Decimal) முறையைப் பின்பற்றி 100 பைசா என்பது ஒரு ரூபாய் என்ற முறையில் புதிய காசு/நாணயத்தை வெளியிட்டது

பழைய அணா/பைஸ் முறைக்கும் புதிய பைசா/ரூபாய் முறைக்குமான வித்தியாசத்தை மக்களிடத்தில் எடுத்துரைக்கும் முறையாக 1957 - 1966 வரை புதிய நாணயங்கள் வெளியிடுகையிலெல்லாம் நயா (புதிய) பைசா என்றே விளம்பரம் செய்து வந்திருக்கிறது அரசு.

நயா பைசா என்பதில் 'நயா' என்ற சொல் இந்தி சொல் வழக்கு என்பது இந்தி பேசாத மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும் வாய்ப்பு இல்லை.

நயா என்றால் புதிய என்று அர்த்தப்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அரசு புதிய நாணயம் வெளியிடுகையில் 'நயா'/புதிய பைசா என அறிக்கை விடுகிறது.

நயா என்கிற சொல் வழக்கு மிகச் சாதாரணமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருவது சற்றே வியப்பு தான்.

இன்றும் கிராமப்புறங்களில் ,  பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் பலர், எங்கிட்ட 'அஞ்சு நயா பைசா இல்லன்னு' சரளமாக பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

பலரும் நயா என்பதன் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறார்களா என்பதை அறியேன். எனினும் ஒரு வேற்று மொழி சொல் நாமறியாமலே அல்லது நம்மால் விளங்கிக் கொள்ளப்படாமலே நமக்குள் வியாபித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ரூபாய், ரூபா என்ற சமஸ்கிருத சொல் (ரூபா=ரூபம்=வடிவம்) என்பதையும், பைசாவும் Padamsa என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து மருவியது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

 --------------

புகைப்படங்கள் நன்றி
14gaam.com
coinquest.com

February 12, 2010

வேலன்டைன் தின வரலாறு

து ரு மீள் திவு...

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது.

கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம்.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது.

மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது.

வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது.

மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு .

இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன.

மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன.

18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது.

வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார்.

கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன.

வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம்.
வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.

நன்றி: history & wiki

September 05, 2009

'அன்னை தெரசா' - சில நினைவுகள்

அல்பேனிய நாட்டு குடிமகளாக பிறந்து இந்திய குடிமகளாக இறந்த ஒரே பெண்மணி அநேகமாக Agnes Gonxha Bojaxhiu என்ற தெரசாவாக மட்டும் தான் இருக்க முடியும்.

அந்நிய நாட்டில் பிறந்தவராயிருந்தாலும் இந்திய நாட்டில் ஆதரவற்றோருக்காய் அவர் செய்த அரும்பணிகளை நாம் அந்நிய படுத்தி விட முடியாது.

இன்னல்கள் பலவற்றின் இடையிலும் அனாதைகளுக்காக அயராது உழைத்த ஆக்னஸ் @ தெரசாவின் கனவு சாதி, சமய, இன பாகுபாடின்றி அன்பையும் அரவணைப்பையும் அளிப்பது மட்டுமாகவே இருந்தது.

ஒருமுறை நன்கொடை வசூலித்து கொண்டிருந்த அன்னை தெரசாவின் கரங்களில் ஒருவர் துப்பியிருக்கிறார். தெரசாவோ அதனை துடைத்து விட்டு "இதனை நான் வைத்துக் கொள்கிறேன்... பசியிலிருக்கும் அனாதைகளுக்காக உதவி ஏதும் செய்யங்கள் என மீண்டும் கை நீட்டியிருக்கிறார்.

அத்தனை அரும்பணிகளை ஆற்றிய பின்னர் கூட.... தன்னைக் குறித்து கூறும் போது "அன்பின் கடிதத்தை இவ்வுலகத்திற்கு எழுதுகின்ற இறைவனின் கரங்களில் இருக்கும் சிறிய பென்சில் மட்டுமே நான் என்கிறார்"

தெரசா அவர்களின் அறப்பணி இந்தியர்களை சோம்பேறி ஆக்குகிறீர்கள்; மீண்டும் பிச்சை எடுக்க தூண்டுகிறீர்கள்; போன்ற பல கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை...

