August 25, 2024

Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

 



Capernaum - Capharnaüm - கப்பர் நகூம்

திரைப்படம் குறித்து பிரபாகரன் சேரவஞ்சி அவர்கள் பதிவைப் பார்த்ததும், அட! இது பைபிள்ள வர்ர ஊராச்சே; அது சம்பந்தமான எதும் படமா இருக்குமோன்னு ஆரம்பிச்ச தேடல் கிட்டத்தட்ட மூன்று மணி நேர வாசிப்பில் கொண்டு விட்டதோடு பல தகவல்களை அள்ளித்தந்தது.

வாழை திரைப்படம் எப்படியாக அந்த மண்ணையும், அது சார் வாழ்வியலையும் பிரதிபலிக்கிறதோ அதற்கு  நிகராக, லெபனானின் பெய்ரூட் நகரில் அகதியாக வாழும் சிரியா தேசத்தைச் சார்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையையும் அம்மண் சார்ந்த வாழ்வியலையும் கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் Capernaum. 

இதனை இயக்கியவர் ஒரு பெண் என்பது இன்னும் சுவாரஸ்யம்; அவர் (Nadine Labaki) லெபனான் நாட்டைச் சார்ந்தவர். மத்திய கிழக்கு நாடுகளின் போர் அவலத்தில் அவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர். 

ஒரு நேர்காணலில் ‘ பெரியவர்களான நமது தவறுகளுக்காக குழந்தைகள் பெரும் விலை கொடுக்கிறார்கள் ’ ; ‘ மெக்சிகோவின் எல்லைப் பிரச்சனைகளால் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைககள், இந்தியாவில் தங்கள் குடும்பங்களின் உணவுத் தேவைக்காக வேலை செய்யும் சிறார்கள், இரசாயன ஆயுதங்களால் மடியும் பாலஸ்தீன், துருக்கி மற்றும் சிரியாவைச் சார்ந்த குழந்தைகள் என இவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய கல்வியும் அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்கிறார்.

அடக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை, குழந்தைகளின் மீதான வன்முறைகளை லெபனான் நாட்டைச் சார்ந்த ஒருவரால் விளங்கிக் கொள்ள முடிகிறது; கூடவே தனது மண்ணை மட்டும் பாராமல் உலகின் பாலும் தனது பார்வையைத் திருப்பி அனைவருக்குமான ஒரு அரசியலை, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்! ஆனால் இங்கு வாழை மாதிரியான படத்தை முன்வைத்தால் அதனை பகடி செய்யும் சற்றும் அறமற்றவர்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பது எவ்வளவு இழிவு. 

Capernaum என்பது விவிலியத்தின்படி இஸ்ரவேலில் இருந்த ஒரு மீன்பிடி கிராமம். அது இரண்டாவது நூற்றாண்டில் ‘ஆறுதலின் கிராமம்’ என்று அழைக்கப்பட்டிருந்து பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு சிதிலம் அடைந்தும் போயிருக்கிறது. 

பிரெஞ்சில் Capharnaüm என்பதற்கு Ruin (அழிவு) என பொருள். இவைகளின் அடிப்படையில் தான் இந்த திரைப்படத்திற்கு Capernaum என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் Nadine Labaki.

அடக்குமுறைகளும், ஆதிக்கவாதமும் எந்த தேசத்தில் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றிற்கு எதிராக குரல் எழுப்புவது தான் மனிதம் என்கிற புரிதல் இருந்தால் போதும் நாம் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள. 

2018 ல் வெளியான Capernaum திரைப்படத்தில் நடித்தவர்களில், (அகதியான) சிறுவன் Zain உட்பட பெரும்பாலானோர் திரைத்துறையை சாராதவர்கள் என்பதும் அவர்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த போர்க்கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படம் வெளிவந்த பின்னர் நார்வே அரசு சிறுவன் Zain ஐயும் குடும்பத்தினரையும் நார்வேயில் குடியமர்த்தி சிறப்பு செய்தது. கூடவே, போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் இருக்கும் சிறார் பலருக்கும் கல்விக்கான வாசலும் UNHCR வழியாக திறந்தது. 

ஒரு திரைப்படம் அப்படி என்ன பெரிதாக செய்து விட முடியும் என்பதற்கான பல பதில்கள் Capernaum ல் அடங்கியிருக்கிறது. 

அதன் இயக்குனரும், எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான Nadine Labaki போற்றுதலுக்குரியவர் 🥰👏

Capernaum திரைப்படம் Netflix ல் இருக்கிறது.

August 14, 2024

தொரசாமி - அம்பேத்கரிய நாவல்

 “ இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ” என்கிற பொத்தாம் பொதுவான சொலவடை, மேம்போக்காக பார்க்கையில், ‘ அட ஆமால்ல ’ அதான், பலரும் நல்ல நிலைமைக்கு வந்தாச்சே என கருதத் தோன்றும். 

