June 07, 2010

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இல்லை


நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவிருக்கும் ஆசியப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மாட்டோம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறாதாம்.  இதனைக் கண்டித்து கிரிக்கெட் அன்பர்கள் பதிவிடவில்லை என பதிவர் தருமி ஆதங்கப்பட்டிருக்கிறார். நியாயம் தான்

இந்த செய்தியைக் குறித்து நான் அறிந்திருக்கவில்லை; இல்லையென்றால் நிச்சயம் பதிவிட்டிருப்பேன். IPL அட்டகாசங்களினாலும் T20 ஆட்டங்கள் மேல் பிடிப்பு இல்லாமையினாலும் இந்திய கிரிக்கெட்டின் நிகழ்வுகளை சரிவர கவனிப்பதில்லை.

கிரிக்கெட் மட்டுமல்லாது பிற விளையாட்டுகளையும் ரசிப்பவன் நான். நேற்று கூட ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் குறித்து பதிவிட்டிருந்தேன்.

அதை விடுங்கள்... விஷயத்திற்கு வருவோம். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என சொல்லியிருப்பது ஒரு பார்வையில் சரியென பட்டாலும் மற்றொரு பார்வையில் அப்படி படவில்லை.

காரணங்களை சொல்லி விடுகிறேன். ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது இது தான் முதல் முறை அதுவும் 20-20 போட்டிகள் தான். இதற்கு முன்னதாக சர்வதேச அரங்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது 1998 காமென் வெல்த் போட்டிகளில் தான். இவற்றிற்கெல்லாம் தலையாயதான ஒலிம்பிக்கில் இன்று வரை கிரிக்கெட் இடம் பெறவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தடகள வீரர்களுக்கு அவர்களது உயரிய ஆசை அல்லது கனவு (Pinnacle என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்) ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்கும்.

அதே போன்றே கிரிக்கெட் ஆடும் அனைத்து வீரர்களுக்கும் உள்ள கனவு உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்பதே.அதனை விட பெரிய சந்தோஷம் இருந்து விட முடியாது.

இங்கிலாந்திலோ, ஸ்பெயினிலோ, இத்தாலியிலோ Liverpool, Barcelona, AC Milan CLUB களுக்காக கால்பந்து  ஆடும் ஒருவரின் உயரிய கனவு அவரது நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்பதாகத் தானிருக்குமே ஒழிய ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதாக இருக்காது. அப்படித் தான் இன்று வரை இருந்து வந்திருக்கிறது.

கிரிக்கெட்டிற்கு மகுடம் உலகக்கோப்பை அல்லது டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணி என்ற பெயரை அடைவது தானேயல்லாமல் ஆசியப் போட்டிகளில் ஓமன், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுடன் மோதி பதக்கம் பெறுவதாக இருக்காது.

எந்த போட்டியானாலும் வெற்றி என்பது பெருமை தான் அதில் சந்தேகமில்லை ஆனால் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு இரு மாதங்கள் இருக்கின்ற நிலையில் இது தேவையா என்பது தான் கேள்வி. ஏற்கெனவே ஐ.பி.எல் ல் ஆடி T-20 உலகக்கோப்பையை கோட்டை விட்டதைத் தான் உலகறியுமே!

நவம்பர் மாதம் துவங்கவிருக்கும் ஆசியப்போட்டிகளின் போது இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடவிருக்கிறது.

இரு மாதங்கள் கழித்து 2011 பிப்ரவரியில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, ஆப்கானிஸ்தான், ஓமன் போன்ற அணிகளிடம் ஆடுவதை விட நியூசிலாந்துடன் ஆடுவது சிறந்த பயனளிக்க வாய்ப்புள்ளது. (2007 ல் பங்களாதேசிடம் தோற்றதைத் தான் நாங்கள் அறிவோமே என்கிறீர்களா!!!)

மற்றொரு விதமாக பார்த்தால் பி.சி.சி.ஐ செய்தது தவறு என சொல்லலாம். 2007 ஆம் வருடத்திலேயே ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் இடம்பெறும் என ஆசிய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருக்கிறது. அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் போட்டிகள் துவங்க சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது மறுத்திருப்பது அழகல்லவே.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதற்கு ஆதரவு வேறு தெரிவிப்பது தான் மேலும் காமெடியான விஷயம். வீரர்கள் அதிக போட்டிகளில் ஆடுகிறார்கள்; அவர்கள் என்ன செய்வார்கள் என ஜால்ரா அடித்திருக்கிறார்.