பசியிலிருப்பவனுக்கு மீனை கொடுக்காமல் மீனை பிடிப்பது எப்படி என சொல்லி கொடுக்கலாமே என்ற கேள்வி ஒன்றிற்கு "அவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்ற மனநிலையை நான் உருவாக்குகிறேன்" ; உயர்நிலைகளில் இருக்கிற நீங்கள் மீன்பிடிக்க (வேலைவாய்ப்பினை) ஏற்படுத்தி கொடுங்கள் என கூறியிருக்கிறார்.

தான் செய்த பணிகளில் தெளிவாக இருந்த தெரசாவே தனது தனிப்பட்ட வாழ்க்கையில் இறைவன் (அவரில்) இருப்பதை குறித்த பல குழப்பங்களுக்கும் ஆளாகி இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத ஒன்று .

அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள் இங்கே புகைப்படங்களாய்.

Agnes Gonxha Bojaxhiu @ தெரசா ஆகஸ்ட் 26, 1910 Macedonia ல் (முந்தைய யூகொஸ்லேவியா) அல்பேனிய தகப்பனாருக்கு பிறந்தார்


தெரசா அவர்கள் பிறந்த இடம்.

ஆகஸ்ட் 26 ல் பிறந்தாலும் தான், திருமுழுக்கு எனப்படும் Baptism எடுத்த தினமான ஆகஸ்ட் 27 ஐ தான் பிறந்த நாளாக கருதினார்.

1928 ல் அயர்லாந்தில்... Sisters of Loretto எனப்படும்(இந்தியாவில் பணி செய்ய பயிற்றுவிக்கப்படும் இடம்) குழுவில் சேர்ந்தார்.


1929 ல் இந்தியாவில் பணி செய்ய ஆரம்பித்தார்.

1931 ல் தனது பெயரை தெரசா என மாற்றி கொண்டார்.

1931-1946 வரை கல்கத்தாவில்(St.Mary's High School) ஆசிரியையாக பணியாற்றினார்.

1944 ல் Principal ஆக பதவி உயர்வு பெற்றார். அதே வருடம் காசநோயால் (TB) பாதிக்கப்பட்டார்.


1946 ல் டார்ஜிலிங் பகுதிக்கு ஓய்விற்காக செல்கையில் ஏழைகளுக்காக பணி செய்ய வேண்டுமென இறைவனால் அழைக்கப்பட்டதாக உணர்ந்தார்.


1948 ல் இந்திய குடியுரிமை பெற்றார்.
1950 ல் ஏழைகளுக்கு உதவும் வகையில் Missionaries Of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்

1952 ல் Nirmal Hrudai என்ற முதியவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பை அமைத்தார்.

1979 ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்
பத்மஸ்ரீ, பாரத ரத்னா, புருசெல்ஸ் கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம், அமைதிக்கான நேரு பரிசு என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


1985 ல் அமெரிக்க அதிபர், ரொனால்ட் ரீகனிடமிருந்து Presidential Award Of Freedom என்ற விருதை பெறுகிறார்.
1991 ல், The Salvation Army என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பின் உலக தலைவர் ஈவா பரோஸ் அம்மையாரை சந்திக்கிறார்.
1996 ல் அமெரிக்காவின் கவுரவ குடியுரிமையை பெறுகிறார்.



மகாத்மா காந்தியடிகளின் சமாதியில்


June 18, 1997- வேல்ஸ் இளவரசி டயானா உடன்

இரு மாதங்களுக்கு பின்னர் அதே வருடம் இருவரும் மரணத்தில் இணைந்தார்கள் (ஆகஸ்ட் 31 ல் டயானாவும் செப்டம்பர் 5 ல் தெரசாவும் காலமானார்கள்)


டயானா குறித்து தெரசா


முழு (இந்திய) ராணுவ மரியாதை உடன் தெரசாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.



2003 ல் வாடிகனால் கவுரவிக்கப்பட்டார். அதனை கன்னியாஸ்த்ரீ ஒருவர் ஏற்று கொள்கிறார்.
செப்டம்பர் 5, 1997 ல் மாரடைப்பால் காலமான அன்னை தெரசா இன்றும் பலரது மனதில் வாழ்கிறார்.

July 02, 2009

"வேல்ஸ் இளவரசி டயானா"சில நினைவுகள்

ஜூலை மாதம் முதல் தேதி டயானாவின் பிறந்த நாளாதலால் அவரை நினைவு கூறும் வகையில் அவரது வாழ்க்கையில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளேன்.

டயானா 1.7.1961-31.8.1997

இளமையில்

Ballet என்று அழைக்கப்படும் நடன கலையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்திருக்கிறார்.