ஆனால், இன்றளவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் தொடர்ந்து தங்களை பலி கொடுத்து வருவது தாழ்த்தப்பட்ட சமூகம் தான். 

இதற்காகத் தான் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தொடர்ந்து வலியறுத்தி வந்தார். 

சுய சாதிப் பெருமை பேசுவது எந்த அளவு ஏற்புடையது இல்லையோ, அதே போன்றதே உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல் இருப்பதும். 

இன்றைய தேதியில் சாம்பவர் சமுதாயத்தில் இருந்து ஒரு எம். எல். ஏ வோ எம். பி யோ கிடையாது. அதன் பாதிப்பை எம் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். 

தலித் அரசியல் பேசுபவர்களும், அரசியல் ஆளுமைகளும் தலித்துகளை முன் வைத்து அரசியல் செய்கிறார்களே ஒழிய நமக்கான உரிமைகளை அவர்களால் கூட பெற இயலாத நிலை தான் சுதந்திரம் அடந்து 77 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. 

சாம்பவர் சமூகத்தில் இருந்து படித்து உயர்ந்தவர்களோ பிற ஊர்களுக்கு / நாடுகளுக்குப் போனோமா சம்பாதித்தோமோ என இருக்கிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என குரலெழுப்ப மறுக்கிறார்கள். 

எனினும் அண்ணன் அன்பு நமது குரல்களும், எழுத்துகளும் பதிவு செய்யப்பட வேண்டும். உரிமைகளுக்காக தொடர்ந்து நாமும் பேச வேண்டும் என்கிற அடிப்படையில் ' தொரசாமி ' நாவலை (அறம் வெளியீடு) முன் வைத்திருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தளங்களில் அவர் களமாடியும் வருகிறார். 

கல்வியே நம்மை விடுதலையாக்கும் என தொடர்ந்து களமாடும் அண்ணன், தோழர் மற்றும் ஆசானாகிய ஜெ. அன்பு Jai Anbu அவர்களின் எழுத்துகளும், கனவுகளும் மெய்ப்பட வாழ்த்துகள். 

அன்புகளுடன்,

எட்வின்

May 19, 2024

Xabi Alonso ❤️⚽️ Bayer Leverkusen

பார்சிலோனா அணிக்காக La Liga / Spain அணிகளையும் அதிகம் கவனிக்க தொடங்கிய காலம் அது. பார்சிலோனாவின் Xavi யையும் ரியல் மாட்ரிட் அணியின் Xabi யையும் எப்போதும் குழப்பிக் கொள்வேன். 

Xabi அதற்கு முன்னரே EPL ல் லிவர்பூல் அணிக்காக ஸ்டீவன் ஜெரார்ட் உடன் பல வெற்றிகளுக்கான பங்களிப்பை செய்திருந்தார். 

2010 உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் Xabi - Xavi இருவரும் Midfielders ஆக இருந்தனர் என்பது கூடுதல் சிறப்பு. 

கால்பந்து உலகில் பெரும் அணிகளுக்காக, சிறந்த பயிற்சியாளர்கள் உடன் ஆடிய அத்தனை அனுபவங்களும் இவர்கள் இருவரையும் இன்று சிறப்பான பயிற்சியாளர்களாக உருவாக்கியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. 

Xabi பயிற்சியாளரான பிறகு Bayer Leverkusen இன்று தொட்டிருக்கும் உயரம் அளப்பரியது. அவர்கள் இதுவரை 51 ஆட்டங்களில் (கிட்டத்தட்ட ஒரு ஆண்டு - 351 நாட்கள்) தோல்வியே சந்திக்கவில்லை.

இத்தனைக்கும் பல ஆட்டங்களில் ஆட்டம் முடியும் தருவாயில் 90 நிமிடத்திற்கு மேலாக தோல்வியுறும் நிலையில் இருந்தாலும் விடாமுயற்சிகளினால் தங்களை வரலாற்றின் பக்கங்களில் பதித்திருக்கிறார்கள். Xabi Alonso வின் பங்களிப்பும் அணி வீரர்களின் முனைப்பும் அதனை சாத்தியமாக்கியிருக்கிறது. 

விளையாடும் போதும் சரி, பயிற்சியாளராகவும் சரி எவ்வித அலட்டல் இல்லாமலும், எப்போதும் அர்ப்பணிப்புடன் தனது வேலையை சிறப்பாக செய்து விட்டுப் போவது தான் Xabi இப்படியான வெற்றிகளை அடைவதற்கு காரணமாகியிருக்கிறது. 

வாழ்வியல் தத்துவமும் அதுவே! 

தோல்விகள் என்றேனும் வரும் தான்; ஆனால் நமது வேலைகளில் தொடர்ச்சியாக முனைப்பு காட்டும் போது அது வெற்றிகளைத் தருவதோடு தோல்விகளை எதிர்கொள்ளவும் நமக்குக் கற்றுத்தரும். 







Related Posts with Thumbnails