அரசாங்கமும் கேள்வி ஏதும் கேட்கின்ற மாதிரி தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களிடம் மட்டும், நாங்கள் பி.சி.சி.ஐ யை வன்மையாகக் கண்டிக்கிறோம் என சொல்லிவிட்டு வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம். அரசு தலையிடவும் முடியாது. ஏனென்றால் பி.சி.சி.ஐ அரசு நிறுவனம் இல்லையே! கிரிக்கெட் அணி ஆசிய விளையாட்டுகளில் பங்கு பெற வேண்டும் என கூறும் நமது அரசு தடகள போட்டிகள் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு செய்து வரும் உதவிகள் நாடே அறிந்தது தானே.

அரசியல்வாதிகளுக்கு தேவையெல்லாம் ஐ.பி.எல் ம் அதில் புழங்கும் பணமுமேயன்றி வேறு ஏதுமில்லை. அவர்களின் அரசியலுக்கு இன்று விளையாட்டுக்கள் தான் பலிகடா ஆக்கப்படுகின்றன.அது கிரிக்கெட்டானாலும் சரி, பிற விளையாட்டுக்களானாலும் சரி.

3 comments:

violetisravel said...

இரு மாதங்கள் கழித்து 2011 பிப்ரவரியில் துவங்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு, ஆப்கானிஸ்தான், ஓமன் போன்ற அணிகளிடம் ஆடுவதை விட நியூசிலாந்துடன் ஆடுவது சிறந்த பயனளிக்க வாய்ப்புள்ளது. (2007 ல் பங்களாதேசிடம் தோற்றதைத் தான் நாங்கள் அறிவோமே என்கிறீர்களா!!!)

மிகச் சரியாக சொன்னீர். ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்து வாங்கிய அடிகள் நமக்கு சொல்லும் பாடம் உலகக் கோப்பையில் எதுவும் நடக்கும் இந்தியாவின் வெற்றி ஒன்றைத் தவிர.....எப்புடி!!!!????

நாகை சிவா said...

//2007 ஆம் வருடத்திலேயே ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் இடம்பெறும் என ஆசிய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருக்கிறது. அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் போட்டிகள் துவங்க சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது மறுத்திருப்பது அழகல்லவே.//

எட்வின், நீங்களே பதிலை சொல்லி வீட்டீர்கள். ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறும் வேண்டும் என முயற்சி எடுத்ததே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தானே. அதில் பெரியண்ணன் இந்தியா தானே. உலக கோப்பை வெல்வது தான் கனவு, லட்சியம் என்றால் எதற்கு இந்த முயற்சி. முயற்சி வெற்றி அடைந்த பிறகு எதற்கு இந்த பின் வாங்கல். என் இஷ்டப்படி தான் நடப்பேன் என்பதற்காகவா?

அதும் இல்லாமல் நீங்கள் கூறுவதை போல கிரிக்கெட் டை கால்பந்துடன் எல்லாம் ஒப்பிட முடியாது, மொத்தமே உலகில் உள்ள அதிகபட்சமாக 20 நாடுகள் தான் கிரிக்கெட் அணி என்பதை வைத்து இருக்கும். ஒரு விளையாட்டு அனைவரையும் சென்று அடைய வேண்டும் என விரும்பினால் இது போன்ற ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் நடத்தப்பட்டால் தான் அதில் பங்கேற்கும் நாடுகளும் தங்களுக்கு ஒரு அணி வேண்டும் என்று சிந்திக்க தொடங்குவார்கள். இந்த முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பக்ஸ் சில் கிரிக்கெட் இடம் பெறுவதை பற்றி யோசிக்க முடியும்.

10 அணிகளே போதும் இதற்கு மேல் வேறு யாரும் வளர்ந்து வந்தால் நாட்டாமை பண்ண முடியாது என நினைக்கிறதோ பி.சி.சி.ஐ.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

எட்வின் said...

@ violet
நன்றி

@ நாகை சிவா

கால்பந்து மட்டும் இல்லைங்க... டென்னிஸ்ல பாத்தீங்கன்னா GrandSlams ல வெற்றி பெற்றா தான் பெருமை. அதே போன்று தான் ஹாக்கி உள்ளிட்ட பிற ஆட்டங்களிலும்.

ஆனாலும் இந்தியா தவிர்த்து ஓமன், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட அணிகளும் ஆசிய விளையாட்டில் பங்கேற்கிறதால் கிரிக்கெட் நீங்க சொல்ற மாதிரி மேலும் சில நாடுகளை கிரிக்கெட் சென்று அடையக்கூடும்.

இந்தியா உலக அரங்கில் ஓரங்கட்டப்பட்டால் நானும் அதனை பெருமையோடு வரவேற்பேன். இவனுக பண்ற அரசியல் தாங்ங்ங்க முடியல.

Post a Comment

Related Posts with Thumbnails