29.7.1981 அன்று திருமணத்தின் போது



செல்ல மகன்கள் 'வில்லியம்' மற்றும் 'ஹாரி' யுடன்



காதலித்து திருமணம் செய்திருந்தாலும் சார்லசுக்கும் டயனாவுக்குமிடையே பிரச்சினைகள் எழாமலில்லை. 28.8.1996 ல் விவாகரத்து பெற்றார்.

கண்ணிவெடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் போது

ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும், எய்ட்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உதவிகள் செய்ததோடு, சமூகத்தில் குரலும் எழுப்பினார்.


அன்னை தெரசாவும், டயானாவும் மரிக்கும் சில மாதங்களுக்கு முன்னதாக 1997 ஆம் வருடம் ஜூன் மாதம் சந்தித்த போது. டயானா ஆகஸ்ட் 31 அன்றும். ஆறு நாட்கள் கழித்து செப்டம்பர் 5 அன்று அன்னையும் காலமாகி உலகையே அதிர்சிக்குள்ளாக்கினார்கள்.
டாயானவின் உடை அலங்காரத்தை உலகின் பல பாகங்களில் பின்பற்றினார்கள்

90 'களில் டயானா அட்டைப்படமில்லாத பத்திரிகைகள் வெகு சிலவே

திசை மாறிய பயணங்கள்



சாவின் கடைசி மணித்துளி வரை புகைப்படக்காரர்கள், பத்திரிக்கைகாரர்களால் பின்தொடரப்பட்டார்.

ஒரு கட்டத்தில் புகைப்படங்களுக்கு பயந்து, மறுக்கவும் செய்தார்.

துரதிருஷ்டவசமாக பாரீசின் இந்த பாலதினுள்ளில் வைத்து விபத்து ஒன்றில் உயிரைப்பறிகொடுத்தார்.

விவாகரத்து செய்த ஒரு வருடத்திற்குள்ளாக மரணமடைந்தது துரதிருஷ்டம் !

இறுதி ஊர்வலம்.

இறுதிச் சடங்கில் மகன்களும், முன்னாள் கணவர் சார்லஸும்

உலகின் பல பாகங்களிலிருந்து குவிந்த பூச்செண்டுகள். இந்தியாவிலிருந்து ஏன் தமிழகத்திலிருந்து கூட பூச்செண்டுகள் அனுப்பப்பட்டன. (நடிகை குஷ்"பூ" கூட அனுப்பியதாக ஒரு வார இதழில் படித்த ஞாபகம்)

இங்கிலாந்து, நார்த்தாம்டன்ஷையரில் இருக்கும் டயானாவின் சமாதி

May 09, 2009

இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை

தங்களது கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் இளமையிலேயே பெரும்புகழ் அடைந்து பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் சிலரைக் குறித்த பதிவு.
லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) கால்பந்து ரசிகர்களுக்கு இவரைக் குறித்த அறிமுகமே தேவையில்லை.அர்ஜென்டினாவை சேர்ந்த 22 வயதே நிரம்பிய கால்பந்து வீரர் இவர்,16ஆவது வயதிலேயே சர்வதேச கால்பந்து களத்தில் இறங்கியவர்.தற்சமயம் ஸ்பெயினின் பார்சிலோனா 'கிளப்'பிற்காக ஆடி வருகிறார்.கால்பந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்துவதும்,வேகமாக பந்தை முன் நகர்த்துவதும் இவரது பிரத்தியேக திறமை.

இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.

ரஃபேல் நடால்(Rafael Nadal) ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.

இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.

களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.

புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.

இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் கிரிக்கெட்டைக் குறித்து அறியாதவர் கூட சச்சினை அறிவர் எனலாம்.தனது 16 ஆவது வயதிலேயே சர்வதேச ஆட்டங்களில் காலடி எடுத்து வைத்த சச்சின் 25 வயதிற்குள்ளாக 16 சதங்களை அடித்து முடித்திருந்தார்.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.

லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.

தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.

இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் 10 வயதில் தந்தையை இழந்த திலீப் குமார் குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயம்,என்றாலும் இசை மீதான தனது வேட்கையையை அவர் விட்டுவிடவில்லை.இந்தியாவில் வேறு எந்த கலைஞரும் காணாத மேல்நாட்டு இசைக்கருவிகளையும்,தொழில்நுட்ப கருவிகளையும் அறுபதுகளிலேயே இறக்குமதி செய்து இசை மீட்டிய தந்தை சேகரின் வழி இளமையிலேயே பயணித்தவர்.

26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.

இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.
Related Posts with Thumbnails