November 15, 2010

அது ஒரு அழகிய பண்டிகைக் காலம்


"அன்னைக்கு துணிய வெட்டி சட்டையா தச்சிப் போட்டோம்" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்"

அந்த காலத்தில... டேய் டேய் நிறுத்துடா, எதாச்சும்னா உடனே நாங்கல்லாம் அந்த காலத்திலன்னு ஆரம்பிச்சிருவீங்களேன்னு சொல்றீங்களா! 

என்ன இருந்தாலும் அந்த அழகிய காலங்கள் மாதிரி வருமா. அதுவும் திருவிழா, பண்டிகைக் காலங்கள்னா சொல்லவே வேண்டாம். எப்போடா பள்ளிக்கூடத்துக்கு லீவு கிடைக்கும்னு எதிர்பாத்திட்டு இருக்கிறது. அதிலயும் நம்ம நண்பர்கள் சில பேர் வழக்கமான விடுமுறைக்கு ரெண்டு மூணு நாள் முன்னாடியே ஸ்கூலுக்கு கல்தா குடுத்துருவானுக. 

ஓட்டம், சாட்டம், கிரிக்கெட், வாலிபால் போட்டிகள் நடத்திறோம்னு 'களவணி' படத்தில வர அதே பாணில வசூல் பண்றது. அப்புறம் என்ன... கிரவுண்ட சுத்தி கொடி, கம்பம் கட்டுறதுக்கு ஒரு குரூப், தீபாவளியை முன்னிட்டு, பொங்கலை முன்னிட்டு இளைஞர்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகள்னு கலர் கலரா போஸ்டர் ஒட்டுற வேலய பாக்கிறதுக்கு ஒரு குரூப்னு விடிய விடிய ஊர சுத்திட்டு அடாவடி பண்ணிக்கிட்டு இருப்பானுக. 

நம்ம பசங்க தான் ராப்பாடிகள் ஆச்சே, ராத்திரி பத்து மணிக்கு மேல தான் வேலயே ஆரம்பிக்கிறது. அப்ப தான சுதந்திரமா இளநியயோ இல்ல மாங்காவையோ 'லவுட்ட' முடியும். 

இது இப்படின்னா, போட்டிகள் நடத்தும் போது எந்த ஊரு மொதல்ல ஆடணும் அப்படின்றதில இருந்து கிரிக்கெட் அம்பயரிங்கலயும் சரி, மற்ற போட்டிகளுக்கு தீர்ப்பு சொல்றதுல வரைக்கும் பிரச்சினைய கிளப்புறதுக்குன்னே வரிஞ்சி கட்டிட்டு நிக்கும் ஒரு கும்பல். அன்னைக்கு வருத்தமா இருந்த அதுல கூட சுவாரஸ்யம் இருந்ததா லேட்டா இன்னைக்கு புரியுது. 

இன்னும் சுவாரஸ்யம் நம்ம வீட்டிலயே பலகாரம் சுடுறது தான். பண்டிகை வர ஒரு வாரத்துக்கு முன்னாடியே அதற்கான ஏற்பாடுகள் மும்மூரமா போய்கிட்டு இருக்கும். அரிசிய ஊறவச்சி, உரல்ல நம்மளே இடிச்சி சுடுற பலகாரத்தில இருக்கு சுவையும் அந்த சுவாரஸ்யமும் (அது மிருதுவா இல்லன்னா கூட!! ) தனி தான். 

இது எல்லாத்துக்கும் மேல ஆனந்தம் புதுசா ட்ரஸ் போடுறது தான். "அன்னைக்கு துணிய எடுத்து வெட்டி சட்டையா தச்சிப் போட்டாங்க" ஆனா இன்னைக்கு 'ரெடிமேட்' என்ற பெயரில் ஏற்கெனவே "தச்ச சட்டய வெட்டிப் போடுறோம்". என்ன வேடிக்கை பாருங்க ! அப்போ, ஒரு மாசத்துக்கும் முன்னாலயே துணிய எடுத்து டெய்லர் கிட்ட ஃப்ளீட் வைங்க; புது ஸ்டைலா வைச்சி கரெக்டா தைங்கன்னு நம்ம சொன்னா சில பெருசுங்க சொல்றதோ 'அவன் வளர்ர பையன் சட்டைய கொஞ்சம் பெருசாவே தைங்க' அப்படின்னு.

சட்டை தச்சி வாங்கினா தான் தெரியும் அது தாத்தா சட்டை மாதிரி தொள தொளன்னு இருக்கிறது. அப்ப வருமே கோபம்... ஆனாலும், "புதுசு வருசத்துக்கு ஒரு தடவ தான வரும்"னு சமாதானம் சொல்லிக்கிட்டு போடுறத தவிர வேற என்ன பண்றது அப்போ.   

சொந்தகாரங்க வருகை,  நண்பர்களுடன் பட்டாசு வெடிக்கிறது, கும்பலா கச்சேரிக்கு போறது அப்படின்னு இன்னும் பல சொல்லிபோகலாம்.

பண்டிகைக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே களை கட்டின காலம் போயி, பண்டிகைக்கு முந்தின நாள் கூட அடுத்த நாள் பண்டிகைன்னு சரியா தெரியாம இருக்கிற காலத்தில தான் இப்ப இருக்கோம். பணம் சம்பாதிக்கிற அவசரத்தில சுவாரஸ்யங்களையும், கொண்டாட்டங்களையும் இழந்து நிற்கிறோம் இன்னைக்கு. மீண்டும் அந்த நாட்கள் எப்ப வருமோ?!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails